தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஜயத்தையிட்டு ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு நன்றி கூறுகின்றனர்.
அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளுக்காக நான்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் -இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ம.அ.சுமந்திரன் – அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த வாரம் ராஜாங்க திணைக்கள, வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க காங்கிரஸ் அதிகாரிகளைச் சந்தித்தனர். இந்த சந்திப்புகளில் நான்கு பாராளுமன்ற அங்கத்தினரும் கூட்டாகக் கலந்து கொண்டனர்.
வழமைக்கு மாறான விதமாக ராஜாங்கத் திணைக்களமே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடனான இச்சந்திப்புகளை ஒழுங்குசெய்து நடாத்தியது. அத்துடன் முக்கிய சந்திப்புகளில் ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும் கூட இருந்தனர். சந்திப்புகளில் ராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் கூட இருந்தது அமெரிக்க கொள்கை வகுப்பாளருக்கு இச்சந்திப்பின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பாலுணர்த்தியிருக்கும் எனக் கருதுகிறார்கள் ஒபாமாவுக்கான தமிழர்கள அமைப்பு. இவற்றின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ்ப் பிரதேசங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் ஸ்ரீலங்கா போர்க் குற்றங்களுக்கெதிரான சர்வதேச விசாரணைகளின் தேவை போன்றவற்றையிட்டு நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செனற் சபையின் அலுவலர்களிடம் ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹிலாரி கிளின்ரனிடம் வரைந்த ஓவியம் ஒன்றை வழங்கினர்.
இவ் ஓவியம் பென்சில்வேனியா மாநிலத்தில் வாழும் அமெரிக்க வாழ் ஈழத்தமிழரான சான் சுந்தரம் என்பவரால் வரையப்பட்டது. இப்படமானது நான்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கையொப்பமிட்ட வாழ்த்து அட்டையுடன் சேர்த்து திருமதி.கிளின்ரனிடம் கையளிக்கப்படும் என்றார்கள் பெற்றுக்கொண்டு சென்ற அதிகாரிகள்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்கள், ஸ்ரீலங்காவுக்கான ராணுவ உதவிகளை இடைநிறுத்தவும் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்ற அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க ராஜாங்க அமைச்சை உத்தரவிடவும் உழைத்த அனுபவம் மிக்க காங்கிரஸ் அலுவலரையும் இவ்விஜயத்தின் போது சந்தித்தனர்.
“நாம் இச்சந்திப்பை அமெரிக்காவுக்கும் தமிழருக்கும் இடையிலான இறுக்கமானதும் நட்புமிக்கதுமான உறவின் முதற்படியாக கருதுகிறோம். அத்துடன் இது ஸ்ரீலங்காவினால் உள்நாட்டு யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்ய ஒரு சர்வதேச விசாரணைக் குழுவினை அமைக்கக் கோரும் தமிழர்களின் அவாவினை நோக்கிய இன்னொரு படியாகவும் கருதுகிறோம். இவ்விசாரணையானது தமிழர்களுக்கு நீதியினை வழங்கும் முறையாகவும் இருக்கும்” என்றார் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக