ஞாயிறு, 30 அக்டோபர், 2011

வளாகக் கொலைகள்: மாணவ சமுதாயம் செல்வது எங்கே


பத்து நாட்களுக்கு முன், மதுரை புதூர் ஐ.டி.ஐ., மாணவர் பாண்டியராஜன் கொலை, நான்கு நாட்களுக்கு முன் சென்னை இந்துஸ்தான் பல்கலை பொறியியல் மாணவர் ரஞ்சித் மத்துவார் கொலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பொறியியல் மாணவர் த்ருபா ஜோதி துட்டா கொலை... என உயிர்பதைக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தேறின. மூன்று உயிர்களும், சக மாணவர்களால் பறிக்கப்பட்டது தான் வேதனையின் உச்சம்.

என்னவாயிற்று இந்த மாணவ சமுதாயத்திற்கு:
கோபம், விரோதம், காதல், ஈகோ... பிரச்னைகளுக்கு "உயிர் பறிப்பது' தான் தீர்வா? கல்வி வளாகங்கள் இதை கற்றுத் தருவது இல்லையே. மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதற்குள்... பெற்றோர் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டு பதறுகின்றனர். புத்தகங்களை தொலைத்து, ஆயுதங்களை எடுத்துக் கொள்ள... எப்படி மனம் துணிகிறது பொறியியல் மாணவர்களுக்கு? இதோ... பொறியியல் மாணவர்கள், பேராசிரியரிடமே கேட்டோம். அவர்கள் வேதனைச் சுவடுகள் வார்த்தைகளாய்...

"தாய்மையின்' அணுகுமுறை
பேராசிரியர் சி.சொர்ணலதா, இயக்குனர் (மாணவர் நலன்), அண்ணா தொழில்நுட்ப பல்கலை, மதுரை: கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தாயுள்ளத்தோடு அணுக வேண்டியது, முதல்படி. இந்த காலத்து மாணவர்கள் திறமையானவர்கள், புத்தகத்தை படித்து புரிந்து கொள்ளக்கூடியவர்கள். 45 நிமிட வகுப்பறையில், ஒவ்வொரு பேராசிரியரும் ஐந்துநிமிட நேரம் ஒதுக்கி, மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும். நல்லொழுக்கத்தையும், வாழ்க்கை முறைகளையும் தினமும் கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு மாணவனின் இயல்புகளும், ஆசிரியர்களுக்கு நன்றாக தெரியும். தனிமையில் இருக்கும் மாணவனை அடையாளம் கண்டு, அவனது பிரச்னைகளில் இருந்து விடுவிக்க வேண்டும். பள்ளிப்படிப்பு வரை... மாணவனின் கோபம், ஆதங்கத்தை வெளிப்படுத்த, பெற்றோர் கூடவே இருந்திருப்பர். விடுதி மாணவர்களுக்கு, நான்கு சுவர்களே வெறுமை தரும். கேள்வி கேட்காத ஆளில்லாத நிலைமை, மனதை வருத்தும். மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க, பேராசிரியர்கள் அல்லாத நல்ல "வழிகாட்டிகள்' தேவை. ஒவ்வொரு கல்லூரியிலும், விடுதியிலும் இதை பின்பற்றினால், மாணவ சமுதாயம் வன்முறையற்றதாக மாறும்.

கே.அகிலாண்டேஸ்வரி(எம்.இ., இரண்டாமாண்டு, அண்ணா தொழில்நுட்ப பல்கலை, மதுரை):
நண்பர்கள் என்ற பெயரில் குழுவாக கூடுவது தான், பிரச்னைகளுக்கு மூல வேர். நல்ல பழக்கவழக்கங்களை சினிமா கற்றுத் தருவதில்லை. ஆனால் அதை பார்த்து தான், மனதில் "ஹீரோயிசம்' வளர்க்கின்றனர். "படிப்பதும், நல்ல வேலையில் அமர்வதும் தான் நமது லட்சியம்' என்ற சிந்தனை, ஏனோ மறந்து விடுகிறது. வகுப்பறையில் பாடங்களைத் தவிர வேறு பேச முடியாது. வளாகத்தில் தேவையின்றி கூடும் நண்பர்களை கண்காணித்தால், விபரீதத்தை முன்கூட்டியே தவிர்க்கலாம்.

கே.கார்த்திக் (மூன்றாமாண்டு, ராஜா பொறியியல் கல்லூரி, மதுரை):
சீனியர் மாணவர் செய்த "ராகிங்' கொடுமைகளை, ஜூனியர் மாணவனிடம் செய்து காண்பிக்க நினைக்கும் போது தான், கோளாறு வருகிறது. முதலாண்டு மாணவர், நான்காம் ஆண்டு மாணவரிடம் சென்று, "அண்ணா என்னை அடிக்கின்றனர்' என துவங்குவதில் தான் அடிதடி ஆரம்பிக்கிறது. கல்லூரி முடிந்து வெளியே செல்லும் போது, "நட்பு' பேசாது. நாம் எடுத்த மதிப்பெண் தான் "பேசும்'. இதை உணர்ந்து கொண்டால், பிரச்னைகளின் பக்கம் மாணவர்கள் செல்லமாட்டார்கள்.

எஸ்.சிலம்பரசன்(இரண்டாமாண்டு, ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்):
மாணவர்களிடையே ஈகோவும், "நான் பார்த்த பெண்ணை, இவன் "சைட்' அடிக்கிறான்' என்ற காரணங்கள் தான் அடிதடி, மோதல், கொலை வரை செல்கிறது. விடுதியில் தனியாக இருப்பதால் மதுப் பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகின்றனர். இவர்களை நல்வழிப்படுத்துவதற்கு யாருமில்லை. முதல், இரண்டாம், மூன்றாமாண்டு மாணவர்களை குழுவாக ஒருங்கிணைத்தால் தான் ஈகோ பிரச்னைக்கு தீர்வு காணலாம். "பாடம் நடத்துவதோடு வேலை முடிந்தது,' என ஆசிரியர்கள் நினைக்கக்கூடாது. வழிகாட்ட துணையிருந்தால், தவறு செய்யும் மாணவர்கள் கூட நல்வழிக்கு மாறுவர்.

என். அழகர்ராஜா(இரண்டாமாண்டு, தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி):
குழுவாக சேர்ந்து கொண்டு, மற்றவர்களை கிண்டல் செய்வது தான், பிரச்னைகள் பெரிதாக காரணம். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே நட்புறவு இல்லை. கல்லூரிகளில் விதிகள் கடுமையாக இருந்தாலும், அமல்படுத்துவதில்லை. மாணவர்களிடையே ஒருங்கிணைப்பை, புரிந்து கொள்ளுதலை உருவாக்க கல்லூரிகளில் எந்த நடவடிக்கையும் இல்லை. சினிமாத்தனம் கலந்த சிந்தனைகள், மாணவர்களிடையே அதிகம் உள்ளன. குறிப்பாக விடுதி மாணவர்களிடையே, சினிமாத்தன வாழ்க்கையும், கருத்து வேறுபாடும், ஈகோவும் சகஜமாக நிலவுகிறது.

பி.கபில்(முதலாமாண்டு, செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம்):
இருபாலர் பயி லும் கல்லூரிகளில், மாணவிகள் தொடர்பாகவே பெரும்பாலான பிரச்னைகள் ஏற்படுகிறது. மாணவர்களின் மதுப்பழக்கம் பிரச்னைகளை பெரிதாக்குகிறது. சகோதரத்துவம் மறைந்து, கல்லூரிகளில் ஜாதித்துவம் பெருகியதும் வன்முறைக்கு காரணம். அரசியல்வாதிகள் மாணவர்களை, தங்கள் சுயலாபத்துக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்க முடியாமல், கட்டுண்டு உள்ளனர். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும். குருவுக்கு தேவையான அதிகாரத்தை வழங்க வேண்டும். அதே போல் அவரும் சரியாக நடக்க வேண்டும்.

சினிமா, "வீடியோ கேம்ஸ்' தவிர்ப்பது புத்திசாலித்தனம்:
விக்ரம் ராமசுப்ரமணியம் (மனநல டாக்டர்,ஆஹானா மருத்துவமனை, மதுரை): திடீரென்று ஒருவன் வன்முறையாளனாக மாறுவது, சினிமாவில் நடக்கும் காட்சி. நிஜவாழ்வில், சிறுவயதிலிருந்தே வன்முறையும், சீரழிவும் பழகியவர்கள் தான் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். கல்லூரிப் பருவத்தில் "கவுன்சிலிங்' ஓரளவு கைகொடுக்கும். ஆனால் பள்ளிப் பருவம் தான், மாணவர்களை மேம்படுத்தும் சரியான பருவம். ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர்களை கண்காணிக்க வேண்டும். பெற்றோர் திட்டினால் தம்பி,தங்கையை அடிப்பது, ஆசிரியர் திட்டினால் சகமாணவரை அடிப்பது என... தங்களது பிரச்னைகளுக்கு வடிகால் தேடும் மாணவர்கள், பின்னாளில் இந்த இயல்பை மாற்றிக் கொள்ளாமல் அடிதடியில் ஈடுபடுகின்றனர்.சினிமாவில் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் வேலையை, மிக வேகமாக செய்து வருகின்றனர். நாலு பேரை அடித்தால் தான் "ஹீரோ' என ஆழ்மனதில் பதிய வைக்கின்றனர். போதாதற்கு, "வீடியோ கேம்ஸ்' விளையாட்டுகள், "வன்முறை சரியே' என்பது போல சித்தரிக்கிறது. ஆட்களின் மேல் காரை ஏற்றிக் கொல்லும் ரேஸ், நூறு பேரை அடிக்கும் ஹீரோ... இதை விட்டால் மாணவ சமுதாயத்திற்கு, நல்ல விஷயங்கள் எதுவும் கிடைப்பதில்லை.இவை இரண்டையும் முதலில் தடை செய்யுங்கள். இயல்பிலேயே வன்முறையை பார்த்து, வளர்ந்தவர்கள், கல்லூரிப் பருவத்தில் கட்டுப்படுத்த ஆளில்லாமல் திசைமாறுகின்றனர். அதோடு குடிப்பழக்கமும் சேர்ந்து கொள்ள... தாங்கள் செல்லும் பாதை சரியா... என்பதை யோசித்து பார்ப்பதில்லை. ஐந்தில் வளையாதது, 18ல் வளையாது. 18ல் திருத்தப் பார்க்கவேண்டும். ஆனால் ஐந்தில் இருந்தே... நல்ல பழக்கவழக்கங்களை, மனித மதிப்புகளை கற்றுத்தர வேண்டியது, பெற்றோர், ஆசிரியர்களின் கடமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக