புதன், 29 ஆகஸ்ட், 2012

சூரிய ஒளி மூலம் மின்சாரம்: வழிகாட்டுகிறது செர்மனி

சூரிய ஒளி மூலம் மின்சாரம்: வழிகாட்டுகிறது செர்மனி











"இந்தியாவும், ஜெர்மனியும், 2011-12: எண்ணற்ற வாய்ப்புகள்' என்ற சிறப்பு நிகழ்ச்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஆக., 24ம் தேதியிலிருந்து, செப்., 2ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், நகரங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.

விமானத்திற்கு, அதிக அளவில் ஏற்படும் எரிபொருள் தேவையை சமாளிக்க, புதிய உத்தியை கண்டுபிடித்திருக்கிறது, ஜெர்மனி. அங்கு, விமானத்தின் இரு இறக்கைகளிலும், சூரிய ஒளியை உள்வாங்கும் தகடுகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் வானத்தில் மிதப்பதால், தரைமட்டத்தில் கிடைக்கும் அளவை விட, சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும்.இரண்டு பக்க இறக்கைகளிலும் சூரிய ஒளி படுவதால், அதன் சக்தியை பெரிய அளவில் தேக்கி வைக்கலாம். தேக்கி வைக்கப்பட்ட சூரிய சக்தியை, இரவில் பயன்படுத்தலாம். இதனால், விமானம் இடைவிடாமல் இயங்கும். தற்போது கண்டுபிடித்துள்ளவற்றை, அடுத்தாண்டு முதல் பயன்படுத்த, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சூரிய ஒளி வீடு:

இந்தியாவை விட, அதிகளவில் அணுசக்தியை பயன்படுத்தி வரும் ஜெர்மனி, சூரியசக்தியையும் அதிகளவில் ஊக்குவிக்கிறது; அதில் முக்கியமானது, சூரிய ஒளி வீடு.வீட்டின் கூரையில், சூரிய ஒளியை உள்வாங்கும் தகடுகளை பொருத்தி, வீட்டிற்குள் உள்ள கருவி மூலம் சேகரித்து, வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை பூர்த்தி செய்கிறது. அதிலும், வீட்டில் சூரிய ஒளிபடும் பிற பகுதிகளிலும் தகடுகளை வைத்து, மொபைல்போன்களுக்கு, "சார்ஜ்' செய்யப்படுகிறது.பெரும்பாலான அலுவலகங்களில், சூரிய ஒளியை உள்வாங்கும் தகடுகளை பதிப்பித்து, மின்சாரம் சேகரிக்க, பெரும் முயற்சி எடுத்து வருகிறது. சூரிய சக்தியை உள்வாங்கி, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

இருபது அணுசக்தி நிலையங்கள் முழு வீச்சில் தயாரிக்கக்கூடிய, 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, சூரிய சக்தி மூலம், ஒரு மணி நேரத்தில் தயாரித்து, உலக சாதனை படைத்தோம். இந்த அளவு மின்சாரம், நாட்டின் பகல் நேர மின்சார தேவையில் பாதியை பூர்த்தி செய்யக் கூடியது. உலகில் வேறு எந்த நாட்டிலும், சூரியசக்தி மூலம், இவ்வளவு அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.ஜெர்மனியில், புதுப்பிக்க தக்க எரிசக்தி மூலம், 20 சதவீத மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தியை அதிகரித்து, அதிக புகையை வெளியிடும் அனல்மின் உற்பத்தியை குறைக்க, ஜெர்மன் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதை இந்தியாவும் கடைபிடிப்பதற்கு பரிசீலிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 -   தினமலர் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக