humanism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
humanism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 மார்ச், 2012

new research programmes in Humanities dept. of CICT - செம் மொழி மானிடவியல் துறையில் புதிய ஆய்வுகளுக்குத் திட்டம்

செம்மொழி மானிடவியல் துறையில் புதிய ஆய்வுகளுக்குத் திட்டம்

சென்னை : செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துவங்கப்பட்டுள்ள மானிடவியல் துறை சார்பாக, சமயம், மருத்துவம், சுற்றுச்சூழல் உறவு உள்ளிட்ட பிரிவுகளில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு உள்ளது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், வரலாறு, சமூகவியல், மானிடவியல் என, புதிய துறைகள் துவங்கப்பட்டுள்ளன. வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகியன, தனித்தனித் துறைகளாக இருந்தாலும், செம்மொழி ஆய்வு நிறுவனத்தில், ஒரே துறையாக இணைக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ளது.
இத்துறையின் சார்பாக, தமிழ் பண்டைய மானிடவியல் ஆய்வு பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. இதில், பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முதுநிலை ஆய்வாளர், சுந்தரமூர்த்தி வரவேற்றார்.

கணினியில் பதிவு
வரலாறு, சமூகவியல், மானிடவியல் துறைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசியதாவது: கர்நாடக மாநிலம் மைசூரில் தமிழ் மொழி ஆய்வு மையம் இயங்கி வந்தது. 2008 முதல் சென்னைக்கு மாற்றப்பட்டு செம்மொழி தமிழ் ஆய்வு மையமாக தொடங்கி செயல்பட்டு வருகிறது. சென்னையில் தொடங்கப்பட்டது முதல், தமிழில் உள்ள ஓலைச் சுவடிகள், கல்வெட்டு ஆகியவற்றில் உள்ள செய்திகளை கணினியில் பதிவு செய்தல் உள்ளிட்ட, 10 திட்டங்களைக் கொண்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிறுவனத்தில் 12 துறைகள் உள்ளன. தற்போது, வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே துறையாக துவங்கப்பட்டு உள்ளது. இத்துறைமூலம், என்னென்ன ஆய்வுகளைச் செய்யலாம் என்பது பற்றி திட்டமிட கலந்தாய்வு நடக்கிறது.

தொல்காப்பியத்தின் சிறப்பு
தமிழின் காலத்தை 1,500 ஆண்டுகள் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி, தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். மேலும், சங்க இலக்கியங்கள் போன்றவை, தொடர் தமிழ் ஆய்வுகளுக்குக் கை கொடுக்கின்றன. மானிடவியலை, நேற்று, இன்று, நாளை என வகுத்துக் கொண்டால், மொழி மானிடவியல், சமூக, பண்பாட்டு மானிடவியல், உயிரியல் மானிடவியல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது.
மானிடவியல் வளர்ச்சி, தனியான வளர்ச்சியைக் கொண்டுள்ளதாகவே தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிறது. மேலும், உயர்திணை, அஃறிணை என்பதையும் தொல்காப்பியம் மட்டுமே கையாள்கிறது. இந்நிலையில், மானிடவியல் தொடர்பான ஆய்வை உலகளாவிய முறையில் செய்ய வேண்டும். அதற்கான சிந்தனைகளை வரவேற்பதற்காகவே, இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

ஆய்வுக்கு வழிகாட்டுவோம்
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட பின், பல்வேறு தமிழ் அறிஞர்களைக் கொண்டு நடத்தப்படும் முதல் கலந்தாய்வுக் கூட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதுவரை நடந்துள்ள ஆய்வுகளை பரிசீலனை செய்து, அதன் நிறை, குறைகளை அறிந்து, புதிய ஆய்வுகளை மானிடவியலில் மேற்கொள்ள, வழிகாட்டுதல்களை இக்கருத்தரங்கம் அளிக்கும்.
தமிழர்களின் சமயம், பண்பாடு, மருத்துவம், உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் உறவு, விலங்குடனான தொடர்பு போன்றவை பற்றி, உலகளாவிய பார்வையை உருவாக்க வேண்டும். மேலும், ஆய்வுகளின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும்.
தமிழ்ப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரின் பங்களிப்பை இந்த ஆய்வுகளுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு ராமசாமி பேசினார்.

சனி, 3 செப்டம்பர், 2011

40 அடி நீள கழிவுநீர் கால்வாய்க்குள் சிக்கிய தொழிலாளி



செங்குன்றம்:மது போதையால், மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி, 40 அடி நீள கழிவு நீர் கால்வாயில் விழுந்து சிக்கினார். அரை மணி நேர போராட்டத்திற்குப் பின், ஆட்டோ டிரைவரின் உதவியால், அத்தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார்.சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தக் கரையம்பட்டு, மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 40. கூலித் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, லேசாக மன நலமும் பாதிக்கப்பட்டவர். இவரது மனைவி கட்டுமான வேலை செய்து வருகிறார்.

நேற்று பகல் 12 மணி அளவில், செங்குன்றம் நகர தி.மு.க., அலுவலகம் அருகே, கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த 40 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 3 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயின் சாலை தடுப்புச் சுவர் மீது, முருகன் அமர்ந்திருந்தார். திடீரென்று கால்வாய்க்குள் விழுந்தவர், அப்படியே ஐந்தாறு அடி முன்னோக்கி தவழ்ந்து சென்று, குறுகிய இடத்தில் சிக்கினார்.அவர் உள்ளே விழுந்ததைப் பார்த்த சிலர், அருகில் உள்ள செங்குன்றம் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கேசவன், எஸ்.ஐ., கண்ணன், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கால்வாய்க்குள் செல்லத் தயங்கினர். அப்போது, அங்கு வந்த செங்குன்றம், அண்ணா தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன், 32 என்பவர், துணிச்சலுடன் தீயணைப்பு வீரர்கள் வைத்திருந்த கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு கால்வாயின் எதிர்த்திசையில் இறங்கி, ராணுவ வீரர் போல் ஊர்ந்தபடி உள்ளே சென்றார்.சில நிமிட போராட்டத்திற்குப் பின், அவரை பாதுகாப்பாக மீட்டு, தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தார். அவரை, வீரர்கள் கழுவி சுத்தம் செய்தனர். பின், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில், தொழிலாளி முருகனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.மனிதநேயத்துடன் துணிச்சலாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் சீனிவாசனை பொதுமக்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் பாராட்டினர். முதலுதவிக்குப் பின் முருகனை, அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

புதன், 23 மார்ச், 2011

Humanism of provisonal store owner in Japan: மளிகைக் கடைக்காரரின் மனிதாபிமானம்! நெகிழவைக்கும் சப்பானியர்கள்

பாராட்டுகள். சயூரியின் மனித நேயத்தைப் பிறரும் பின் தொடரட்டும்! பதுக்கல் வணிகத்தைத் துறந்த சப்பான் நாட்டிற்கு வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /

மளிகைக் கடைக்காரரின் மனிதாபிமானம்! 
நெகிழவைக்கும் ஜப்பானியர்கள்


கேசுன்னிமா, மார்ச் 22: நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன.  ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது.  இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத்திரைகள் கிடைக்கவில்லை. மின்சார சப்ளையும் முழு அளவில் தொடங்கப்படவில்லை. அத்துடன் எதையாவது யாரிடமாவது வாங்கலாம் என்றால் கையில் பணமும் இல்லை. கைமாற்றாக எதையும் வாங்கிப் பழக்கம் இராத ஜப்பானியர்கள் பட்டினி கிடைப்பதை பெரிய பிரச்னையாகக் கருதுவதில்லை.  இந்த நிலையில் கடலோரத்தில் மளிகைக் கடை வைத்து நடத்திய சயூரி மியாகாவா துணிச்சலாகச் செயலில் இறங்கிவிட்டார்.  அவருடைய கடை பெருமளவு சேதம் அடைந்திருந்தாலும் அவரால் மீட்க முடிந்த ஒரு சில பொருள்களை கடை இருந்த இடத்துக்கு வெளியே வீதியில் விற்பனைக்கு வைத்தார். நில நடுக்கம், சுனாமிக்கு முன்னதாக என்ன விலையில் விற்றாரோ அதே விலைக்கு அவற்றை விற்க முன்வந்தார்.  அரசு நிர்வகிக்கும் முகாம்களில் தரப்படும் உணவும், உடைகளும், வேறு சில பண்டங்களும் தேவைக்குப் போதுமானதாக இல்லாததால் சயூரியின் கடையிலிருந்த சரக்குகள் அரை மணி நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்தன.  ஏ.டி.எம்.கள் வேலை செய்யாததால் கையில் ரொக்கம் இல்லாமல் மக்கள் திண்டாடுகின்றனர்.  ஏராளமான கார்களும், லாரிகளும் கடல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மின்சார உற்பத்தியும் சீரடையவில்லை. இந்த நிலையில் யாரோ ஒருவர் ஒரு லாரியை போக்குவரத்துக்குத் தயார் செய்துவிட்டார் என்பதை அறிந்த சயூரி அதை மொத்தவிலைக் கடை இருந்த இடத்துக்கு எடுத்துச் சென்று முடிந்தவரை அத்தியாவசியப் பொருள்களைத் திரட்டிக்கொண்டு தன்னுடைய கடை இருந்த இடத்துக்கு வந்து மீண்டும் விற்க ஆரம்பித்தார்.  சாக்கலேட்டுகள், பழங்கள், புட்டியில் அடைத்த பாதுகாக்கப்பட்ட குடிநீர், தக்காளிப்பழம், ஆப்பிள், மூலிகைகள் போன்றவற்றைப் புதிதாக வாங்கிவந்தார்.  இந்த முறை சாமான்களை லாரியிலிருந்து இறக்கி வைக்கும்போதே அவை விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால் அரிசி மாவு மட்டும் அப்படியே மூட்டைகளில் மிஞ்சியிருக்கிறது. அரிசி மாவை வேகவைக்க நல்ல நீரும் அடுப்பெரிக்க எரிபொருளும் தேவை.  விரைவில் அவையும் கிடைத்துவிடும் எங்கள் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சயூரி மியாகாவா.  இனி தொடர்ந்து மொத்தவிலை மார்க்கெட்டுக்குச் சென்று மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தருவித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வேன், இதுதான் என்னுடைய இப்போதைய வேலை என்கிறார்.  சயூரி போன்றவர்களின் உழைப்பும், நேர்மையும்தான் ஜப்பானை உன்னத நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. ""இயற்கையே நீ விளையாடியது போதும், ஜப்பானியர்களை நிம்மதியாக வாழவிடு'' என்று மனதார வேண்டிக்கொள்ளவே தோன்றுகிறது.