செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்!



தகவல் தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது.​ இதனால் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களைத் தமிழால் தொடர்புகொள்ள முடிகிறது.​ தமிழ்ப்பணிகள் தனியொருவர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து பலரும் இணைந்து குழுப்பணியாகச் செய்யும் நிலை உருவாகியுள்ளது.​ தமிழ் நூல்கள் மின்னூல்களாக மாறியதும்,​​ தமிழ் இதழ்கள் தேசம் கடந்த வாசகர்களைப் பெற்றதும் தமிழ் இணையத்தால் எனில் மிகையன்று.​ அச்சு ஊடகங்களில் இருந்த தகவல்கள் மின்னணு ஊடகங்களுக்கு வந்ததால் தகவல்கள் பலமுனை வசதிகளைக் கொண்டதாக மாறியது.​ ​அவ்வகையில் அச்சில் இருந்த அகரமுதலிகள் இணையத்தில் மின் அகரமுதலிகளாக மாறியதும்,​​ சொற்களுக்குப் பொருள்கள் என்ற நிலையிலிருந்து மாறி,​​ கூடுதல் தகவல்களைக் கொண்டதாக மலர்ந்தது ​(ஒலிப்புமுறை,​​ படங்கள்,​​ வரைபடங்கள்,​​ தொடர்புடைய சுட்டிகள்,​​ தொடர்புடைய பிறமொழிச் சொற்கள்).​ தமிழ் அகரமுதலிகள் பல இணையத்தில் மின் அகரமுதலிகளாக உள்ளன.​ அவற்றுள் ஒன்று விக்கிமீடியா நிறுவனத்தின் தமிழ் விக்சனரியாகும்.​ ​உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.​ விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன.​ அதாவது ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரவரிசையில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது.​ ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது.​ 2002 டிசம்பர் 12-ல் ஆங்கில விக்சனரி உருவானது.​ 172 மொழிகளுக்கான விக்சனரிகள் விக்கிப்பீடியா வழியாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.​ தமிழ் விக்சனரி இலக்கியம்,​​ இலக்கணம்,​​ அறிவியல்,தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்ச்சொற்களுக்கும்,​​ ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தருகிறது.​ ​தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004-ல் தொடங்கப்பட்டது.​ தமிழ் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடக்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களாகவும் அதற்குரிய விளக்கங்களாகவும் உள்ளன.​ பலதுறை சொற்களாக இன்று விரிவுபெற்று காணப்படும் தமிழ் விக்சனரி 1,05,390 சொற்களைக் கொண்டு ​(23-2-2010) உலக அகரமுதலிகளில் 14-ம் இடத்தில் உள்ளது.​ ​தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.​ தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் ​(எ.கா.​ ஆங்கிலம்,​​ பிரெஞ்ச்,​​ ஜெர்மன்,​​ இந்தி,​​ மலையாளம்,​​ கன்னடம்)​ உள்ளன.​ ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது.​ தமிழில் ஒலிப்புமுறை தொழில்நுட்பம் முழுமை பெற்றால் தமிழ் விக்சனரியையும் ஒலிப்புமுறை கொண்ட வசதியுடைய மின் அகரமுதலியாக மாற்ற முடியும்.​ தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.தமிழ் விக்சனரியைப் பயன்படுத்த நேரடியாகத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் சென்று,​​ தமிழ் விக்சனரி என்ற தலைப்பை அழுத்தி அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து,​​ சொற்களுக்கு உரிய பொருள் அறியலாம்.​ அல்லது கூகுளில் சென்று ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சிட்டு,​​ தமிழ் என்று அருகில் அச்சிட்டால் நமக்குரிய தமிழ்ச்சொற்பொருள் விக்கிப்பீடியாவில் கிடைக்கும்.தமிழ் விக்கிப்பீடியாவை முறையாகப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று.​ நம்முடைய பயனாளி பெயர்,​​ கமுக்கக்குறியீடு உள்ளிட்டவற்றை வழங்கி,​​ கலைந்த எழுத்துகளை உற்றுநோக்கி,நம் மின்னஞ்சல் முகவரி வழங்கிப் பதிந்தால் நம் பெயரை ஏற்றுக்கொண்டு,​​ நமக்கு மின்னஞ்சல் வழி விக்கிமீடியா நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பும்.​ அம்மடலைத் திறப்பதன் வழியாக நாம்தான் கணக்குத் தொடங்கியுள்ளோம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.​ அதன் பிறகு விக்சனரி பக்கத்தில் புகுபதிவு செய்துகொண்டு நாம் விக்சனரியைப் பயன்படுத்தலாம்.​ புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச் செய்யலாம்.​ நம் கணிப்பொறியின் ஐ.பி.எண் விக்கிப்பீடியா தளத்தில் பதிவாகும்.​ எந்தக் கணிப்பொறியிலிருந்து திருத்தப்பட்டது என்ற விவரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.தமிழ் விக்சனரியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி மற்றும் புகழ்பெற்ற பதிப்பாளர்களின் அகராதிகள் மற்றும் தனியாரின் பங்களிப்பும் உண்டு.தமிழ் விக்சனரியை வளப்படுத்துவதன் வழியாகத் தமிழின் சிறப்பை உலகுக்கு அறிவிக்க முடியும்.​ இதற்குப் பேராசிரியர்கள்,​​ ஆசிரியர்கள்,​​ ஆய்வாளர்கள்,​​ மாணவர்கள்,​​ தமிழ் ஆர்வலர்கள்,துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் தேவையாக உள்ளது.விக்சனரி தன்னார்வலர்களால் உருவாக்கப்படுவது.​ எனவே தமிழார்வம் ஒன்றையே பற்றுக்கோடாகக்கொண்டு பணிபுரியும் தொழில்நுட்பம்,​​ பொறியியல்,​​ மருத்துவத்துறை சார்ந்த ஆர்வலர்கள் எழுதும் தமிழில் உள்ள பிழைகளை,வழுக்களை நீக்குவதில் தமிழறிந்தோர் முன்னிற்கலாம்.​ அதற்குரிய எளிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டால் இப்பிழை நீக்கப் பணியில் இணையலாம். நமக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்க விக்கி ஆர்வலர்கள் ஆர்வமாக இருப்பதால் நம் அறியாமையாலும் கவனக்குறைவாலும் செய்யும் சிறுபிழைகள் தொடர்பாகக் கவலைகொள்ளாமல் பணியாற்றலாம்.​ உலகெங்கும் பரவி வாழும் தமிழார்வலர்களும் விக்கி ஆர்வலர்களும் இவற்றை உடனுக்குடன் கண்ணில்பட்டதும் சரி செய்துவிடுவார்கள்.காப்புரிமை என்ற பெயரில் தமிழின் சொல்வளம்,​​ குடத்திலிட்ட விளக்காக ஒரு சிலரிடத்தில் இருக்கிறது.​ நிதியுதவி செய்யும் ஆதரவாளர்கள் இருந்தும்,​​ தரமாகத் தமிழில் தட்டச்சு செய்யப் பங்களிப்பாளர்கள் இல்லை.வளர்நிலையில் இருக்கும் தமிழ் விக்சனரிக்கு,​​ தமிழ் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்,​​ முனைப்பாகச் செயல்படுபவர் வேண்டும்.​ அத்தகையவர் தமிழ் விக்சனரியின் ஆலமரத்தடி என்ற பகுதியில் தங்கள் பெயரை,​​ மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்தால்,​​ பதிவு செய்தவருக்கு உரிய நேரத்தில்,​​ செய்ய வேண்டிய பணிகள் குறித்து குறிப்புகள் அனுப்பப்படும்.​ அதில் அவரவருக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப்பணி செய்யலாம்.​ தமிழ் விக்சனரி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தமிழ்வளம் காட்டும் களமாகவும் தளமாகவும் உள்ளது.
கருத்துக்கள்

விக்கி அகராதி பற்றி நல்ல அறிமுகக் கட்டுரையை அளித்துள்ளார். பாராட்டுகள். விக்சனரி என்பதைத் தமிழில் குறிப்பிடுவதுடன் மேலும் பிற சொற்பட்டியலையும் இதில் சேர்க்க வேண்டும்; சொல்வங்கி போன்ற முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும். விக்கி நிறுவனத்தின் இணைய ஊடகப் பணி சிறக்கட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக