புதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 நவம்பர், 2021

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11. தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்

அத்தியாயம் 4 தொடர்ச்சி

 

பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். “இதென்ன பூரணி! உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது? அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?”

“நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா?”

“மூச்சுவிடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்.”

“மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக இருக்கிறது பார் கமலா. தன் முதுகுக்குப் பின்னால் உயிரைத் திருடிக்கொண்டு போக எமன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் உன் முதுகுக்குப் பின்னால் சங்கிலியைத் திருட ஓடி வந்திருக்கிறானே இந்தக் கிழவன். மனிதன் பொருளைத் திருடினாலே அகப்பட்டு அவமானமும் தண்டனையும் அடைய வேண்டியிருக்கிறது. எமன் இத்தனை உரிமையோடு உயிர்களைத் திருடிவிட்டு இந்தத் திருட்டு உரிமையால் தெய்வமாகவும் வாழ்கிறானே?”

“திருடனாயிருந்தாலும் அவன் செத்த விதத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது, பூரணி!”

“மரணத்துக்கே இந்த ஆற்றல் உண்டு. பக்கத்து வீட்டில் சுவரை இடித்தால் நம் வீடு அதிர்கிற மாதிரிச் சாகின்றவர்கள் வாழ்கின்றவர்கள் மனத்திலுள்ள உயிர் நம்பிக்கையில் அதிர்ச்சியை உண்டாக்குகிறார்கள்.”

“அதிருக்கட்டும்! மேலே உன் திட்டம் என்ன? எங்கேயாவது வேறு வீடு பார்த்தாயா? உன் தம்பி ஏதோ மரமேறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டானாமே, நீ என்னிடம் சொல்லவே இல்லையே?”

“சொல்லவில்லைதான். எனக்கு எத்தனையோ கவலைகள் கமலா. அத்தனையையும் உன்னிடம் சொல்லி உன்னைக் கவலைப்படுத்த வேண்டுமா? முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான். இந்தா, உன் சங்கிலி இதைச் சரிப்படுத்திவிட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் சாயங்காலம் நீ கொஞ்சம் விட்டுப் பக்கம் வந்து போ! நான் வரட்டுமா?”

கமலாவிடம் சங்கிலியைக் கொடுத்துவிட்டுப் பூரணி வீடு திரும்பினாள். தேரடியில் ஓதுவார்க் கிழவர் எதிர்ப்பட்டார்.

“மூஞ்சி முகரையெல்லாம் கறுத்துப் போகிறாற்போல் இப்படி வெய்யிலில் அலைவாளா ஒரு பெண்? அப்படி என்ன அம்மா தலைபோகிற காரியம்?”

“ஒன்றுமில்லை தாத்தா! இங்கே பக்கத்துத் தெருவில் கமலா என்று ஒரு பழைய சிநேகிதி இருக்கிறாள். அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கிழவரின் அனுதாப விசாரிப்புக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்தாள் பூரணி. தெரு நடுவிலிருந்த கல்மண்டபத்தருகே தயிர்க்காரி எதிரே வந்து பிடித்துக் கொண்டாள்.

“நான் காசு பணம் சேர்த்து வைத்துக் கொண்டு பிழைக்கிறவள் இல்லை அம்மா! அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும். பூராப் பாக்கியும் தர முடியாவிட்டாலும் ஏதாவது ஒண்ணு ரெண்டு கொடுங்கம்மா.”

கையில் மீதமிருந்த இரண்டு ரூபாய் இரண்டரை அணாவில் ஒன்றரை ரூபாயை அவளிடம் கொடுத்து அவளுக்கு நல்லவளானாள் பூரணி. அந்தப் பதினொண்ணே முக்கால் மணி வெய்யிலில் திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் சுறுசுறுப்பும் இல்லை, கலகலப்பும் இல்லை. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் கூட பொழுது போகாமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள். தெருவும், கோபுரமும், மலையும் பரம சுகத்தோடு வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தன. மேற்கே இருப்பூர்திப் பாதையில்(இரயில்வே லயனில்) தூத்துக்குடி விரைவி(எக்ஸ்பிரசு) ஓடிச்சென்று நின்றது. அந்த வழியாகச் செல்லுகிற மூன்று விரைவிகளில்(எக்சுபிரசுகளில்) அதற்கு மட்டும் தான் முருகன் மேல் பற்று. மூன்று விநாடிகள் நின்று கரும்புகையை மலை நோக்கி அள்ளி வீசிவிட்டுப் பின் போய்விடும். வேறு விரைவிகளுக்கு(எக்சுபிரசுகளுக்கு) அந்தப் பற்றும் இல்லை.

வீட்டில் காலையில் குடித்த ஒரு வாய் காப்பியோடு தம்பி, தங்கைகள் பட்டினிக் கிடப்பார்களென்ற நினைவு பூரணிக்கு வந்தது. உணவகத்தில் நுழைந்து எட்டணாவிற்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு சென்றாள். குழந்தை மங்கையர்க்கரசி, “அக்கா ரொம்பப் பசிக்கிறது” என்று ஓடிவந்து வாயிற்படியிலேயே பூரணியின் காலைக் கட்டிக் கொண்டாள். வாடிப்போன சூரியகாந்திப் பூ மாதிரி குழந்தையின் முகத்தில் பசிச் சோர்வு தென்பட்டது. நாவுக்கரசும் சிறிய தம்பி சம்பந்தனின் படுக்கையருகே துவண்டு களைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். நன்றாக இரசம் பூசிய கண்ணாடியில் எதுவும் தெளிவாகத் தெரிகிற மாதிரி இளம் முகங்களில் பசிதான் எவ்வளவு விளக்கமாகத் தெரிகிறது. மூப்பில் அவதிகள் பயின்று பழகி மரத்துப் போவதால் உணர்வைத் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடிகிறது. இளமையில் அப்படி மறைக்க முடிவதில்லை.

உணவகத்தில் வாங்கி வந்த சிற்றுண்டிப் பொட்டலத்தைப் பிரித்து மூன்று பேருக்கும் தனித்தனி இலைகளில் வைத்தாள்.

“நீ சாப்பிடலையா அக்கா?” என்று நாவுக்கரசு தனக்கு முன் இலையிலிருந்ததைத் தொடாமல் பூரணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டான்.

“சாப்பிட்டாயிற்று. கமலா வீட்டுக்குப் போயிருந்தேன். விடமாட்டேன் என்று பிடிவாதமாக வற்புறுத்தினாள். அங்கே சாப்பிடும்படி நேர்ந்துவிட்டது; நீங்கள் சாப்பிடுங்கள்.”

பொய்யைப் போல சமயத்தில் உதவி செய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.

“உன் முகத்தைப் பார்த்தால் சாப்பிட்ட மாதிரி தெரியலையே அக்கா.”

“போடா அதிகப் பிரசங்கி, சாப்பிட்ட மாதிரி தெரியறதுக்கு முகத்தில் ‘சாப்பிட்டாயிற்று’ என்று எழுதி ஒட்டியிருக்க வேண்டுமோ?”

-இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. அந்தச் சிரிப்பினால் அக்காவின் மேல் அவர்களுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. இலையில் இருந்ததை சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுடைய இலையில் உணவுப் பொருள் குறையக் குறைய பூரணியின் மனத்திலும் முகத்திலும் ஏதோ நிறைந்து மலர்ந்தது.

“அக்கா! அஞ்சல்காரர் கொடுத்துவிட்டுப் போனார்” என்று சில கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான் திருநாவுக்கரசு.

வழக்கம்போல் அனுதாபக் கடிதங்கள்தான். அந்த மாபெரும் தமிழறிஞருக்கு திருப்பரங்குன்றத்திலேயே ஒரு நினைவு மண்டபம் எழுப்பியாக வேண்டும் என்று ஆவேசத்தோடு வரிந்து எழுதியிருந்தார் உணர்ச்சிமிக்க இளைஞர் ஒருவர். பூரணி தனக்குள் நகைத்துக் கொண்டாள்.

“நினைவு மண்டபமாம்; நினைவு மண்டபம்! மனிதனை மறந்துவிட்டு மண்டபத்தைக் கட்டி நினைவு வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே! அந்த மண்டபத்துக்குத் தோண்டுகிற அடித்தளத்தில் எங்களையும் தள்ளிவிட்டால் கவலை தீர்ந்தது. இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து பசியோடும் பண்புகளோடும் போராட வேண்டியிராது” என்று வெறுப்போடு வாய்க்குள் மெல்ல இப்படிச் சொல்லிக் கொண்டாள்.

சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவது போல் பசி வயிற்றைக் கிள்ளியது. குளித்துவிட்டால் சோர்வு குறையுமென்று குளிக்கப் போனாள்.

கிணற்றில் நீர் இறைக்கும் கயிறு பாதியில் நைந்திருந்தது. எப்போது அறுந்து விழுமோ? எதற்கென்று தனியாகக் கவலைப் படுவது? வாழ்க்கையே அப்படிப் பாதியில் நைந்த கயிறு போல்தான் இருக்கிறது.

பானையில் அரிசி இல்லை; பரணில் விறகு இல்லை. கையில் இரண்டரை அணாவுக்கு மேல் காசு இல்லை. அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கடன் கேட்க விருப்பமும் இல்லை. பூரணி அழுதுகொண்டே குளித்தாள். குளிக்கும் போது அழுதால் யாரும் கண்டுகொள்ள முடியாதல்லவா? அழுகையும் குளிப்பு தானே? துக்கத்தில் குளிப்பதுதானே அழுகை! நீரில் குளித்துக் கொண்டே துக்கத்திலும் குளித்தாள் அவள். அநாதையாக விட்டுப்போன அம்மாவின் இலட்சுமிகரமான முகத்தை மனக்கண்களுக்கு முன் நினைவுக்கு கொணர முயன்றாள். அப்பாவின் முகமோ முயற்சியில்லாமல் நினைவில் வந்தது. குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றியும் உடம்பு குளிர்ந்ததே யொழிய நெஞ்சின் சூடு தணியவில்லை.

அம்மாவின் முகம் நினைவில் சிக்கிய போது நெஞ்சில் கனல் பிழம்பு போல் ஒரு சுடர் எழுந்தது. மீனாட்சியம்மனின் முகம் போல் தமிழ்ப் பண்பில் வந்த தாய்மை கனியும் அந்த முகம். ‘பெண்ணே! நீ வாழு! வாழச்செய்!’ என்று சொல்வதுபோல் உறுதியை உமிழ்ந்தது.

குளித்து முடித்ததும் பூரணி வெளியே புறப்படுவதற்குத் தயாரானாள். அழுகையின் காரணமாகக் கெண்டை மீனுக்குச் செந்நிறம் தீட்டினாற்போல் அவள் எழில் நயனங்கள் சிவந்திருந்தன. விரிந்து மலரும் செவியைத் தொடுவதுபோல் அகலும் அழகு அந்தக் கண்களுக்கு உண்டு.

“சாயங்காலம் வைத்தியர் வந்தால் தம்பியைப் பார்க்கச் சொல்லு. குழந்தை வெய்யிலில் தெருவில் அலையாமல் பார்த்துக் கொள். நான் வருவதற்கு அதிக நேரமாகும்” என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக் கொண்டு குடையை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டாள் பூரணி. நகரத்தில் எங்காவது ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டுதான் வீடு திரும்புவது என்று அப்போது அவள் உள்ளத்தில் ஒரு வைராக்கியம் பற்றியிருந்தது. வயிற்றில் பசி, மனத்தில் வைராக்கியம், கண்களில் ஒளி, கையில் சிறியதாய் நளினமாய்ப் பெண்கள் பிடித்துக் கொள்கிற மாதிரிக் குடை. மண்ணையும் வெப்பத்தையும் அதிகமாக உணர்ந்தறியா அந்த அனிச்சப்பூ கால்கள் நொந்தன. நோவை அவள் பொருட்படுத்தவில்லை.

கையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பேருந்தில் போக முடியுமோ, அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தாள். மனத்தில் தெம்பும், நடையில் வேகமும் கொண்டிருந்தாள் பூரணி. அவளுக்கு இப்போது வாழும் வெறி வந்திருந்தது.

நியாயமான வாழ்வைத்தேடி ஓர் இளம்பெண் இந்தப் பெரிய நகரத்தின் தெருக்களில் இப்படி அலைவதில் வெட்கமும் வேதனையும் படவேண்டியதில்லை. இதே மதுரையின் தெருக்களில்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சிலம்பும் கையுமாக ஒரு சோழ நாட்டுப் பெண் நியாயம் தேடினாள். பூரணி நியாயமான வாழ்வைத் தேடுகிறாள்.

அவளுடைய கண்கள் அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வாழ்வைத் தேடின. உதவி செய்து உழைப்பை வாங்கிக் கொள்ளும் கண்ணியமான மனிதர்களைத் தேடின. கண்ணோட்டமுள்ள (தாட்சண்யம்) நல்ல மனிதர்களைத் தேடின. வயிற்றுப் பசிக்கு வழி தேடின.

ஆனால் அங்கே கோபுரங்கள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதைச் சுற்றி மனிதர்கள் எல்லாம் மனங்கள் உட்படச் சிறியவர்களாகத்தான் இருந்தார்கள். எங்கும் வேலை காலியில்லை. வேலை காலியிருந்தாலும் அதைக் கொடுக்க மனமில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மனம் இல்லை. “நீ கோபித்துக் கொள்ளாதே அம்மா! நீ என் பெண் மாதிரி நினைத்துக் கொண்டு சொல்கிறேன். உன்னைப் போல் இலட்சணமாக இருக்கிறவர்கள் இந்த மாதிரி நாலு பேர் நாலுவிதமா இருக்கிற இடத்தில் வேலை பார்க்க வரக்கூடாது. அதனால் வரும் உபத்திரவங்களை என்னால் தாங்க முடியாது” என்று உபதேசம் செய்து அனுப்பினார் ஒரு வயதான மேலாளர். இலட்சணமாயில்லா விட்டால் அதுவும் குறை; இலட்சணமாக இருப்பதும் குறை. அதிகத் திறமையும் குறை; அதிகச் சோம்பலும் குறை. நாக்கும் அதில் நரம்பும் இல்லாத இங்கிதம் கெட்ட உலகம் இது. நியாயத்தை யார் யாரிடம் இங்கே விசாரிப்பது? நியாயம் என்று ஒன்று இருந்தால்தானே விசாரிப்பதற்கு?

ஏமாற்றமும் பசியும் சோர்வுமாக மேலக்கோபுர வாசலும் நகரவைச்சாலையும்  சந்திக்கிற இடத்தில் வீதியைக் கடந்து கோபுர வாசலுக்காக நடந்து கொண்டிருந்தாள் பூரணி.

அந்த இடத்தில் – அது ஒரு நாற்சந்தி. தெற்கேயிருந்து ஒரு சுமையூர்தியும்(லாரியும்) வடக்கேயிருந்து இன்னொரு சுமையூர்தியும்(லாரியும்) மற்ற இரு புறமும் மகிழுந்து(கார்)களுமாகத் திடீரென்று பாய்ந்தன. மின்வெட்டும் நேரத்தில் அப்படி ஒரு நெருக்கடி அங்கே நேர்ந்தது. பூரணிக்கு எங்கே விலகுவது என்றே தெரியவில்லை. கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அப்படியே கையில் குடையோடு நடுவீதியில் அறுந்து விழும் முல்லைக்கொடி போல் சாய்ந்துவிட்டாள்.

இதே நகரத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓர் இளம்பெண் நடு வீதியில் தடுமாறி விழுந்திருந்தால் எத்தனை மகாகவிகளின் உள்ளங்கள் துடித்துக் கொதித்துப் பாட முனைந்திருக்கும்? ஒரு பெண்ணுக்குத் துன்பம் வந்தால் ஓராயிரம் கவிகளுக்கு உள்ளம் துடிக்குமே? கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் துன்பம் வந்ததை இளங்கோவும், காளிதாசனும் காவியமாக்கினார்களே! அதற்கென்ன செய்யலாம்? பூரணி கவிகள் வாழும் தலை முறையில் பிறக்கவில்லையே? வெறும் மனிதர்கள் வாழ்கின்ற தலைமுறையில் அல்லவா அந்தப் பேதைப்பெண் வந்துவிட்டாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

வெள்ளி, 30 ஜூலை, 2021

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 18

 அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 17. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து ஒருநாள் வகுப்பில் கணக்கு ஆசிரியரின் கையில் என் காது அகப்பட்டுக் கொண்டது. “கணக்கே வேணும் என்றாயே! விதிகளை மனப்பாடம் பண்ணினாயா? கணக்குகளை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் போட்டாயா? சந்திரனிடம் கேட்டாயா?” என்று என் கன்னத்தில் சாக்குத் துண்டால் குத்தினார்.

அந்த ‘தீட்சை’ நிறைவேறிய பிறகு, உண்மையாகவே கணக்குப் பாடத்தில் நான் முன்னேறினேன். முப்பத்தாறு எண்கள் வாங்கியவன். கால் தேர்வில் ஐம்பது வாங்கினேன். அரைத் தேர்வில் ஐம்பத்தைந்து வாங்கினேன். சந்திரன் எனக்கு மிகப் பெரிய துணையாக இருந்து உதவினான். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் போதே சில சந்தேகங்களை எல்லாம் தீர்த்து உதவினான். கணக்கு ஒரு கடினமான பாடம் என்ற பயமே பறந்து போயிற்று. ஆனாலும் சந்திரனைப் போல் அவ்வளவு வல்லவனாக விளங்க முடியவில்லை; அவனைப் போல் தொண்ணூறு, தொண்ணூற்றெட்டு, நூறு எண்கள் பெறமுடியவில்லை.

முந்திய ஆண்டைவிட இந்த ஆண்டில் சந்திரனுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு வளர்ந்தது. அவன் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பழகிக்கொண்டே எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்த உதவியை நன்றியோடு நினைத்துப் போற்றினேன். சில நாட்களில் மாலையில் நெடுந்தொலைவு நடந்துபோய் வரும் வழக்கத்தை மேற்கொண்டோம். பெரும்பாலும் தொடர்வண்டி(இரயில்) நிலையச் சாலையில், அதாவது வடக்கு நோக்கியே நடந்து போய் வந்தோம். நடக்கும்போது பலவகையான செய்திகளைப் பேசிக்கொண்டு போவோம்.

தேர்வு உள்ள காலங்களில் நடக்காமல், கையில் புத்தகமோ குறிப்போ எடுத்துக்கொண்டு மெல்லப் பார்த்துக் கொண்டே நடப்போம். அந்தச் சாலையில் இலுப்பை மரங்கள் இரு பக்கத்திலும் நிறைய வளர்ந்திருந்தன. சில சமயங்களில் அவற்றின் பூக்கள் ஒரு புதுமையான நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். கீழே பழங்கள் போல் வெண்ணிறமாக விழுந்து கிடக்கும். சிறுவனாக இருந்தபோது அவற்றைப் பழங்கள் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அவற்றை எடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, “இந்தப் பழங்களைத் தின்னலாமா?” என்று கேட்டேன். “இவை பழங்கள் அல்ல, பூக்கள்” என்று என்னைப் பார்த்துச் சிரித்தான். அன்று அவனிடமிருந்து அந்த வேறுபாட்டைக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் சந்திரனுக்கு அதைச் சொன்னபோது “இது எனக்குத் தெரியுமே. இலுப்பைப்பூ பழம் போலவே இருக்கும். அதில் உள்ள தேனை உறிஞ்சிச் சுவைப்பார்கள்” என்றான்.

அந்த இலுப்பைமரச் சாலை ஓரமாகவே பாடத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விடைகள் சொல்லிக் கொண்டும் நடப்போம். ஒருநாள் ஒரு தோப்பின் எதிரே உட்கார்ந்து கணக்கு ஒன்றைச் சந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தேன். அவன் ஒரு குச்சியை எடுத்து மண்ணில் கோடுகள் கிழித்து இருசம முக்கோணத்தில் ஒரு வெட்டு வெட்டி, இரண்டு பகுதிகளிலும் உள்ள கோணங்களின் ஒற்றுமை வேற்றுமையை விளக்கிக் கொண்டிருந்தான். அதை முடித்தவுடன், “நேரம் ஆயிற்று போகலாமா?” என்றான்.

“இன்றைக்கு முழுநிலா நாள்போல் இருக்கிறதே. அதோ பார், நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம்” என்றேன்.

“உனக்கு நிலா என்றால் மிகவும் விருப்பம்போல் தெரிகிறது.

“ஆமாம். சந்திரன் அல்லவா! உன் பெயர், உன் நிறம், உன் பண்பு எல்லாம் எனக்கு விருப்பம்தான்.”

அவ்வாறு நான் சொல்லி முடித்தவுடன் பெருங்காஞ்சியில் கண்ட நிலாவின் காட்சி நினைவுக்கு வந்தது.

“எங்கள் ஊரில் நிலா மிக அழகாக இருந்ததாகச் சொன்னாயே” என்று சந்திரனும் அதையே கூறினான்.

“ஆமாம்” என்று சொல்லிக் கிழக்கு வானத்தை அணி செய்து கொண்டு எழுந்துவந்த முழுநிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் வெள்ளிமேனியும் வட்ட வடிவும், அமிழ்த ஒளியும் பற்றி எண்ணிக் கொண்டிருந்தபோது அதன் உடலில் உள்ள களங்கத்தைப் பற்றிய எண்ணம் வந்தது. என்ன காரணமோ, பெருங்காஞ்சியில் சந்திரனுடைய நடத்தையில் கண்ட மாசு என் நினைவுக்கு வந்தது. கிணற்றில் குளித்த பிறகு வெந்நீரை எடுத்துக் கீழே கொட்டச் சொன்னதும், தாழை ஓடையில் அந்தப் பெண்களுக்குக் காசு கொடுத்து மயக்கிப் பாடச் சொன்னதும் நினைவுக்கு வந்தன. பக்கத்தில் இருந்த சந்திரனைப் பார்த்தேன். புன்முறுவல் கொண்டேன்.

“என்ன அய்யா! அந்தச் சந்திரனைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்துச் சிரிக்கிறாயே?” என்றான் சந்திரன்.

“அந்தச் சந்திரனிடத்தில் எவ்வளவு பெரிய களங்கம் இருக்கிறது! உன்னிடத்தில் ஒரு களங்கமும் இல்லை அல்லவா?” என்றேன்.

“போதும் போதும் உன் கதை. எழு, எழு” என்று புறப்பட்டான். நானும் தொடர்ந்து வந்தேன்.

என் நண்பனுடைய உள்ளத்தில் – நடத்தையில் – சிறு களங்கம் இருக்கிறதே. அது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை.

இந்த ஆண்டில் சந்திரனுடைய வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வந்தார்கள். அத்தைக்கு வேலை மிகுதியாயிற்று. படிப்பதற்கு வேண்டிய அமைதி இல்லை என்று சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். தேர்வுக் காலத்தில் தனித்தனியே படித்தால் நல்லது என்று எண்ணி அவன் பாக்கியம் அம்மையாரின் வீட்டுக்குப் போய்விடுவான். அந்த வீட்டில் குழந்தைகளின் கூச்சலும் இல்லை; விருந்தினரின் ஆரவாரமும் இல்லை. இருந்த ஒரு தம்பியும் உணவுக்கடையில் உண்பதுபோல் உண்டு முடித்துத் திண்ணையை நாடி அமைதி பூண்டார். உணவுக் கடையிலும், சிலர் பரிமாறுவோரோடும் வேலையாட்களோடும் நெருங்கிப் பழகிச் சிரிப்பும் ஆரவாரமுமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், சிலர் வீட்டில் இருப்பதைவிட, உணவுக்கடையில் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். நெடுநேரம் பாடிக்கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். பாக்கியத்தின் தம்பியோ, வீட்டை வீடாகவும் கருதவில்லை. உணவு விடுதியாகவும் கருதவில்லை. ஒரு சத்திரமாகக் கருதினார் என்று சொன்னால் ஒரு வகையில் பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீட்டில் தேர்வுக் காலத்தில் தனியே அமைதியாகப் படிப்பது சந்திரனுக்கு உகந்ததாக இருந்தது.

சந்திரன் வீட்டுக்கு விருந்தினர் வந்தபோது நான் அடிக்கடிப் போவதில்லை. அத்தை மட்டும் சில நாட்களில் கேட்பார்: “ஏன் வேலு! நான்கு நாளாக எங்கள் வீட்டுக்கே வரவில்லையே” என்பார்.

“யார் யாரோ வந்திருந்தார்கள். அதனால் நான் வரவில்லை” என்பேன்.

“யார் வந்தால் என்ன? எனக்குக் கூச்சமா? நீ வரலாமே! நீ என்ன, இப்படிப் புதிய ஆட்களைப் பார்த்தால் பழகுவதற்குக் கூச்சப்படுகிறாயே, சந்திரனைப் பார், யார் வந்தாலும் கலகல என்று பேசிப் பழகுகிறான்.” என்பார் அத்தை.

அம்மாவும் அதற்குத் தகுந்தாற் போல், ஒருநாள், “அது என்னவோ தெரியவில்லை அம்மா! இவனும் அப்படி இருக்கிறான். இவன் தங்கை மணிமேகலையும் அப்படித்தான் இருக்கிறாள்” என்றார்.

“மணிமேகலை அப்படி இருக்கலாம். அவள் பெண், வேலு ஏன் அப்படி இருக்கணும்?” என்றார் அத்தை.

அப்படி நான் சின்ன வயதில் பழகியதைப் பற்றியும் அத்தை சொன்னதைப் பற்றியும் பிற்காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒதுங்கித் தயங்கி வாழ்ந்து வந்த காரணத்தால் நான் எத்தனையோ இடர்களிலிருந்து தப்பியிருக்கிறேன் என்று சொல்லலாம்.

 

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஆதியூர் அவதானி சரிதம்

எழுதிய ஆண்டினைப் பார்க்காமல் பின்னர் வந்த புதினம் எழுதியவர் பிராமணர் என்பதால் அதுவே முதல் புதினம் என்றனர். எனவே, அவதானி குறித்தும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எனினும் இதன் படையல் பாடலை இங்கே அளிக்கின்றேன்:
            சீராருமகராணி விக்டோரியாவெநுஞ்
                       செல்விசெங்கோலினோங்கும்
           
             தேசங்கள்பலவுளும் வீசுபுகழ்மேவுமித்
                      தென்னிந்தியா நாட்டிலே

             ஏராரிளஞ்சிறுவர் வித்தையது கற்றுமன
                        விருளோடமருளோடவே

             ஏற்றவப்பெருமாட்டி யாற்றலுடனாட்டிய
                        விருங்கலை வகுப்பினுக்கே

             நேராருமதிகாரி யூணர்கல்விமுதல்
                        நேயமாங்களித்த

             நிபுணராம்-அயர் பர்ட்டந்பெளவல்துரைபாற்கலைகள்
                         நேர்மையுடன் கற்றுணர்ந்த

            பாராணுமாக்கர் கூட்டத்தோரேழைநான்
                        பாடுமிச்சிறுநூலவர்

            பண்பிற்குமிக்கபே ரன்பைற்குமீடாப்
                       பரிந்தங்கிதஞ் செய்வனே.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆதியூர் அவதானி சரிதம்

தமிழ் இந்து, பெருமாள்முருகன்
Comment   ·   print   ·   T+  
இலக்கிய வரலாற்று நூல்களில் எல்லாம் ‘முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ‘முதல் தமிழ் நாவல்’ என்னும் அடையாளத்துடன் 1994ஆம் ஆண்டு ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்னும் நூல் வெளியாகியுள்ளது. ‘வித்துவான் சேஷையங்கார் இயற்றியது’ என்று ஆசிரியர் பெயர் காணப்படுகிறது. இதைப் பதிப்பித்தவர்கள் தமிழ் நவீன இலக்கிய வரலாற்று முன்னோடிகளாகிய ‘சிட்டி, சிவபாதசுந்தரம்’ ஆகியோர்.
‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’, ‘தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ ஆகிய நூல்களை எழுதியவர்கள் இவர்கள். இவ்வரலாற்று நூல்களை எழுதுவதற்காகப் பலவிதமான தேடல்களை நிகழ்த்தியவர்கள். நூல்கள் வெளிவந்த பின்னும் முடிவு பெறாத தேடலின் மூலமாகக் கண்டடைந்த ஒன்றுதான் ‘ஆதியூர் அவதானி சரிதம்.’ 1875ஆம் ஆண்டு வெளியான நூல் இது. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் இந்நூலின் பிரதியைக் கண்டு நகலெடுத்தவர் சிவபாதசுந்தரம் அவர்கள். விரிவான முன்னுரை ஒன்றையும் எழுதி கோவை விஜயாப் பதிப்பகம் மூலமாக நூலை வெளியிட்டனர்.
இவர்களுக்கு முன்னரே இதைத் தமிழின் முதல் நாவல் என்று சொன்னவர் ஒருவர் உண்டு. 1976ஆம் ஆண்டு ஜூலை – செப்டம்பர் மாதப் ‘புலமை’ இதழில் ‘ஆதியூர் அவதானி பாட்டு நாடோடி இலக்கியத்தில் ஒரு திருப்பம்’ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதை எழுதியவர் பெரும்தமிழறிஞராகிய மு.இராகவையங்காரின் பேரன் ஜெ. பார்த்தசாரதி என்பவர்.
இந்நூலை இயற்றிய தூ.வீ.சேஷையங்கார் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்று தெரிகிறது. ‘சென்ற நூற்றாண்டில் கீர்த்தி வாய்ந்த பேராசிரியராகவும் பொறியியல் வல்லுநராகவும் வாழ்ந்து வந்தார் என்பது தவிர அதிக விவரங்கள் கிடைக்கவில்லை’ என்பது ஜெ.பார்த்தசாரதியின் குறிப்பு. இந்நூலின் முன்னுரையில் ‘இதற்கு முன் யானியற்றிய குணாகரம் எனுங்காவியம்’ என்று குறிப்பிட்டிருப்பதால் ‘குணாகரம்’ என்னும் நூல் ஒன்றையும் அவர் இயற்றி இருப்பதாகத் தெரிகிறது. அதைக் காவியம் என்று குறிப்பிடுவதோடு ‘முதிய தமிழும் புதிய கருத்தும்’ கொண்டது எனவும் தெரிவிக்கின்றார். காவியம் என்று குறிப்பிடுவதால் அதுவும் கதை தழுவிய நூலாகவே இருக்க வேண்டும்.
ஆதியூர் அவதானி சரிதத்தைச் சென்னை பிரசிடென்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்தவரும் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவரும் அவரது ஆசிரியருமான ‘அயர்பர்ட்டன் பௌவல் துரை’ அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நூலின் கதையைப் பற்றி ‘இதிலடங்கிய சங்கதிகள் பல இந்துக் குடும்பங்களில் இக்காலத்தி லுள்ளவைகள்தாம். ஆதலால் இது பொய்ப்பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்’ என்கிறார்.
ஆதியூர் அவதானி சரிதத்தை ‘An original Tamil Novel’ என்று ஆங்கிலத்திலும் ‘நவீனமாகவியற்றிய கட்டுரைக் கதை’ எனத் தமிழிலும் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார். ‘நானோவெனில் நமது வித்துவான்கள் வழக்கமாயிறங்குந் துறைகளை விட்டுக் காலத்தியற்கையைத் தழுவிப் புதுத்துறையில் காலிட்டேன்’ என்று தம் முயற்சி பற்றித் தெளிவுடன் கருத்துரைத்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தோன்றிய நாவல்கள் பலவற்றிற்கு இரட்டைப் பெயர் சூட்டும் வழக்கம் இருந்துள்ளது. அதேபோல இந்நூலுக்கும் ஆங்கிலத்தில் ‘ATHIYUR AVADHANI OR THE SELF – MADE MAN’ என இரட்டைப் பெயர் காணப்படுகிறது.
நூலின் கதையைப் பற்றி ஜெ.பார்த்தசாரதி அவர்கள் தெரிவிக்கும் சுருக்கம் இது: ‘உறவினர்களின் ஓயாத தொல்லை; ஊரினரின் வம்புப் பேச்சுகள்; அண்டை அயலார் முட்டுக்கட்டைகள்; பொருந்தாத இல்லறத்தின் இன்னல்கள் – இவைகளைப் பின்னணியாகக் கொண்ட வாழ்க்கையில் பெருங்கசப்புற்று ஓர் அந்தணன் கலப்பு  சாதி மணத்தை விரும்பி அதன் புனிதத்தை நாட்டுவது கதையின் சாராம்சம்.’
நூல் முழுவதும் பாடல் வடிவிலானது. நாவல் என்பது உரைநடை இலக்கிய வடிவம் என்பது பொதுப்புரிதல். ஆனால் இது பாடல் வடிவில் இருக்கிறதே என்று கேட்டால், 1986ஆம் ஆண்டு விக்ரம் சேட் எழுதிய The Golden Gate என்னும் நாவல் கவிதை வடிவில் எழுதப்பட்டதுதான். அதை நாவல் என்று ஏற்றுக்கொள்ளும்போது இதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோர் வினா எழுப்புகின்றனர். இதுதான் தமிழின் முதல் நாவல் என்பதில் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
வெளியாகிக் கிட்டத்தட்ட நூற்றிருபது ஆண்டுகளுக்குப் பிறகு மறு கண்டுபிடிப்புச் செய்யப்பட்டு மறுபதிப்பு வெளியிடப்பட்ட இந்நூலைத் தமிழ் கூறு நல்லுலகம் பொருட்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. இதை முதல் நாவலாக ஏற்றுக்கொள்ளலாமா கூடாதா என்று விவாதிக்கவில்லை. வெகுசிலருக்கு மட்டுமே அறிமுகமான நூலாக இது இன்றுவரைக்கும் உள்ளது. பாடல் வடிவிலானதும் சமகால வாழ்வைப் பற்றியதுமான இந்நூலை நாவல் என்று சொல்லலாமா? இல்லை என்றால் வேறு என்னவென்று வகைப்படுத்துவது? எந்த வகைக்குள்ளும் சேராத காரணத்தால் இப்படி ஒரு நூல் வரவில்லை என்பது போல மௌனம் காத்துவிடலாமா?

சனி, 22 டிசம்பர், 2012

எழுத்தாளர் செல்வராசின், "தோல்' புதினத்திற்குச் சாகித்ய அகடமி விருது


எழுத்தாளர் செல்வராசின், "தோல்'  புதினத்திற்குச்  சாகித்ய அகடமி விருது

புதுதில்லி: இந்தாண்டுக்கான சாகித்ய அகடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில், திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர், டி.செல்வராஜ் எழுதிய, "தோல்' என்ற நாவலுக்கு, விருது கிடைத்துள்ளது. இந்திய மொழிகளில், வெளியாகியுள்ள கதை, நாவல்களில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு, ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டு, 24 இந்திய மொழிகளில் இருந்து, கவிதை நூல்கள் 12, சிறுகதை 4 , நாவல்கள் 4 மற்றும் சுயசரிதை, விமர்சனம் பிரிவில் தலா ஒரு நூல்கள் தேர்வு பெற்றுள்ளன.தமிழில் திருநெல்வேலியை சேர்ந்த, டி. செல்வராஜ் எழுதிய, "தோல்' நாவல், விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது.
தமிழில் சிறந்த நூலை தேர்வு செய்யும் குழுவில், பேராசிரியர் கே.வி. பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான், சா.கந்தசாமி ஆகியோர், இடம் பெற்று இருந்தனர்.செல்வராஜ் திண்டுக்கல்லில் வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார்.திண்டுகல்லை சுற்றி செயல்படும் தோல் பதனிடும் தொழிலை மையமாக வைத்து, "தோல்' நாவலை எழுதியுள்ளார்.