social service லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
social service லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 செப்டம்பர், 2012

திருமண வரவேற்பு விழாவில் புதுமை: சேவைப் பணிக்கு மொய் ப் பணம் வழங்கல் marriage presentation money for social service

திருமண வரவேற்பு விழாவில் புதுமை: சேவைப் பணிக்கு மொய் ப் பணம் வழங்கல்

தினமலர் : தருமபுரி : தருமபுரியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மொய் பணத்தை, ஆதரவற்ற இல்லங்களுக்கு பகிர்ந்து வழங்க, மணமகனின் தந்தை முடிவு செய்து, 32 ஆயிரம் ரூபாய் திரட்டியுள்ளார்.

தர்மபுரி, அப்பாவு நகரை சேர்ந்தவர் நாகராஜன், 66. இவர், தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், மாவட்ட கண் தான மைய துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் வருவாயில், மாதம் தோறும் ஒரு பகுதியை, ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.இவரது இல்லத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, அன்பளிப்பு மற்றும் செய்முறைகளை விரும்பாத இவர், அழைப்பிதழ்களில் "அன்பளிப்பை தவிர்க்கவும்' என்ற வேண்டுகோளை தவறாது அச்சிட்டு வந்தார்.கடந்த, 2002 ஜனவரி, 27ம் தேதி, இவரது இளைய மகள் ஸ்ரீவித்யா- டாக்டர்.விக்ரம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, அன்பளிப்பை தவிர்க்க கூறியும், உறவினர்கள் பலர், மொய் கவர் கொடுத்து சென்றனர்.

இந்நிலையில், நாகராஜனின் மகன் ஜெகந்நாதன், மஞ்சுபிரியா திருமணம், கடந்த, 12ம் தேதி கோவையில் நடந்தது. திருமண வரவேற்பு தர்மபுரியில், நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக <உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.அழைப்பிதழில், "அன்பளிப்பை தவிர்க்கவும், உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும்; அன்பளிப்பை தவிர்க்க முடியாதவர்கள், சேவை பணிக்கு வழங்கலாம்' இதற்காக மண்டபத்தில், தனி "பாக்ஸ்' அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் மாலை, தர்மபுரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆதரவற்றோர் சேவை பணிக்காக இரண்டு பெரிய "பாக்ஸ்' மணமேடை மேல் வைக்கப்பட்டிருந்தன. வரவேற்பில் கலந்து கொண்ட பலர், இந்த "பாக்ஸி'ல், தங்கள் மொய் கவரை போட்டனர். இதில், 32 ஆயிரத்து 360 ரூபாய் சேர்ந்தது.""இந்த தொகை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லகளுக்குப் பிரித்து வழங்கப்படும். மணமக்களுக்கு வந்த அன்பளிப்பு பொருட்களையும் அதனுடன் சேர்த்து வழங்கப்படும்,'' என, மணமகனின் தந்தை நாகராஜன் தெரிவித்தார்.


வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தொண்டினைத் தொடரும் மூதாட்டி

சொல்கிறார்கள் : தினமலர்
"சேவையை த் தொடர்கிறேன்!'

சமூக சேவையாற்றி வரும், 82 வயதான ரத்தினம்: ராஜபாளையம் அருகில், ஜமீன்கொல்லம் கொண்டான் கோட்டையில், பெரிய பண்ணையார் குடும்பத்தில் பிறந்தேன். நல்ல வசதியான குடும்பம் என்பதால், மதுரையில் செயின்ட் பெசன்ட் கான்வென்ட்டில் படித்தேன். நன்றாக படிப்பேன்; இருந்தாலும், பெண் என்பதால், 10ம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்கவில்லை. நான் பள்ளியில் படித்த போது, சேவை செய்வது குறித்து, என் ஆசிரியர் வகுப்பு எடுத்தார். எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம், அப்போதே என் மனதில், ஆழமாக பதிந்து விட்டது. கடந்த, 1950ல், திருமணத்திற்குப் பின், கணவர் ஆறுமுகத்தின் சொந்த ஊரான தளவாய்புரத்திற்கு வந்தேன். மாமியாரின் கட்டுப்பாட்டில் குடும்பம் இருந்ததால், அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும், வீட்டு வேலையாட்களுக்கு, சிறிய உதவிகள் செய்து கொண்டே இருப்பேன். எங்கள் ஊர் பஞ்சாயத்தில், பெண்கள், "வார்டு மெம்பராக' பொறுப்பிற்கு வர வேண்டும் என, என் மாமனாரிடம் விவாதம் செய்து, ஊராட்சி மன்ற உறுப்பினராகி விட்டேன். "வாசுகி மகளிர் மன்றம்' ஆரம்பித்து, அதன் மூலம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க உதவினேன். வயல் வேலை செய்யும் பெண்களால், தங்கள் குழந்தைகளை சரிவர கவனிக்க இயலாது. எனவே, அப்பெண்களின் குழந்தைகளுக்காக, பாலர் பள்ளியைத் துவங்கினேன். ராஜபாளையம் கலெக்டர் உதவியுடன், எங்கள் ஊர் பெண்களுக்கு, தையல் கற்றுக் கொடுக்க பயிற்சி பள்ளியை துவங்கினேன். என் அழைப்பை ஏற்று, முதலில் ஐந்து பெண்கள் மட்டுமே வந்தனர். பின் படிப்படியாக, 50, 60 என, எண்ணிக்கை கூடியது. பயிற்சிக்கு வரும் பெண்களின் குழந்தைகளை பாலர் பள்ளியில் வைத்து, நானே கவனித்து வந்தேன். அன்றைய கால கட்டத்தில், நான் சமூக சேவையில் ஈடுபட, என் கணவர் உறுதுணையாக இருந்தார். இப்போது, என் இரு மருமகள்களின் துணையுடன், என் சேவையை தொடர்கிறேன்.

சனி, 28 ஜூலை, 2012

முகநூல் மூலம் மக்கள் தொண்டு



"பேஸ்புக்' மூலம் சமூக சேவை!
"பேஸ் புக்' மூலம், பல சமூக சேவைகளைச் செய்து வரும் வசந்தகுமார்: நான் ஒரு ஓவியன். விளம்பரப் பதாகைகள், விளம்பர போர்டுகள் போன்றவற்றை, 10 ஆண்டுகளுக்கு முன், கையாலேயே வரைந்து, "டிசைன்' செய்து வந்தேன்; விஞ்ஞான வளர்ச்சியால், அதே வேலையை, கம்ப்யூட்டரில் செய்கிறேன்.என் வேலை பெரும்பாலும், இணையத்தை சார்ந்திருந்ததால், ஓய்வு நேரம் கிடைக்கையில், விளையாட்டாக, "பேஸ் புக்கில்' நுழைந்தேன். நண்பர்களின் பிறந்த நாள், மண நாள் விழாக்களுக்கு, வாழ்த்து அட்டைகள், "டிசைன்' செய்து அனுப்பினேன்; நண்பர்கள் மகிழ்ந்தனர்.முதன் முதலில் நண்பர்களை வைத்து, இணையம் மூலம் பட்டிமன்றம் நடத்தி, அதற்குப் பரிசுகளும் அளித்தோம். இதனால், என் நட்பு வட்டம் பெருகியது. "பேஸ் புக்'கில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதோடு இல்லாமல், சமூக சேவைகளிலும் ஈடுபட்டோம்.வெளிநாட்டில் வாழும் நண்பர்கள், தங்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில், ஆசிரமங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவளிக்க விரும்பினர். அதை இங்கிருந்தே நாங்கள் செய்தோம்.அப்போது தான், இந்த சேவையை மேலும் விரிவுபடுத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது, "பேஸ் புக் நண்பர்கள் அறக்கட்டளை'யை உருவாக்கியுள்ளோம். எங்கள் சங்கத்தில், உலக அளவில், 170 உறுப்பினர்கள் உள்ளனர்.எங்களின் கவனத்திற்கு வரும் விஷயங்களின் உண்மைத் தன்மையை, முதலில் ஆராய்கிறோம். அவை உண்மை எனும் பட்சத்தில், "பேஸ் புக்கில்' அது குறித்து வெளியிடப்படும். அதைக் காணும் நண்பர்கள், தானே முன் வந்து உதவுவர்.ஒரு ஊரில் ஒருவருக்கு உதவி தேவைப்படும் நிலையில், அந்த ஊருக்கு அருகிலுள்ள எங்கள் நண்பர்கள் சென்று, அந்த உதவியைச் செய்து வருகிறோம். மதுரை, சேலம், காஞ்சி உட்பட, பல ஊர்களில் நிறைய உதவிகள் செய்திருக்கிறோம்.எங்களின் ஒரே தைரியம், ஆயிரக்கணக்கான, "பேஸ் புக்' நண்பர்கள், எங்களை கைவிட மாட்டார்கள் என்பது தான்!

வியாழன், 26 ஜூலை, 2012

காய்கறி விற்று மன்பதைப் பணி : பெண்ணுக்கு மகசேசே விருது

காய்கறி விற்று சமூக சேவை : பெண்ணுக்கு மகசேசே விருது

First Published : 26 Jul 2012 02:27:11 PM IST


மணிலா, ஜூலை 26 : தாய்வான் நாட்டைச் சேர்ந்த காய்கறி விற்கும் பெண்ணான சென் ஷு-சூ, இந்த ஆண்டு மகசேசே விருது பெற தேர்வான ஆறு பேரில் ஒருவராவார்.இவர் தினமும் காய்கறிகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தைக் கொண்டு பல அறக்கட்டளைகளுக்கும், அனாதை இல்லங்களுக்கும் நன்கொடை வழங்கி பலரது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்துள்ளார்.சாதாரண எளிய வீட்டில் வசிக்கும் சென், தனக்காக எந்த ஆடம்பரப் பொருட்களையும் வாங்காமல், தரையில் படுத்துத்தான் உறங்குகிறார். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், ஆதரவற்றவர்களுக்கும், பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதையே வாடிக்கையாக வாழ்ந்துள்ளார். இவரை கௌரவிக்கும் வகையில் மகசேசே விருது வழங்கப்பட உள்ளது.