ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்

திருத்துறைப்பூண்டி, ஆக. 7: பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையில் வாடி வருகின்றனர். செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, சோமசுந்தரனாரின் வாரிசுகளின்வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.      தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தவர் பொ.வே. சோமசுந்தரனார்.          நூலை இயற்றிய மூல ஆசிரியர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள் வரிசையில் சோமசுந்தரனாருக்கு தனியிடம் உண்டு. மேலும், சிறந்த உரையாசிரியர்களாகத் திகழ்ந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வரிசையில் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக திகழ்ந்தவர் சோமசுந்தரனார்.      இளமையில் வறுமையின் காரணமாக, திண்ணைப் பள்ளி வரை மட்டுமே படித்த அவர், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் மாணவராக விளங்கியதுடன், விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன்னோதுவார், பூவராகன் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரிடமும் பாடம் கற்ற பெருமைக்குரியவர்.     பல்கலைக்கழகக் கல்வியில் முதல் மாணவராக தேறியபோது, தமிழ் தெரியாத ஆங்கிலேய ஆளுநர் எர்ஸ்கின் பிரபு அளித்த சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு, ஊர் திரும்பிய அவர், மீண்டும் உழவுத் தொழிலை மேற்கொண்டார்.     இந்நிலையில், கதிரேசன் செட்டியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவாசகத்துக்கான உரையை சோமசுந்தரனார் எழுதினார். இதுவே, பின்னாளில் அவர் சிறந்த உரையாசிரியராக திகழக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.     இதைத்தொடர்ந்து, பழந்தமிழ் நூல்களை வெளியிட்டு வந்த சைவ சித்தாந்த நூல்பதிப்பு கழகத்தின் தலைவர் சுப்பையாப்பிள்ளை, கறுப்புக்கிளார் ராமசாமிப் புலவர் மூலமாக சோமசுந்தரனாரின் தமிழ்ப் புலமையை கண்டு வியந்து, முன்னர் உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கும் சோமசுந்தரனாரை வைத்தே விளக்கமாக உரை எழுதி வெளியிட்டார்.     அவ்வாறு சோமசுந்தரனார் எழுதிய விளக்கமான உரையில், பழம் புலவர்களின் சில கருத்துகளை மறுத்து எழுதி, அந்தக் காலத்திலேயே புலவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திய வரலாறும் உண்டு.    சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி மற்றும் பெருங்கதை, வெண்பாமாலை, கல்லாடம், பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கும் உரை எழுதிய பெருமைக்குரியவர் சோமசுந்தரனார்.       இவை தவிர, செங்கோல், மானனீகை முதலிய உரைநடை நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறும் எழுதிய பெருமைக்குரிய சோமசுந்தரனாரின் நூல்கள், நாடகங்கள், பின்னாளில் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.     பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சோமசுந்தரனார், 1972-ம் ஆண்டு, ஜனவரி 3-ம் தேதி காலமானார்.    செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரின் சிறப்பையும், புலமையையும் முரசொலியில் எழுதி, அவருக்கு மேலும் பெருமை சேர்த்தார். வறுமையின் பிடியில் வாரிசுகள்:  புலவரின் மறைவுக்குப் பிறகு, சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையின் பிடியில் சிக்கி, உழன்று வருகின்றனர்.  சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவரும் மேலப்பெருமழை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர் என்பது வேதனையளிக்கும் விஷயம்.    "எங்கள் தந்தையின் புகழ் அவர் உயிரோடு இருக்கும்வரையில் எங்களுக்குத் தெரியவில்லை. தமிழை நேசித்த அளவுக்கு, குடும்பத்தின் நிலையை மேம்படுத்த அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.    எங்களின் நிலை குறித்து தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியப்படுத்தி, கடிதம் அனுப்பி இருக்கிறோம். எங்கள் தந்தை குறித்து நன்கு அறிந்த முதல்வர் கருணாநிதி, எங்களுக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்' என்றனர் பசுபதி, மாரிமுத்து.     இதுகுறித்து மேலப்பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம் கூறியது:     மேலப்பெருமழை கிராமத்துக்கு பெருமை சேர்த்த சோமசுந்தரனார் பெயரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும், அவரின் தமிழ்ப் பணியை உலகறியச் செய்ய வேண்டும் என்றார் அவர்.    சோமசுந்தரனாரின் வாரிசுகளுக்கு நிதியுதவி அளித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு சோமசுந்தரனாரின் பெயரைச் சூட்டுவதுடன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் பன்னாட்டுத் தமிழறிஞர்கள் பங்கேற்கும் இருக்கையையும் அமைக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள், இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துக்கள்

ஊர்ப்பெயர் சிலருக்கு வேறுபட்ட சிறப்புப் பொருளைத் தருவதுண்டு. அதுபோல்தான பெருமழைப்புலவர் என்னும் பொழுது அறிஞர் சோமசுந்தரனார் பெருமழை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதை விட சொல்மழை பொழிவதில் பெருமை மிக்கவர் என்பதால் அப்பெயர் பெற்றார் எனக் கருதும் வகையில் சிறப்பினைத் தந்தது.எதற்கெடுத்தாலும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கூறுவதைவிட அவரது வழிமுறையினர் சிறக்க வகை செய்ய வேண்டும் என்பதே முதன்மையானது. உரைவளம் தந்த பெருமழைப்புலவருக்கு உதவ வேண்டித் தினமணி குரல் கொடுத்ததை இந்நேரம் முதல்வர் படித்திருப்பார்; எவ்வகையில் உதவ வேண்டும் என்றும் முடி வெடுத்திருப்பார். இதனைப் பிறர் படிக்கும் பொழுது் அறிவிக்கவும் செய்திருப்பார்.எனவே தினமணிக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக