சென்னை, ஜூன் 20: இலங்கை அரசு திருப்பிய அனுப்பிய கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"வணங்காமண்' என்ற கப்பலில் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருள்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.
அந்தப் பொருள்களை இலங்கை அரசு இறக்கிக் கொள்ள வலியுறுத்துமாறு அப்போதே மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.
இப்போது கப்பல் திரும்பிவிட்ட நிலையில் மறுபடி சென்றாலும் இலங்கை அதிபர் ராஜபக்சே அதை இறக்க முன்வர மாட்டார்.
கப்பல் சென்னைக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதில் பயன் இல்லை. அந்தப் பொருள்கள் வீணாகிக் கெட்டுப் போக வழி ஏற்பட்டுவிடும். எனவே, கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.