சனி, 29 அக்டோபர், 2011

பட்டாசு சத்தம் இல்லாத சிற்றூர் வவ்வால்களுக்காக "தியாகம்'

 
மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2011,01:05 IST
 
 
புதுச்சேரி:வவ்வால்களுக்காக பட்டாசு இல்லாத தீபாவளியை கிராம மக்கள் கொண்டாடினர்.தீபாவளி பண்டிகையென்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது விதவிதமான பட்டாசுகள்.

ஆனால், புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அருகில் தமிழக பகுதியைச்சேர்ந்த கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள், தீபாவளி சமயத்தில் ஊருக்குள் பட்டாசுகளை நெருங்க விடுவதில்லை . கழுப்பெரும்பாக்கம் ஆலமரத்தில் ஊருக்குள் விருந்தாளியாக தங்கியுள்ள பழந்திண்ணி வவ்வால்களே கிராம மக்களின் இந்த தியாகத்திற்குக் காரணம். இந்த பழந்திண்ணி வவ்வல்களுக்காக தான் கடந்த 5 தலைமுறையாக இந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இரவில் உணவு வேட்டை நடத்திவிட்டு பகலில் மரக்கிளைகளில் தொங்கியப்படி ஓய்வு எடுக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்தால் பழந்திண்ணி வவ்வால்கள் கலைந்து சென்றுவிடும் என்பதால் யாரும் வெடிப்பதில்லை.தீபாவளி பண்டிகை என்றில்லாமல் பல காலமாகவே இங்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை. கிராமத்தில் திருமணம், காது குத்தல், ஊர் திருவிழா என பொது விஷேச நிகழ்ச்சிகள் களைக்கட்டினால் கூட பட்டாசு சத்ததைக் கேட்க முடியாது. இப்பகுதிகளில் பட்டாசு புகை, நெடி கூட அண்ட விடாமல் பல ஆண்டுகளாக கவனத்துடன் பாதுகாத்து பாராமரித்து வருகின்றனர்.

வழக்கம்போல, இந்தாண்டு தீபாவளி பண்டிகையான நேற்றும் இந்த கிராமத்தில் மக்கள் பட்டாசுக்களை வெடிக்கவில்லை. மற்றப்படி இனிப்புகள் செய்து, புத்தாடைகள் அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர். இந்த ஊர் மக்களுக்குப் பழந்திண்ணி வவ்வால்கள் தான் செல்ல குழந்தைகளாக விளங்குகின்றன. மரத்திற்கு அடியில் வவ்வால்கள் அடிப்பட்டு கீழே விழுந்து கிடப்பதை யார் கண்டாலும் அடுத்த நிமிடமே அக்கறையுடன் முதலுதவி சிகிச்சை கொடுத்து மீண்டும் மரக்கிளையில் ஏற்றிவிடுகின்றனர். இறந்துவிட்டால் சில நிமிட மவுன அஞ்சலிக்குப்பின் மண்ணில் புதைத்துவிடுகின்றனர். எந்தக் காரணத்தை வேட்டையாடுபவர்களை ஊருக்குள் நுழைய விடுவதே கிடையாது. மனிதனுக்கு மனிதனே மனிதநேயம் காட்ட தவறும் இந்த உலகில், வவ்வால்கள் மீது பாசம் வைத்து கடந்த 5 தலைமுறைகளாக பட்டாசுகளுக்கு "குட்-பை' சொல்லி வரும் கழுப்பெரும்பாக்கம் கிராம மக்களின் உயரிய பண்பு வியக்க வைக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக