திங்கள், 24 அக்டோபர், 2011

ஆசுதிரேலியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு!


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு!

ஒக்டோபர் 20, 21, 22ம் நாட்களில் உலகத் தமிழர் மாநாடு அவுஸ்திரேலிய சிட்னி நகரில் நடத்தப்பட்டது. ஜேர்மனி, பிரித்தானியா, மலேசியா, கனடா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளில் இருந்து பேராளர்கள் வருகை தந்தனர். பெருந்திரளான அவுஸ்திரேலியத் தமிழர்கள் மூன்று நாட் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்களின் இறைமை, சுய நிர்ணய உரிமை, போர்க் குற்ற விடயங்கள் தொடர்பான தலைப்புக்களின் கீழ் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த விடயங்கள் தொடர்பான நிபுணத்துவ அறிவும் அனுபவமும் உள்ள சட்டவாளர்கள், பேராசிரியர்கள் தமது பெறுமதிமிக்க கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக் கொடூரங்கள் தொடர்பான விழிப்புணர்வு அவுஸ்திரேலிய அரசு மட்டத்தில் ஏற்பட்டுள்ளது. சமஷ்டிப் பொலிஸ் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியுள்ளதால் தமிழ் மக்களின் நம்பிக்கை வலுத்துள்ளது. மேற்கூறிய மாநாடு இந்தப் பின்னனியில் நடப்பதால் அதற்குப் பாரிய முக்கியத்துவம் காணப்படுகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான் மக்களின் பிரச்சனைகள் பற்றிப் பேசினார். இராணுவ ஆட்சியில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களைப் பற்றி எடுத்துச் கூறினார்
கனடிய தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி கனடா அரசு தமிழர்கள் தொடர்பாகக் காட்டும் கரிசனைக்கு கனடிய தமிழர்களின் அரசுடனான நெருக்கமும் அரசை தமிழர் சார்பில் செயற்பட வைக்கும் திறமையும் முக்கிய காரணம் என்று சுட்டிக் காட்டினார்.
அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் தலைவர் டாக்டர் இராஜேந்திரன் அவர்கள் மிகவும் பயனுள்ள பேருரையை நடத்திப் பேராளர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்த மாநாட்டில் பேசப்பட்ட கருத்துக்களை ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, போர் குற்ற விசாரணை, கடினவாழ்வின் பிடியில் அகப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் என்ற தலைப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்படலாம்.
அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிஸ் நடத்தும் போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைக்கு ஜெனிவா நகரில் இயங்கும் சர்வதேச நிபுணர்கள் அமைப்பு வழங்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
வருகை தந்தோர் எழுப்பிய வினாக்களுக்கு பேராளர்கள் சிரமம் பாரது விடை பகிர்ந்தனர். இது மூன்று நாள் மாநாட்டின் சிறப்பம்சமாக அமைந்தது. ஒக்ரோபர் மாத இறுதி நாட்களில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பேர்த் நகரில் ஒன்றுகூடிப் பேச இருப்பதால் சிட்னி மாநாடு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக