Chennai சனிக்கிழமை, அக்டோபர் 29, 1:08 PM IST
சென்னை, அக் 29-
உலக சிக்கன நாளையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேமிப்பின் அவசியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் உலக சிக்கன நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு என்பதால் எதிர்கால வாழ்க்கை நலனை கருத்தில் கொண்டு சேமிக்கும் பழக்கம் சிறுவயது முதலே வரவேண்டும்.
நாடும், வீடும் நலம் பெற, மக்கள் வாழ்வு வளம் பெற அனைவரும் சேமிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அஞ்சலகங்களில் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கும் போது அத்தொகை சிறு துளி பெரு வெள்ளம் போன்று பெருந்தொகையாகி நாட்டு முன்னேற்றத்திற்காகவும், நல்ல பல வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.
எனவே தான், தமிழக அரசு சேமிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம் பெறவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கிடவும் வீட்டிற்கு அருகிலுள்ள அஞ்சலகத்தில் ஒரு அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை தொடங்கி சேமித்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், புரட்சித் தலைவி அம்மாவின் நல்லாட்சியில் மக்கள் சிக்கனமாக வாழ தங்களின் வருவாயிலிருந்து இயன்ற அளவில் சேமித்து வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக