புதன், 27 ஜூன், 2012

நெருக்கடி நிலை அறிவிப்பு நினைவுகள் - ?? வேடதாரிகள் உணரட்டும்

  எமர்ஜென்சி தின! நினைவுகள்



இந்த ஆண்டு ஜூன் மாத நாளேட்டைப் பார்த்ததும் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் என் நினைவுக்கு வந்தது. 1975 ஜூன் 25-26 நள்ளிரவில்தான், உள்நாட்டு நெருக்கடிகால அறிவிப்பு அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியால் வெளியிடப்பட்டது. அது ஜனநாயக அடிப்படையில் நம்பிக்கை உள்ள எந்த இந்தியனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாத - வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எவராலும் இன்னமும் முழுமையாக ஆராயப்படாத, சுதந்திர இந்தியாவில் அதற்கு முன் ஏற்பட்டிராத இருண்ட கால ஆட்சியின் ஆரம்பம்.
அடிப்படை மனித உரிமைகளுக்கான ஜனநாயகம் - தூய்மையான பொதுவாழ்வு நேர்மையான அரசாங்கம், சுயநலமற்ற தனி வாழ்வு ஆகியவை மகாத்மா காந்தி - ஜவாஹர்லால் நேரு காலத்திய காங்கிரஸ் இயக்கத்தின் இன்றியமையாத நடைமுறைக் கோட்பாடுகளாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அந்தக் கோட்பாடுகள் இந்திய அரசியலில் மறக்கப்பட்டுவிட்டன அல்லது மறைந்துவிட்டன, 1966 ஜனவரியில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் இறந்ததும் காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பெரு முயற்சியால் இந்திரா காந்தி பிரதமராக ஆக்கப்பட்டார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் இந்திரா காந்தி பிரதமராக ஆனார். 1969-இல் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார். ஆயினும், கட்சி முடிவை ஏற்றுக் கொள்ளாமல் பிரதமர் இந்திரா காந்தி, வி.வி.கிரியை ஆதரித்து ""அவரவர் மனசாட்சிப்படி உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்'' என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்து சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தார். இவ்வளவுக்கும் சஞ்சீவ ரெட்டி பெயரை முன்மொழிந்தவரே இந்திரா காந்திதான் என்பதுதான் வேடிக்கை. அதன்பின் 1969 ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு அமைப்புகள் உருவாயின. "கரீபி ஹட்டாவ்' (ஏழ்மையை விரட்டுவோம்) என்ற கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியை வைத்து, 1971 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி அமைத்தார். 1971 டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ஆதிக்கத்தை எதிர்த்து கிழக்கு வங்காளத்தில் மக்கள் ஆதரவில் பிரமாண்டமான எழுச்சி ஏற்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பங்களாதேஷ் சுதந்திர நாடாக ஆனது. அதனால் இந்திரா காந்தியின் தனிப்பட்ட பெருமையும் ஆட்சி அதிகாரமும் மேலும் பலமடைந்தன. அதிகார பலம் மிகவும் அதிகமானால்,, அது தலைக்கேறி எதேச்சதிகாரம் தலையெடுக்கும் என்பார்கள். ஏழ்மை விரட்டப்படுவதற்குப் பதிலாக, ஏழை மக்கள் விரட்டப்பட்டனர். விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம் - பட்டினி, ஊழல் -ஊதாரித்தனம் - ஆட்சியின் அடக்குமுறை ஆகியவை ஏழை மக்களை வாட்டி வதைத்தன. இந்திரா காந்தியின் அதிகாரத்தைவிட அதிகமான அளவுக்கு எதற்கும் துணிந்த இளவரசர் சஞ்சய் காந்தியின் ஆதிக்கம் சட்டம் - அரசாங்கம் - நீதி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு கொடிகட்டிப் பறந்து அதற்கு முன் இந்தியா காணாத தனிப்பட்ட ஒரு எதேச்சதிகார ஆட்சியாக மாறியது. சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செயலற்று இருந்த நிலைமையில், இந்தியாவின் நற்காலமாக, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, ஈடு இணையற்ற போராட்ட வீரர், தன்னலமற்ற தியாகி, தூய்மையான மாமனிதர் என்று மகாத்மா காந்தியாரால் பாராட்டப்பட்ட ஜெயப்பிரகாசர் - அதுவரை அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தவர் - இந்திரா காந்தியின் அலங்கோல ஆட்சியையும், ஊழல் கடலில் மிதந்துகொண்டிருந்த அதிகார கும்பலையும் எதிர்த்து நிற்க, மக்கள் கவனத்தையும், மக்கள் சக்தியையும் திரட்டினார். மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட ஜெயப்பிரகாசர் (ஜே.பி.) எதிர்த்தரப்பு அணியை அமைத்தார். அதில் மூத்த அரசியல் தலைவர்களான ஆச்சார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, சரண்சிங், என்.ஜி.கோரே, எஸ்.எம். ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, மது லிமாயி, வாஜ்பாயி, அத்வானி போன்ற பலர் இருந்தனர். அந்த அணியில் என்னையும் ஜே.பி. சேர்த்து அவ்வப்பொழுது முக்கிய பொறுப்புகளைத் தந்தார். பொதுமக்களின் அவல நிலைமைகளை நாட்டுக்கும் நாடாளுமன்றத்துக்கும் உணர்த்தும் வகையில் 1975 மே 6, தில்லி மாநகரில் செங்கோட்டையிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒரு மாபெரும் பேரணியை ஜெயப்பிரகாசர் தலைமையேற்று நடத்தினார். அரசாங்கம் போட்ட பல்வேறு தடைகளையும் மீறி, ஐந்து லட்சம் மக்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆட்சியின் அரசியல் - பொருளாதார -சமுதாயச் சீர்குலைவுகளைச் சுட்டிக்காட்டி, மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை நிலைநாட்டும் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் ஒரு மனுவைத் தந்தார் ஜே.பி. இந்தியாவில் ஜே.பி. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் மக்களின் வரவேற்பும் எழுச்சியும் வேகமாக வளர்ந்தன. அலைமோதும் மக்கள் கூட்டம் ஆட்சியாளர்களை ஆட்டி வைத்தது. எதிர்பாராத வகையில், 1975 ஜூன் 25}இல் இந்திரா காந்தியின் ஆர்ப்பாட்டத்தை அடக்கிடும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தது. 1971 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை சாந்திபூஷண் நடத்தினார். நான்கு ஆண்டுகள் ஆமை நடைபோட்ட அந்த வழக்கில், 1975 ஜூன் 12}ஆம் தேதியன்று, நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அலகாபாத் தேர்தல் முடிவு இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பேரிடியாக வந்தது. "பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்பதையொட்டி, அதே ஜூன் 12-ஆம் நாளன்று குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன, அவற்றில், இந்திரா காங்கிரஸ் தோல்வி அடைந்ததுடன், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. இருப்பினும் அதிகார பலத்தையே நம்பி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆளவந்தார்களுக்கு எதையும் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற பிடிவாதம் ஏற்பட்டுவிடும். "இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா' என்ற முழக்கத்துடன், இந்திரா காந்திதான் பிரதம மந்திரியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆரவாரத்துடன் ஆர்ப்பாட்டங்களை காங்கிரஸ் தலைவர்கள் நடத்தினார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்த 1975 ஜூன் 25-ஆம் தேதி மாலை தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜே.பி. தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1975 ஜூன் 25-ஆம் தேதி காலை பத்து மணிக்கு ஜே.பி. இருக்குமிடத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நான் சென்றபொழுது அங்கு மொரார்ஜி தேசாய், சரண்சிங், அசோக் மேத்தா, பிலு மோடி மேலும் சிலர் இருந்தனர். வாஜ்பாய், அத்வானி ஆகியோர் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்துக்காக பெங்களூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அலகாபாத் தீர்ப்பின்படி இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதிலும் கண்டனக் கூட்டங்களை ஜூன் மாத இறுதி சனி-ஞாயிறு நாட்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிலும் பயன் இல்லை என்றால், ஓர் ஒத்துழையாமைப் போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும் என்று ஜே.பி. கருதினார். கடைசியில் கூட்டம் கலையும்பொழுது அசோக் மேத்தா, மாலையில் கூட்டத்துக்குப் போகும்பொழுது செழியனை நான் அழைத்து வருகிறேன் என்றார். அருகிலிருந்த ஜே.பி. இடைமறித்து, "வேண்டாம், செழியனுக்கு நான் ஒரு வேலை வைத்திருக்கிறேன். அலகாபாத் தீர்மானத்தை இன்று இரவு செழியன் படித்துப் பார்த்து குறிப்புகளுடன் வந்தால், நாளை காலை நாம் ஒரு இறுதியான முடிவை எடுக்கலாம்' என்றார். இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பு ஐநூறு பக்கங்கள் இருக்கும். இரவு சாப்பிட்டுவிட்டு அந்தத் தீர்ப்பைப் படிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. இரவு 3-30 மணி அளவில் என்னிடம் பிலு மோடி பேசினார். ஜே.பி., மொரார்ஜி கைது செய்யப்பட்டனர் என்றார். எந்தக் குற்றங்களுக்காக என்று நான் கேட்டேன். பேச ஆரம்பித்த பிலு மோடி சற்று நிதானித்துக் கொண்டு ""என் வீட்டருகில் ஒரு வேன் - போலீஸ் வேன்தான். எனக்கும் அழைப்பு வந்துவிட்டது, குட்பை'' என்று டெலிபோனை வைத்தார். எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அந்த நிலைமையில் திகைப்பூட்டும் வகையில் என் வீட்டின் வெளியில் ஒரு கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால் நெருங்கிய நண்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நின்று கொண்டிருந்தார். மிகவும் அவசரமாக "ஜே.பி. மற்றும் பலர் கைது செய்யப்படுகின்றனர். உனக்கும் அரஸ்ட் வாரண்ட் வரலாம். உடனே கிளம்பு' என்றார். என் மனைவி பிரேமா எழுந்து வந்தாள். கட்டிய வேட்டி போட்டிருந்த சட்டையுடன், என் உதவியாளர் அன்புமணியையும் அழைத்துக்கொண்டு நான் புறப்பட்டேன். காரில் போகும்பொழுது சோம்நாத் சொன்னார்: இரவு 12 மணிக்கு எமர்ஜென்சி ஆர்டர் போடப்பட்டுள்ளது. 3.30 மணிக்கு ஜே.பி. கைது செய்யப்பட்டார், மேலும் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கைது ஆகின்றனர். முழுவிவரங்கள் காலையில்தான் தெரியும் என்றார். அப்பொழுது நள்ளிரவுக்குப் பிறகு மணி 3.45. அவருடைய நண்பர் வீட்டுக்கு சோம்நாத் எங்களை அழைத்துச் சென்றார். விடிந்ததும் - ஜூன் 26-ஆம் தேதி காலையில் முதலாவதாகக் கிடைத்த செய்தி: அன்றாடம் வெளிவரும் செய்தித்தாள்கள் எதுவும் கிடைக்காது என்பதுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள், அவைகளை அச்சிட முடியாதபடி, முதல் நாள் இரவில் அவைகளுக்கான மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாம். இந்த மாபெரும் காரியத்துக்கு உத்தரவிட்டவர் சஞ்சய் காந்தி என்று பிறகு தெரியவந்தது. பிறகு இரவுதான் போடப்பட்ட உள்நாட்டு நெருக்கடி கால அறிவிப்பின் விவரங்கள் கிடைத்தன. 1971 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷ் போரையொட்டி வெளிநாட்டு நெருக்கடி காரணத்தினால் போடப்பட்ட ஒரு பிரகடனம் - அது அமலில் இருக்கும் பொழுதே அதற்கு மேல் உள்நாட்டு விவகாரத்துக்கான மற்றொரு நெருக்கடி உத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரே காலத்தில் இரண்டு நெருக்கடி உத்தரவுகள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். என் உதவியாளர் அன்புமணி எம்.பி. என்ற முறையில் எனக்குத் தரப்பட்டிருந்த பிஷாம்பர்தாஸ் மார்க், 12 நம்பர் வீட்டுக்குச் சென்று விசாரித்து வந்தார். ஜூன் 25 இரவில் 4 மணிக்குமேல் ஒரு போலீஸ் அதிகாரி வந்து கதவைத் தட்டினாராம். என் மனைவி பிரேமா கதவைத் திறந்தாள். வீட்டுக்கு முன்னால் பத்து காவல்காரர்கள் தாங்கிய ஒரு போலீஸ் வேன் இருந்ததாம். பிறகு தெரிந்த விஷயம் அதேபோல் வீட்டுக்குப் பின்னாலும் காவல்காரர்கள் அடங்கிய மற்றொரு வேன் நிறுத்தப்பட்டிருந்தது என்று. நான் தப்பி ஓடிவிடாமல் கைது செய்யத்தான் அத்துணை ஏற்பாடுகள். போலீஸ் அதிகாரி கையிலிருந்த அரஸ்ட் வாரண்டைக் காட்டி, எம்.பி. செரியனைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார். பிரேமா: செரியன் என்று யாரும் இங்கு இல்லையே!'' ""இது பிஷாம்பர்தாஸ் 12 நம்பர் வீடுதானே?'' ""ஆமாம். ஆனால் செரியன் என்று யாரும் இங்கு இல்லை.'' போலீஸ் அதிகாரி போய் பங்களா முன்னுள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தாராம். திரும்ப வந்து வாரண்ட் சரியாக எழுதவில்லை என்று பையிலிருந்து மற்றொரு காகிதத்தை எடுத்து. ஆங்கிலத்தில் திருத்தமாக என் பெயரை எழுதி ""சரி எங்கே அவர்?'' என்று அதட்டிக் கேட்டாராம். கைது செய்யப்படுபவர் பெயர் எழுதாமல், மாஜிஸ்ட்ரேட் தமது கையெழுத்தைத் தாராளமாகப் பல அரஸ்ட் வாரண்ட்களில் போட்டுத் தந்திருந்தார்.. யாரை வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டும் என்றாலும் ஆட்சியில் இருந்த நெருக்கடி கால அதிகாரிகள் உத்தரவிட, சுலபமாகத் தேவைப்பட்டவர்களை போலீஸôர் கைது செய்துவிடலாம். மீண்டும் கேட்டபொழுது பிரேமா சொன்னது, ""எம்.பி. சென்னைக்குப் போய்விட்டார்'' என்று. போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் புகுந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்தாராம். யாரும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த பழனி என்ற நாய் நிரம்பக் குரைத்ததாம். போலீஸ் அதிகாரிக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. கடைசியாகத் தன் தொப்பியைப் போட்டுக்கொண்டு, மீசையை முறுக்கிவிட்டு போலீஸ் அதிகாரி எச்சரித்தாராம்: இருக்கட்டும் இன்று இந்த எம்.பி. சிக்கவில்லை. நாளை மாலைக்குள் அவரை நீங்கள் திகார் சிறையில்தான் பார்க்கவேண்டும். அன்றைக்கு சோம்நாத் சட்டர்ஜியின் சாமர்த்தியத்தால், நான் தப்பினேன். மறைவாக இருந்த நான் மறுநாள் இரவு விமானத்தில் சென்னை சேர்ந்தேன். அரசமைப்புச் சட்டப்படி நெருக்கடி கால உத்தரவுக்கு அது வெளியிடப்பட்ட ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். அதன்படி 1975 ஜூன் 25 போடப்பட்ட உத்தரவை அங்கீகரிக்க ஜூலை 21 நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அழைக்கப்பட்டது. என்னைக் கைது செய்வதற்கான தில்லி போலீஸôரின் உத்தரவு இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள நான் தில்லி சென்றால், என்னை அங்கு கைது செய்துவிடக்கூடும் என்ற நிலைமை இருந்தது. அதையும் மீறி, நான் ஜூலை 20-ஆம் தேதி இரவு தில்லி சென்று என் வீட்டுக்குச் செல்லாமல் ஒரு சாதாரண ஓட்டலில் தங்கி மறுநாள் காலை 8 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் என் அடையாளச் சீட்டைக் காண்பித்து நுழைந்து, அங்குள்ள நூல் நிலையத்தில் காத்திருந்தேன். 11 மணிக்கு மக்கள் சபைக்குள் நான் சென்று என் இடத்தில் அமர்ந்தேன். நெருக்கடிநிலை உத்தரவைக் கண்டித்து கடுமையாக ஒரு மணி நேரம் பேசி விட்டு, மறுபடியும் மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, அன்று இரவே சென்னை திரும்பிவிட்டேன். அப்பொழுது இருந்த கடுமையான சென்சார் முறையில் எனது பேச்சுபற்றி எதுவும் இந்திய செய்தித்தாள்களில் வெளியிடப்படவில்லை. ஆனால், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் சிறப்பாக அது வெளியிடப்பட்டதுடன் அதைப் பாராட்டி பிரபல செய்தியாளர்கள் எழுதியதாகவும் எனக்குத் தகவல் வந்தது. எதிர்ப்பு அடங்கிவிட்டதாக ஒருவகை நினைப்பு அரசாங்கத்துக்கு இருந்தது என்றும் என்னைக் கைது செய்தால் வெளிநாட்டுப் பத்திரிகைகள் அதற்கு அதிகமான பாராட்டுதலைத் தரக்கூடும் என்றும் அரசாங்கம் என்னைக் கைது செய்யாமல்விட்டது என்று அப்பொழுது அமைச்சராக இருந்த ஒருவர் நெருக்கடி காலம் தீர்ந்ததும் என்னிடம் சொன்னார். 1977 மார்ச் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டதும், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி அமைந்ததும், பதவி ஆசையில் இந்திரா காந்தியுடன் இணைந்த ஜனதா எம்.பி.க்கள் மக்களாட்சியைக் கவிழ்த்ததும், பலரும் அறிந்த நிகழ்ச்சிகளாகும். அதேசமயம் தனிப்பட்டவர்க்கு ஏற்பட்ட நீதிபூர்வமான நெருக்கடியை நாட்டுக்கு ஒரு நெருக்கடியாக மாற்றி, மக்களை அடக்கியாண்ட எதேச்சாதிகாரம், அதையொட்டி எழுந்த ஜெயப்பிரகாசரின் போராட்டம், மக்கள் தந்த பேராதரவின் வெற்றி ஆகியவைகளும் இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. மக்களை அடக்கி எதேச்சாதிகாரம் இடையிடையே வெற்றிபெறலாம், ஆனால், எழுச்சிபெற்ற மக்கள் மீண்டும் வெற்றிபெறுவார்கள் என்பது உலக வரலாற்றில் காணப்படும் உண்மையாகும். 1975 செப்டம்பர் 25-ஆம் தேதி நள்ளிரவில் போடப்பட்ட நெருக்கடி காலம் 1977 மார்ச் 21 வரை நீடித்தது. 37 ஆண்டுகள் கழித்து இப்பொழுது இவற்றை நான் எழுதுவதற்குக் காரணம் எனக்குப் போடப்பட்ட போலீஸ் உத்தரவுகளைவிட நான் பட்ட சோதனைகளைவிட, அபாயங்களைவிட, அதிகமான அளவுக்குப் பல்வேறு அநீதிகள், கொடுமைகளைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுதியுடன், நெருக்கடி காலத்தின் கோரதாண்டவத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். 1975-77 நெருக்கடி காலத்தில் அரசாங்கம் இழைத்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக் குழு தந்த அறிக்கையில், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்கள் - சிறைச்சாலைகள் - நீதிமன்றங்கள் ஆகியவைகளிடமிருந்து திரட்டப்பட்ட விவரங்களின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர்களின் எண்ணிக்கை 1,10,806. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன், இந்த ஜூன் 25-ஆம் தேதி நினைவு நாளன்று. அவர்களில் மறைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி. வாழ்பவர்களுக்கு என் வாழ்த்துகள்! "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்' என்பதற்கு அவசரநிலைச் சட்டத்தையும், நெருக்கடி நிலையையும் மீறி வெகுண்டெழுந்த மக்களின் விடுதலை உணர்வும், மக்களாட்சியும், தனிநபர் சுதந்திரமும் நிலைநாட்டப்பட்ட சம்பவமும் மறக்கவே முடியாத நினைவுகள். எத்தனையோ சீர்கேடுகளுக்கு இடையிலும், இந்தியாவின் வருங்காலம் பற்றிய நம்பிக்கை முற்றிலுமாக அழிந்துவிடாமல் இருப்பதற்கு ஜே.பி. இயக்கத்தின் வெற்றிதான் காரணம். நெருக்கடி காலத்தில் செய்தியாளர்களின் குரல்வளைகளை அடக்கிக் கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டது. ஆனால், அவற்றை எதிர்த்துப் பத்திரிகையாளர்கள் சிலர் தலை நிமிர்ந்து நின்றனர். அதில் முதன்மையான இடத்தில் ராம்நாத் கோயங்கா இருந்தார்; எக்ஸ்பிரஸ்-தினமணி இதழ்கள் இருந்தன. அப்படி இன்றும் தனித்து நிலை நிற்கும் தினமணி இதழில் இதை எழுதும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  
கருத்துகள்

எமர்ஜன்சி கால கட்டத்தில் இந்திராவையும் ,காங் கட்சியின் நிலை பாட்டையும் வெறுத்தவர்களில் நானும் ஒருவன்.ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதுவே இந்நாட்டிற்கு சிறந்தது என்ற எண்ணம் தோன்றுகிறது. இப்போது உள்ள அரசியல் கட்சிகளும்,அதன் தலைவர்களும், சிறிதும் விட்டுக்கொடுக்காத மாநிலங்களும் அதன் முதல்வர்களும் , பொறுப்பில்லாத ஊடகங்களும் மக்கள் மத்தியில் கலவரம் உண்டாக்கும் போக்கும் , தொட்டதற்கெல்லாம் கலவரம்,மறியல் என்ற போக்கும்,பிரிவினை வாதம் பேசும் கட்சி தலைவர்களையும்(?) இன்று பார்க்கும் போது கடுமையான எமர்ஜென்சி நாட்டிற்கு இன்று அவசியம் தேவைதான் என்றே தோன்றுகிறது. இல்லையேல் நாடு துண்டாடப்படும் என்று தோன்றுகிறது.
By Tamilian
6/26/2012 11:10:00 AM
சுதந்திர போராட்டத்தை நினைவு கூறுவது போல், அவசர கால ஆட்சியையும் நினைக்க வேண்டும். அரசியல் கட்சிகளும், தனி மனிதர்களும் சொந்த லாபங்களுக்கு அரசியல் நடத்துவது வாடிக்கை ஆகி விட்டது. ஜன நாயகம் என்ற பெயரில், உணர்வில்லாத இயக்கத்தை காண்கிறோம். இயற்க்கை வளங்களையும், இதமான காலநிலையும், பழைய கட்டிடங்களும், கோவில்களும் தவிர பெருமையாக பேசி கொள்ள நம் நாட்டில் ஒன்றுமே இல்லை.நாடு என்பதின் தரம் அதன் மக்களை பொருத்தது. சுதந்திரம் வாங்க துணையாக இருந்த கட்சியின் ஆட்சியாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது சிறிய காரியம் அல்ல.
By gopalan
6/26/2012 8:28:00 AM
இன்று கூட அதன் அடிப்படை தத்துவம் மாற வில்லையோ ? எங்கே போகிறோம் என இலக்கு இல்லாத ஜனநாயக பயணம்! ஜெய் ஹிந்த் .
By K .Balasubramanian
6/26/2012 7:51:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக