திங்கள், 25 பிப்ரவரி, 2019

கவனயீர்ப்புப் போராட்டம்

கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி
10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1  [அருகிலுள்ள தொடருந்து நிலையம்:  Westminster]
தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப்  போராட்டத்திற்கு பிரித்தானியத்  தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது.
மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பிரித்தானியத் தமிழர் பேரவை

தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்

அகரமுதல
தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோபோவதில்லை! – உருத்திரகுமாரன்
 இலங்கை அரசின் தமிழின அழிப்பைத்  தமிழீழத்  தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அமைதியாக உறங்குவார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
 கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டமொன்றில், அங்குக் கூடியிருந்த தமிழ் மக்களை நோக்கித் தலைமையர் இரணில் விக்கிரமசிங்க கடந்த காலப் போர்ச் சிக்கல்களுக்கு ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வகையில் நல்லிணக்கம் காணவேண்டும் எனக் கோரியமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே உருத்திரகுமாரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினத்  துவேசத்தால் நிகழ்ந்திருந்த இனப்படுகொலைக்குத் தீர்வாக அங்கு உண்மை – நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission) நியமிக்கப்பட்டு வழக்கு, தண்டனை எதுவும் இல்லாமல் நிகழ்ந்த சிக்கல்கள், மன்னிக்கப்பட்டு நல்லிணக்கம் உருவானது போல, இலங்கைத் தீவிலும், அப்படியானதொரு உண்மை – நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission) நியமித்து, கடந்த காலப் போர்ச் சிக்கல்களுக்கு ‘மறப்போம் மன்னிபோம்’ என்ற வகையில், நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டுமென்று  இலங்கையின் தலைமையர் கோரியுள்ளார். இதற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்-
 இனப்படுகொலைக்கு உள்ளான தென்னாப்பிரிக்க கறுப்பர்கள்,அரசியல் விடுதலை பெற்று ஆட்சியில் இருந்தவாறு, வெள்ளையர்களை மன்னித்த தென்னாப்பிரிக்க எடுத்துக்காட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாகிஉரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளாக இருக்கும் ஈழத் தமிழருக்குப்பொருந்தாது. தென்னாப்பிரிக்காவின் சிக்கல் வேறு. ஈழத் தமிழர்களின் சிக்கல் வேறு. இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடமுடியாது.
 தென்னாப்பிரிக்காவின் மொத்த குடித்தொகையில் 8.9 விழுக்காட்டைக் கொண்ட வெள்ளையர்கள் பெரும்பான்மைக் கறுப்பின மக்களை இனவெறி/இன ஒதுக்கல் (Apartheid) என்று சொல்லப்படுகின்ற இன வெறுப்புக்  கொள்கையின் கீழ், பெருந்தொகையான கறுப்பினத்தவர்கள் இனப்படுகொலைகளுடன் கூடிய பாரிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர்.
 ஆனால் நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசு, தீரத்துடன் போராடி 1995ஆம் ஆண்டு வெள்ளையின வெறுப்பு ஆட்சியாளர்களைத் தோற்கடித்துக், கறுப்பர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் ஊடாக இனத்துவேச வெள்ளையர்கள் தோற்கடிக்கப்பட்டு ‘Apartheid’ என்ற இனவெறி வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டது. அத்துடன் ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் கைக்கு ஆட்சி அதிகாரம் மாறியது. வெற்றிபெற்ற கறுப்பர்கள் எட்மண்டு தூட்டூ (Desmond Tutu) என்ற கறுப்பினத் தலைவரின் கீழ் மேற்படி விசாரணைக் ஆணையத்தை அமைத்து, வெள்ளையர்களுக்கு மன்னிப்பு அளித்தமை வரலாற்றில் நீதிமான்கள் அளித்த மன்னிப்பாக அமைந்தது.
 ஆனால் இலங்கையின் நிலைமை அப்படியல்ல. ஒன்றரை இலட்சம் தமிழ்மக்களை இனஅழிப்பு புரிந்த ஆட்சியாளர்களும், அந்த இனமும் தொடர்ந்தும்அதிகாரத்தில் உள்ளார்கள். இனஅழிப்பு புரிந்த இனத்தின் கையில் அரசியல் அதிகாரம் அப்படியே உள்ளது.
 இங்கு அரசியல் இறைமைக்காகப் போராடிய தமிழ் மக்கள்ஆக்கிமிரமிக்கப்பட்டவர்களாய்;, படுகொலை செய்யப்பட்டவர்களாய்அவமானத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் இனஅழிப்பு புரிந்த சிங்களஇராணுவம் தொடர்ந்தும் தமிழ் மண்ணை தம் இரும்புப் பிடிக்குள்வைத்திருக்கிறது.
 இங்கு யார் யாரை மன்னிப்பது?
 இனஅழிப்பின் ஊடான ஆக்கிரமிப்பை மன்னித்துத் தம்மை அதிபர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையின் தலைமையர் இரணில் கோருகிறார். இத்தகைய அதிபர் அங்கீகாரத்தைத்தான் அவர் நல்லிணக்கம் என்று சொல்கிறார்.
 அரசியல் இறைமைக்காகப் போராடிய தமிழ் மக்களின் அடிப்படைஉரிமைகள் எட்டப்படாமலே உள்ளன. அரசியல் தீர்வு என்பது; பொய்க்கதையாகவே ஆகிவிட்டது. போருக்குக் காரணம் தமிழ் மக்கள் அல்லர். அவர்களின் அடிப்படை பிறப்புரிமைகளை மறுத்து, அவர்கள் மீது இனப்படுகொலைக்கான படுகொலைகளை இலங்கையின்  படைத்துறை- காவல் தரப்பினர் கட்டவிழ்த்து விட்ட நிலையிற்தான் போர் வெடித்தது. அந்தப் போரைச் சிங்களத் தேசமே உருவாக்கியது. இந்தப் போரைத் தமிழ் மக்கள் எதிர் கொள்ளத் தள்ளப்பட்டார்கள்.
 இப்போது இனஅழிப்புக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு மாற்றாக இனப்படுகொலையாளிகளை மன்னிக்குமாறு தமிழ் மக்களை, இலங்கையின் தலைமையர் இரணில் கிளிநொச்சியில் நின்று கோரியுள்ளார். இங்கு இனஅழிப்புக்குப் பொறுப்பான அரசியல் தலைவர்களும், படைத்தளபதிகளும் தண்டிக்கப்பட வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது.
 சிறுபிள்ளைக்குக் கூறுவதுபோல முற்றிலும் வேறுபட்ட, அரசியல் தீர்வு காணப்பட்ட, கறுப்பின மக்களின் கைக்கு அரசியல் அதிகாரம் மாற்றப்பட்ட, கறுப்பின மக்களால் வெள்ளையர்களுக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை இலங்கைத்தீவின்  சிக்கலுக்கு இரணில் பொருத்தப் பார்க்கிறார். இது அறிவியல் குறைபாட்டின் காரணமாய் நடைபெற்றதொன்றல்ல. சிங்களத்தின் மீதுவிழுந்துள்ள தமிழின அழிப்புக் குற்றச்சாட்டில் இருந்து சிங்களத் தேசத்தைக்காப்பாற்றத் திட்டமிட்ட வகையில் இரணில் இதனைச் செய்கிறார். இதற்குத் தமிழர் தலைவர் எனக் கூறிக் கொள்வோர் சிலரும் சாமரம் வீசுகின்றனர்.
 இலங்கைத்தீவில் தமிழின அழிப்பைப் புரிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தில்இருக்கின்ற சிங்கள இனத்தலைவர்களுக்கும், படையினருக்கும், நீதிமறுக்கப்பட்டிருக்கும், நீதிக்காகப் போராடும் தமிழ் மக்கள் எவ்வாறுமன்னிப்பு அளிக்க முடியும்? எவ்வாறு இனவழிப்பை மறந்து விட முடியும்?
 இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகளாகியும் சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான நீதி பற்றி இன்னும் சிந்திக்கும் நிலையில் இல்லை. மாறாகத் தமிழின அழிப்பை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் சிங்களத் தேசத்துடன் இணைந்து வாழ்வது என்பது ஒத்துவராது – சாத்தியப்படாது. உரிமைகள் மறுக்கப்படும் ஒரு தேசம் ஒடுக்கும் தேசத்தோடு நல்லிணக்கம் பேசுவது என்பது அதிபர்-அடிமை உறவு நிலையாகும். எனவே முதலாவதாகத் தமிழர் தேசத்துக்கு நீதி கிடைத்தாகவேண்டும்.
 “இனப் படுகொலையைப் பிரிவினை மூலம் மட்டுமே ஈடு செய்ய முடியும்.” (“Genocide can be compensated only by secession”) என்ற கூற்று இங்கு கருத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் பன்னாட்டுப் போர்க்குற்றக் கூட்டு விசாரணைக்காகச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடியும் நிலையில், இனஅழிப்புக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத் தமிழர்களிடம் இருந்து இரணில் மன்னிப்புப் பத்திரம் கோருகிறார். தமிழ் மக்களுக்கு நீதியையும், அரசியல் உரிமையையும் வழங்குவதற்கு மாற்றாக, இனப்படுகொலை புரிந்த சிங்களத் தலைவர்களையும், கொல்லும் இயந்திரம்(Killing Machine) எனச் சொல்லப்படுகின்ற சிங்களப் படையினரையும் காப்பாற்றுவதற்கு இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் வாயிலாக மன்னிப்புப் பத்திரம் பெற்றுப் படுகொலையாளிகளைப் பாதுகாக்க முற்படுகிறார். இது நல்லிணக்கம்,மன்னிப்பு என்ற சொற்களின் பேராலான இன்னொரு மோசமானஇனஅழிப்புச் சிந்தனை கொண்ட அரசியலாகும். இது குறித்துத் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். 
 இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை

அகரமுதல

சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்:

கணியம் அறக்கட்டளை

அறிவியல், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை
  • Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற கணியம்(மென்பொருள்) சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
  • comதளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட ஆர்வலர்கள் தொடர்ந்து மின்னூலாக்கத்தில் ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகின்றார்கள்.
  • wikisource.orgதளத்தில் விக்கிப்பீடியா குழுவினருடன் இணைந்து 2000 க்கும் மேற்பட்ட மின்னூல்கள் எழுத்துணரி (OCR) மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டு, மெய்ப்பு (Proof Reading) பார்க்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகளுக்குத் தேவையான கட்டற்ற கணியம் (Free Open Source Software) வெளியிடப்படுகின்றன.
தன்னார்வலர்களே  இத்தகு முயற்சிகளுக்குப் பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்து வருகின்றனர். இப்பணிகள் தமிழ் மொழி சார்ந்த இலக்குகளை அடைவதற்குச் சிறந்த வெளியை ஏற்படுத்தித் தந்துள்ளது. ஆர்வலர்கள் இணைந்து பணியாற்றவும் வழிவகுத்துள்ளதுடன், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.
 நாட்டுடைமை நூல்களை அச்சு நூல்களாக வெளியிடும் மாணவர் பதிப்பகம்தம்மிடம் உள்ள 1,165 மின் நூல்களின் [2 இலட்சத்துக்கு மேல் பக்கங்கள்]   சீருருவில்  உள்ள சொல் ஆவணங்களைக், கணியம் அறக்கட்டளை இலவசமாக வெளியிடுவதற்குத் தருவதாக உறுதி கூறினர். அவையாவும் இலவச மின்னூலாக வெளிவரும்போது தமிழின் அரும்பெரும் படைப்புகள் அனைவரது கைகளிலும் தவழும் இனிய நிலை உருவாகும்.
மாணவர் பதிப்பகத்தாரின் பெரும்பணிகளுக்கு, அதற்கான தட்டச்சுச் செலவின் ஒரு பகுதி   நன்கொடையாக உரூபாய் 5 இலட்சம் அளிப்பதாக இசைந்தோம்; இரண்டு மாதக் கால வாய்ப்பு கேட்டுள்ளோம். நாம் ஒரு பக்கத்திற்கு எவ்வளவு நன்கொடையாகத் தருகிறோம் என்று எண்ணினால், அது ஒரு மிகச் சிறிய தொகை [2.5 உரூபாய் /பக்கம்].

நன்கொடை வேண்டுகோள்

இரண்டு மாதங்களில் உரூபாய் 5 இலட்சம் நன்கொடை பெறுதல் என்பது பெரும் பணிதான். ஆயினும் கணியம் அறக்கட்டளையின் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இச்செய்தியைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறோம். பல நூறு பேரின் நன்கொடைகளும் இந்த இலக்கை எட்டப் பேருதவி புரியும்.
தமிழின் மீதும், தமிழ் நூல்கள், மின்னூல்கள் மீதும் ஆர்வம் கொண்ட உங்கள் அனைவரையும் மார்ச்சு 30, 2019 அன்றுக்குள், நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.

வெளிப்படைத்தன்மை

வங்கி விவரங்கள்

கணியம் நிறுவனம்(Kaniyam Foundation);  க/எண் : 606 1010 100 502 79; இந்திய யூனியன் வங்கி / Union Bank Of India, மேற்குத் தாம்பரம், சென்னை; குறியீடு IFSC – UBIN0560618 
நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
 தொடர்புக்கு:
 த. சீனிவாசன் – 9841795468 ; அன்வர் – 8124782351 (பகிரி எண்)

இலக்கியச் சிந்தனை 584: அறிஞர் வையாபுரி


அகரமுதல

மாசி 11, 2050  சனிக்கிழமை  பிப்பிரவரி, 23,  2019
மாலை  6 மணி 
இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை
இலக்கியச்     சிந்தனை 584 :  
அறிஞர் வையாபுரி(ப் பிள்ளை)
 சிறப்புரை  :  புதுவை இராமசாமி 
குவிகம் இலக்கிய வாசல் 47
 “கதை கேட்கலாம் வாங்க “
கதை சொல்பவர்: எழுத்தாளர் சதுர்புசன்

வியாழன், 21 பிப்ரவரி, 2019

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு

 அகரமுதல

இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்

கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு
மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 
மாலை 06.30
பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் 
முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 
தலைமை :  முனைவர் தெ ஞானசுந்தரம்  
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன் 
கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி 
 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி 
தகுதியுரைசெல்வி யாழினி  

உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன் 

சென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி

அகரமுதல

உலகத் தமிழர் பேரவை

சந்திக்கும் தமிழர் உலகம்
 இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002.
மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 
 மாலை 04.30 மணி
சிறப்புரை :
தமிழும் – சீன மக்களும்
உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு)
(கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்)
நிகழ்ச்சி நடுவர்:
திரு. அக்கினி
(உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்)
செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க:https://www.youtube.com/watch?v=UH1sHrECtLs&t
உலகத் தமிழர் பேரவை, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018, தமிழ்நாடு தொலைபேசி : +91-98416 88937 / +91-89460 97054 +91- 7904576115http://www.worldtamilforum.com