பாகுபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகுபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மே, 2025

மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி -இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? –தொடர்ச்சி)

உழைப்பிலும் உழைப்பிலிருந்து கிடைக்கும் ஊதியத்திலும் பாகுபாடு கற்பித்து இழிவுபடக் கூறும் சனாதனத்தை ஏற்போர் மனித நேயமற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.

பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்” (மனு 8.413) என்கிறது சனாதனம். பிராமணன் உழைக்கமாட்டானாம் . சூத்திரன் என அவனால் சொல்லப்படும் பிரிவினர் உழைக்கும் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வானாம்.

“ஒருவேளை, சூத்திரன் எனப்படுவோன் தான் உழைத்துப் பெற்ற ஊதியத்தைப் பிராமணனுக்குத் தராவிட்டால் என் செய்வது?  “சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அஃது அவனுடைய எசமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றிச் சம்பாதித்தவனுக்குச் சேராது” (மனு 8.416.) என்கிறது சனாதனம். எனவே,  “பிராமணன் சந்தேகமின்றிச் சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்” (மனு 8. 417)  என்கிறது சனாதனம். பிராமணன் இருந்துண்டு உண்பானாம்.   சூத்திரன் எனப்படுவோன் உழைத்துண்டு உண்ணக்கூடாதாம். இதுதான் சனாதனம்.

தான் உழைப்பதிலிருந்து பெறும் ஊதியத்தைக்கூடப் பயன்படுத்த உரிமையில்லை எனப் பிரிவினையையும் தீண்டாமையையும் காட்டும் சனாதனத்தைத்தான்  மெத்த படித்தவர்கள் எனப்படுபவர்களும் உயர்த்திக் கூறுகிறார்கள்.

வெளிப்படையாகச் சனாதனம் கூறும் பாகுபாட்டை இல்லை என்பவர்களை நாம் எந்த வகையில் சேர்ப்பது?

இவ்வாறு மிகுதியான பாகுபடுத்தும், இழிவு படுத்தும் கருத்துகளைப் பார்க்கலாம். மேலும் சிலவற்றையும் பார்ப்போம். பின்வரும் சனாதனக் கருத்துகளைப் படிப்பவர்கள் யாரும் அதில் பாகுபாடு இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார். ‘’நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் ஊரிலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (மனு 4 : 61).

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (மனு 8 : 21)

நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (மனு 8 : 22).

அன்றாடப் பின்பற்றலை மேற்கொள்ளாத பிராமணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது. வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (மனு 8 : 417)

வருணமற்றவர் – நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர்- என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார். தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (மனு 10 : 47 – 49)

இவர்கள் வாழும் இடமாக ‘’இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்’’ (மனு 10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.

‘சண்டாளர்களின்’ இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார். ஊருக்கு வெளியில் சண்டாளனும், சுவபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது. (மனு 10 : 52)

இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும் (மனு 10 : 52).

இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார் மனு. ‘’ பிராமணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு’’ (மனு 10 : 62). என்கிறார்.

(தொடரும்)

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்? பெ.மணியரசன் கண்டனம்

 அகரமுதல

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில்

கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.

கடந்த 07.08.2020 அன்றிரவு பெய்த பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.

மேலும், 08.08.2020 அன்று மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் கேட்டும், அவர்களிடம்  ஒப்படைக்க மறுத்து, அத்தேயிலைத் தோட்டத்தில் ஒரே குழிக்குள் அனைத்து உடல்களையும் புதைத்திருக்கிறது கேரள அரசு. இவர்கள் மகுடை(கொரோனா) நோயாளிகள் அல்லர்; ஊர் பேர் தெரியாத வழிப் போக்கர்களும் அல்லர்! வீடுகளில் தங்கி வேலை பார்த்து குடும்பம் நடத்திய மக்கள். அப்பகுதியிலுள்ள மற்ற குடியிருப்புகளில் இவர்களின் உறவினர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ய வசதியாக, தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றாடிக் கேட்டுள்ளனர். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

கேரள அரசு தமிழர்களின் மனித மாண்புகளை துச்சமாகக் கருதி, இழிவு செய்துவிட்டதாகவே கருதுகிறோம்.

இதே கேரளத்தில், 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான நேர்ச்சியில்(விபத்தில்) 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாய மடைந்துள்ளனர். இது மிகவும் கொடுமையான துயரச் செய்தி! இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருக்கிறது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலைக்கு 10 நூறாயிரம் உரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்குத் தலைக்கு 5 நூறாயிரம் உரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. கேரள முதலைமச்சர் கோழிக்கோடு மருத்துவமனைக்குச் சென்று விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், மூணாற்றில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்த் தொழிலாளிகளைப் பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை.

பாட்டாளி வருக்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் மா.பொ.க.(சி.பி.எம்.) முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல்  இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விசயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்குச் செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு  25 நூறாயிரம் உரூபாய் வீதம் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள்! இதுபோன்ற நேர்ச்சிகள்(விபத்துகள்) இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு இடைக்கால மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

 

=====================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=====================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=====================================

 


புதன், 16 அக்டோபர், 2013

மீனவர் சிக்கலில் மத்திய அரசு பாகுபாடு: செயலலிதா குற்றச்சாட்டு

மீனவர் சிக்கலில் மத்திய அரசு பாகுபாடு: தலைமையருக்கு அனுப்பிய மடலில் செயலலிதா குற்றச்சாட்டு


இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுமாறு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 65 பேரை விடுவிப்பதற்கு, அங்குள்ள தூதரம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத்தின் மீனவர் மீதான தாக்குதலுக்கு உடனே பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியதைச் சுட்டிக்காட்டியவர், மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைக் கோரி மீண்டும் மீண்டும் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாததது மிகவும் வேதனையடையச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
37 மீனவர்கள் கைது
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதலும், கைது நடவடிக்கையும் தொடர்வதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 24 மணி நேரத்துக்குள் 37 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டதையும், அவர்களிடம் இருந்து 9 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டதையும் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
தாம் எத்தனை முறை கடிதம் எழுதினாலும், அதற்கு உரிய நடவடிக்கையே எடுக்கப்படுவதில்லை என்று பிரதமரை குறை கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் அலட்சியப்போக்கு காரணமாக, இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
குர்ஷித் பயணம் வீண்
சமீபத்தில் இலங்கைப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மீனவர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரபட்சம் ஏன்?
அண்மையில், குஜராத்தையொட்டி கடல் எல்லையில் மீனவர் மீது பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை உடனடியாக மத்திய அரசு கண்டித்ததுடன், பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி, துரிதகதியில் செயல்பட்டுள்ளது என்ற விவரம் தனக்கு கிடைத்துள்ளது என்ற முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை மட்டும் உதாசீனப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பாராமுகம் காரணமாக, தங்கள் சொந்த நாடே தங்களை கைவிட்டுவிட்டது என்ற மன நிலையில் தமிழக மீனவர்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக தலையிடுக
இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 மீனவர்களை விடுவிக்கவும், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட 35 படகுகளை மீட்டுத் தரவும், இந்தியத் தூதரகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அப்பாவி இந்திய மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரிடன் நடவடிக்கையை நிறுத்துவதற்கு, அந்நாட்டு அரசிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 
- தமிழ்இந்து

ஞாயிறு, 24 மார்ச், 2013

இலங்கைத்தமிழர் : மத்திய அரசு பாகுபாடு: சான்பாண்டியன்

இலங்கைத்தமிழர் : மத்திய அரசு பாகுபாடு: சான்பாண்டியன்
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு பாரபட்சம்: ஜான்பாண்டியன்
நாகர்கோவில், மார்ச். 24-

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று கன்னியாகுமரி வந்தார். அங்கு நடந்த மாவட்ட அளவிலான கட்சியின் அரசியல் பயிற்சி பயிலரங்கத்தின் 2-வது நாள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், தேர்தலில் நான் போட்டியிடுவேனா? என்பதை தேர்தல் நேரத்தில் பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவு எடுக்கும். பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகும் சரியான நடவடிக்கை அந்த சட்டத்தின் மூலம் எடுக்கப்படவில்லை. இதை கண்டிக்கிறேன்.

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது அரசியல் நாடகம். 2009-ல் இந்த முடிவை எடுத்திருந்தால் இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய பிறகு மு.க. ஸ்டாலின், அழகிரி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை.

பரமக்குடி கலவரம், சென்னையில் ஐகோர்ட்டு பிரபல வக்கீல் சங்கரசுப்பு மகன் வக்கீல் சதீஷ் கொலை வழக்கு போன்றவற்றில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டும் இன்னும் சி.பி.ஐ. விசாரணை தொடங்காதது கண்டிக்கத்தக்கது.

தலித் அமைப்புகளான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை அரசியல் அமைப்பு ரீதியாக ஒன்று சேர வாய்ப்பில்லை. ஆனால் சமுதாய பிரச்சினைக்காக சமுதாய ரீதியில் ஒன்று சேர்ந்து போராடும்.

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த கொடூர அரக்கன் ராஜபக்சேவை அங்கு தமிழ் ஈழம் அமையும் வரை இலங்கையிலிருந்து துரத்த வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு தனி ஈழம் அமையும். இலங்கை பிரச்சினையில் இந்தியா பாரபட்சமாக நடந்து வருகிறது.

மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படும்போதுகூட இந்திய மீனவர்கள் என்று கூறாமல் தமிழக மீனவர்கள் என்று பிரித்து கூறுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சில இடங்களில் காவல்துறை அதிகாரிகளால் சீர்குலைந்து உள்ளது. மற்ற இடங்களில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. கன்னியாகுமரியில் பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் எத்தனை பேராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் எல்.ஐ.சி. வீட்டுவசதி வாரியத்தில் வாங்கிய கடனுக்காக கொடுத்த காசோலைகளை அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர். இதுபற்றி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கத் தவறினால் எனது தலைமையில் அந்த அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும். கலப்பு திருமணங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் போலி காதல், திருமணங்களைதான் எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.