வெள்ளி, 25 மார்ச், 2011

பதுங்குவது பாய்வதற்கு தான்: வைகோ ஆவேசம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: "ம.தி.மு.க., பதுங்குவது பாய்வதற்கு தான்,' என அக்கட்சி பொது செயலாளர் வைகோ ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருமண விழாவில் பேசினார்.

இவர் மேலும் பேசியதாவது: ம.தி.மு.க., தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. ஆனால் தினமலர் நாளிதழ் இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக மட்டுமே குரல் கொடுத்து வருவதாக கூறுகிறது. மதுரையில் தினமலர் அலுவலகம் தாக்கப்பட்ட போது நான், மதுரை மாசி வீதியில் ம.தி.மு.க., தொண்டர்களை திரட்டி அந்த பத்திரிகைக்கு ஆதரவாக போராடினேன். நான் எம்.பி.,யாக இருந்த போது விவசாயிகளை காப்பாற்ற நதி நீர் இணைப்பை வலியுறுத்தி வருகிறேன்.

முல்லை பெரியாறு அணைக்காக ம.தி.மு.க.,வை போல் வேறு எந்த கட்சியும் போராடவில்லை. நவரத்தினங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசி அதை தடுத்தேன். தூத்துக்குடியில் நச்சு தொழிற்சாலையான ஸ்டெர்லைட் தொழிற்சாலையை தடை செய்ய போராட்டம் நடத்தினேன். அத்தொழிற்சாலை உரிமையாளர் அகர்வால், என்னை சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தும் நான் அவரை பார்க்கவில்லை. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றேன். தற்போது சுப்ரீம் கோர்ட்டில் அத்தொழிற்சாலை இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளது. இவ்வழக்கில் நான் வாதாடி வருகிறேன். இதை தினமலர் நாளிதழ், ஆறப்போட்ட பிரச்னையை கிளப்பியதாக எழுதுகிறது.

நான் அத்தொழிற்சாலை உரிமையாளரை சந்தித்து 100 கோடி ரூபாய் வாங்கி, எங்கள் கட்சியை நடத்தலாம். நான் தமிழக மக்களை பாதுகாக்கவே தொடர்ந்து போராடி வருகிறேன். இதனால் ம.தி.மு.க.,வை தமிழக சட்டசபைக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம், 1000 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நான் சொல்ல வில்லை. பத்திரிகைகள் தான் சொல்கின்றன. தினமணி பத்திரிகை, ம.தி.மு.க., முடிவால் மாவட்ட செயலாளர்கள் மனக்குமுறல்களில் உள்ளனர். தனியாக கூட்டம் நடத்த போவதாக செய்தி வெளியிட்டிருந்தது. தேர்தல் புறக்கணிப்பு என்பது மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர் சேர்ந்து எடுத்த ஒருமித்த முடிவு. இதில் பிளவு எதுவும் இல்லை. இக்கூட்டத்தில் கட்சியினர் பேசிய பேச்சுகளை விரைவில் வெளியிட உள்ளேன். கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. எங்களின், "தேர்தல் புறக்கணிப்பு' என்ற தீர்மானத்தை தவிர, வேறு எதுவும் பத்திரிகைகளுக்கு சொல்வதிற்கில்லை. இந்த தேர்தலை மட்டும் தான் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளேன். ஆடுகள் மோதும் போது பின் வாங்குவது போல் ம.தி.மு.க., போட்டியிடாமல் உள்ளது, மீண்டும் போட்டியிட தான், நாங்கள் பதுங்குவது பாய்வதற்கு தான், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக