வெள்ளி, 7 ஜனவரி, 2011

swine flue in ilangai: இலங்கை செல்பவர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை

பன்றிக் காய்ச்சலுக்குத்தான்அறிவுரை கூறமுடியுமே தவிர உயிர்க் கொலைகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் சிங்கள அரசிற்குத்தான் உதவ முடியும் என்பதையும் மனத்தில் கொள்ளுமாறும்  தெரிவிக்கிறோம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை செல்பவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை



சென்னை, ஜன.6: இலங்கையில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண் உள்ளிட்ட பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் இலங்கை பயணத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.பயணத்தின்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஏஎச்1என்1 நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.இலங்கையில் பயணம்செய்யும்போது பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள இலங்கை அரசு மருத்துவமனையை அணுகி நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.இலங்கைக்கு பயணம் செய்யத் தொடங்குவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பு ஏஎச்1என்1 நோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவும். இந்த நோய்க்கான தடுப்பு ஊசி சலுகை விலையில் கிண்டி கிங் நிலையத்தில் வழங்கப்படுகிறது.இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 6 ஜனவரி, 2011

நாடாளு மன்றக் கூட்டுக்குழு உசாவலின் கதி இதுதான் என்னும் பொழுது எதற்காக அதனை வலியுறுத்துகிறார்கள். நீதிச் சக்கரமாக  இருந்தாலும் வேறு எந்தச் சக்கரமாக இருந்தாலும் ஆட்சிச் சாட்டைக்கேற்பத்தான் சுற்றும் எனில் சாட்டையைக் கைமாற்றினால்தான் பயன் உண்டு. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 

குவாத்ரோச்சி மீதான வழக்கை திரும்பப் பெறுவதில் சிபிஐ உறுதி

புதுதில்லி, ஜன. 6: போபர்ஸ் பீரங்கி பேரத்தில் வின்சத்தாவுக்கும் இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் கமிஷன் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கும், குவாத்ரோச்சி மீதான வழக்கை வாபஸ் பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐ கூறியுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் கமிஷன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கமிஷன் தொகை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்திக்கு நெருங்கிய நண்பரான இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சி மற்றும் இந்திய தொழிலதிபர் வின்சத்தாவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் புகார் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதுபோல் மத்திய புலனாய்வு அமைப்பும் (சிபிஐ) விசாரித்தது. இந்த நிலையில்,குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதால் இந்த வழக்கை சிபிஐயால் தொடர முடியவில்லை. இப்போது வருமான வரித்துறைக்கு எதிராக வின்சத்தா மகன் தொடர்ந்த வழக்கில் வின்சத்தாவுக்கும் இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் கமிஷன் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரி தீர்ப்பாயம் உறுதிப்படுத்தி உள்ளது.இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் குவாத்ரோச்சி மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கில் இன்று சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா, "வருமான வரித் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கும் குவாத்ரோச்சி மீதான வழக்கைத் திரும்பப் பெறுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதனால், குவாத்ரோச்சி மீதான வழக்கை திரும்பப் பெறும் அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானவையே தவிர, அவற்றை நீதித்துறையுடன் தொடர்புடையதாகக் கொள்ள முடியாது எனவும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
கருத்துகள்

How could Q escape from India if CBI was not sleeping? The failure to get Q extradited was purely owing to the criminal negligence & connivance of the CBI. For these two reasons the concerned officials should have been dismissed and put behind bars. But they continued in service, drew salary & allowances, got increments and promotions and also got fat pensions after retirement. One question that is uppermost in the minds of right thinking citizens is,"Do we need the CBI that is only a drain on our national resources?"
By N. Sridharan
1/6/2011 1:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

dinamnai editorial pages: இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

First Published : 06 Jan 2011 12:00:00 AM IST


இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும். இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும். மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா! நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா? திரைப்பட நாயகர்களுக்கு "ரசிகர் மன்றம்' அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும். "காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது' என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை - அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர். மற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். ""இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது...'' என்பதே அவர் கவலை. நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா? ""இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்...'' என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர். வீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது. இந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் சோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்? ""எனது இளைய நண்பர்களே! பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்...'' இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார். இந்தியாவின் புகழையும், இந்து மதத்தின் புகழையும் உலகம் முழுவதும் பரப்பிய விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். "சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்' என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், "தேசிய இளைஞர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 54 கோடிப் பேர் அதாவது சுமார் பாதிப்பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆண்டுதோறும் நாட்டில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் சுமார் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலை தேடுகிறார்கள். இந்த இரு பிரிவினருமாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் 1.3 கோடி இளைஞர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். எனினும், 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை உயர் கல்வி பெற்ற ஏராளமான இளைஞர்கள் நாட்டுக்குத் தேவை. இத்தேவையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களும், இதர கல்வி நிறுவனங்களும் இரண்டுவிதப் பிரிவினரை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிவுத் திறனும், திறமைகளும் உடைய இளைஞர்கள் ஒருவகை. உயர்கல்வி கற்ற இளைஞர்கள் இன்னொருவகை. இவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், "இல்லை' என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான "பட்டம்' என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி கற்பதே அமெரிக்கா முதலிய அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்காகத்தான் என்பதில் பெற்றோர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்! இந்த இளைஞர்களின் சேவை தாயகத்துக்குத் தேவையில்லையா? மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப இங்கு வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளும், பொதுத்துறைகளாகி, தனியார் துறைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அரசுத்துறையிலும் காலியாகும் இடங்கள் நிரப்பப்படுவதில்லை; குறைக்கப்படுகின்றன. ""இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்'' என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான். ஆனால், இந்தியாவில் மக்களாட்சிமுறை நடந்தாலும், இங்கு மன்னராட்சி முறையைப்போல வாரிசு அரசியலே வெற்றிகரமாக நடந்து வருகிறது. நேருவின் பரம்பரையில் வந்துள்ள ராகுல் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருப்பதால் அவர் அரசியலில் வெற்றிகரமாக வலம் வருகிறார். இப்போதே பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் பதவியை விட்டுத்தரத் தயாராக இருப்பதாக அறிவித்துவிட்டார்; பிறகு கேட்க வேண்டுமா? இன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. அதனைப் புறக்கணித்துவிட முடியாது. இந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும். "இளங்கன்று பயமறியாது' என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி. பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே! எழுந்து நில்லுங்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

india in u.n.o.defence committee: 19 ஆண்டுகளுக்குப் பின் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா

பன்னாட்டுஅவையின்பாதுகாப்புக் குழுவில் இந்தியா தற்போதைக்கு இடம் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டியது சிங்களம்தானே தவிர நாம் அல்ல. பன்னாட்டு அவையில் தமிழ்ஈழம் இடம் பெறும் நாளே நாம் மகிழும் நாள். இந்தியக் கண்டத்து நாடுகள் கூட்டரசாக விளங்கி ஒவ்வோர் உறுப்பு நாடும் இடம் பெறும் நாளும் மகிழ்ந்து கொண்டாடப்பட வேண்டிய நாள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



19 ஆண்டுகளுக்குப் பின் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா

First Published : 04 Jan 2011 12:00:00 AM IST


நியூயார்க், ஜன. 3: ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பினராக இந்தியா திங்கள்கிழமை பொறுப்பேற்றது. 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இரண்டு ஆண்டுகாலம் இந்தியா இந்த பொறுப்பை வகிக்க முடியும். ஏற்கெனவே 7 முறை இதுபோன்று தாற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவுடன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, போர்ச்சுக்கல, ஆகிய நாடுகளும் தாற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டன. ஏற்கெனவே போஸ்னியா, பிரேசில், காபோன், லெபனான், நைஜிரீயா ஆகிய நாடுகள் தாற்காலிக உறுப்பு நாடுகளாக உள்ளன.  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதமும் அதிகாரமிக்க ஐ.நா. பாதுகாப்பு சபைத் தலைவராகும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா தனது பதவி காலத்தின்போது ஐ.நா. பாதுகாப்பு சபையின் 2 பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களில் ஒன்றுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்தி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா தனது பதவி காலத்தின்போதே வலியுறுத்தும் என தெரிகிறது.  ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா ஆகிய நாடுகள் நிரந்திர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதுதவிர 10 நாடுகள் சுழற்சி அடிப்படையில் தாற்காலிக உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.  ஐ.நா. பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை வேறு. இப்போது இருக்கும் நிலைமை வேறு. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையைச் சீரமைத்து மாற்றியமைக்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளை (ஜெர்மனி, ஜப்பான், தென்னாப்பிரிக்கா) நிரந்திர உறுப்பினர்களாக்க வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.  இப்போது தாற்காலிக உறுப்பினராகி இருக்கும் நிலையில், நிரந்தர உறுப்பினராகுவதற்கான ஆதரவை இந்தியா திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று கோரும் 4 நாடுகளில் ஜப்பானைத் தவிர மற்ற இரு நாடுகளும் இந்தியாவைப் போல் தாற்காலிக உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளன. எனவே இந்த 3 நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தம் என தெரிகிறது.  ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினராகி உள்ள இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் என்று ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.  அல் காய்தா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதிகார கொண்ட குழு மற்றொன்று பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அதற்கான நிதி உதவி குறித்து விவகாரங்களைக் கவனிக்கும் குழு. இந்த இரண்டு குழுக்களிலும் இந்தியா இடம் பெறும் என்று தெரிகிறது.  பயங்கரவாத எதிர்ப்பு, ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சி ஆகிய இரண்டிலும் இந்தியா தனது பதவி காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தாற்காலிக புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.

sculpture training to foreigners: சிற்பம் செதுக்கப் பயிற்சி பெறும் வெளிநாட்டுப் பயணிகள்

3 திங்களில் எலலாம் சிற்பப் பயிற்சி பெற முடியாது.  இவர்கள் முன்னரே ஐரோப்பியப்பாணிச்சிற்பப் பயிற்சி பெற்றவர்கள். எனவே, வெளிநாட்டுச் சிற்பிகள் என்று குறிப்பிடலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சிற்பம் செதுக்க பயிற்சி பெறும் வெளிநாட்டுப் பயணிகள்

மாமல்​ல​பு​ரம் சிற்​பக்​க​லைக் கூடத்​தில் சிற்​பம் செதுக்க பயிற்சி பெறும் வெளி​நாட்டு சுற்​றுலாப் பய​ணி​கள்.
செங்கல்பட்டு, ஜன 5:  வெளிநாட்டு பயணிகளுக்கு மால்லபுரம் கலைப்பாணி சிற்பம் செதுக்கும் 3 மாத பயிற்சி முகாம் துவக்கவிழா மாமல்லபுரத்தில் உள்ள கரியேடிவ் சிற்பக்கலைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தியாவில்  சுற்றுலா மேற்கொள்வதற்காக இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த  வெளிநாட்டுப் பயணிகள் 26 பேர் வந்துள்ளனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாதலமாக விளங்கும் மாமல்லபுரம் வந்தனர்.இங்குள்ள கடற்கரைக் கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபஸ் ஆகிய பகுதிகளைச் சுற்றிப் பார்த்தவர்கள் பல்லவ கலைப் பாணியை கண்டு ரசித்ததுடன் சிற்பம் செதுக்க பயிற்சி பெற விரும்பினர். இதனையடுத்து மாமல்லபுரம் கரியேட்டிவ் சிற்பக்கலைக் கூட சிற்பக்கலைஞர் த.பாஸ்கரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.அதன்பேரில் அவர் சுற்றுலாப்பயணிகளுக்கு பல்லவ கலைப்பாணியில்  சிற்பம் செதுக்கும் பயிற்சியளிக்க ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து ஸ்வீடன் நாட்டு கலைஞர் ஸடேபனோ தலைமையில் முதல்கட்டமாக 10 பேருக்கு  பயிற்சி தொடங்கப்பட்டது. மதிமுக  துணை பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா  பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இப்பயிற்சி குறித்து ஸ்வீடன் நாட்டு கலைஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ஐரோப்பிய கலைப்பாணியில் சிற்பங்களைச் செதுக்க வெண்கலம், கிரானைட் கற்களில் ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளோம். ஆனால் பல்லவ கலைப்பாணி சிற்பங்கள் வித்தியாசமாக இருப்பதால் பயிற்சி பெற வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

புதன், 5 ஜனவரி, 2011

news of family functions

மகளோ மகனோ பெற்றோரையோ உடன்பிறப்புகளையோ சந்தித்து வாழ்த்து பெறுவது அல்லது அழைப்பிதழ் கொடுப்பது போன்ற செய்திகள் அடிக்கடி  இடம் பெறும் வகையில் செய்திப் பஞ்சமா? அல்லது இத்தகைய விளம்பரத்தை  நம்பித்தான் உரியவர்கள் இருக்கிறார்களா?  இவற்றைத் தவிர்க்கலாம். பிறந்த நாளன்று செய்த அரும் பணி அல்லது விழா இருப்பின் அவ்விவரம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய செய்தி மாற்றுத்  தரப்பாருக்கு எரிச்சலைத்தான் உண்டு பண்ணும். இது போன்ற செய்திப் படங்களைச் செய்தித்துறை  அல்லது செய்தி முகமை தந்தால்  விவரம் கூறி  மறுத்து விடுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

birthday greettings to kanimozhi: கனிமொழி பிறந்தநாள்


வாழ்க தமிழ் உணர்வோடு! வளர்க தமிழ் நலச் செயலோடு! கடந்த காலம் எவ்வாறிருப்பினும் இனி வருங்காலம் தமிழ்ப்பணியில் செல்லட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி வாழ்த்து


சென்னை, ஜன.5: தனது பிறந்தநாளையொட்டி முதல்வர் கருணாநிதியை அவரது மகளும், எம்பியுமான கனிமொழி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வரின் துணைவி ராஜாத்தி அம்மாள், செயலர்கள் ராஜமாணிக்கம், தேவராஜ், சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்

writ petition against sangamam: சென்னை சங்கமம்: அரசுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சங்கமம் நடத்தும் கலை நிகழ்ச்சிகளால்  கலைஞர்கள் பலருக்கும் பாராட்டும் பணமும் கிடைக்கின்றன. கலைகள் பற்றிய விழிப்புணர்ச்சி மக்களுக்கு ஏற்படுகிறது. எனவே, அரசின் நிதியுதவி  இன்றிச்சங்கமம் நடத்தலாம் .
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சென்னை சங்கமம்: அரசுக்கு தடை விதிக்கக் கோரி
உயர் நீதிமன்றத்தில் வழக்கு

First Published : 05 Jan 2011 04:22:52 AM IST


சென்னை, ஜன. 4: தமிழக அரசு தமிழ் மையத்துடன் இணைந்து சென்னை சங்கமம் கலை விழா நடத்த அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு சென்னை சங்கமம் கலை விழா இந்த மாதம் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. புகழேந்தி சென்னை சங்கமத்தை தமிழக அரசு நடத்துவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, நாடு முழுவதும் 34 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சோதனை செய்யப்பட்ட இடங்களில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள தமிழ் மையமும் ஒன்று. அதில் சி.பி.ஐ. கடந்த டிசம்பர் 15-ம் தேதி சோதனை செய்தது. இந்த விவகாரத்தில் தமிழ் மையத்தை விடுவித்து சி.பி.ஐ. அறிக்கை அளிக்கவில்லை. தமிழ் மையம் இன்னும் சி.பி.ஐ. கண்காணிப்பில் உள்ளது.மேலும், உச்ச நீதிமன்றத்திலும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்த நிலையில், தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பர், சென்னை சங்கமம் கலை விழா ஜனவரி 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஜெகத் கஸ்பர் கூறுகையில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான சாதிக் பாட்சா என்பவரின் க்ரீன் ப்ரொமோட்டர்ஸ் என்ற நிறுவனம் சென்னை சங்கமம் தொடங்கப்பட்டபோது அதற்கு ரூ. 3 லட்சம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.  இந்த விழாவுக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்கியுள்ளது. 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தமிழ் மையமும் ஒரு பயனாளியாக இருந்துள்ளதா என்பது தெரியவில்லை. இத்தகைய நிலையில், அந்த அமைப்போடு சேர்ந்து கலை விழா நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது சி.பி.ஐ. பார்வையில் இருக்கும் அந்த மையத்துக்கு நற்சான்று கொடுப்பது போன்றதாகும்.  சென்னை சங்கமத்தை நடத்த பொது மக்களின் பணம் செலவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது சிந்தனையைப் செலுத்தவில்லை. அரசின் செயல் ஏதேச்சதிகாரமானது. நேர்மையற்றது. பொருத்தமில்லாதது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.  எனவே, தமிழக அரசின் சுற்றுலா மற்றும் கலை வளர்ச்சித் துறை, சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு தமிழ் மையத்துடன் இணைந்து சென்னை சங்கமத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று புகழேந்தி கூறியுள்ளார்.

dinamalar picture message

சிலருக்குப் பதவி வாய்ப்புகளையும் பதவி  வழியிலான பணப் பெருக்கத்தையும் தருவது தவிர பன்னாட்டுஅவையால் உலக மக்களுக்கு என்ன நன்மை விளைகிறது? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கோரிக்கையல்ல, உரிமைக்குரல்!
First Published : 05 Jan 2011 12:00:00 AM IST