ira.chezhiyan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ira.chezhiyan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஏப்ரல், 2013

இன அழிப்பில் கை குலுக்கும் குடும்ப அரசியல்

கை குலுக்கும் குடும்ப அரசியல்

ஒரு நாட்டு மக்களின் மனித உரிமைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது அங்குள்ள ஒரு மனித இனத்தையே அழித்துவிடும் போக்கில் அந்த நாட்டின் ஆட்சி ஈடுபடவோ முற்பட்டால், அத்தகைய மனிதநேயமற்ற நடவடிக்கைகளைத் தடுத்திடவும் - ஆணவப் போக்குடைய ஆட்சியைத் தக்கபடி திருத்தவும் ஐக்கிய நாடுகள் அவைக்குப் பொறுப்பும் அதன் நடவடிக்கைகளுக்குத் தீர்மானங்கள் மூலமான அதிகாரமும் தரப்பட்டுள்ளன.
ஆட்சியின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து ஆளுங்கட்சிக்கு வேண்டாதவர்களை, வேறுபட்ட இன மக்களை அழித்தொழிக்கும் முறையை 1933-இல் ஜெர்மனியில் எதேச்சாதிகாரி ஹிட்லர் துவக்கி வைத்தார்.
முதலாவதாக "நாஜி' கட்சியைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் சட்டவிரோதமான கட்சிகளாக நீக்கப்பட்டன, அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர், யூத இனத்தவர்கள் கைது செய்யப்பட்டு "கான்சென்ட்ரேஷன் காம்ப்' (திருத்தியமைக்கும் முகாம்) என்ற இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடைப்பிடித்த அரசியல் கொள்கையை ஒருவன் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், பிறந்த இனத்தை ஒருவனால் எப்படி திருத்திக்கொள்ள முடியும்? அப்படிப்பட்டவர்களை மனித இனத்திலிருந்தே - மனித வாழ்விலிருந்தே மாற்றிப் பிணமாக்கும் திட்டங்களில் ஹிட்லர் ஆட்சி ஈடுபட்டது. அதற்காகச் சித்ரவதை சிறைக்கூடம் பயன்பட்டது.
முதலாவதான சித்ரவதைச் சிறைக்கூடம் 1933 மார்ச் மாதத்தில் ஜெர்மனியில் டச்சோவ் என்ற ஊரில் கட்டப்பட்டது. 1933 முதல் 1945-இல் ஹிட்லர் ஆட்சி தோற்கடிக்கப்படும்வரை அந்த ஒரு முகாமில் மட்டும் அடைக்கப்படடவர்கள் எண்ணிக்கை 35 லட்சம். அவர்களை நிறுத்திவைத்தும், ஓடவைத்தும் குறி பார்த்து சுட நாஜிப் படைவீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சிக் களமாக அதைப் பயன்படுத்தினார்களாம். போர் முடியும் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றி அவர்கள் சென்ற இடம் தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டதாம்.
1939-க்குப் பிறகு ஹிட்லரின் படைபலம் ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளை அடிமைப்படுத்தியபோது, அந்த நாடுகளில் 1,200 சித்ரவதை சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாவது உலகப் போரில் மாண்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6 கோடி இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இவர்களில் நேரடியான போரிலும், தோல்விக்குப் பிறகு மறைவாகவும் ஆயுதங்கள் தாங்கி மாண்ட போர் வீரர்களைவிட, குண்டு வீச்சுகளில் சிக்கியும் - பஞ்சம், பட்டினி, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டும் - இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 4 கோடிக்குமேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஹிட்லர் படையெடுப்பினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் அதிகமான அளவில் மாண்டவர்கள் பொதுமக்கள்தாம்.
இரண்டாவது உலகப் போர் முடிந்ததும், மீண்டும் ஒரு பிரமாண்டமான அழிவுப் போரைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்ட 1945 ஜூன் 26-இல் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் 50 நாடுகள் கூடி "ஐக்கிய நாடுகள் சபை' (யூ.என்.ஓ.) என்னும் அமைப்பை உருவாக்கின.
ஐக்கிய நாடுகளின் குறிக்கோள்களை விளக்க "ஐ.நா.ஆவணம்' வெளியிடப்பட்டது. அதன் முன்னுரையில் "ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய குறிக்கோள், உலக நாடுகளிடை ஒருமைப்பாட்டையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதுடன், இனம், பால், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளைத் தவிர்த்து, அடிப்படை மனித உரிமைகளையும் சுதந்திரத் தன்மையையும் பாதுகாப்பதுதான் முதன்மையானது'' என்று வலியுறுத்தப்பட்டது.
இத்தகைய ஆவணம் எழுத்து மூலமான ஒரு அறிமுகப் பத்திரமே தவிர, அது சட்டபூர்வமான ஆதாரமாக ஆகாது என்பதால், அதில் பங்குபெரும் நாடுகள் அவற்றை ஏற்றுக்கொள்ளவும் நிறைவேற்றவும் சட்டபூர்வமான விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் கருதினார்கள். அதன்படி, "மனித உரிமைகள் பற்றிய உலக அறிவிப்பு-1948' என்பது ஐ.நா. அவையின் பொதுக்கூட்டத்தில் 1948 டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
போருக்குப் பிறகு வாழ்விழந்து அலைந்து திரியும் மக்களைப் பாதுகாப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் "அகதிகள் நிவாரண அமைப்பு' 1950 டிசம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதனையொட்டி மக்களின் அடிப்படை உரிமைகளை நிர்ணயிக்கும் நோக்கத்தில் 1951 ஜூலை மாதத்தில் ஐ.நா. சபையின் தீவிரமான ஆய்வுக்குப் பிறகு "ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு' ஏற்படுத்தப்பட்டது.
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், ஒரு கடும் போர் நடைபெற்று அதில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பை உடைய ஒரு நாடு, வெற்றி அடைவதற்குச் சிறிது முன்னும் வெற்றி அடைந்த பிறகும், இன-மொழி-கலாசார அடிப்படையில் - தோல்வி அடைந்த மக்களைக் குறிவைத்து அடிமைகளாக அகதிகளாக, அழித்திட ஆரம்பித்துவிடும்.
உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம் முழுமையாக வெற்றி அடைந்துவிட்டதாகவும், போராளிகளின் தலைவர்களும் முகாம்களும் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இனி அமைதி வழியில் மக்கள் வாழ்வதற்கு இலங்கை அரசு ஆக்கப் பணிகளை நிறைவேற்றும் எனவும் 2009 மே 19 இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபட்ச அறிவித்தார்.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட இன அழிவு கொடுமைகளைக் கண்டித்து 2009 மே இறுதியில் ஜெனீவாவில் கூடிய மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில், ஆஸ்திரியா, பல்கேரியா, பெல்ஜியம், சைப்ரஸ், செக்., எஸ்போனியா, எஸ்டோனியா, பின்லாந்து, ஜெர்மனி, கிரேக்க நாடு, ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போலந்து, சுலோவேனியா, சுவீடன், இங்கிலாந்து உள்ளிட்ட 20 ஐரோப்பிய நாடுகள், இலங்கை செய்த போர்க்காலக் குற்றங்களை ஆராய ஒரு தீர்மானத்தை முன்வைத்தன. அப்பொழுது அமெரிக்கா அந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை.
ஐ.நா. மனித உரிமை அமைப்பில் உள்ள 47 நாடுகளில் 20 நாடுகளின் ஆதரவைப் பெற்ற தீர்மானம் அது. தீர்மானம் இன்னும் கடுமையாக, தெளிவாக இருக்க வேண்டும் என்று சில நாடுகள் கருதின. ஆயினும் விவாதம் நடைபெறும்பொழுது திருத்தங்கள் கொடுக்கலாம் எனப் பல நாடுகள் காத்திருந்தன.
ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்குக் காரணம், ஹிட்லரின் நாஜிச ஆட்சியில் மக்கள்பட்ட அவதிகளை - அழிவுகளை அந்த நாட்டுத் தலைவர்கள் மறந்துவிடவில்லை. மீண்டும் அத்தகைய இன அழிவு ஆட்சி எங்கு தலையெடுத்தாலும் அதை அவர்கள் வெறுத்தார்கள். கடுமையாக எதிர்க்க முற்படுகிறார்கள்.
ஐரோப்பிய நாடுகள் அனுப்பியத் தீர்மானத்துக்கு எதிராக, இலங்கையின் பிரதிநிதி, போருக்குப்பின் இலங்கை பல புனரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், அதற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டும் என்றும் ஒரு எதிர்ப்புத் தீர்மானத்தை அனுப்பி வைத்தார்.
இலங்கைத் தீர்மானத்தை ஆதரித்து அதன் மனுவில் கையெழுத்திட்ட நாடுகள்: இந்தோனேசியா, சீனா, செüதி அரேபியா, பாகிஸ்தான், மலேசியா, பஹ்ரைன், பிலிப்பின்ஸ், கியூபா, எகிப்து, நிகாரகுவா, பொலீவியா ஆகியவை மட்டுமல்ல, இந்தியாவும்கூட என்பதுதான் வேதனையான ஒன்று.
நியாயமாகப் பார்த்தால் இலங்கைத் தமிழர்கள் மீது நடைபெற்றுவரும் இன அழிவுச் செயல்பாடுகள் பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பில் முதலில் நின்று கண்டனத் தீர்மானத்தை இந்தியாதான் கொடுத்திருக்க வேண்டும்.
இந்தியாவுக்குப் பதிலாக ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பதுடன் நிற்காமல், குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியையும் பறித்த கதையாக, இலங்கை அரசு செய்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் படுபாதகத் தீர்மானத்தில் இந்தியாவின் பிரதிநிதி கையெழுத்தும் போட்டார் என்றால், அதற்குக் காரணம் இந்திய அரசாங்கம் எடுத்த முடிவு அது என்பதால்தான்.
முழுவிவரங்களைப் பெறுவதற்காக, நேரடியாக ஜெனீவா மனித உரிமை அமைப்புக்கு, அங்கு விவாதம் பற்றிய நடவடிக்கை விவரங்களைக் கேட்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் வேண்டுகோள் அனுப்பினேன். அந்த விவரங்கள் முழுமையாக நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை நிலையக் காப்பகத்தில்தான் கிடைக்கும் என்று பதில் வந்தது. அதன்படி நியூயார்க் ஐ.நா. தலைமை அமைப்புக்கு நான் எழுதினேன், ஜெனீவா அமைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் தரப்பட்ட தீர்மானத்தின் பிரதியையும் விவாதங்களின் முடிவையும் எனக்கு ஐ.நா. தலைமை அமைப்பு அனுப்பியது.
இலங்கைத் தமிழர்களுக்கான இன அழிவை, ஆபத்துகளை வெளிப்படுத்தி தக்க நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இருந்த அக்கறை, இந்திய அரசாங்கத்துக்கு ஏற்படவில்லை என்பதைவிட, எந்த இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழர்களுக்கு அநீதியை - இன அழிவை அர்ப்பணித்ததோ, அந்த அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் ஆதரவு தந்து, அடிபணிந்து, ஆராதனை செய்ததுதான் இந்திய அரசியல் வரலாற்றில் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத அவமானம்.
அப்பொழுது இலங்கை முன்வைத்த பாராட்டுத் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி. ராஜாவும் எதிர்க்கட்சியினர் பலரும் எழுப்பிய வேண்டுகோள்களை இந்திய அரசாங்கம் அலட்சியப்படுத்தியது. இந்தியாவின் போக்கின் காரணமாகத்தான் ஐரோப்பிய நாடுகள் தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்தன.
இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்கு ஊறு செய்த இலங்கை அரசின் செயல்பாடுகள் பற்றி எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு, தகுந்த பொறுப்பை - நடவடிக்கைகளை - இலங்கை அரசு எடுக்காமலிருப்பது குறித்து அமெரிக்கா அனுப்பிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் 2013 மார்ச் 20 விவாதத்துக்கு வந்தது.
சென்ற தடவை இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு ஆதரவு தந்த இந்தியா, இந்தத் தடவையும் இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் திமுக, அதிமுக, மதிமுக மற்றுமுள்ள கட்சிகள் ஒன்றுபட்டு விவாதத்தைக் கிளப்பியதால், நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள்மீது நடத்திவரும் அழிவுப் போராட்டத்தைப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகக் கண்டித்து அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் கடுமையாக்கும் விதத்தில் திருத்தங்களை இந்திய அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தின.
நாடாளுமன்ற விவாதங்களைவிடக் கடும் கண்டனம் தமிழகம் முழுவதும் பெரும் வகையில் எழுந்தது. அதிலும் கல்லூரி மாணவர்கள் எடுத்த ஊர்வலங்களும் கட்சி சார்பற்ற பல்வேறு அமைப்புகளின் உண்ணா நோன்புகளும் கதவடைப்புகளும் பெரும் அளவில் எழுச்சியை ஏற்படுத்தின.
2009-இல் இலங்கையை நட்பு நாடாகக் கருதி இந்திய அரசு எடுத்த அலட்சியப் போக்கை இனியும் தொடர முடியாது என்று தெரிந்தது.
இலங்கைக்கு இந்தத் தடவை ஆதரவு கொடுப்பது இந்திய ஆளுங்கட்சிக்கு ஆபத்தான முடிவாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
போர் முடிந்து அமைதி துவங்க ஆரம்பித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து 47 மாதங்களாகியும், போர்க்காலத்தில் ஏற்படும் அழிவைவிட அதிகமான துயரங்களைப் பிறந்த நாட்டில் அகதிகளாக, அடிமைகளாக ஈழத் தமிழர்கள் அனுபவித்தது தெரியவந்தது. இலங்கை அரசாங்கமே இதற்குக் காரணம் என்கிற கசப்பான உண்மையை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியது.
2009}இல் மனித உரிமை அமைப்பு கூடியபொழுது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங்தான். அப்பொழுதும் பிரதம மந்திரிக்கு பிரதம ஆசிரியராக -மேற்பார்வையாளராக இருந்தவர் சோனியா காந்திதான். அதே நிலைமைதான் இப்போதும் தொடர்கிறது.
அப்பொழுது பிரதமருக்குப் பிரதம ஆசிரியராக இருந்த சோனியா காந்திதான் தற்பொழுதும் பிரதம ஆசிரியர். ஆனாலும் ஒரு சிறு மாறுதல் - சோனியா காந்தி பிரதம ஆசிரியராக நீடித்தாலும். துணைப் பிரதம ஆசிரியராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரே பாடம், கைகட்டி நிற்பவர் ஒரே மாணவர். ஆனால், ஒரே சமயத்தில் நியமிக்கப்பட்டுள்ள இரு ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்.
இரண்டு ஆசிரியர்களுக்கும் உள்ள தகுதி, திறமைகள் என்னவென்றால் நேரு-காந்தி குடும்பப் பரம்பரையின் நான்காவது தலைமுறையின் "தவிர்க்க முடியாத' தலைவர்கள். காந்திக்கும் நேருவுக்கும் கடமைப்பட்ட பாரத தேசியக் காங்கிரஸ் கட்சிதான் குடும்பப் பரம்பரை ஆட்சியின் பாரத்தைச் சுமக்க வேண்டியதாக ஆகிவிட்டது.
குடும்ப ஆட்சி என்றதும், இலங்கை அரசாங்க நிர்வாகத்தில் ராஜபட்ச குடும்பத்தினர் ஒரு பரவலான பேராட்சியைப் பங்குபோட்டு நடத்தி வருகிறார்கள். தற்பொழுது அங்கு உள்ள முக்கியமான அரசாங்கம் - அதனையொட்டிய அதிகார பீடங்கள் எல்லாவற்றிலும் ராஜபட்சவின் நெருங்கிய குடும்பத்தினர் பலர் ஏகபோக ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். அவை பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம்.
மகிந்த ராஜபட்ச குடியரசுத் தலைவர், அவரது தம்பி கோத்தபய ராஜபட்ச ராணுவ அமைச்சகத்தின் செயலாளர் - இலங்கை அரசமைப்பின்படி குடியரசுத் தலைவர் கீழ் ராணுவம் இருக்க வேண்டும். இரண்டாவது தம்பி பாசில் ராஜபட்ச பொருளாதார மேம்பாட்டுத் துறையின் அமைச்சர், நான்காவது தம்பி சமல் ராஜபட்ச அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர். ராஜபட்சவின் மருமகன் சசீந்தர ராஜபட்ச, உவி மாநிலத்தின் முதன்மந்திரி, நாடாளுமன்ற அவைத்தலைவர் சமல், ராஜபட்சவின் மகன். சமீந்தர ராஜபட்ச, ஸ்ரீலங்கா விமானக் கம்பெனியின் டைரக்டர், மகிந்த ராஜபட்சவின் மருமகன்கள்: ஜலியா விக்ரமசிம்கா அமெரிக்காவில் இலங்கை அரசின் தூதர், உதய விக்ரமசூரியா ருஷியாவில் இலங்கை அரசின் தூதர், பிரசன்ன விக்ரமசூரியா விமான நிலையங்களின் சேர்மன், மகிந்த ராஜபட்சவின் மைத்துனர் நிஷாந்த விக்ரசிங்கா ஸ்ரீலங்கா விமானக் கம்பெனியின் சேர்மன்.
அரசாங்கத்தையும் அரசியலையும் "நேரு-காந்தி' பெயர்களை இணைத்து ஒரு குடும்பம் பரம்பரைப் பாசத்துடன் இந்தியாவில் தலைமையேற்று ஆட்சி நடத்துகிறது.
இலங்கைத் தீவில் ராஜபட்ச குடும்பப் பரம்பரையின் ஆட்சி ஆரம்பித்திருக்கிறது. அது பரவலான ஆட்சி, அமெரிக்கா-ரஷியா பல நாடுகளிலும் பரவியுள்ளது.
குடும்பப் பாசம் மிக்கவர்களாக இருக்கும் இந்திய ஆட்சியாளர்களும் இலங்கை ஆட்சியாளர்களும், நெருங்கிய நட்புப் பாராட்டுவதில் வியப்பென்ன இருக்கிறது?
குடும்பங்கள் குடும்பங்களுடன் இணைந்து தேசத்தைத்தான் கொள்ளையடித்தன என்றால், இப்போது குடும்பங்கள் சர்வதேச அளவில் கைகுலுக்கி, ஆரத் தழுவி ஒருவர் மற்றவரைப் பாதுகாக்க முற்பட்டிருக்கிறார்கள். பாவம், அப்பாவி மக்கள்!
கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

புதன், 27 ஜூன், 2012

நெருக்கடி நிலை அறிவிப்பு நினைவுகள் - ?? வேடதாரிகள் உணரட்டும்

  எமர்ஜென்சி தின! நினைவுகள்



இந்த ஆண்டு ஜூன் மாத நாளேட்டைப் பார்த்ததும் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் என் நினைவுக்கு வந்தது. 1975 ஜூன் 25-26 நள்ளிரவில்தான், உள்நாட்டு நெருக்கடிகால அறிவிப்பு அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியால் வெளியிடப்பட்டது. அது ஜனநாயக அடிப்படையில் நம்பிக்கை உள்ள எந்த இந்தியனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாத - வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எவராலும் இன்னமும் முழுமையாக ஆராயப்படாத, சுதந்திர இந்தியாவில் அதற்கு முன் ஏற்பட்டிராத இருண்ட கால ஆட்சியின் ஆரம்பம்.
அடிப்படை மனித உரிமைகளுக்கான ஜனநாயகம் - தூய்மையான பொதுவாழ்வு நேர்மையான அரசாங்கம், சுயநலமற்ற தனி வாழ்வு ஆகியவை மகாத்மா காந்தி - ஜவாஹர்லால் நேரு காலத்திய காங்கிரஸ் இயக்கத்தின் இன்றியமையாத நடைமுறைக் கோட்பாடுகளாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அந்தக் கோட்பாடுகள் இந்திய அரசியலில் மறக்கப்பட்டுவிட்டன அல்லது மறைந்துவிட்டன, 1966 ஜனவரியில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் இறந்ததும் காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பெரு முயற்சியால் இந்திரா காந்தி பிரதமராக ஆக்கப்பட்டார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் இந்திரா காந்தி பிரதமராக ஆனார். 1969-இல் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார். ஆயினும், கட்சி முடிவை ஏற்றுக் கொள்ளாமல் பிரதமர் இந்திரா காந்தி, வி.வி.கிரியை ஆதரித்து ""அவரவர் மனசாட்சிப்படி உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்'' என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்து சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தார். இவ்வளவுக்கும் சஞ்சீவ ரெட்டி பெயரை முன்மொழிந்தவரே இந்திரா காந்திதான் என்பதுதான் வேடிக்கை. அதன்பின் 1969 ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு அமைப்புகள் உருவாயின. "கரீபி ஹட்டாவ்' (ஏழ்மையை விரட்டுவோம்) என்ற கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியை வைத்து, 1971 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி அமைத்தார். 1971 டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ஆதிக்கத்தை எதிர்த்து கிழக்கு வங்காளத்தில் மக்கள் ஆதரவில் பிரமாண்டமான எழுச்சி ஏற்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பங்களாதேஷ் சுதந்திர நாடாக ஆனது. அதனால் இந்திரா காந்தியின் தனிப்பட்ட பெருமையும் ஆட்சி அதிகாரமும் மேலும் பலமடைந்தன. அதிகார பலம் மிகவும் அதிகமானால்,, அது தலைக்கேறி எதேச்சதிகாரம் தலையெடுக்கும் என்பார்கள். ஏழ்மை விரட்டப்படுவதற்குப் பதிலாக, ஏழை மக்கள் விரட்டப்பட்டனர். விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம் - பட்டினி, ஊழல் -ஊதாரித்தனம் - ஆட்சியின் அடக்குமுறை ஆகியவை ஏழை மக்களை வாட்டி வதைத்தன. இந்திரா காந்தியின் அதிகாரத்தைவிட அதிகமான அளவுக்கு எதற்கும் துணிந்த இளவரசர் சஞ்சய் காந்தியின் ஆதிக்கம் சட்டம் - அரசாங்கம் - நீதி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு கொடிகட்டிப் பறந்து அதற்கு முன் இந்தியா காணாத தனிப்பட்ட ஒரு எதேச்சதிகார ஆட்சியாக மாறியது. சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செயலற்று இருந்த நிலைமையில், இந்தியாவின் நற்காலமாக, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, ஈடு இணையற்ற போராட்ட வீரர், தன்னலமற்ற தியாகி, தூய்மையான மாமனிதர் என்று மகாத்மா காந்தியாரால் பாராட்டப்பட்ட ஜெயப்பிரகாசர் - அதுவரை அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தவர் - இந்திரா காந்தியின் அலங்கோல ஆட்சியையும், ஊழல் கடலில் மிதந்துகொண்டிருந்த அதிகார கும்பலையும் எதிர்த்து நிற்க, மக்கள் கவனத்தையும், மக்கள் சக்தியையும் திரட்டினார். மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட ஜெயப்பிரகாசர் (ஜே.பி.) எதிர்த்தரப்பு அணியை அமைத்தார். அதில் மூத்த அரசியல் தலைவர்களான ஆச்சார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, சரண்சிங், என்.ஜி.கோரே, எஸ்.எம். ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, மது லிமாயி, வாஜ்பாயி, அத்வானி போன்ற பலர் இருந்தனர். அந்த அணியில் என்னையும் ஜே.பி. சேர்த்து அவ்வப்பொழுது முக்கிய பொறுப்புகளைத் தந்தார். பொதுமக்களின் அவல நிலைமைகளை நாட்டுக்கும் நாடாளுமன்றத்துக்கும் உணர்த்தும் வகையில் 1975 மே 6, தில்லி மாநகரில் செங்கோட்டையிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒரு மாபெரும் பேரணியை ஜெயப்பிரகாசர் தலைமையேற்று நடத்தினார். அரசாங்கம் போட்ட பல்வேறு தடைகளையும் மீறி, ஐந்து லட்சம் மக்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆட்சியின் அரசியல் - பொருளாதார -சமுதாயச் சீர்குலைவுகளைச் சுட்டிக்காட்டி, மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை நிலைநாட்டும் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் ஒரு மனுவைத் தந்தார் ஜே.பி. இந்தியாவில் ஜே.பி. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் மக்களின் வரவேற்பும் எழுச்சியும் வேகமாக வளர்ந்தன. அலைமோதும் மக்கள் கூட்டம் ஆட்சியாளர்களை ஆட்டி வைத்தது. எதிர்பாராத வகையில், 1975 ஜூன் 25}இல் இந்திரா காந்தியின் ஆர்ப்பாட்டத்தை அடக்கிடும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தது. 1971 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை சாந்திபூஷண் நடத்தினார். நான்கு ஆண்டுகள் ஆமை நடைபோட்ட அந்த வழக்கில், 1975 ஜூன் 12}ஆம் தேதியன்று, நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அலகாபாத் தேர்தல் முடிவு இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பேரிடியாக வந்தது. "பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்பதையொட்டி, அதே ஜூன் 12-ஆம் நாளன்று குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன, அவற்றில், இந்திரா காங்கிரஸ் தோல்வி அடைந்ததுடன், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. இருப்பினும் அதிகார பலத்தையே நம்பி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆளவந்தார்களுக்கு எதையும் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற பிடிவாதம் ஏற்பட்டுவிடும். "இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா' என்ற முழக்கத்துடன், இந்திரா காந்திதான் பிரதம மந்திரியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆரவாரத்துடன் ஆர்ப்பாட்டங்களை காங்கிரஸ் தலைவர்கள் நடத்தினார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்த 1975 ஜூன் 25-ஆம் தேதி மாலை தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜே.பி. தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1975 ஜூன் 25-ஆம் தேதி காலை பத்து மணிக்கு ஜே.பி. இருக்குமிடத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நான் சென்றபொழுது அங்கு மொரார்ஜி தேசாய், சரண்சிங், அசோக் மேத்தா, பிலு மோடி மேலும் சிலர் இருந்தனர். வாஜ்பாய், அத்வானி ஆகியோர் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்துக்காக பெங்களூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அலகாபாத் தீர்ப்பின்படி இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதிலும் கண்டனக் கூட்டங்களை ஜூன் மாத இறுதி சனி-ஞாயிறு நாட்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிலும் பயன் இல்லை என்றால், ஓர் ஒத்துழையாமைப் போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும் என்று ஜே.பி. கருதினார். கடைசியில் கூட்டம் கலையும்பொழுது அசோக் மேத்தா, மாலையில் கூட்டத்துக்குப் போகும்பொழுது செழியனை நான் அழைத்து வருகிறேன் என்றார். அருகிலிருந்த ஜே.பி. இடைமறித்து, "வேண்டாம், செழியனுக்கு நான் ஒரு வேலை வைத்திருக்கிறேன். அலகாபாத் தீர்மானத்தை இன்று இரவு செழியன் படித்துப் பார்த்து குறிப்புகளுடன் வந்தால், நாளை காலை நாம் ஒரு இறுதியான முடிவை எடுக்கலாம்' என்றார். இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பு ஐநூறு பக்கங்கள் இருக்கும். இரவு சாப்பிட்டுவிட்டு அந்தத் தீர்ப்பைப் படிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. இரவு 3-30 மணி அளவில் என்னிடம் பிலு மோடி பேசினார். ஜே.பி., மொரார்ஜி கைது செய்யப்பட்டனர் என்றார். எந்தக் குற்றங்களுக்காக என்று நான் கேட்டேன். பேச ஆரம்பித்த பிலு மோடி சற்று நிதானித்துக் கொண்டு ""என் வீட்டருகில் ஒரு வேன் - போலீஸ் வேன்தான். எனக்கும் அழைப்பு வந்துவிட்டது, குட்பை'' என்று டெலிபோனை வைத்தார். எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அந்த நிலைமையில் திகைப்பூட்டும் வகையில் என் வீட்டின் வெளியில் ஒரு கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால் நெருங்கிய நண்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நின்று கொண்டிருந்தார். மிகவும் அவசரமாக "ஜே.பி. மற்றும் பலர் கைது செய்யப்படுகின்றனர். உனக்கும் அரஸ்ட் வாரண்ட் வரலாம். உடனே கிளம்பு' என்றார். என் மனைவி பிரேமா எழுந்து வந்தாள். கட்டிய வேட்டி போட்டிருந்த சட்டையுடன், என் உதவியாளர் அன்புமணியையும் அழைத்துக்கொண்டு நான் புறப்பட்டேன். காரில் போகும்பொழுது சோம்நாத் சொன்னார்: இரவு 12 மணிக்கு எமர்ஜென்சி ஆர்டர் போடப்பட்டுள்ளது. 3.30 மணிக்கு ஜே.பி. கைது செய்யப்பட்டார், மேலும் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கைது ஆகின்றனர். முழுவிவரங்கள் காலையில்தான் தெரியும் என்றார். அப்பொழுது நள்ளிரவுக்குப் பிறகு மணி 3.45. அவருடைய நண்பர் வீட்டுக்கு சோம்நாத் எங்களை அழைத்துச் சென்றார். விடிந்ததும் - ஜூன் 26-ஆம் தேதி காலையில் முதலாவதாகக் கிடைத்த செய்தி: அன்றாடம் வெளிவரும் செய்தித்தாள்கள் எதுவும் கிடைக்காது என்பதுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள், அவைகளை அச்சிட முடியாதபடி, முதல் நாள் இரவில் அவைகளுக்கான மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாம். இந்த மாபெரும் காரியத்துக்கு உத்தரவிட்டவர் சஞ்சய் காந்தி என்று பிறகு தெரியவந்தது. பிறகு இரவுதான் போடப்பட்ட உள்நாட்டு நெருக்கடி கால அறிவிப்பின் விவரங்கள் கிடைத்தன. 1971 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷ் போரையொட்டி வெளிநாட்டு நெருக்கடி காரணத்தினால் போடப்பட்ட ஒரு பிரகடனம் - அது அமலில் இருக்கும் பொழுதே அதற்கு மேல் உள்நாட்டு விவகாரத்துக்கான மற்றொரு நெருக்கடி உத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரே காலத்தில் இரண்டு நெருக்கடி உத்தரவுகள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். என் உதவியாளர் அன்புமணி எம்.பி. என்ற முறையில் எனக்குத் தரப்பட்டிருந்த பிஷாம்பர்தாஸ் மார்க், 12 நம்பர் வீட்டுக்குச் சென்று விசாரித்து வந்தார். ஜூன் 25 இரவில் 4 மணிக்குமேல் ஒரு போலீஸ் அதிகாரி வந்து கதவைத் தட்டினாராம். என் மனைவி பிரேமா கதவைத் திறந்தாள். வீட்டுக்கு முன்னால் பத்து காவல்காரர்கள் தாங்கிய ஒரு போலீஸ் வேன் இருந்ததாம். பிறகு தெரிந்த விஷயம் அதேபோல் வீட்டுக்குப் பின்னாலும் காவல்காரர்கள் அடங்கிய மற்றொரு வேன் நிறுத்தப்பட்டிருந்தது என்று. நான் தப்பி ஓடிவிடாமல் கைது செய்யத்தான் அத்துணை ஏற்பாடுகள். போலீஸ் அதிகாரி கையிலிருந்த அரஸ்ட் வாரண்டைக் காட்டி, எம்.பி. செரியனைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார். பிரேமா: செரியன் என்று யாரும் இங்கு இல்லையே!'' ""இது பிஷாம்பர்தாஸ் 12 நம்பர் வீடுதானே?'' ""ஆமாம். ஆனால் செரியன் என்று யாரும் இங்கு இல்லை.'' போலீஸ் அதிகாரி போய் பங்களா முன்னுள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தாராம். திரும்ப வந்து வாரண்ட் சரியாக எழுதவில்லை என்று பையிலிருந்து மற்றொரு காகிதத்தை எடுத்து. ஆங்கிலத்தில் திருத்தமாக என் பெயரை எழுதி ""சரி எங்கே அவர்?'' என்று அதட்டிக் கேட்டாராம். கைது செய்யப்படுபவர் பெயர் எழுதாமல், மாஜிஸ்ட்ரேட் தமது கையெழுத்தைத் தாராளமாகப் பல அரஸ்ட் வாரண்ட்களில் போட்டுத் தந்திருந்தார்.. யாரை வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டும் என்றாலும் ஆட்சியில் இருந்த நெருக்கடி கால அதிகாரிகள் உத்தரவிட, சுலபமாகத் தேவைப்பட்டவர்களை போலீஸôர் கைது செய்துவிடலாம். மீண்டும் கேட்டபொழுது பிரேமா சொன்னது, ""எம்.பி. சென்னைக்குப் போய்விட்டார்'' என்று. போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் புகுந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்தாராம். யாரும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த பழனி என்ற நாய் நிரம்பக் குரைத்ததாம். போலீஸ் அதிகாரிக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. கடைசியாகத் தன் தொப்பியைப் போட்டுக்கொண்டு, மீசையை முறுக்கிவிட்டு போலீஸ் அதிகாரி எச்சரித்தாராம்: இருக்கட்டும் இன்று இந்த எம்.பி. சிக்கவில்லை. நாளை மாலைக்குள் அவரை நீங்கள் திகார் சிறையில்தான் பார்க்கவேண்டும். அன்றைக்கு சோம்நாத் சட்டர்ஜியின் சாமர்த்தியத்தால், நான் தப்பினேன். மறைவாக இருந்த நான் மறுநாள் இரவு விமானத்தில் சென்னை சேர்ந்தேன். அரசமைப்புச் சட்டப்படி நெருக்கடி கால உத்தரவுக்கு அது வெளியிடப்பட்ட ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். அதன்படி 1975 ஜூன் 25 போடப்பட்ட உத்தரவை அங்கீகரிக்க ஜூலை 21 நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அழைக்கப்பட்டது. என்னைக் கைது செய்வதற்கான தில்லி போலீஸôரின் உத்தரவு இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள நான் தில்லி சென்றால், என்னை அங்கு கைது செய்துவிடக்கூடும் என்ற நிலைமை இருந்தது. அதையும் மீறி, நான் ஜூலை 20-ஆம் தேதி இரவு தில்லி சென்று என் வீட்டுக்குச் செல்லாமல் ஒரு சாதாரண ஓட்டலில் தங்கி மறுநாள் காலை 8 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் என் அடையாளச் சீட்டைக் காண்பித்து நுழைந்து, அங்குள்ள நூல் நிலையத்தில் காத்திருந்தேன். 11 மணிக்கு மக்கள் சபைக்குள் நான் சென்று என் இடத்தில் அமர்ந்தேன். நெருக்கடிநிலை உத்தரவைக் கண்டித்து கடுமையாக ஒரு மணி நேரம் பேசி விட்டு, மறுபடியும் மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, அன்று இரவே சென்னை திரும்பிவிட்டேன். அப்பொழுது இருந்த கடுமையான சென்சார் முறையில் எனது பேச்சுபற்றி எதுவும் இந்திய செய்தித்தாள்களில் வெளியிடப்படவில்லை. ஆனால், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் சிறப்பாக அது வெளியிடப்பட்டதுடன் அதைப் பாராட்டி பிரபல செய்தியாளர்கள் எழுதியதாகவும் எனக்குத் தகவல் வந்தது. எதிர்ப்பு அடங்கிவிட்டதாக ஒருவகை நினைப்பு அரசாங்கத்துக்கு இருந்தது என்றும் என்னைக் கைது செய்தால் வெளிநாட்டுப் பத்திரிகைகள் அதற்கு அதிகமான பாராட்டுதலைத் தரக்கூடும் என்றும் அரசாங்கம் என்னைக் கைது செய்யாமல்விட்டது என்று அப்பொழுது அமைச்சராக இருந்த ஒருவர் நெருக்கடி காலம் தீர்ந்ததும் என்னிடம் சொன்னார். 1977 மார்ச் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டதும், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி அமைந்ததும், பதவி ஆசையில் இந்திரா காந்தியுடன் இணைந்த ஜனதா எம்.பி.க்கள் மக்களாட்சியைக் கவிழ்த்ததும், பலரும் அறிந்த நிகழ்ச்சிகளாகும். அதேசமயம் தனிப்பட்டவர்க்கு ஏற்பட்ட நீதிபூர்வமான நெருக்கடியை நாட்டுக்கு ஒரு நெருக்கடியாக மாற்றி, மக்களை அடக்கியாண்ட எதேச்சாதிகாரம், அதையொட்டி எழுந்த ஜெயப்பிரகாசரின் போராட்டம், மக்கள் தந்த பேராதரவின் வெற்றி ஆகியவைகளும் இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. மக்களை அடக்கி எதேச்சாதிகாரம் இடையிடையே வெற்றிபெறலாம், ஆனால், எழுச்சிபெற்ற மக்கள் மீண்டும் வெற்றிபெறுவார்கள் என்பது உலக வரலாற்றில் காணப்படும் உண்மையாகும். 1975 செப்டம்பர் 25-ஆம் தேதி நள்ளிரவில் போடப்பட்ட நெருக்கடி காலம் 1977 மார்ச் 21 வரை நீடித்தது. 37 ஆண்டுகள் கழித்து இப்பொழுது இவற்றை நான் எழுதுவதற்குக் காரணம் எனக்குப் போடப்பட்ட போலீஸ் உத்தரவுகளைவிட நான் பட்ட சோதனைகளைவிட, அபாயங்களைவிட, அதிகமான அளவுக்குப் பல்வேறு அநீதிகள், கொடுமைகளைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுதியுடன், நெருக்கடி காலத்தின் கோரதாண்டவத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். 1975-77 நெருக்கடி காலத்தில் அரசாங்கம் இழைத்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக் குழு தந்த அறிக்கையில், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்கள் - சிறைச்சாலைகள் - நீதிமன்றங்கள் ஆகியவைகளிடமிருந்து திரட்டப்பட்ட விவரங்களின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர்களின் எண்ணிக்கை 1,10,806. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன், இந்த ஜூன் 25-ஆம் தேதி நினைவு நாளன்று. அவர்களில் மறைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி. வாழ்பவர்களுக்கு என் வாழ்த்துகள்! "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்' என்பதற்கு அவசரநிலைச் சட்டத்தையும், நெருக்கடி நிலையையும் மீறி வெகுண்டெழுந்த மக்களின் விடுதலை உணர்வும், மக்களாட்சியும், தனிநபர் சுதந்திரமும் நிலைநாட்டப்பட்ட சம்பவமும் மறக்கவே முடியாத நினைவுகள். எத்தனையோ சீர்கேடுகளுக்கு இடையிலும், இந்தியாவின் வருங்காலம் பற்றிய நம்பிக்கை முற்றிலுமாக அழிந்துவிடாமல் இருப்பதற்கு ஜே.பி. இயக்கத்தின் வெற்றிதான் காரணம். நெருக்கடி காலத்தில் செய்தியாளர்களின் குரல்வளைகளை அடக்கிக் கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டது. ஆனால், அவற்றை எதிர்த்துப் பத்திரிகையாளர்கள் சிலர் தலை நிமிர்ந்து நின்றனர். அதில் முதன்மையான இடத்தில் ராம்நாத் கோயங்கா இருந்தார்; எக்ஸ்பிரஸ்-தினமணி இதழ்கள் இருந்தன. அப்படி இன்றும் தனித்து நிலை நிற்கும் தினமணி இதழில் இதை எழுதும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  
கருத்துகள்

எமர்ஜன்சி கால கட்டத்தில் இந்திராவையும் ,காங் கட்சியின் நிலை பாட்டையும் வெறுத்தவர்களில் நானும் ஒருவன்.ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதுவே இந்நாட்டிற்கு சிறந்தது என்ற எண்ணம் தோன்றுகிறது. இப்போது உள்ள அரசியல் கட்சிகளும்,அதன் தலைவர்களும், சிறிதும் விட்டுக்கொடுக்காத மாநிலங்களும் அதன் முதல்வர்களும் , பொறுப்பில்லாத ஊடகங்களும் மக்கள் மத்தியில் கலவரம் உண்டாக்கும் போக்கும் , தொட்டதற்கெல்லாம் கலவரம்,மறியல் என்ற போக்கும்,பிரிவினை வாதம் பேசும் கட்சி தலைவர்களையும்(?) இன்று பார்க்கும் போது கடுமையான எமர்ஜென்சி நாட்டிற்கு இன்று அவசியம் தேவைதான் என்றே தோன்றுகிறது. இல்லையேல் நாடு துண்டாடப்படும் என்று தோன்றுகிறது.
By Tamilian
6/26/2012 11:10:00 AM
சுதந்திர போராட்டத்தை நினைவு கூறுவது போல், அவசர கால ஆட்சியையும் நினைக்க வேண்டும். அரசியல் கட்சிகளும், தனி மனிதர்களும் சொந்த லாபங்களுக்கு அரசியல் நடத்துவது வாடிக்கை ஆகி விட்டது. ஜன நாயகம் என்ற பெயரில், உணர்வில்லாத இயக்கத்தை காண்கிறோம். இயற்க்கை வளங்களையும், இதமான காலநிலையும், பழைய கட்டிடங்களும், கோவில்களும் தவிர பெருமையாக பேசி கொள்ள நம் நாட்டில் ஒன்றுமே இல்லை.நாடு என்பதின் தரம் அதன் மக்களை பொருத்தது. சுதந்திரம் வாங்க துணையாக இருந்த கட்சியின் ஆட்சியாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது சிறிய காரியம் அல்ல.
By gopalan
6/26/2012 8:28:00 AM
இன்று கூட அதன் அடிப்படை தத்துவம் மாற வில்லையோ ? எங்கே போகிறோம் என இலக்கு இல்லாத ஜனநாயக பயணம்! ஜெய் ஹிந்த் .
By K .Balasubramanian
6/26/2012 7:51:00 AM


வெள்ளி, 7 மே, 2010

"வெட்டப்பட்ட தீர்மானம்!'



நாட்டு மக்களை அல்லற்படுத்தும் விலைவாசிகளின் உயர்வைக் கண்டிக்கும் வகையில், மானிய ஒதுக்கீடுகளுக்கான ஆதரவைப் பெற மத்திய அரசாங்கம் மக்களவையை எதிர்கொள்ளும்போது, வெட்டுத் தீர்மானம் மூலம் தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முனைந்தன.மக்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவுப் பண்டங்களின் விலைகள் இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஓராண்டில், நாளொரு விலையும் பொழுதொரு ஏற்றமுமாக வளர்ந்து கொண்டே தீவிரமடைந்து வந்திருக்கிறது.விலைவாசிகள் நூறு நாள்களில் குறைந்துவிடும், இரண்டு மாதத்தில் பஞ்சம் என்பது பறந்துவிடும், தேவையான அளவுக்கு உணவு தானியங்களின் சேமிப்பு இருக்கிறது என்று மன்மோகன் சிங்கின் அமைச்சர் பெருமான்கள் நிர்வாக மந்திரங்களை ஓதியபடி இருந்தனர். மானிய ஒதுக்கீடுகள் மக்களவையில் ஏப்ரல் 27-ம் நாள் வரப்போகின்றன, அப்பொழுது நாங்கள் தரும் வெட்டுத்தீர்மானங்களின் மூலம் விலைவாசிகளைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்று எதிர்க்கட்சிகள் ஆரவாரத்துடன் அறிவித்தன.அதே நாளன்று அக்கட்சிகள் நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தையும் நடத்தின. இத்தகைய முயற்சிகள் மூலம் ஏதாவது உருப்படியான பலன் கிடைக்காதா என பாவப்பட்ட மக்களும் மிக்க ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.ஏப்ரல் 27 வந்தது. பல மாநிலங்களில் கடையடைப்புவேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஏராளமான வெட்டுத்தீர்மானங்களும் தரப்பட்டிருந்தன. கடைசியாக, நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தந்த வெட்டுத்தீர்மானத்துக்கு ஆதரவாக 192 வாக்குகளும், எதிராக 276 வாக்குகளும் கிடைத்தன. அடுத்து, நாடாளுமன்றத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா தந்த அதேவிதமான வெட்டுத்தீர்மானத்துக்கு ஆதரவாக 201, எதிராக 289 வாக்குகளும் போடப்பட்டன, மற்ற எதிர்க்கட்சிகள் தந்த வெட்டுத்தீர்மானங்களும் ஒட்டுமொத்தமான வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் அவைகளும் தோற்கடிக்கப்பட்டன. அதன் பின்னர் மத்திய அரசாங்கம் தந்த மானியங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரிவிதிப்புகள் பற்றிய நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்தியக் கருவூலத்திலிருந்து அரசாங்கச் செலவினங்களுக்கான 45 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. 2010-11-ம் ஆண்டு அரசாங்கத்தின் செலவுகளுக்கான பிரமாண்ட நிதிவசதிகள் அனைத்தும் எத்தகைய விவாதமும் இன்றி நொடிப்பொழுதில் ஒப்புதல் பெற்றுவிட்டன. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையொத்த முக்கியத்துவம் வெட்டுத்தீர்மானத்துக்கு இருக்கிறது என்றாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அனைத்துக் கட்சியினரும் விரிவாகப் பேசுவதற்கு கிடைக்கும் நேரமும், வாய்ப்பும் ஏப்ரல் 27-ல் வெட்டுத்தீர்மானங்களின்போது எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கவில்லை. மக்களவையில் தற்பொழுது 34 கட்சிகள் உள்ளன. 545 உறுப்பினர்களையுடைய அந்த அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 207 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட பெரும்பான்மை பலம் இல்லை. ஆயினும் அதன் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அமைச்சரவையில் திரிணாமுல் காங்கிரஸ் (19), திமுக (18), தேசியவாத காங்கிரஸ் (9), ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கூட்டணியில் இணைந்து உள்ளிருந்து ஆதரவளிக்கும் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை 258. அமைச்சரவையில் இடம்பெறாமல் ஆட்சிக்கு மக்களவையில் ஆதரவு தரும் கட்சிகளின் விவரம்: சமாஜ்வாதி கட்சி (22), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (4), சிக்கிம் ஜனநாயக முன்னணி (1), கேரளா காங்கிரஸ் (1), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (1), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), ஆக மொத்தம் 30 உறுப்பினர்கள்.எண்ணிக்கையளவில் 288 உறுப்பினர்களின் ஆதரவை மன்மோகன் சிங் அமைச்சரவை பெற்றிருந்தாலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகிய இருவரும் தொடர்ந்து ஆளுங்கட்சியை எதிர்த்து, பலவகைகளில் இடையூறு விளைவித்து வந்ததுடன், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாதபடி இதுவரை அல்லற்படுத்தி வந்திருக்கிறார்கள். மேலும், இந்த விலைவாசி உயர்வைக் கண்டிப்பதில் அவர்களும் முனைப்பாக இருந்தார்கள். ஏப்ரல் 27 அன்று விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து இவ்விரு தலைவர்களும் கடுமையாகப் பேசிவிட்டு, வெட்டுத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்னதாக அவையிலிருந்து வெளியேறிவிட்டனர். இதுவரை வெளியிலிருந்து அவர்கள் ஆதரவு தந்தார்கள், வெட்டுத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது அவையை விட்டு வெளியேறியது, ஒருவகையில் வெளியே இருந்து மறைமுக ஆதரவு தந்ததாக இருந்தது போலும். விலைவாசிப் பிரச்னையில் அரசாங்கத்தை எதிர்த்தார்கள், அதேசமயம் அரசாங்கம் விழாதபடி பாதுகாத்தார்கள்.காங்கிரûஸ அதுவரை கடுமையாக எதிர்த்துவந்த உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி திடீரென்று ஓர் அரசியல் மாயாஜால முடிவை எடுத்தார். வெட்டுத்தீர்மானம் வந்த ஏப்ரல் 27 அன்று, 21 மக்களவை உறுப்பினர்களையுடைய தமது பகுஜன் சமாஜ் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று அறிவித்தார்.அதற்கு முக்கிய காரணம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், முலாயம் சிங் எடுக்கிற முடிவை எதிர்ப்பதுடன், மத்திய ஆட்சியின் ஆதரவைப் பெற்று தமக்கு வரும் பல இடர்ப்பாடுகளை நீக்கிக்கொள்வதற்கும் ஒரு வழிமுறையாக அது இருந்தது.2008 ஜூலை மாதத்தில் எதிர்க்கட்சிகள் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொடுத்தபொழுது, எதிர் வரிசையைச் சேர்ந்தவர்களே ஆளுங்கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதை யாரும் மறந்துவிட முடியாது. அகில இந்திய அளவில் மத்தியக் கூட்டணி ஆட்சியை எதிர்ப்பதைவிட, மாநில அளவில் தமக்குள் இருக்கும் போட்டியில் ஒன்றையொன்று எதிர்ப்பதில்தான் பல எதிர்க்கட்சிகள் முனைப்புடன் இருக்கின்றன. அதனையொட்டி, அக்கட்சித் தலைவர்கள் திகைப்பூட்டும் வகையில் திடீர் முடிவுகளை எடுத்து வருகிறார்கள். ஏப்ரல் 27 வெட்டுத்தீர்மானத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் முன்னைவிட பலவீனமாக காட்சி அளிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் பலவீனம் ஆளுங்கட்சியின் பலத்தை அதிகமாக்கியிருக்கிறது. வெட்டுத்தீர்மானத்தால் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் அதிகமாக இருக்கின்றன. அதற்கும் மேலாக மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் நெறிமுறைக்கு படுகாயம் ஏற்பட்டுவிட்டது. 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு, இந்திரா அரசாங்கம் சிறுபான்மை பலமுள்ளதாக ஆனது. இருப்பினும் 1971 பொதுத்தேர்தலில், இந்திரா காங்கிரஸ் 342 இடங்களில் வெற்றிபெற்றது. அதற்கு மேலும், இந்தியா செய்த உதவியினால், பாகிஸ்தான் ஆதிக்கத்தில் இருந்த பங்களாதேஷ் விடுதலை அடைந்ததும், இந்திரா காந்தியின் செல்வாக்கு உச்சக்கட்டத்தை அடைந்தது. அதை வைத்து 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பைப் போட்டு, அடிப்படை உரிமைகளை ஒடுக்கிடும் ஓர் எதேச்சாதிகாரம் தலைதூக்கியது. அப்பொழுது ஜெயப்பிரகாசர் தலைமையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இணைந்து போராடின.1971 தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை பலத்தை வைத்து இந்திரா காந்தியின் ஆட்சி அப்பொழுது இருந்தது என்றாலும், கடைசியில் 1977 தேர்தலில் இந்திரா காங்கிஸ் படுதோல்வி அடைந்தது.1984 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 415 தொகுதிகளில் - அதற்குமுன் ஜவகர்லால் நேரு காலத்தில்கூட கிடைக்காத அளவில்-பெருவெற்றி கிடைத்து, ராஜீவ் காந்தி பிரதமராக ஆனார். கிடைத்த பெரும் வெற்றி அவருக்கு தொடர்ந்து தேர்தல் வெற்றியைத் தரவில்லை. போபர்ஸ் ஊழல் வெளிப்பட்டதும், அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுப் போராடின; ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது மக்களவை உறுப்பினர் பதவிகளைவிட்டு வெளியேறினார்கள். கடைசியில் 1989 நவம்பர் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.ஒரு தேர்தலில் கிடைக்கும் ஆதரவை வைத்து ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அந்த ஆட்சி தவறினால், அடுத்த தேர்தலில் அது படுதோல்வி அடையும் நிலைமை நிச்சயமாக ஏற்படும்.அதற்காக, மறு தேர்தல் வரும்வரை எதிர்க்கட்சிகள் செயலற்று இருந்துவிடக்கூடாது. அரசாங்கம் செய்யும் குறைபாடுகளையும் குற்றங்களையும் நாடாளுமன்றத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திச் சுட்டிக்காட்டுவதுடன், இடைவிடாத பிரசாரத்தாலும் போராட்டங்களாலும், மக்களின் கவனத்தையும் ஆதரவையும் எதிர்க்கட்சியினர் திரட்டினால், அடுத்த தேர்தலில் ஆளும் மக்கள் விரோத அணியை வீழ்ச்சியடையச் செய்துவிடலாம். 1977-ல், 1989-ல் மக்கள் சக்தியை நம்பிய அரசியலால்தான் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை எளிதில் மாற்றியமைக்க முடிந்தது. வெட்டுத்தீர்மானம் வெற்றுத்தீர்மானமாக ஆனதற்குக் காரணம், அதற்கான ஆதரவை மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை மட்டும் வைத்துப் பார்க்காமல், நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்டு, வெட்ட வெளியில் இருக்கும் கோடானு கோடி மக்களின் ஆதரவை எதிர்க்கட்சியினர் பெற்றிருக்க வேண்டும்.
கருத்துக்கள்

வெட்டுத் தீர்மானம் வெற்றுத் தீர்மானம் ஆனது குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார். மூத்த மேனாள் நா.ம.உறுப்பினர் என்ற முறையில் வெட்டத் தீர்மானம் என்றால் என்ன அதன் முதன்மை என்ன நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதை அடுத்தொரு கட்டுரையில் செழியனார் விளக்கினால் பலருக்கு உதவியாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/7/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *