பாராட்டுகள். சயூரியின் மனித நேயத்தைப் பிறரும் பின் தொடரட்டும்! பதுக்கல் வணிகத்தைத் துறந்த சப்பான் நாட்டிற்கு வாழ்த்துகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
கேசுன்னிமா, மார்ச் 22: நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன. ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது. இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத்திரைகள் கிடைக்கவில்லை. மின்சார சப்ளையும் முழு அளவில் தொடங்கப்படவில்லை. அத்துடன் எதையாவது யாரிடமாவது வாங்கலாம் என்றால் கையில் பணமும் இல்லை. கைமாற்றாக எதையும் வாங்கிப் பழக்கம் இராத ஜப்பானியர்கள் பட்டினி கிடைப்பதை பெரிய பிரச்னையாகக் கருதுவதில்லை. இந்த நிலையில் கடலோரத்தில் மளிகைக் கடை வைத்து நடத்திய சயூரி மியாகாவா துணிச்சலாகச் செயலில் இறங்கிவிட்டார். அவருடைய கடை பெருமளவு சேதம் அடைந்திருந்தாலும் அவரால் மீட்க முடிந்த ஒரு சில பொருள்களை கடை இருந்த இடத்துக்கு வெளியே வீதியில் விற்பனைக்கு வைத்தார். நில நடுக்கம், சுனாமிக்கு முன்னதாக என்ன விலையில் விற்றாரோ அதே விலைக்கு அவற்றை விற்க முன்வந்தார். அரசு நிர்வகிக்கும் முகாம்களில் தரப்படும் உணவும், உடைகளும், வேறு சில பண்டங்களும் தேவைக்குப் போதுமானதாக இல்லாததால் சயூரியின் கடையிலிருந்த சரக்குகள் அரை மணி நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்தன. ஏ.டி.எம்.கள் வேலை செய்யாததால் கையில் ரொக்கம் இல்லாமல் மக்கள் திண்டாடுகின்றனர். ஏராளமான கார்களும், லாரிகளும் கடல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மின்சார உற்பத்தியும் சீரடையவில்லை. இந்த நிலையில் யாரோ ஒருவர் ஒரு லாரியை போக்குவரத்துக்குத் தயார் செய்துவிட்டார் என்பதை அறிந்த சயூரி அதை மொத்தவிலைக் கடை இருந்த இடத்துக்கு எடுத்துச் சென்று முடிந்தவரை அத்தியாவசியப் பொருள்களைத் திரட்டிக்கொண்டு தன்னுடைய கடை இருந்த இடத்துக்கு வந்து மீண்டும் விற்க ஆரம்பித்தார். சாக்கலேட்டுகள், பழங்கள், புட்டியில் அடைத்த பாதுகாக்கப்பட்ட குடிநீர், தக்காளிப்பழம், ஆப்பிள், மூலிகைகள் போன்றவற்றைப் புதிதாக வாங்கிவந்தார். இந்த முறை சாமான்களை லாரியிலிருந்து இறக்கி வைக்கும்போதே அவை விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால் அரிசி மாவு மட்டும் அப்படியே மூட்டைகளில் மிஞ்சியிருக்கிறது. அரிசி மாவை வேகவைக்க நல்ல நீரும் அடுப்பெரிக்க எரிபொருளும் தேவை. விரைவில் அவையும் கிடைத்துவிடும் எங்கள் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சயூரி மியாகாவா. இனி தொடர்ந்து மொத்தவிலை மார்க்கெட்டுக்குச் சென்று மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தருவித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வேன், இதுதான் என்னுடைய இப்போதைய வேலை என்கிறார். சயூரி போன்றவர்களின் உழைப்பும், நேர்மையும்தான் ஜப்பானை உன்னத நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. ""இயற்கையே நீ விளையாடியது போதும், ஜப்பானியர்களை நிம்மதியாக வாழவிடு'' என்று மனதார வேண்டிக்கொள்ளவே தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக