ஞாயிறு, 28 ஜூலை, 2013

மின் கம்பி அறுந்தால் . . தானியங்கி நிறுத்தி

மின் கம்பி அறுந்தால் ஆபத்தில்லை!

சூறைக்காற்றால், அறுந்து விழும் மின் கம்பிகளிலிருந்து பாயும் மின்சாரத்தை, தானியங்கி முறையில் நிறுத்தும் கருவியை கண்டுபிடித்த, ஹரிஷங்கர்: நான், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவன். வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில், "எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' படிக்கிறேன். தானே புயல் போன்று, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் போது, மின் கம்பிகள் அறுந்து விழுவதால், எதிர்பாராத மனித இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடித்ததே, இந்த தானியங்கி கருவி. "டிரான்ஸ்பார்மரில்' இருந்து செல்லும், ஒவ்வொரு மின் கம்பியிலும், மின்சாரத்தின் அளவை உணரும், "சென்சார்'களை இணைத்தேன். புயல் மற்றும் பலத்த காற்று வீசும் போது, மின் கம்பிகள் அறுந்து, நிலத்தில் பட்ட உடன், நிலம் அதிக அளவு மின் சாரத்தை உறிஞ்சுகிறது. இதனால், மின் கம்பியில் இருந்து சாதாரண நிலையை விட, பல மடங்கு மின்சாரம் வெளியிடப்படுகிறது. அதிக அளவு மின்சாரம் வெளியிடப்படுவதை, சென்சார்கள் உணர்ந்ததும், "மைக்ரோ கன்ட்ரோலரு'க்கு, சிக்னல் மூலமாக தகவல் அனுப்பும். அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளையை, ஒரு, "சிப்'பில் புரோக்ராமாக பதிவு செய்து, மைக்ரோ கன்ட்ரோலரில் பொருத்தி, டிரான்ஸ்பார்மருடன் இணைத்துள்ளேன். இதனால், சென்சாரில் இருந்து தகவல் கிடைத்ததும், மைக்ரோ கன்ட்ரோலர், தன் கட்டுப்பாட்டில் உள்ள, "ரிலே' சுவிட்ச்சை ஆப் செய்யும். இதன் மூலம், அந்த கம்பி வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுவது தானாக நிறுத்தப்படும். மழை மற்றும் வெயில் காலம் என, எல்லா சூழ்நிலையிலும், 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் தன்மை, இத்தானியங்கி கருவிக்கு உள்ளது. மின்கம்பி அறுபட்டுள்ளதை, அருகில் உள்ள மின்சார அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட லைன் மேனுக்கு தெரியப்படுத்த, மொபைல் போனில் உள்ள, ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பம் மூலம், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் கூடுதல் வசதியும் இதில் உள்ளது. தொடர்புக்கு: 96590 95472.



வணிகம் செய்ய  அகவை தடையில்லை!

பெல் நிறுவனத்தின் பாய்லர்களுக்கு, உதிரிபாகங்கள் செய்து தரும் தொழிலில் ஆண்டிற்கு, 6 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும், கீதா: எனக்கு திருமணம் நடைபெறும் போது, வெறும் பிளஸ் 2 மட்டுமே படித்திருந்தேன். குழந்தைகள் பிறந்ததும், கணவர் வெளிநாட்டிற்கு வேலை செய்யச் சென்றார். மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், குழந்தைகளை கவனித்து கொண்டே, எம்.ஏ., - எம்.பில்., - எம்.எட்., என, என்னால் முடிந்ததை படித்து, பட்டதாரியாக மாறினேன். பட்டதாரியாக இருந்தாலும், வெறும், 2,400 ரூபாய் சம்பளத்தில், ஒரு தனியார் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றினேன். 2006ம் ஆண்டு, புதிய பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் அமைப்பில், உறுப்பினராக சேர்ந்தேன். அங்கு தான், "பெல்' எனும், பாரத மிகு மின் நிறுவனத்தில், உருவாக்கப்படும் பாய்லர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை செய்வதற்கு, "கான்ட்ராக்ட்' எடுப்பது பற்றி பேசினர். எனக்கும், பிசினஸ் செய்ய ஆர்வம் ஏற்பட்டதால், இது பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். "பெல்' நிறுவனத்தை பொறுத்த வரை, ஆண்களுக்கு மட்டுமே, "கான்ட் ராக்ட்' தருவர். ஏனெனில், இரும்பு போன்ற கடின உலோகங்களுக்கு வெல்டிங் செய்வது போன்று, வேலை, மிக கடினமாக இருக்கும். குறிப்பாக, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தான் முன்னுரிமை. நான், இன்ஜினியரிங் படிக்காத பெண் என்பதால், மேற்கூறிய இரண்டு தகுதிகளும் என்னிடம் இல்லை. இருந்தாலும், கான்ட்ராக்ட்டை பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், வெல்டிங் செய்ய கற்றுக் கொண்டேன். பின், இன்ஜினியரிங் பிரிவில், "அட்மினிஸ்ட்ரேஷன்' படித்து, புதிய பெண் தொழில் முனைவோராக, "பெல்'லிலேயே, "கான்ட்ராக்ட்' பெற்று, வங்கி கடன் மூலம், பிசினசை ஆரம்பித்தேன். தற்போது, ஆண்டிற்கு ஆறு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கு, பிசினசில் உயர்ந்து, 17 தொழிலாளர்களுக்கு வேலை தருகிறேன். என் பெண்ணிற்கு திருமணம் செய்து, அவளுக்கும் குழந்தை பிறந்த பின்னரே, என் பிசினசை ஆரம்பித்தேன் என்பதால், பிசினஸ் செய்ய வயது தடையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக