இலங்கைத் தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைத் தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஏப்ரல், 2013

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது ஐயமே: நா.உ. பேட்டி

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது  ஐயமே:  நா.உ.  பேட்டி
 
""இலங்கை த் தமிழர்களுக்கு, அதிபர் இராசபக்சே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார்.
ஐந்து பேர் குழு:


இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நேற்று முன்தினம் கூறியதாவது:இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகளில், சற்று சுறுசுறுப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட்டம் இருந்தது. இருப்பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது. இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை; மாறிக் கொண்டே வருகிறது. தமிழர் பகுதிகளில், சிங்களர்கள் குடியேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல்லாம், சிங்களர்கள் கைப்பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம்; ஓரளவு கட்டித் தந்துள்ளனர். மற்றபடி, சொல்லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை.

தயக்கம்:

இலங்கையில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழர்கள் பிரச்னை அப்படியே உள்ளது. அங்குள்ள நிலைமைகளை பார்க்கும் போது, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அரசாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது.உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. செப்டம்பர் வரை, அந்தத் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.போலீஸ் அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர்களின் பிரச்னைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண்டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது.தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதிகாரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்றனர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாகவும் குறை சொல்கின்றனர்.அங்கு நடந்த போரின்போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.

நேரமின்மை:


இலங்கையில், தமிழர் தலைவர்கள் சம்பந்தம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம். நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்கு செல்ல முடியவில்லை. பசில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோரையும் சந்தித்தோம்.இவ்வாறு சவுகதா ராய் கூறினார்.

- நமது தில்லிச் செய்தியாளர், தினமலர் -

புதன், 27 மார்ச், 2013

இலங்கை த் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு சட்டசபையில் தீர்மானம்

இலங்கை த் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- தமிழக ச் சட்டசபையில் தீர்மானம்
  0 
இலங்கை தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- தமிழக சட்டசபையில் தீர்மானம்
சென்னை, மார்ச் 27-

தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை ஆதரிக்கும் தீர்மானத்தை கொண்டுவந்து மன்மொழிந்தார். தீர்மானம் விவரம் வருமாறு;-

தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எசமானனாக இல்லாமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தினை சட்டசபை ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

திங்கள், 18 மார்ச், 2013

இலங்கை த் தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

இலங்கை த் தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
ஐ.நா.சபை மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2009-ஆம் ஆண்டு ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசின் ராணுவத்தினரால் நம் தொப்புள் கொடி உறவான அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் ஏராளமாக கொன்று குவிக்கப்பட்டனர். 2011-ல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் 08.06.2011 அன்று கீழ்க்கண்ட தீர்மானத்தை

பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது

மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது

மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது

உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது

இலங்கை அரசு விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது

போன்ற போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.

தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர் குற்றம் புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா வரைவு தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளது. அந்த தீர்மானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட அம்சங்கள் இடம்பெறும் வகையிலே இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்து, இந்திய அரசு இத்தீர்மானத்தை உறுதியாக ஆதரித்து தீர்மானம் நிறைவேறிட எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட வகையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேறிட போராட்டங்கள் நடத்திவரும் அனைத்து அமைப்பினருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து உறுதியான நிலைப்பாட்டுடன் விரைவில் போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.