thileepan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thileepan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வீரச்சாவுக்கு முன் தியாகத் தீபம் திலீபனின் இறுதி உரை

வீரச்சாவுக்கு முன் தியாகதீபம் திலீபனின் இறுதி உரை

மீனகம் தளத்திலிருந்து
பதிவு செய்த நாள் : 26/09/2011


தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் – 27.11.1963 மறைவு – 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து… “என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். …… நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான்.



0

வியாழன், 25 மார்ச், 2010

a

மே 31 – ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த, ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக.

வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த திட்டம். எனக்கு அப்படித்தான் இருந்தது. நானும் அந்த நாளில் (6ஆம் வகுப்பு)160 ரூபா சொச்சம் சேர்த்தேன். காசு சேர்த்ததனை விட அந்த நிகழ்தான் வெப்பியாரமாக இருந்தது.

நேற்று நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு சிலை அதே சிங்களப்படை உதவியுடன், அதே சிங்கள கூலிகளால் நொருக்கப்பட்டது. 12 நாட்கள் நல்லூரில் எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் உண்ண மறுத்து போரிட்ட அந்த திருமகனிற்காக 1987 ஆம் ஆண்டு எத்தனை மாணவர்கள் அழுதார்கள்? எத்தனை பெற்றோர்கள் அழுதார்கள்? இது ஒன்றும் புலிகள் வெருட்டி நடக்கவில்லையே தானாகவே நடந்தது. ஆனால் நேற்று அந்த மா தியாகி திலீபனின் சிலை உடைக்கப்பட்டபோது ஒரு அழுகை, ஒரு குரல், ஒரு அறிக்கை, ஒரு… எங்கே ஐயா?

மக்களுக்குத்தான் அலுப்பு, சலிப்பு, பதைப்பு, வெறுப்பு, பயம் ஆனால் வந்துபாரடா நின்றுபாரடா என அரசியல் முழக்கமிடும் வேட்பாளர்களாவது அரசியலுக்கு கூட ஒரு கருத்து சொல்லி இருக்க கூடாதா? அந்த இடத்தை சென்று பார்த்திருக்க கூடாதா?அதற்காக சிங்களவனிடம் ஒரு தடவை அடிவாங்கினால் என்ன?சூடு வாங்கினால் என்ன? வாக்கு கேட்பதற்காக அடி வாங்க தயாராக இருக்கும் நீங்கள் இதற்கு ஏன் பின்னடிப்பு?

நம்புங்கள் நல்லூர்கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள் சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள் நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்படும் அப்போதாவது ஏதாவது பத்துமா என்று பார்ப்போம்.

மாவீரர் துயிலும் இல்லங்களைத்தான் இடிக்கும் போது பேசாமல் இருந்தோம் சரி அவர்கள் , சிலர் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள்ஆனால் தியாக தீபம் திலீபனும் அப்படியா? இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது? சிங்களவனுக்கு செருக்கு, முறுக்கு ஏறிவிட்டது என்றுதானே அர்த்தம். எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பதிவு செய்ய வேண்டாமா?

எதற்கெடுத்தாலும் ஒரு அடிபோட்டு மடக்குவீர்கள் அதாவது வெளி நாட்டில் இருப்போர்களுக்கு ஒன்றும் விளங்காது என்று. இது பற்றி பின்பு எழுதுகின்றோம். ஆனால் இப்போ யாழில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், தமிழர்களுக்காக உரிமை கேட்க புறப்பட்டவர்களை பார்த்துத்தான் கேட்கின்றோம். எதற்காக உங்கள் மெளனம்?

ஆக குறைந்தது திலீபனின் சிலை உடைக்கப்பட்டு எஞ்சி இருக்கின்ற கற்களையாவது பொறுப்பெடுத்து முடிந்தால் பாதுகாப்பாக வையுங்கள்.

- ஈழநாதம்

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-110: இடைக்கால நிர்வாக சபையை நோக்கி...



திலீபன்
திலீபன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது தீட்சித் வந்திருந்து, அவரின் ஐந்து அம்சக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவர் பிரபாகரனை 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு "திலீபனின் உயிர் பிரிந்த பிறகு 15 நிமிடம் கழித்து' சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தார். கெüரவம் பார்க்காமல் அவர் நேராக வந்திருந்தாலோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ வாக்குறுதி அளித்திருந்தால் நிலைமையே மாறி இருக்கும். திலீபன் உயிர் போன பிறகு ஐந்து அம்சக் கோரிக்கைகளை ஏற்பதாகவும், அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தபோதிலும், விடுதலைப் புலிகளின் மனதிலிருந்து அமைதிப்படையின் மீதிருந்த மரியாதையும் நம்பிக்கையும் அகன்றுவிட்டிருந்தது; மக்களுக்கும்தான். தீட்சித்தின் பிடிவாதம் மாறாத வடுவை அவர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது. திலீபன் உயிரிழப்பைத் தாங்கமுடியாத மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்கியது. இரண்டு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு தண்டவாளங்களில் ஏற்பட்டிருந்த தடையே காரணமானது. யாழ்ப்பகுதி முழுவதும் திலீபனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சாலை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தன. அவர்களின் மனதில் தாங்க முடியாத சோகம். அரசுகளின் மீது வெறுப்பு. ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் துக்கம் நேர்ந்தால் வீட்டில் வாழை மரம், தென்னங் குருத்துத் தோரணம் கட்டும் பழக்கமுண்டு. மக்கள் சந்துக்குச் சந்து இந்த வாழை மரங்களை, தங்கள் வீட்டில் நடந்த துக்கம் போன்று கட்டியிருந்தார்கள். இறுதி நாள் அஞ்சலிக் கூட்டத்தில் மட்டும் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். "திலீபன் மரணமே தியாகத்தில் தோய்ந்த மரணமாகும். வாழும்போது மட்டுமல்ல; சாவுக்குப் பின்னரும் அவருடைய தியாகம் தொடர்ந்தது. தான் இறந்தால், மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்குத் தனது உடலை வழங்க வேண்டும்' என்று சொல்லியிருந்தார். அதன்படி அவரது உடல் அடங்கிய பெட்டி யாழ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. "வாழ்விலும் சாவிலும் தியாக வரலாறு படைத்தான் திலீபன். மில்லர் புரிந்தது மறத்தியாகம் என்றால் திலீபன் புரிந்தது அறத்தியாகம்' என்கிறார் பழ.நெடுமாறன் தனது "தமிழீழம் சிவக்கிறது' நூலில். இறுதி நாள் ஊர்வலத்தில் அவரும் கலந்துகொண்டு, அஞ்சலிக் கூட்டத்திலும் பேசினார். திலீபன் மரணத்தைத் தொடர்ந்து, இடைக்கால நிர்வாக சபை அமைப்பதில் வேகம் பிடித்தது. செப்டம்பர் 26-இல் பேசியதையொட்டி, அடுத்தப் பேச்சு செப்டம்பர் 28-இல் என்று முடிவெடுத்தபடி பிரபாகரன் உள்ளிட்டோர் பலாலி ராணுவ முகாமில் கூடியிருந்தனர். இந்தியத் தூதுவர் வருகை சிறிது நேரம் தடைப்பட்டது. நிர்வாக சபைத் தலைவர் பதவிக்கு மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலில் ஜெயவர்த்தனா ஒருவரைத் தேர்ந்தெடுப்பார். ஜெயவர்த்தனா யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்கிற விவரத்துடன் தீட்சித் வருகை எதிர்நோக்கப்பட்டது. தீட்சித் வந்தார். ஜெயவர்த்தனா, சி.வி.கே.சிவஞானத்தைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தார். பிரபாகரனுக்கு இந்த முடிவு உகந்ததாக இல்லை. என்.பத்மநாதனை அவர் முடிவு செய்திருந்தார். தீட்சித், ""பட்டியலில் உள்ளபடிதான் அவர் தேர்வு செய்திருக்கிறார்'' என்றார். ""இருக்கலாம்...எனது விருப்பம் நான் கொடுத்த வரிசைப்படி முதலாவது பெயராக பத்மநாதனில் ஆரம்பிக்கிறது. பத்மநாதன் முன்னாள் அரசு ஊழியர். தாசில்தார் ரேங்கில் பணிபுரிந்தவர். கிழக்குப் பகுதியில் அவர் பணிபுரிந்ததால், கிழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்று இருக்கும்'' என்றார். ""ஜெயவர்த்தனா வேறு மாதிரி சிந்தித்தார். "பத்மநாதன் மட்டக்களப்பு சிறை உடைப்பில் ஒரு குற்றவாளி. அதனால் அவர், அவரை விரும்பவில்லை.'' ""ஜெயவர்த்தனாவுக்கு நாங்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான். அவரது நியாயம் எங்களுக்கு ஏற்பில்லை'' என்று பிரபாகரன் தெரிவித்தார். பிரபாகரனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று தீட்சித் பெரிதும் முயன்றார். வாக்குவாதங்கள் - இடையிடையே சிற்றுண்டி எல்லாம் குறுக்கிட்டும் மாலை 5 மணி வரை பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. முடிவில் பிரபாகரன் சம்மதித்தார் - என்று லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் இந்தச் சம்பவம் பற்றித் தனது நூலில் குறித்து வைத்திருக்க, மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கின் நூலில் சிறிது மாற்றம் உள்ளது. "சி.வி.கே. சிவஞானம் பெயர், ஜெயவர்த்தனா, தீட்சித் விருப்பம் என்றும், சிவஞானம் தீட்சித்தின் நெருங்கிய சகா மற்றும் அவருக்கு உளவு சொல்கிறவர் தீட்சித்தின் நிதி வழங்கும் பட்டியலில் அவர் உள்ளவர் என்றும், அவரையே அந்தப் பதவியில் அமர்த்துவதில் உறுதியாக ஜெயவர்த்தனா இருந்தார்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விடுதலைப்புலிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு தனது முடிவுக்கு எங்களைக் கட்டாயப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் முன்னதாக பேசித் தீர்க்க வேண்டியவற்றை பின்னர் பேசுவதால் ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று. திலீபனின் உயிரிழப்பு விடுதலைப் புலிகளிடத்தும், யாழ் மக்களிடத்தும் மாறாத சோகத்தை ஏற்படுத்தியருந்த நிலையில், இவ்வியக்கம் அடுத்ததொரு சோகத்தையும் சந்திக்க நேர்ந்தது. கசப்பு மருந்தாக இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் தேர்வு இருந்தாலும், கெட்டதில் நல்லதைத் தேடுவது என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகள் நிலைப்பாடு இருந்தது. சென்னையில் இருந்த அவர்களது அலுவலகத்தை முற்றும் முழுதாகக் காலி செய்து கொண்டு யாழ்ப்பாணம் வரும் முடிவுடன் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 பேர் படகில் இந்தியாவிலிருந்து கிளம்பினர். அவர்களின் பயணம் இந்திய அமைதிப்படைத் தலைவர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் தெரிவிக்கப்பட்டே நடந்தது. இந்நிலையில், சிங்களக் கடற்படை, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சென்ற படகைச் சுற்றி வளைத்தது. அவர்கள் ஆயுதம் கடத்துவதாகக் கூறி கைது செய்ததாகவும் அறிவித்தது. இந்த செய்தி, விடுதலைப் புலிகள் மத்தியிலும் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது!நாளை: புலேந்திரன், குமரப்பா தற்கொலை!

வியாழன், 17 செப்டம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 109:
திலீபன் உண்ணாவிரதம்!



உண்ணாவிரதமிருந்த திலீபனுடன் பிரபாகரன்
தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் (15.09.1987) தொடங்கினார். அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன? 1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும். 4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும். 5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் (13-08-1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர். திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார். இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின் பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார். திலீபனின் முயற்சியால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள் அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, (5) தமிழீழ விழிப்புக் குழுக்கள், (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8) தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன. அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில் திலீபன். பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள். மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல - தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக் கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார். அன்று இரவு பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன், சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர்.முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20.இரண்டாம் நாள்: முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம் போகவில்லை. மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும் போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார். இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது. ""அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்'' அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன் வந்தார்.மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன். "இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன். "வேண்டாம் விடுங்க... நானே வருகிறேன்.' சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார். "தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர். "என்ன பகிடியா பண்ணுறீங்க - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு. ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. 3-ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24.நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24. நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22-ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25. 1986-இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது.ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது. கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர். "கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார். மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர். யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர்.எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது. வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்தம் 80/50. நாடித் துடிப்பு 140. சுவாசம் 24. இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை.ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை. தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ.கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை.பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன. நாடித்துடிப்பு 52. ரத்த அழுத்தம் 80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம். நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள்.பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது. யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது. 265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10.48 மணிக்குப் பிரிந்தது. எங்கும் அழுகை... விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது. எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது. (ஆதாரம்: தியாகப் பயணத்தில் திலீபனுடன் 12 நாட்கள்: மு.வே.யோ.வாஞ்சிநாதன்).நாளை: இடைக்கால நிர்வாக சபையை நோக்கி...

கருத்துக்கள்

காந்தியத்தைப் பின்பற்றுவதாகக் கூறும் இந்தியத்தை நம்பியதால் மாவீரர் திலீபன் உயிர் பறிக்கப்பட்டது. உண்ணா நோன்பு இருந்த பொழுது பிற நாட்டுத் தூதர்கள் சென்று ஆறுதல் கூறியும் இந்தியத் தூதர் சந்திக்கவும் இல்லை;உணவு மறுப்பை நிறுத்துவதற்கான முயற்சியில் இறங்கவும் இல்லை. ஈழத் தமிழர்களின் மூச்சை நிறுத்துவதுதானே அவரது ஆசையாக இருந்தது. இவ்வாறு இந்தியாவை நம்பி அறவழியில் மீண்டும் வந்து ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறி கொடுத்த பின்புதான் மீண்டும் ஆயுதம் ஏந்தும் விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் இறங்கினர். அதனையும் வஞ்சகத்தால் சிதைத்து நூறாயிரக்கணக்கான உயிர்களைச் சிறிதும் வருத்தமோ பரிவோ இன்றிப் பறித்ததுதான் இந்தியா. 15/09/87 இல் தொடங்கி 26/09/87 இல் உயிர் பறிக்கப்பட்ட மாவீரர் திலீபனின் ஈகம் இன்று வீணாய்ப் போனாலும் அவரைப் போன்றவர்களின் ஈக உணர்வலைகளால் தமிழ் ஈழம் உறுதியாய் வெல்லும்! இதனை வருங்காலம் பாருக்குச் சொல்லும்!

வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 3:31:00 AM


நெஞ்சயை உருக்கும் சம்பவம். தமிழினம் விடுதலை பெற உயிர் துரந்த தீலீபனை தமிழினம் எப்ப்போது மறக்காது. காந்தி சத்தியாகிரகம் செய்து இந்தியாவிர்க்கு சுதந்திரம் வங்கினார். ஏனென்றால் அங்கிலேயர்கள் மூன்று லட்சம் பேர் 30 கோடி இந்தியர்களை ஆண்டார்கள். காந்தி சத்தியாகிரகத்தில் இப்படி உயிர் துரந்து , இந்த 30 கோடி இந்தியர்கள் வெகுண்டால் மூன்று லட்சம் வெள்ளையர்கள் கதி அதோகதிதான், அதோடு அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து இரங்கு முகமாக இருந்தது. அப்போதும் இந்த நவீன ரத்த வெறி கொண்ட பௌத்தர்கள் இதர்க்கு செவி சாய்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்.ஆனால் கட்டாயம் உலகம் ஈழ பிரச்சினையை தீர்த்து இருக்கும்.

By Tamilzan
9/17/2009 2:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *