போராட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2013

ஈழ தமிழர் விவகாரம் : மாணவர் போராட்டங்களால் மலைத்து நின்றது சென்னை

ஈழ தமிழர்  விவகாரம் : மாணவர் போராட்டங்களால்  மலைத்து நின்றது சென்னை






சென்னை: சென்னையில், நேற்று மாணவர்கள் நடத்திய ராஜ்பவன் முற்றுகை, விமான நிலைய முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ராஜ்பவன் முற்றுகை : இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று கோரியும், இலங்கைக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும், நேற்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த, 300 மாணவர்கள், ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். போராட்டத்தை முன்னிட்டு, காலை, 11:15 மணி முதல் நீதிமன்ற சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றம் முதல் ராஜ்பவன் வரை, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. வேளச்சேரி, கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் அனைத்து வாகனங்களும், சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக திருப்பி விடப்பட்டன. ஒரு கட்டத்தில், பல கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

விமான நிலைய முற்றுகை : அதேபோல், சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற, 250 மாணவர்கள் கைதாகினர். ராஜிவ் காந்தி சாலையில், துரைப்பாக்கம் அரசு உதவி பெறும் கல்லூரி, ஜெயின் கல்லூரிகளை சேர்ந்த, 600 மாணவர்கள் நேற்று காலை, 9:15 முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில், அரை மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலையூர் சந்தோஷபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின், 500 மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள், 300 பேர், கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்து, வள்ளுவர் கோட்டத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தினர். துரைப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட, 50 மாணவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் சார்பில், நேற்று முன்தினம் நடைபெற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

8வது நாள் உண்ணாவிரதம் : சட்ட பல்கலைக் கழக மாணவர்கள், 8வது நாளாக நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். உடல்நிலை மோசமடைந்தும், உண்ணாவிரதப் பந்தலிலேயே சிகிச்சைப் பெற்றுக் கொண்டும், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். சைதாப்பேட்டை கோர்ட் எதிரே, ராஜபச்ஷேக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, 40க்கும் மேற்பட்ட, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.

சுங்க அலுவலகம் முற்றுகை : ஐகோர்ட் வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து, சென்னை பீச் ஸ்டேஷன் அருகே உள்ள, சுங்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபச்ஷேவை எதிர்த்து கோஷங்ளை எழுப்பியவாறு, ரோட்டில் படுத்து போராட்டம் மேற்கொண்டனர். 500க்கும் மேற்பட்டோர், இதில் பங்கேற்றதால், போலீசார், மாணவர்கள் இடையே, தள்ளு முள்ளு நடந்தது. பீச் ஸ்டேஷன் வழியாக போக்குவரத்து முடங்கியது.

அண்ணா பல்கலை : அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள், 300க்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலை கழக மாணவர்கள், 200க்கும் மேற்பட்டோர், பல்கலை கழக வளாகத்தில், குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமாபுரம், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள், 200க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி, ஒ.சி.எப்., மைதானத்தில், வேல் டெக் பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஓட்டேரி அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை, புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"சிப்பெட்' மாணவர்கள் : மேடவாக்கம், நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் கல்லூரி, திருவள்ளூர், பேரம்பாக்கம் ஸ்ரீ கலைமகள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டி, சென்ட்ரல் பாலிக்டெனிக் மாணவர்களுக்கும், நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இசைக் கல்லூரி மாணவர்கள், 15 பேர், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திங்கள், 18 மார்ச், 2013

இலங்கை த் தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

இலங்கை த் தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
ஐ.நா.சபை மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2009-ஆம் ஆண்டு ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசின் ராணுவத்தினரால் நம் தொப்புள் கொடி உறவான அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் ஏராளமாக கொன்று குவிக்கப்பட்டனர். 2011-ல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் 08.06.2011 அன்று கீழ்க்கண்ட தீர்மானத்தை

பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது

மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது

மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது

உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது

இலங்கை அரசு விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது

போன்ற போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.

தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர் குற்றம் புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா வரைவு தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளது. அந்த தீர்மானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட அம்சங்கள் இடம்பெறும் வகையிலே இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்து, இந்திய அரசு இத்தீர்மானத்தை உறுதியாக ஆதரித்து தீர்மானம் நிறைவேறிட எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட வகையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேறிட போராட்டங்கள் நடத்திவரும் அனைத்து அமைப்பினருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து உறுதியான நிலைப்பாட்டுடன் விரைவில் போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 17 மார்ச், 2013

தமிழகம் முழுவதும் 20 அன்று மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்: வெள்ளையன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 20 அன்று  மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்: வெள்ளையன் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 20-ந்தேதி
மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்:
 வெள்ளையன் அறிவிப்பு
சென்னை, மார்ச். 17-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த கொடியவன் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக்க வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. உலகத்தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் இந்த இனவெழுச்சியை முன்னெடுத்துச் செல்வது நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

மாவீரன் முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்த பிறகு ஏற்பட்ட இனவெழுச்சி அரசியல் சூழ்ச்சியால் வீழ்ச்சி அடைந்தது. தேர்தல் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஈழ மக்கள் படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்திலும் தமிழகத்து மாணவர்கள் தனித்து விடப்பட்ட போதிலும் எழுச்சி குன்றாமல் வாதாடினார்கள் போராடினார்கள். இப்போதும் மாணவர்கள் எழுச்சியுடன் களம் இறங்கியுள்ளதை எமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வரவேற்கிறது.

மாணவன் நினைத்தால் முடித்துக்காட்டுவான் என்கிற சொற்றொடர் மெய்ப்பட எல்லோரும் உதவ வேண்டும். அந்த வகையில் மார்ச் 20-ந்தேதி அன்று தமிழகம் எங்கும் மாணவர்கள் நடத்தும் தொடர் முழக்க போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். எல்லா விதத்திலும் மாணவர்களின் போராட்டங்களுக்கு வணிகர் சங்கங்கள் உதவியாய் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.