Last Updated :
முட்டி மோதி, பிணங்கி, சுணங்கி ஏமாற்றுபவர் யார், ஏமாந்தவர் யார் என்பதெல்லாம் புரியாத நிலையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் களம் காண கட்சிகள் புறப்பட்டு விட்டன. 1967-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் தனியாகப் போட்டியிடும் வலிமையோ, துணிவோ தி.மு.க.வுக்குக் கிடையாது. 1972-ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க.வும் தனித்துப்போட்டியிட துணியவில்லை. கூட்டணிக் கட்சிகளின் தோள் மீது ஏறி இரு கழகங்களும் தங்களை உயரமாகக் காட்ட முற்படுகின்றனவே தவிர, தனித்து நின்று தங்களின் குள்ள உருவத்தை அம்பலப்படுத்திக் கொள்ள முன்வரவில்லை. ஆனால், தாங்கள்தான் பெரிய கட்சிகள் என்பதைப் போலவும், கூட்டுசேரும் கட்சிகள் எதுவானாலும் தங்களின் தயவில்லாமல் வெற்றிபெற முடியாது என்பதைப் போலவும் ஒரு மாயையை உருவாக்கி, மற்ற கட்சிகளுக்குப் பிச்சை போடுவதைப் போல சில தொகுதிகளைக் கொடுத்து ஆட்டிப்படைக்க இரு கழகங்களும் தவறுவதில்லை. 1967-ம் ஆண்டிலிருந்து இன்று வரை 44 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீட்டுக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரு கழகங்களின் பல்லக்குத் தூக்கிகளாகத்தான் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் கருதுகின்றன. கூட்டணியில் உள்ள கட்சிகளை எவ்விதக் காரணமும் இல்லாமல் கழற்றிவிடுவதும், மீண்டும் வெட்கமில்லாமல் சேர்த்துக் கொள்வதும் இரு கழகங்களுக்கும் ஆகிவந்த கலையாகும். கூட்டணியில் சேர்ந்த பாவத்துக்காகக் கட்சிகள் இரு கழகங்கள் குறித்து எவ்வித விமர்சனமும் செய்வதைச் சகித்துக்கொள்ளும் பக்குவம் கழகத் தலைமைகளுக்கு அறவே கிடையாது. ஜனநாயக ரீதியில் கழக ஆட்சிகளின் குறைகளைக் கூட்டணிக் கட்சிகள் சுட்டிக்காட்டினால் அதைப் பொறுத்துக்கொள்ளும் பக்குவமோ தவறுகளைத் திருத்திக் கொள்ளும் குணமோ கழகத் தலைமைகளுக்கு இருப்பதில்லை. மாறாகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை மிரட்டுவதும், அவதூறுகளை அள்ளி வீசுவதும், கூட்டணியில் இருந்து நீக்குவதும் போன்ற பாசிசப் போக்கு இரு கழகத் தலைமைகளுக்கும் நிறையவே உண்டு. கூட்டணிகளில் யாரைச் சேர்ப்பது, யாரை நீக்குவது என்பது போன்ற முக்கிய பிரச்னைகளில் முடிவெடுப்பது கழகத் தலைமைகள் மட்டுமல்ல. தலைமைகளின் குடும்ப உறுப்பினர்களும் அல்லது குடும்பத்துக்கு நெருக்கமானவர்களும் இதில் தலையிடுகிறார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப முடிவுகளை இரு கழகத் தலைமைகளும் எடுக்கின்றன. இதில் இருவருக்குமிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, வேறு சிலரும் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், ஆகியோரின் தேர்விலும் தலையிடும் அவலப் போக்கு இரு கழகங்களிலும் நீடிக்கிறது. மணல் திருடர்கள், கிரானைட் கொள்ளையர்கள், நாட்டு வளங்களைச் சூறையாடுபவர்கள், இயற்கைச் சூழலை மாசுபடுத்தும் மாபாவிகள், சாராய சாம்ராஜ்யவாதிகள் போன்ற சமூக விரோதக் கூட்டமும் இரு கழகங்களின் தலைமைகள் எடுக்கும் முடிவுகளைத் திருத்தவும், திசை திருப்பவும் சக்தி படைத்தவைகளாகத் திகழ்கின்றன. தேர்தல் கூட்டணிக் கட்சிகளைவிட மிகஅதிகமான செல்வாக்குப் படைத்ததாக இந்தக் கொள்ளைக் கூட்டணிகள் விளங்குகின்றன. தேர்தல் கூட்டணிகளையே இவர்கள் தீர்மானிக்கிறார்கள். எவ்வித கூச்ச நாச்சமற்றவர்கள், மனசாட்சியை மறந்தவர்கள், தடித்த தோலர்கள், பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாதவர்கள் கைகோத்து நிற்கிறார்கள். தமிழக அரசையும், அதை நடத்தும் இரு கழகத் தலைமைகளையும் தங்களின் பண வலிமையால் ஆட்டிப் படைக்கிறார்கள். மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும் குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையிலும், இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனாலும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், கூட்டணி அரசின் நிறைகுறைகளை விமர்சிக்க ஒருபோதும் தயங்குவதில்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னை ஏற்பட்டபோது, இடதுசாரிக் கூட்டணியில் அங்கம் வகித்த பல கட்சிகள் தங்கள் அரசைக் கண்டிக்க ஒருபோதும் தயங்கவில்லை. தங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்த அந்தக் கட்சிகள் மீது இடதுசாரிக் கூட்டணியின் தலைமை கோபப்படவில்லை. ஆனால், இங்கு என்ன நடக்கிறது? கழக ஆட்சியின் தவறைச் சுட்டிக்காட்டிக் கண்டித்த கம்யூனிஸ்டு தலைவர் தா. பாண்டியனின் கார் எரிக்கப்பட்டது. இதுவரை காரை எரித்த குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் அனைவராலும் நன்கு மதிக்கப்படும் தியாகசீலர் நல்லகண்ணு மீது முதலமைச்சர் கருணாநிதி சேற்றை வாரி இறைக்கத் தவறவில்லை. இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தியாகம், தொண்டு, துன்பம் ஆகியவற்றைத் தங்கள் தாரக மந்திரமாகக் கொண்டவர்கள். மக்கள் தொண்டுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தி.மு.க.விலோ அல்லது அ.தி.மு.க.விலோ, கம்யூனிஸ்டுகள் அளவுக்குத் தியாகம் செய்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், அந்தக் கம்யூனிஸ்டுகளை இரு கழகத் தலைமைகளும் நடத்தும் விதம் வேதனைக்குரியதாகும். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்துவரும் கம்யூனிஸ்டுகளை, கொள்கையற்ற கோமாளிகள் அவமானப்படுத்துகிறார்கள். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அவமானப்படுத்திய விதம் தமிழக மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுடன் எல்லா வகையிலும் இணைந்து நின்றவர் வைகோ. அவரை முதலில் அழைத்து கூட்டணி பற்றிப் பேசவேண்டிய தலைமை, அவரைப் புறக்கணித்து, கடைசியில் ஏனோதானோ என்று நடத்திய விதம் அரசியல் பண்பாட்டுக்கு எதிரானதாகும். இதற்குப் பின்னணியில் பெரும் தொழில் நிறுவனம் ஒன்று இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற மேலவையிலும் அங்கம்வகித்து சிறந்த நாடாளுமன்றவாதியாகத் திகழ்ந்து முத்திரை பொறித்தவர் வைகோ ஆவார். தற்போதைய பிரதமரானாலும், பல்வேறு கட்சித் தலைவர்களானாலும் அவர்களைச் சந்திக்க வைகோ முற்பட்டால் உடனடியாக மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். ஆனால், மூத்த நாடாளுமன்றவாதியான வைகோவை சந்தித்துப் பேசுவதற்குப் பதில், யார்யாரையோ அனுப்பிப் பேசுவது தவறான போக்காகும். அவரை அவமதிப்பதாக நினைத்து, தங்களின் சுயவடிவத்தை அம்பலப்படுத்திக் கொள்வதாகும். தி.மு.க. கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சியை மிரட்டிப் பணியவைக்க தி.மு.க. தலைமை மேற்கொண்ட முயற்சிகள் எதிர்விளைவையே ஏற்படுத்தின. தொகுதிகளின் எண்ணிக்கைக்காக இந்த மோதல் நடைபெறவில்லை. மாறாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிகொண்டிருக்கிற தனது குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்காகவே தி.மு.க. தலைமை இவ்வாறு நடந்துகொண்டது என்பதும், அது கடைசியில் பலிக்கவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளரான ஆ. ராசா, ஊழல் பரப்புச் செயலாளரானதையும் இந்தியாவின் மிகப் பெரிய ஊழலை நடத்திக்காட்டிச் சாதனை படைத்ததையும் குறித்து கழகத் தலைமைக்கு வெட்கமில்லை. எனது தம்பி ராசா தவறு செய்யவேயில்லை என்று வக்காலத்து வாங்க கருணாநிதி பின்வாங்கவில்லை. ஊழல் புகாரில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகி, பதவி விலகி வரும் ராசாவுக்கு விமான நிலையத்தில் கழகத் தம்பிகளைக் கொண்டு ஆரவார வரவேற்பு அளிக்கவும் அவர் தயங்கவில்லை. முதல்வரின் மனைவி, மகள் ஆகியோரை ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்களுக்காக சி.பி.ஐ. விசாரிக்கிறது. அதே வேளையில் அதே அறிவாலயக் கட்டடத்தின் இன்னொரு பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினருடன் கூட்டணி பற்றிய விவாதத்தில் கருணாநிதி ஈடுபட்டிருப்பதைக் காணும்போது எப்பேர்ப்பட்ட சரிவும் இழிவும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுவிட்டது என்ற உணர்வு யாருக்கும் ஏற்படாமல் போகாது. ஊழல்களையும் தவறுகளையும் மறைக்க இரு கழகத் தலைமைகளும் கையாளும் தந்திரம்தான் இலவசத் திட்டங்கள் ஆகும். இரண்டு கழகங்களுமே இலவசங்களை அறிவிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், நாட்டின் தொழில் வளம் பெருகவும், வேளாண்மை சிறக்கவும், வயது வந்த குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கவும், எவ்விதத் திட்டத்தையும் அறிவிக்க முன்வராத இந்தக் கட்சிகள், தொலைக்காட்சிப் பெட்டிகளையும், கிரைண்டர்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமலும், இலவசத் திட்டங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சி சீரழிவதைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்காமலும் இரு கழகங்களும் செயல்படுகின்றன. ஊழலின் விளைவாகத் தாங்கள் மூட்டை மூட்டையாகச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் பெரு முதலாளிகள் அள்ளித் தந்த பணத்தையும் மட்டுமே நம்பித் தேர்தல் களத்தில் இரு கழகங்களும் இறங்கியுள்ளன. பணத்தை வாரியிறைத்து ஜனநாயகத்துக்கு சவக்குழித் தோண்டிப் புதைத்துவிட்டு பணநாயகத்தை அரியணையில் ஏற்றுவதற்கு இரு கழகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன. இனி கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். ஏழை எளியவர்களுக்குத் தேர்தல் என்பது எட்டாக் கனியாக்கப்பட்டுவிட்டது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் தி.மு.க.வுக்குக் கிடைத்த வாக்குகளின் சதவிகிதம் 26.46, அ.தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் 32.64. மேலும் இந்த வாக்கு சதவிகிதக் கணக்குகள் துல்லியமானவை அல்ல. தி.மு.க. பெற்ற வாக்குகளும், அ.தி.மு.க. பெற்ற வாக்குகளும் அந்தக் கட்சிகளுக்கு மட்டும் கிடைத்த தனித்த வாக்குகள் அல்ல. கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து கணக்கிட்டதால்தான் இந்த சதவிகிதம். இந்த வாக்கு சதவிகிதம் இந்தத் தேர்தலில் அப்படியே நீடிக்கும் என்று கூறமுடியாது. இது மேலும் குறையுமே தவிர ஒருபோதும் கூடாது. இந்தக் குறைந்த அளவு வாக்குகளின் துணைகொண்டு தொடர்ந்து இரு கழகங்களும் ஆட்சியை மாறிமாறிக் கைப்பற்றுகின்றனவே தவிர, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமரவில்லை. 1967-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் இரு கழகங்களும் ஒரு தடவைகூட 50 சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைத் தனித்துப் பெற்றதே இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் இவைகள் மாறிமாறி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளன என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். தமிழகத்தின் எதிர்காலம் குறித்து உண்மையாகவே கவலை கொள்பவர்கள் வருந்தாமலிருக்க முடியாது. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த வாக்காளர்கள் செய்கிற தவறு பல தலைமுறைகளுக்கு மக்களைப் பாதித்துவிடக்கூடாது. 1933-ம் ஆண்டில் ஜெர்மானிய மக்கள் ஹிட்லரின் மாய்மாலப் பேச்சில் மயங்கி அவரின் நாசிக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அப்போதும் அவருக்குப் பெரும்பான்மை இல்லை. எப்படியோ ஆட்சிபீடம் ஏறிய பிறகு, அவர் சர்வாதிகாரியாக மாறினார். ஜெர்மானிய நாட்டை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தி ஐரோப்பாவையே நாசமாக்கினார். ஜெர்மனியும் அழிந்தது. ஹிட்லரும் அழிந்தார். இந்த அழிவிலிருந்து ஜெர்மனி எழுந்து நிற்க, 50 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. அறிவியல் ரீதியில் மிக முன்னேறிய சமூகமான ஜெர்மானிய சமூகம் ஒரு தடவை செய்த தவறைத் திருத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தேவைப்பட்டது என்று சொன்னால் நாம் இப்போது செய்கிற தவறை யார் திருத்துவது? எப்போது திருத்துவது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக