mu.ilangovan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mu.ilangovan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
சனி, 7 ஏப்ரல், 2012
எழுத்தாளர் சங்கமித்ரா மறைவு
எழுத்தாளர் சங்கமித்ரா மறைவு
எழுத்தாளர் சங்கமித்ரா
பெரியாரியல் அறிஞரும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வடநாட்டிற்குச் சென்று மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவரும், பன்னூலாசிரியரும், இதழாசிரியருமான அறிஞர் சங்கமித்ரா அவர்கள் இன்று (07.04.2012) காலை திருச்சிராப்பள்ளி -தென்னூரில் உள்ள மணிகண்டன் பிளாசா குடியிருப்பில் உள்ள அவர்தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். சங்கமித்ராவுக்கு அகவை 72 ஆகும். நாளை 08.04.2012 காலை எட்டுமணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பெறும்.
பலவாண்டுகளாக என்னுடன் நல்ல தொடர்பில் இருந்த எழுத்தாளர் சங்கமித்ரா அவர்களை மருத்துவர் நா.மாசிலாமணி அவர்கள் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். சங்கமித்ரா அவர்கள் எழுதிய ஓர் எருதும் சில ஓநாய்களும் என்னும் நூல் புகழ்பெற்ற ஒன்றாகும். வங்கியில் மேலாளராகப் பணியாற்றிப் பலருக்கும் உதவியாக வாழ்ந்தவர். தன்னம்பிக்கை நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சங்கமித்ரா பதிலளிக்கிறார், பெரியார் முழக்கம் உள்ளிட்ட பல இதழ்களை நடத்தியவர்.
சங்கமித்ரா அவர்கள் எழுத்தாளர் கி.இரா அவர்களை உயர்வாக மதித்தவர். புதுச்சேரிக்கு வரும்பொழுது மறவாமல் எழுத்தாளர் கி.இரா அவர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். சங்கமித்ராவின் இறப்புச்செய்தி அறிந்ததும் கி.இரா. அவர்கள் பெரிதும் வருந்தினார்கள்.
சங்கமித்ரா அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
செவ்வாய், 23 மார்ச், 2010
Last Updated :
தகவல் தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது. இதனால் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களைத் தமிழால் தொடர்புகொள்ள முடிகிறது. தமிழ்ப்பணிகள் தனியொருவர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து பலரும் இணைந்து குழுப்பணியாகச் செய்யும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் நூல்கள் மின்னூல்களாக மாறியதும், தமிழ் இதழ்கள் தேசம் கடந்த வாசகர்களைப் பெற்றதும் தமிழ் இணையத்தால் எனில் மிகையன்று. அச்சு ஊடகங்களில் இருந்த தகவல்கள் மின்னணு ஊடகங்களுக்கு வந்ததால் தகவல்கள் பலமுனை வசதிகளைக் கொண்டதாக மாறியது. அவ்வகையில் அச்சில் இருந்த அகரமுதலிகள் இணையத்தில் மின் அகரமுதலிகளாக மாறியதும், சொற்களுக்குப் பொருள்கள் என்ற நிலையிலிருந்து மாறி, கூடுதல் தகவல்களைக் கொண்டதாக மலர்ந்தது (ஒலிப்புமுறை, படங்கள், வரைபடங்கள், தொடர்புடைய சுட்டிகள், தொடர்புடைய பிறமொழிச் சொற்கள்). தமிழ் அகரமுதலிகள் பல இணையத்தில் மின் அகரமுதலிகளாக உள்ளன. அவற்றுள் ஒன்று விக்கிமீடியா நிறுவனத்தின் தமிழ் விக்சனரியாகும். உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது. விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன. அதாவது ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரவரிசையில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது. ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது. 2002 டிசம்பர் 12-ல் ஆங்கில விக்சனரி உருவானது. 172 மொழிகளுக்கான விக்சனரிகள் விக்கிப்பீடியா வழியாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் விக்சனரி இலக்கியம், இலக்கணம், அறிவியல்,தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்ச்சொற்களுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தருகிறது. தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004-ல் தொடங்கப்பட்டது. தமிழ் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடக்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களாகவும் அதற்குரிய விளக்கங்களாகவும் உள்ளன. பலதுறை சொற்களாக இன்று விரிவுபெற்று காணப்படும் தமிழ் விக்சனரி 1,05,390 சொற்களைக் கொண்டு (23-2-2010) உலக அகரமுதலிகளில் 14-ம் இடத்தில் உள்ளது. தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, மலையாளம், கன்னடம்) உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. தமிழில் ஒலிப்புமுறை தொழில்நுட்பம் முழுமை பெற்றால் தமிழ் விக்சனரியையும் ஒலிப்புமுறை கொண்ட வசதியுடைய மின் அகரமுதலியாக மாற்ற முடியும். தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.தமிழ் விக்சனரியைப் பயன்படுத்த நேரடியாகத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் சென்று, தமிழ் விக்சனரி என்ற தலைப்பை அழுத்தி அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து, சொற்களுக்கு உரிய பொருள் அறியலாம். அல்லது கூகுளில் சென்று ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சிட்டு, தமிழ் என்று அருகில் அச்சிட்டால் நமக்குரிய தமிழ்ச்சொற்பொருள் விக்கிப்பீடியாவில் கிடைக்கும்.தமிழ் விக்கிப்பீடியாவை முறையாகப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று. நம்முடைய பயனாளி பெயர், கமுக்கக்குறியீடு உள்ளிட்டவற்றை வழங்கி, கலைந்த எழுத்துகளை உற்றுநோக்கி,நம் மின்னஞ்சல் முகவரி வழங்கிப் பதிந்தால் நம் பெயரை ஏற்றுக்கொண்டு, நமக்கு மின்னஞ்சல் வழி விக்கிமீடியா நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பும். அம்மடலைத் திறப்பதன் வழியாக நாம்தான் கணக்குத் தொடங்கியுள்ளோம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு விக்சனரி பக்கத்தில் புகுபதிவு செய்துகொண்டு நாம் விக்சனரியைப் பயன்படுத்தலாம். புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச் செய்யலாம். நம் கணிப்பொறியின் ஐ.பி.எண் விக்கிப்பீடியா தளத்தில் பதிவாகும். எந்தக் கணிப்பொறியிலிருந்து திருத்தப்பட்டது என்ற விவரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.தமிழ் விக்சனரியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி மற்றும் புகழ்பெற்ற பதிப்பாளர்களின் அகராதிகள் மற்றும் தனியாரின் பங்களிப்பும் உண்டு.தமிழ் விக்சனரியை வளப்படுத்துவதன் வழியாகத் தமிழின் சிறப்பை உலகுக்கு அறிவிக்க முடியும். இதற்குப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள்,துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் தேவையாக உள்ளது.விக்சனரி தன்னார்வலர்களால் உருவாக்கப்படுவது. எனவே தமிழார்வம் ஒன்றையே பற்றுக்கோடாகக்கொண்டு பணிபுரியும் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவத்துறை சார்ந்த ஆர்வலர்கள் எழுதும் தமிழில் உள்ள பிழைகளை,வழுக்களை நீக்குவதில் தமிழறிந்தோர் முன்னிற்கலாம். அதற்குரிய எளிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டால் இப்பிழை நீக்கப் பணியில் இணையலாம். நமக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்க விக்கி ஆர்வலர்கள் ஆர்வமாக இருப்பதால் நம் அறியாமையாலும் கவனக்குறைவாலும் செய்யும் சிறுபிழைகள் தொடர்பாகக் கவலைகொள்ளாமல் பணியாற்றலாம். உலகெங்கும் பரவி வாழும் தமிழார்வலர்களும் விக்கி ஆர்வலர்களும் இவற்றை உடனுக்குடன் கண்ணில்பட்டதும் சரி செய்துவிடுவார்கள்.காப்புரிமை என்ற பெயரில் தமிழின் சொல்வளம், குடத்திலிட்ட விளக்காக ஒரு சிலரிடத்தில் இருக்கிறது. நிதியுதவி செய்யும் ஆதரவாளர்கள் இருந்தும், தரமாகத் தமிழில் தட்டச்சு செய்யப் பங்களிப்பாளர்கள் இல்லை.வளர்நிலையில் இருக்கும் தமிழ் விக்சனரிக்கு, தமிழ் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முனைப்பாகச் செயல்படுபவர் வேண்டும். அத்தகையவர் தமிழ் விக்சனரியின் ஆலமரத்தடி என்ற பகுதியில் தங்கள் பெயரை, மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்தால், பதிவு செய்தவருக்கு உரிய நேரத்தில், செய்ய வேண்டிய பணிகள் குறித்து குறிப்புகள் அனுப்பப்படும். அதில் அவரவருக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப்பணி செய்யலாம். தமிழ் விக்சனரி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தமிழ்வளம் காட்டும் களமாகவும் தளமாகவும் உள்ளது.
கருத்துக்கள்
விக்கி அகராதி பற்றி நல்ல அறிமுகக் கட்டுரையை அளித்துள்ளார். பாராட்டுகள். விக்சனரி என்பதைத் தமிழில் குறிப்பிடுவதுடன் மேலும் பிற சொற்பட்டியலையும் இதில் சேர்க்க வேண்டும்; சொல்வங்கி போன்ற முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும். விக்கி நிறுவனத்தின் இணைய ஊடகப் பணி சிறக்கட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்3/23/2010 3:47:00 AM
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
Last Updated :
கலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச் செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது. ஒரு மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும். அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகர வரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன. அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணைய தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிபீடியா (ரண்ந்ண்ல்ங்க்ண்ஹ) என்ற கலைக்களஞ்சியம் உள்ளது. விக்கி (ரண்ந்ண்) என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு ""விரைவு'' என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி (ரண்ந்ண்)+ என்சைக்கிளோபீடியா (உய்ஸ்ரீஹ்ப்ர்ல்ங்க்ண்ஹ) என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா (ரண்ந்ண்ல்ங்க்ண்ஹ) என்ற சொல் உருவானது. விக்கிபீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001-ம் ஆண்டு ஜனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் பல மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. விக்கிபீடியா தொழில்நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிபீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது. இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கரும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியைத் தொடங்கினர். ஜிம்மி வேல்ஸ் முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிபீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்க வேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய, விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளிவிவரங்களை இணைக்கலாம். 2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ் விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார். இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார். தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிபீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர். விக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிபீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது. தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர். கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
