புதன், 23 மார்ச், 2011

partymen behind vaiko: வைகோவுக்குப் பின்னால் தொண்டர்கள்: ம.தி.மு.க. மாணவரணிச்செயலர் அறிக்கை

சரிதான். இத்தகைய எண்ண ஓட்டம் தொண்டர்களிடம் இருப்பின் கட்சி வளரும். சிலர் விலை  போனாலும் கட்சி இருக்கும். இந்தக் கால இடைவெளியில் தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் தரப்படவேண்டியமை குறித்தும் உலகத்தமிழர்கள்  பேணப்பட வேண்டியது குறித்தும் பரப்புரை மேற்கொள்வது நாட்டிற்கும் ம.தி.மு.கவிற்கும்  நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /

வைகோவுக்கு பின்னால் தொண்டர்கள்: 
ம.தி.மு.க. மாணவரணி செயலர் அறிக்கை

First Published : 23 Mar 2011 12:00:00 AM IST


சங்கரன்கோவில், மார்ச் 22: வைகோவுக்குப் பின்னால் ம.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என கட்சியின் மாநில மாணவரணிச் செயலர் தி.மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  2011 சட்டப் பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை என்று அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனம் நடுநிலையாளர்கள் மத்தியிலும், ம.தி.மு.க.வின் ஆணிவேராக விளங்குகின்ற அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வைகோ மீதான மதிப்பும் உயர்ந்துள்ளது. ம.தி.மு.க.வின் மார்ச் 20-ம் தேதி தீர்மானத்தின்படி 2011 பேரவைத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றுதான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளும்,பல அரசியல் கட்சியினரும் ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாகவும், தேர்தலில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளதாகவும் அவரவர்களுக்கு உகந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.  மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது. 1967 முதல் 1976 வரை பத்து ஆண்டுகள் அந்தக் கட்சி எந்தத் தேர்தலிலும் போட்டியிடாது, கட்சியைச் சீரமைக்கும் பணிகளை மட்டுமே பத்து ஆண்டுகளில் மேற்கொள்வோம் என்று அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1977 முதல் இன்று வரை உலகமே வியந்து நோக்குகிற வெற்றியைப் பெற்றது.  அந்த பத்து ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிடவில்லை. மாறாக வளர்ந்து செழித்தது.  எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்குகிற இயல்பு எப்போதும் ம.தி.மு.க.வுக்கு கிடையாது.  புலி பதுங்குவது பயத்தால் அல்ல. நாளைய பாய்ச்சலுக்குத்தான் என்பதை காலம் உணர்த்தும்.  வைகோ பின்னால் தன்னலமற்ற ம.தி.மு.க.வின் தியாக மாமணிகள் முழுமையாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.  5 ஆண்டுகளாக ஆளும் கட்சிக்கு சிம்மசொப்பனமாக தமிழக அரசியல் களத்தில் எழுச்சிக் கோலம் பூண்டு பணியாற்றியவர் வைகோ.  திக்குத் தெரியாமல் அரசியல் காட்டில் திசை தெரியாமல் அ.தி.மு.க. தொண்டர்கள் தவித்தபோது, அவர்களை அரவணைத்து நம்பிக்கையூட்டி அடுத்த நகர்வுக்கு ஆயத்தப்படுத்தியவர் வைகோ. அவர் எங்கும்போய் ஆண்டுக்கணக்கில் ஓய்வு எடுக்கவில்லை.  கூட்டணிக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரே முன் மாதிரி ம.தி.மு.க. வைகோவுக்கும், ம.தி.மு.க.வுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்து வெளியேற்றி இருக்கிறார் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய அ.தி.மு.க. பொதுச்செயலர்.  இதனால் அ.தி.மு.க. அணிக்கு வாக்களிக்க நினைத்திருந்த நடுநிலையான வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பிக்கைத் துரோகத்தை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.  அதன் விளைவுகள் தேர்தல் முடிவுகளாக 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும். அப்போது வைகோ தலைமையில் புதிய எழுச்சியோடு எங்கள் பயணத்தை முன்னெடுப்போம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக