20 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
20 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2013

20 அன்று மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பீர்: வைகோ அறிக்கை

20 அன்று  மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பீர்: வைகோ அறிக்கை
20-ந்தேதி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பீர்: வைகோ அறிக்கை
சென்னை, மார்ச். 19-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்ற பழமொழியையும், ‘முயலுடன் ஓடிக்கொண்டே அதனைத் துரத்தும் வேட்டை நாய்க்கு உதவும் ஏமாற்று வேலை’ என்ற சொற்றொடரையும் மெய்ப்பிக்கும் விதத்தில், இந்திய அரசு ஜெனீவாவில் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்துக் கொண்டே, இங்கு இந்தியாவில் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழருக்கு உதவுவோம் என்று கூறி மோசடி நாடகம் நடத்துகிறது.
2009-ம் ஆண்டு மே மாத இறுதியில் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்களக் கொலைகார அரசைப் பாராட்டித் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்த இந்திய அரசு, கடந்த ஆண்டு ஈழத் தமிழரின் விடியலுக்கு வழிகாட்டாத அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் நீர்த்துப்போக வைத்த இந்திய அரசு,
இன்றைய சூழலில் தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் சுதந்திரத் தமிழ் ஈழம் கோரியும், தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசை குற்றக் கூண்டில் நிறுத்த சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரியும், வீரம் செறிந்த உறுதிமிக்க அறப்போர் நடத்தும் நிலையில், ஜெனீவாவில் சிங்கள அரசுக்கு ஆதரவான வேலைகளைத் தீவிரமாகவும், ரகசியமாகவும் இந்திய அரசு செய்து வருகிறது.
அமெரிக்கத் தீர்மானத்தில் அழுத்தமான திருத்தம் வேண்டும் என்று ஒரு சிலர் குரல் கொடுக்கும் அதே நேரத்தில், அமெரிக்கத் தீர்மானத்தில் சிங்கள அரசை வலியுறுத்தும் ஒரு சில வாசகங்களையும் நீக்கச் செய்துவிட்டது. குறிப்பாக, இலங்கைத் தீவில் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள மனித உரிமை ஆணையர் அறிவித்த பரிந்துரையை நீக்கி உள்ளதாகத் தெரிகிறது.
தரணி வாழ் தமிழர்களையும், தமிழ் ஈழ உணர்வாளர்களையும், ஆவேசமாகப் புரட்சி பூபாளம் ஒலிக்கும் தமிழக மாணவர்களையும் இந்த மோசடி வேலைகளால் ஏமாற்ற முடியாது. சரியான, முறையான இலக்கைத் தீர்மானித்து, தமிழக மாணவர்கள் தொடர்ந்துள்ள உரிமைப் போர், ஈழத் தமிழருக்கு நீதியும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் மலரும் வரை புதிய புதிய பரிமாணம் எடுத்து நீடிக்கும்.
தமிழ்க்குலம் மாணவர் சமுதாயத்துக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன்பட்டு உள்ளது. எனவே, தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டு அமைப்பின் சார்பில், 20-ந்தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

தமிழகம் முழுவதும் 20 அன்று மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்: வெள்ளையன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 20 அன்று  மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்: வெள்ளையன் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 20-ந்தேதி
மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்:
 வெள்ளையன் அறிவிப்பு
சென்னை, மார்ச். 17-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த கொடியவன் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக்க வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. உலகத்தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் இந்த இனவெழுச்சியை முன்னெடுத்துச் செல்வது நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

மாவீரன் முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்த பிறகு ஏற்பட்ட இனவெழுச்சி அரசியல் சூழ்ச்சியால் வீழ்ச்சி அடைந்தது. தேர்தல் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஈழ மக்கள் படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்திலும் தமிழகத்து மாணவர்கள் தனித்து விடப்பட்ட போதிலும் எழுச்சி குன்றாமல் வாதாடினார்கள் போராடினார்கள். இப்போதும் மாணவர்கள் எழுச்சியுடன் களம் இறங்கியுள்ளதை எமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வரவேற்கிறது.

மாணவன் நினைத்தால் முடித்துக்காட்டுவான் என்கிற சொற்றொடர் மெய்ப்பட எல்லோரும் உதவ வேண்டும். அந்த வகையில் மார்ச் 20-ந்தேதி அன்று தமிழகம் எங்கும் மாணவர்கள் நடத்தும் தொடர் முழக்க போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். எல்லா விதத்திலும் மாணவர்களின் போராட்டங்களுக்கு வணிகர் சங்கங்கள் உதவியாய் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.