சருக்கரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சருக்கரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 அக்டோபர், 2013

அலோபதி சருக்கரை வணிகம்

1/2)" மரபு மருத்துவ முறைகளை  நெறிப்படுத்தி மக்களைக் காக்க வேண்டும்"    எனக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர் தெளிவாகவே தமிழ் மருத்துவ  முறையால் நீரிழிவு நோய் முதலான நோய்கள் நீங்குவதைக் குறிப்பிட்டிருக்கலாம். மேலும் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளதைவிடத் "தமிழ் மருத்துவப் பயன்களைப் பரப்பி" நோய்களைப்  போக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கலாம். பெரும்பாலோர் நோயை ஓரளவு கட்டுப்படுத்தும் ஆங்கில முறையை நம்பி, இறுதியில்   நோயை அடியோடு நீக்கும், தமிழ் மருந்திற்கு வருகின்றனர். அவ்வாறில்லாமல் முதலிலேயே  வந்தால் பெரும்பயன் அடையலாம்
2/2) சருக்கரைக் கொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சான்  உண்மையிலேயே சிறந்த மருந்தாகும். இதனுடன் நவாப்பழக்கொட்டை முதலான சிலவற்றைச் சேர்த்து மருந்துத் தூளாகத் தமிழ் மருந்துக் கடைகளிலும் 'காதிகிராப்ட்'  எனப்படும்  கடைகளிலும் விற்பனை செய்கின்றனர்.   இம் மருந்துத்தூளை நான் 6 வாரம் உட் கொண்ட பின் எனக்கிருந்த சருக்கரைநோய் நீங்கியது. இவ்வாறு எனக்கு அறிமுகமான பலருக்கு இதனால் பலன் ஏற்பட்டுள்ளது. தமிழ் மருத்துவர்களுக்குக் கூடுதல் ஊதியம் தருவதன் மூலம் இப்படிப்பின் மீதான ஈடுபாட்டை அரசு ஏற்படுத்தலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

அலோபதி சருக்கரை வணிகம்

தமிழ் இந்து, ம. செந்தமிழன்
Comment (10)   ·   print   ·   T+  
முப்பது வயதைக் கடந்தாலே, சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. வீதிக்கு வீதி மருந்து நிறுவனப் படங்கள் பொறித்த குடைகளுக்குக் கீழ் நின்றுகொண்டு, சாலையில் போவோருக்கெல்லாம் ‘இலவச சர்க்கரை’சோதனையும் செய்யப்படுகிறது. சில நூறு ரூபாய்கள் செலவழித்தால், சர்க்கரை சோதனை செய்யும் கையடக்க சாதனத்தை வீட்டிலேயே வாங்கி வைத்து தினசரி ஆகாரத்துக்கு முன்பும், பின்பும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. தலைச்சுற்றல், மயக்கம், கை கால் நடுக்கம் போன்ற புகார்களுடன் மருத்துவர்களை அணுகினால், உடனடியாக சர்க்கரை நோய் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆக, நாட்டில் சர்க்கரை நோய் தேடித் தேடிக் கண்டுபிடிக்கப்படுகிறது. நல்லது. ஒரே ஒரு கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு ‘சர்க்கரை நோய்’இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதைக் குணப்படுத்தும் மருந்து யாரிடம் உள்ளது? அலோபதி மருத்துவத் துறைதான், நோய்களின் பிரச்சாரத்தை உலகப் போர் நடத்துவதைப் போல் நடத்திக்கொண்டிருக்கிறது. சரி, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அலோபதியில் இருக்கிறதா? இல்லை என்பதுதான் அலோபதி மருத்துவர்களே ஒப்புக்கொள்ள வேண்டிய விடை. அதுதான் உண்மையும்கூட.
இந்திய அரசின் மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டம் 1940, 1945, 1995, தனது அட்டவணை ஜெ பிரிவில் 51 நோய்களை வகைப்படுத்தியுள்ளது. ‘இந்த நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றோ, தடுக்க முடியும் என்றோ, அவ்வாறான எண்ணங்களை வேறு ஏதேனும் வகையிலோ மக்களுக்கு அளிக்கக் கூடாது’என்கிறது அச்சட்ட விதி. இந்த 51 நோய்களின் பட்டியலைப் பார்த்தால், நாட்டில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு அலோபதி மருந்துகளை வாங்கவே தேவையில்லை என்று புரிந்துவிடும். இந்தப் பட்டியலில் 14-வது நோயாக சர்க்கரை நோயும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்திய அரசின் சட்டம்தான். ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்குத்தான் இந்திய அரசின் பிரமாண்டமான கட்டமைப்பில் எவரும் இல்லை. மருத்துவம் என்பது ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது மட்டுமல்ல. அந்த நோயைத் தீர்த்து, நோயாளியை முழு நலமுடைய மனிதராக வாழச் செய்ய வேண்டும். அந்தத் திறன் அலோபதிக்கு இல்லை. குறிப்பாக, சர்க்கரை நோய் விஷயத்தில். சட்டப்படியும் நடைமுறைப்படியும் மருந்து இல்லாத நிலையில், எந்த மருத்துவராவது தம்மிடம் வரும் நோயாளியிடம், ‘எங்கள் முறையில் இதற்கு மருந்து இல்லை. ஆகவே, வேறு மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்’என்று கூறுவதுண்டா? எவரேனும் இருந்தால், அவர் நேர்மையாளர். மாறாக, ‘சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும்’என்றுதான் கூறுகிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து மாத்திரைகள் விழுங்கிவிட்டு, இறுதியில் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு, பரிதாபமான நிலையை அடைகிறார்கள் மக்கள். புண்கள் வந்தால் உறுப்புகளே நீக்கப்படுகின்றன.
சர்க்கரை ஒன்றும் புத்தம் புதிய நோய் அல்ல. பல காலமாக இருந்துவருவதுதான். சர்க்கரை நோயை நம்முடைய மரபு மருத்துவ முறைகள் கட்டுப்படுத்துகின்றன. சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்திலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளன. சமீபமாகப் பரவலாகிவரும் தொடுசிகிச்சை முறையும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
இவ்வளவு ஏன்? உணவுப் பழக்கத்தையும், சில வாழ்க்கை முறைகளையும் மாற்றினாலே போதும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். வந்தாலும் எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும். இந்த உண்மைகள் இப்போது மக்களின் கண்களுக்குத் தெரிந்துவிடாமல் மறைக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால், பெரும் வணிக நோக்கம் இருக்கிறது.
சர்க்கரை நோயை மையமாக வைத்து எவ்வளவு பொருட்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன என்பதைச் சற்றே உற்றுப் பாருங்கள். மருந்து மாத்திரைகளில் துவங்கி, ஊட்டச் சத்துப் பொருட்கள், உடற்பயிற்சிக் கருவிகள், செருப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் என எல்லாமே வணிகமயம். இவ்வளவு பொருட்களும் சேர்ந்து, சர்க்கரை நோயைத் தீர்த்தால்கூடச் சகித்துக்கொள்ளலாம். ஆனால், இவை எல்லாம் சேர்ந்து, அலோபதி மருத்துவர்கள் மொழியில் கூறுவதானால், ‘சர்க்கரையைக் கட்டுப்பாட்டில்’வைக்கின்றன.
இந்திய அரசின் சுகாதாரத் துறைக்கென என்னதான் கொள்கை இருக்கிறது என்று புரியவில்லை. ஒருபுறம் சட்டத்தில் ‘இந்த நோய்களுக்கு அலோபதியில் குணமளிக்கும், தடுக்கும் மருந்துகள் இல்லை’என்கிறது. மறுபுறம், அந்த நோய்களைத் தீர்க்கும் உள்நாட்டு மருத்துவ முறைகளை ஓரங்கட்டி வைக்கிறது. மக்கள் நோயினால் நொந்து, சிகிச்சையினால் கடன்பட்டு, சொத்துகளை இழந்து, உறுப்புகளை இழந்து மாண்டுபோகட்டும் என்பதுதான் அதன் கொள்கையா?
பல கோடிகள் செலவிட்டு, நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும்போது, அந்த நோய்களை எந்த மருத்துவ முறைகளில் தீர்க்க முடியும் என்பதை ஏன் அரசு கூறுவதே இல்லை? என்ற கேள்வியைக் குடிமக்கள் கேட்க வேண்டும்.
சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் நடைப்பிணங்களாக மாற்றப்பட்டுவருகின்றனர். தமிழக அரசு 30+ விளம்பரங்களோடு கடமையை முடித்துக்கொண்டால், அதன் அறுவடையும் அலோபதி கருவூலங்களுக்குத்தான் சென்று சேரும். தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு, சட்டப்படியும் மனித நேயப்படியும் மரபு மருத்துவ முறைகளை நெறிப்படுத்தி, சர்க்கரையை விரட்டி, மக்களைக் காக்க வேண்டும்.
செந்தமிழன், இயக்குநர். சர்க்கரை நோயை மையமாக வைத்து அவர் எடுக்கும் ‘இனிப்பு’ ஆவணப்படத்தின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. 
தொடர்புக்கு: senthamizhan2007@gmail.com

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பதனீரில் இருந்து புதிய வகை சருக்கரை : மாணவிகள் அருந்திறல்

தமிழில் பெயர் வைக்கத் தெரியவில்லையா? இப்பொழுது உள்ள பனஞ்சீனிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை இவர்கள் கண்டுபிடித்தது பனஞ்சீனியை விரைவில்  உருவாக்கும் முறையாக இருக்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82014420131006011154.jpg

பதனீரில் இருந்து புதிய வகை சர்க்கரை கண்டுபிடிப்பு: கீழக்கரை கல்லூரி மாணவிகள் சாதனை


கீழக்கரைஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மனையியல் துறை மாணவிகள், பதனீரிலிருந்து "பாம் சுகர்' என்ற, புதிய வகை சர்க்கரையை, கண்டு பிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், பனை மரங்களை வெட்டி, விறகாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பனைத்தொழிலுக்கு புத்துயிரூட்டும் முயற்சியாக, பதனீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்ட, கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மனையியல் பிரிவு மாணவிகள், அதில் வெற்றி கண்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர் சுமையா கூறியதாவது: பதனீரிலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு முழு நிலையை அடைய, 30 முதல் 40 நாட்கள் வரை ஆகிறது. இதனால் இத்தொழிலில், மக்கள் ஆர்வம் காட்டவில்லை. வருமானக்குறைவால், பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகிறது. இயற்கையை காக்கும் நோக்கத்துடன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில், எங்கள் கல்லூரி மனையியல் துறை மாணவிகள், புதிய தொழில் நுட்பத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்காதபடி, பதனீரிலிருந்து "பாம் சுகர்' என்ற சர்க்கரையை (பவுடர் போல உள்ளது) கண்டு பிடித்துள்ளனர். இயற்கையான பச்சை தாவர தண்டுகள், இலைகளை, பதனீரில் போட்டு, கெடாத வகையில், இயந்திரத்தின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட அளவு "பாம் சுகர்' தயாரிக்க முடியும். இதை தயாரிப்பது குறித்து, கிராம மக்களுக்கு பயிற்சி அளித்தால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களின் பொருளாதார நிலை உயரும். வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும். அன்னியச் செலாவணி அதிகரிக்கும். எங்களது ஆய்வுக்காக, 75 லிட்டர் பதனீரில், 3 கிலோ "பாம் சுகர்' தயாரிக்கும் அளவில், இயந்திரம் தயாரித்துள்ளோம். இதற்கு 5.25 லட்சம் ரூபாய் செலவானது. இதை, பெரிய அளவிலும் செய்ய முடியும். பால் கூட்டுறவு சங்கத்தை போல், பதனீருக்கும் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி, இந்த திட்டத்தை செயல்படுத்த, அரசு முன்வர வேண்டும், என்றார்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++
பனை வெல்லக் கூட்டுறவுச் சங்கம் இப்பொழுதும் உள்ளது. பதநீர் விற்பனைக்கும் பனம்பொருள் விற்பனைக்கும்  அரசு சார் நிறுவனங்களும் கூட்டுறவு அமைப்புகளும் உள்ளன. இவர்கள் பிறரின் திட்டத்தைப் பார்த்து உருவாக்கவில்லை எனில், அரசுசார் அமைப்பின் மூலமே முயலலாம். பால் கூட்டுறவுச் சங்கம் இருப்பதை அறிந்த இவர்கள் இதனை அறியாததால்  இப்போதைய பனஞ்சீனியை முற்றிலும் அறியாமல் கருத்து தெரிவிக்கிறார்கள் என எண்ணுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சனி, 28 செப்டம்பர், 2013

சருக்கரை - ஒரு கசப்பான உண்மை

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_814341.jpg

சருக்கரை - ஒரு கசப்பான உண்மை

மனிதன் அதிகம் உண்ணும்,உணவில் சத்தில்லாத சருக்கரையும் ஒன்று. நம் உடலுக்கு,இவை அறவே தேவையில்லை.உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் "குளுக்கோஸ்' ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல், இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால் தான், இதுசத்தில்லாத கலோரி உணவு என்றும் அழைக்கிறோம். சிகரெட், மது முதலியவற்றை விட சர்க்கரை அதிக ஆபத்தானது. புற்றுநோய்,எலும்புமுறிவு நோய், மூட்டு வியாதிகள்,உடல் பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், சரும நோய், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரக கோளாறு, சொத்தை பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல்,பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சர்க்கரை உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. கேனில் அடைத்து விற்கும் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஆபத்து:


குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின்றனர்.சர்க்கரை அதிகமாகவும், வைட்டமின்மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு, உடம்பில் ரசாயன மாறுதல் ஏற்பட்டு அளவுக்கு மிஞ்சிய துடுக்குதனத்தையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும்,நொறுக்கு தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது. இனிப்பான பொருட்களை உண்ணும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், ஒருவித அமிலத்தை உருவாக்கும். இந்த அமிலம், பற்களில் உள்ள "எனாமலை' அரித்து ஓட்டையாக்கி, பல்லில்சொத்தையை ஏற்படுத்தும். சர்க்கரையும், கொழுப்பும் உள்ள உணவு பொருட்கள், ரத்தத்தில் "கொலஸ்ட்ரால்' அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால், ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபடுகிறது. இது தொடருமானால், ஒருவருடைய தசைநார்கள் இறந்துபோய், மாரடைப்பை ஏற்படுத்தும். இந்த மாரடைப்பிற்கு குழந்தை பருவத்திலேயே நாம் வித்திட்டு விடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரையை நாம் உணவில் சேர்த்தால், 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும். உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமாக "இன்சுலின்' வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் "இன்சுலினுக்கும்' நோய் எதிர்ப்புசக்தியை தடுக்கும் ஹார்மோன்களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும் அதிக தொடர்பு இருக்கிறது.இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது.

பெண்மைக்கு பகை:


"கேன்டிடா எல்பிகன்ஸ்' என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை, இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக "சுக்ரோஸ்' உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது. காபி அல்லது டீ-யில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடாமல் இருந்தால், இன்னும் சிறப்பு தான். எனவே, மெல்ல கொல்லும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சருக்கரை நோயாளிகளைக் குளிர்விக்க மண் குளியல்

சருக்கரை நோயாளிகளை க் குளிர்விக்க மண் குளியல்











சர்க்கரை நோயாளிகளின் கணையத்தைக் குளிர்விக்கும் இயற்கை மண் குளியல் சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
காதி வாரியத்தின் கீழ் செயல்படும் கதர் விற்பனை நிலையத்தோடு இணைந்து இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை மருத்துவ மையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில் நீராவிக் குளியல், முதுகுத் தண்டுவட குளியல், மண் குளியல் மற்றும் எண்ணெய் மசாஜ் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
முதலில் மையத்திற்கு வரும் மக்களுக்கு ஆலோசனை, உணவு முறைகள் குறித்த அறிவுரைகள் மற்றும் யோகா பயிற்றுவிக்கப்படும். அதன் பின்பு அவர்களுக்கு எந்தவிதமான சிகிச்சை தேவை என்று கண்டறியப்படும்.
நீராவிக் குளியல்
உடல் பருமன், உடல் வலி உள்ளவர்களுக்கு உகந்தது நீராவிக் குளியல். 15 நிமிஷங்கள் வழங்கப்படும் இந்த குளியலின் மூலம் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும். மேலும் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும் உதவும்.
முதுகுத் தண்டுவட குளியல்
முதுகுத் தண்டு வடத்தில் ஏற்படும் வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு ஏற்றது இந்த முதுகுத் தண்டு வட குளியல். இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் முதுகுதண்டு வடத்தில் வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீர் பீய்ச்சியடிக்கப்படும்.
இதன் மூலம் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
களிமண் குளியல்
வலி உள்ள இடங்களில் மட்டும் பற்று போடப்படுவதால் இது மண் பட்டி என்று அழைக்கப்படுகிறது.
உடலில் எந்தெந்த இடங்களில் வலி உள்ளதோ அந்த இடங்களில் இந்த பட்டி போடப்படும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் அவர்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் மண் பட்டி போடப்படும். இதனால் அவர்களின் கணையம் குளிர்ச்சியடைந்து, இன்சுலின் சுரக்க வழி செய்யும்.
எண்ணெய் மசாஜ்
இதில் முழு உடல் எண்ணெய் மசாஜ் 45 நிமிஷங்களும், பகுதி உடலுக்கான எண்ணெய் மசாஜ் சுமார் 20 நிமிஷங்களும் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள தளர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
இந்த மையத்தில் ஒரு இயற்கை மருத்துவர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் உள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி உதவியாளர்கள் உள்ளனர்.
இது குறித்து மையத்தின் பொறுப்பாளர் இயற்கை மருத்துவர் எஸ்றா கூறியது:
இங்கு வழங்கப்படும் சிகிச்சைகளால் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது.
ஆலோசனை, உணவு குறித்த அறிவுரை மற்றும் யோகா ஆகியவற்றுக்கு ரூ.150, நீராவிக் குளியலுக்கு ரூ. 300, முதுகுத் தண்டுவட குளியலுக்கு ரூ.300, களிமண் குளியலுக்கு ரூ.300, பகுதி உடல் எண்ணெய் மசாஜ் ரூ. 450, முழு உடல் எண்ணெய் மசாஜ் ரூ.950 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களிடம் இந்த சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்கள் தவிர அனைத்து தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும் என்றார்.

சனி, 6 ஏப்ரல், 2013

சத்தில்லாத சருக்கரை!




சத்தில்லாத சருக்கரை!

சர்க்கரையின் தயாரிப்பு முறைகளால் ஏற்படும் பாதிப்புகளை கூறும், மருத்துவர் பி.சவுந்தரபாண்டியன்: இனிப்பு சுவையுடைய சர்க்கரை, கரும்பு, பனை, தென்னை என, பல தாவரங்களில் இருந்து கிடைத்தாலும், உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதி, கரும்பிலிருந்தே கிடைக்கிறது. சத்து மிக்க பொருளாக விளையும் கரும்பு, சர்க்கரையாக புது வடிவம் பெறும் போது, ஏன் நச்சுப் பொருளாக மாறுகிறது? இதற்கு காரணம், கரும்பிலிருந்து சர்க்கரையை சுத்திகரிக்கும் முறை தான்.வயல்களில் விளையும் கரும்பு, சர்க்கரை ஆலைக்குள் சென்று, வெள்ளை நிறச் சர்க்கரையாக மாறுவதற்கு, பல்வேறு வேதியியல் பொருட்கள் கலப்பதே காரணம். கரும்பை துண்டுகளாக்கி, அதன் சாற்றைப் பிழிந்து, சுண்ணாம்புடன் கொதிக்க வைத்த பின், சர்க்கரை பாளங்கள் கிடைக்கின்றன.பாளங்கள், திடமான கரும்பு சாற்றில் கலக்கப்படுகின்றன. இப்படிச் செய்யும்போது, சாற்றின் பழுப்பு நிறம், சற்று மாறுகிறது. அடுத்த கட்டமாக, "கார்பனேஷன் அல்லது பாஸ்படேஷன்' முறையில், கரும்புச் சாற்றை சுத்தப்படுத்தும் போது, சாற்றில் உள்ள சத்துக்கள் நீக்கப்படுகின்றன. "ஆக்டிவேட்டட் கார்பன்' என்ற எலும்புச் சாம்பல் படுகையில், கரும்புச் சாறு செலுத்தப்படுவதால், சர்க்கரைக்கு வெள்ளை நிறம் கிடைக்கிறது.

சாறு பிழிந்தது போக, மீதம் இருக்கும் சக்கை கலவையான, "மொலாசசில்' மட்டுமே, 30 சதவீதம் சுக்ரோஸ், 25 சதவீதம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ், இரும்புத்தாதுக்கள் இருக்கின்றன. சுத்திகரிப்பு என்ற பெயரில், இத்தகைய வேதியியல் நடைமுறைகளால் சுண்ணாம்பு, இரும்பு, மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சோடியம், வைட்டமின் போன்ற, சத்துக்களை நீக்குகின்றனர்.மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பலால் தான், சர்க்கரைக்கு வெண்மை நிறம் கிடைக்கிறது. கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்து இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாகவே பயன்படுத்துவதால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொடர்புக்கு:9865582142.