தமிழ்இந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்இந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2013

மீனவர் சிக்கலில் மத்திய அரசு பாகுபாடு: செயலலிதா குற்றச்சாட்டு

மீனவர் சிக்கலில் மத்திய அரசு பாகுபாடு: தலைமையருக்கு அனுப்பிய மடலில் செயலலிதா குற்றச்சாட்டு


இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுமாறு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 65 பேரை விடுவிப்பதற்கு, அங்குள்ள தூதரம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத்தின் மீனவர் மீதான தாக்குதலுக்கு உடனே பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியதைச் சுட்டிக்காட்டியவர், மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைக் கோரி மீண்டும் மீண்டும் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாததது மிகவும் வேதனையடையச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
37 மீனவர்கள் கைது
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதலும், கைது நடவடிக்கையும் தொடர்வதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 24 மணி நேரத்துக்குள் 37 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டதையும், அவர்களிடம் இருந்து 9 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டதையும் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
தாம் எத்தனை முறை கடிதம் எழுதினாலும், அதற்கு உரிய நடவடிக்கையே எடுக்கப்படுவதில்லை என்று பிரதமரை குறை கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் அலட்சியப்போக்கு காரணமாக, இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
குர்ஷித் பயணம் வீண்
சமீபத்தில் இலங்கைப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மீனவர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரபட்சம் ஏன்?
அண்மையில், குஜராத்தையொட்டி கடல் எல்லையில் மீனவர் மீது பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை உடனடியாக மத்திய அரசு கண்டித்ததுடன், பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி, துரிதகதியில் செயல்பட்டுள்ளது என்ற விவரம் தனக்கு கிடைத்துள்ளது என்ற முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை மட்டும் உதாசீனப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பாராமுகம் காரணமாக, தங்கள் சொந்த நாடே தங்களை கைவிட்டுவிட்டது என்ற மன நிலையில் தமிழக மீனவர்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக தலையிடுக
இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 மீனவர்களை விடுவிக்கவும், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட 35 படகுகளை மீட்டுத் தரவும், இந்தியத் தூதரகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அப்பாவி இந்திய மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரிடன் நடவடிக்கையை நிறுத்துவதற்கு, அந்நாட்டு அரசிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 
- தமிழ்இந்து

தலைமையர் உறுதி: உண்ணா நோன்பை முடித்துக்கொண்டார் தியாகு

தலைமையர் உறுதி: உண்ணா நோன்பை முடித்துக்கொண்டார் தியாகு


தியாகு
தியாகு
இதன் தொடர்ச்சியாக, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
காமன்வெல்த் மாநாடு, நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இலங்கை தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த இந்தியா உள்பட 54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் அவர், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
தியாகு, தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுவிட்டு வேறு அறவழியில் போராடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி, அவருக்கு ஆலோசனை வழங்கி, வேண்டுகோள் விடுத்தார். எனினும் தியாகு போராட்டத்தை கைவிடவில்லை.
'தமிழக உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்'
தியாகுவின் உண்ணாவிரதப் போராட்டம் 14-வது நாளாக திங்கட்கிழமை நீடித்த நிலையில், அன்றைய தினம் இரவு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார்.
அப்போது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வலியுறுத்தினார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தியாகுவின் உடல்நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங், 'காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தமிழ் மக்கள் மற்றும் உங்கள் கட்சியின் (திமுக) உணர்வுகளை மதித்து நல்ல முடிவு எடுப்போம். திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டு, தியாகுவின் போராட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று டி.ஆர்.பாலுவிடம் கூறினார். அதுதொடர்பான கடிதத்தையும் பாலுவிடம் மன்மோகன் வழங்கினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் கொடுத்தனுப்பிய கடிதத்தை திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகுவிடம் திங்கட்கிழமை இரவு நேரில் வழங்கினார்.
இந்தச் சூழ்நிலையில், தியாகு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மதியம் வாபஸ் பெற்றார். குழந்தைகள் கொடுத்த பழச் சாற்றை குடித்து அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். 

- தமிழ்இந்து, 

பன்னாட்டு விருது பெறும் மாணவி

பன்னாட்டு விருது பெறும் மாணவி

Comment   ·   print   ·   T+  
1
  • ரஸியா சுல்தான் (படங்கள்: ஆசாத்)
    ரஸியா சுல்தான் (படங்கள்: ஆசாத்)
பள்ளிக்கூடம், படிப்பு, தொலைக்காட்சி, கதைப் புத்தகம், சினிமா, ஹோட்டல், பர்த் டே பார்ட்டி, ஃபேஸ்புக்...இந்தியாவில் பதின் பருவத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ மாணவிகளின் காலம் இப்படித்தான் கழிகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஒவ்வொருவரும் தத்தமது பின்னணிக்கு ஏற்ப வாழ்க்கையை முடிந்தவரையிலும் மகிழ்ச்சியாகக் கழிக்கவே விரும்புகிறார்கள். ஆனால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரசியா சுல்தான் விதிவிலக்கு. இவருக்கும் கல்வி முக்கியம்தான். ஆனால் தன்னுடைய கல்வியைப் போலவே பிறருடைய கல்வியைப் பற்றியும் கவலைப்படுகிறார் பிளஸ் டூ படிக்கும் இந்தப் பெண். கவலைப்படுவதோடு நின்றுவிடாமல் அதற்காக இவர் செய்துவரும் பணிகள் இவருக்கு மிகப் பெரிய விருதைப் பெற்றுத்தரும் அளவுக்குச் சிறப்பாக இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் தம் அடிப்படை உரிமையான கல்வியைக்கூடப் பெற முடியாத நிலைமை நம் நாட்டில் இன்னும் உள்ளது. இதற்காகப் போராடிவருகிறார் 15 வயது ரஸியா சுல்தான். இவரது சேவையைப் பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபை, இவரைத் தனது முதல் மலாலா விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது இந்த அக்டோபர் மாதம் தில்லியில் அளிக்கப்பட்ட உள்ளது.
செயற்கரிய செயல்களைச் செய்த மலாலாவின் பெயரால் வழங்கப்படும் மலாலா விருதுக்காக (விவரத்திற்குக் காண்க: பெட்டிச் செய்தி) அறிவிக்கப்பட்டுள்ள ஏழு குழந்தைகளில் இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பெங்களூருவைச் சேர்ந்த பார்வையற்ற மாணவன் அஸ்வின் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரஸியா சுல்தான். மிகவும் பின் தங்கிய பகுதிகளில் வாழ்பவர்களும் முயன்றால் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு பெரிய உதாரணம் ரஸியாவின் வாழ்க்கை.
உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள மீரட் மாவட்டத்தின் பல கிராமங்கள் கால்பந்துகள் மற்றும் நைலான் கயிறுகள் தயாரிப்பிற்கு பெயர் போனவை. காரணம், அங்குதான் இந்தப் பணிக்காகக் குறைந்த கூலியில் குழந்தைத் தொழிலாளர்கள் எளிதாகக் கிடைப்பார்கள். இதனால் அவர்கள் பள்ளிக்குச் செல்லவும் நேரமிருக்காது. கல்வி இல்லாமலே இவர்கள் வளர்ந்துவருவது பல வருடங்களாக நடந்துவரும் வாடிக்கையான ஒரு வருத்தம்.
இதுபோன்ற கிராமங்களில் ஒன்றான நக்லா கும்பாவில் வாழும் பர்மான்-ஜாஹிதா தம்பதிகளுக்கு அக்டோபர் 10, 1998இல் பிறந்தவர் ரஸியா சுல்தான். வீட்டில் மரியம் எனச் செல்லமாக அழைக்கப்படுபவரின் தந்தை வியாபாரத்தில் நஷ்டமாகி செங்கல் சூளையில் கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த நிலையிலும் தனது பெண்ணை எப்படியும் படிக்க வைக்க வேண்டும் என விரும்பியவர் நான்கு வயதில் அருகிலிருந்த ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்தார். ஆனால், மாலையில் வீட்டிற்கு வந்த பின் ரஸியாவிற்குக் கால்பந்து தோல்களை வெட்ட வேண்டிய கட்டாயம். இப்படியே இரண்டையும் தொடர்ந்தவருக்கு ஐந்தாம் வகுப்புப் பயிலும்போது, அந்தப் பகுதியில் நடந்த குழந்தைத் தொழிலாளர்கள் காக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் குழந்தைப் பருவத்தில் கல்வி பயிலாமல் பணிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளின் நிலையை உணரத் துவங்கி விட்டார் ரஸியா.
“இதற்குத் தூண்டுகோலாக இருந்து இன்றுவரை எனக்கு உதவி வருபவர் ‘பச்பன் பச்சாவ் அந்தோலன்’ எனும் குழந்தைகள் நல அமைப்பின் சமூக சேவகர் ஷேர்கான் . இவர், குழந்தைத் தொழிலாளர்களை மீட்க வேண்டி இந்தப் பகுதியின் பத்து கிராமங்களைத் தத்து எடுத்து 2005இல் குழந்தைகள் நலப் பஞ்சாயத்து ஒன்றை அமைத்தார். அதன் உறுப்பினராகச் சேர்ந்த எனக்கு, குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் பணியாற்றுவதன் விளைவை அதிகமாக உணர முடிந்தது. இதை எனது கிராமத்தில் இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களுக்குப் பொறுமையாக எடுத்து கூறினேன். ஆரம்பத்தில் என்னைப் பொருட்படுத்தாதவர்கள், பிறகு தொடர்ந்து நான் பொறுமையாக அவர்களை அணுகியபோது கேட்கத் துவங்கினார்கள். பெற்ற குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியைக்கூடத் தரவில்லை என்பது பெற்றோர்கள் அவர்களுக்கு செய்யும் பெரிய துரோகம். இது கிடைத்தால்தான் எந்த குழந்தையும் அரசு சலுகைகளை முழுமையாக அனுபவிக்க முடியும். தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்டுப் பெற முடியும். இதை எடுத்துக் கூறியதன் பயன் எனக்கு சிறிது தாமதமாக கிடைத்தது” என்று சொல்லும் ரஸியா சுல்தானுக்கு ஒரு சகோதரி மற்றும் இரு சகோதரர்கள்.
இதன் பலனாக அந்த குழந்தைகள் நலப் பஞ்சாயத்து தலைவரின் தேர்தல் வந்தபோது போட்டியிட இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் பதவியின் பலன் என்ன என்று ரஸியாவுக்குச் சரியாகத் தெரியாது. மொத்தம் 242 வாக்குகள். போட்டியிட்டவர்கள் பத்துப் பேர். ரஸியா 102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் தனது கல்வியுடன் சேர்த்துக் குழந்தைத் தொழிலாளர்களைக் காக்கும் பணியில் முழுமூச்சுடன் இறங்கினார். விளைவு இதுவரை 48 குழந்தை தொழிலாளர்களை மீட்டுப் பள்ளிக்கு அனுப்பியுள்ளார். இந்தப் பணிகளுக்கிடையில் தன் கல்வியின் மீதான கவனத்தையும் அவர் இழந்துவிடவில்லை. இப்போது ப்ளஸ் டூ பயில்கிறார்.
இத்துடன் தன் கடமையை முடித்துக்கொள்ளாமல், போதுமான வகுப்பறை மற்றும் கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதைப் போராடிப் பெற்றுத் தந்திருக்கிறார். இதன் பிறகு பச்பன் பச்சாவ் அந்தோலனின் தேசிய உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருகிலுள்ள மாவட்டங்கள் மட்டுமன்றி ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களிலும் குழந்தைகள் கல்விக்காகப் போராடியுள்ளார். இவரது அயராத பணியைக் கண்டு அசந்துபோன அந்தச் சமூக சேவை அமைப்பு அவரை நேபாள எல்லையில் உள்ள மகேந்தரபூர் முதல் தலைநகரமான காட்மாண்டு வரையிலான 13 நாள் பாதயாத்திரைக்காகத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது. நேபாளத்தில் இருந்த இளம்பெண்கள், ‘பணிக்காக’ என்ற பெயரில் இந்தியாவில் விபச்சாரத்தில் இறக்கிவிடப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் ரஸியா.
இந்த அமைப்பின் பணியைப் பற்றிக் கேள்விப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கார்டன் பிரவுன் கடந்த வருடம் தில்லியிலுள்ள அதன் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். அங்கு ரஸியாவின் பணிகளைப் பற்றி கேள்விப்பட்ட பிரவுன், அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது ரஸியா ஒரு பெரிய அனுபவசாலிபோல பிரவுனிடம் வைத்த கோரிக்கை அவரை மேலும் மலைக்க வைத்துள்ளது.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து உலகின் அனைத்துக் குழந்தைகளும் கட்டாயக் கல்வி பெறும் பொருட்டு உலக அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் எனவும், இதற்காக ஐக்கிய நாடுகள் சபை நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதைக் கேட்டு வியந்த பிரவுன், ரஸியாவை மனமாரப் பாராட்டியதுடன் மலாலா பெயரிலான முதல் விருதிற்கும் பரிந்துரைத்தார்.
“நன்றாகப் படித்து மருத்துவராகி அன்னை தெரசாவைப் போல் சமூகப் பணி செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்” என்று சொல்லும் ரஸியா, இதற்கு முன் 2011இல் ‘சிட்டிசன் ஜர்னலிஸ்ட்’ விருதை அமிதாப்பச்சன் கைகளால் வாங்கினார். இந்த விருதிற்கான அறிவிப்பு வந்தபோது ஜெய்பூரில் இருந்த அவர் உடனடியாகத் தன் கிராமத்துக்கு வந்து தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி வாங்கிக்கொண்டார். “இதுபோன்ற ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் என் பெற்றோரை அணைத்துக் கொண்டாடுவேன்” என்கிறார் பரவசத்துடன்.
தன் கல்வியிலும் பணிகளிலும் வழக்கம்போல் மூழ்கியிருக்கும் இந்த டீன் ஏஜ் பெண், விருது பெறும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
மலாலா விருது: பின்னணி என்ன?
தாலிபான்களுக்கு எதிராக மலாலா எழுத்துக்களால் போராடியது பாகிஸ்தானின் இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பியது. இதனால் மூன்று வருடங்களாக பாகிஸ்தானின் புகழ் பெற்ற சிறுமியாக இருந்தார் மலாலா. அவர் வசிக்கும் ஸ்வாத் பள்ளத்தாக்கின் பெண் குழந்தைகள் படிப்பிற்காக ‘மலாலா எஜுகேஷனல் பவுண்டேஷன்’ என ஒரு அமைப்பைத் துவக்கி சமூக சேவையும் ஆற்றிவந்தார் மலாலா. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறப்பு பிரதிநிதி பாகிஸ்தானுக்கு வந்தபோது அவரிடம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமாறு தைரியமாகக் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு பெண் கல்வியை பாகிஸ்தானில் நிலை நாட்ட முயன்ற மலாலா யூசூப்ஜாய், கடந்த வருடம் அக்டோபரில் கொடூரமாகச் சுடப்பட்டார். உலகிற்கே முன்னுதாரணமான துணிச்சலான அந்த 14 வயதுப் பெண்ணுக்கு ஆதரவாக இந்தியா உட்பட பெரும்பாலான நாட்டு மக்கள் திரண்டு நின்றனர்.
பிறகு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தவரை கௌரவிக்க வேண்டி ஐக்கிய நாடுகள் சபை, ஜூலை 12ஆம் தேதியை மலாலா தினமாக அறிவித்துள்ளது. மேலும், குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடும் மாணவ, மாணவிகளுக்கு மலாலாவின் பெயரில் ஒரு புதிய விருது ஒவ்வொரு வருடமும் அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாணு

இனிமையாக க் கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாணுவின் கண்டுபிடிப்பு

Comment (2)   ·   print   ·   T+  
2
  • உமாதாணு கண்டுப்பிடித்த யூனூஸ் முறை
    உமாதாணு கண்டுப்பிடித்த யூனூஸ் முறை
  • மனைவியுடன் உமாதாணு
    மனைவியுடன் உமாதாணு
கணிதப் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க எளிய வழிமுறைகள் மூலம் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் உமாதாணு.
இனிமையாகவும், ஆர்வத்தோடும் கணிதப் பாடங்களை படிப்பதற்கு ஒரு எளிய வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் என்.உமாதாணு.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், கல்லூரியில் அவருக்குப் பிடித்த கணிதப் பாடத்தை படித்தார். அதுவே, அவரது வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
1962-ல் கணித ஆசிரியராக கோவையில் பணியைத் தொடங்கினார் உமாதாணு. இரண்டு தனியார் பள்ளிகளில் 35 ஆண்டுகள் பணியாற்றி 1997-ல் ஓய்வுபெற்றார். அதன்பிறகு ஏழை மாணவர்களுக்கு உதவ திட்டமிட்டார்.
வசதிபடைத்த மாணவர்கள் அபாகஸ் போன்ற பயிற்சிகள் மூலம் கணிதத்திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரியான வாய்ப்பு இல்லாத ஏழை, எளிய மாணவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு கணிதம் கற்றுக்கொடுக்கும் எளிய முறையையும்,அதற்கான உபகரணங்களையும் உருவாக்கினார். இந்தப் பணியில் அவரது மனைவி கனகம் உறுதுணையாக இருந்தார்.
உதாரணத்துக்கு, கணக்குப் பாடத்தின் முக்கோணயியல், வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்று விளக்குகிறார். மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்க அதிகாரிக்கு, கடலுக்குள் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. உடனே அந்த அதிகாரி, அந்த கப்பல் கடலில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று கண்டறிவதற்காக, எவ்வளவு இறக்கக் கோணத்தில் கப்பல் தெரிகிறது என்று கிளினாமீட்டர் உதவியுடன் பார்த்து கணக்கீடு செய்வார். கரையில் இருந்து எவ்வளவு வேகமாக பாதுகாப்பு கப்பல் சென்றால், மூழ்கும் கப்பலில் உள்ள சிப்பந்திகளை காப்பாற்ற முடியும் என்று சில நொடிகளிலே கணக்கிட்டு வழிகாட்டுவார். இப்படி, ஏற்றகோணம்,இறக்ககோணம் வாழ்க்கையில் எவ்வளவு பயன்படுகிறது என்று விளக்கிவிட்டால், மாணவர்கள் உற்சாகமாக இந்தப் பகுதியைப் படிப்பார்கள். இதேமாதிரி ஒவ்வொரு பாடப்பகுதியையும் வாழ்வியலோடு ஒப்பிட்டு சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் புரிந்து நினைவில் கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், அதன் காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் முறையை உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் உமாதாணு, அதனை உதாரணத்துடன் விளக்குகிறார்.
இரு எண்களின் பெருக்குத் தொகை -480, கூட்டுத் தொகை -1 என்று எடுத்துக் கொண்டால், இதன் காரணிகளைக் கண்டுபிடிக்க தற்போதைய கற்பிக்கும் முறையில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், நான் கண்டுபிடித்துள்ள முறையில் இரண்டே நிமிடங்களில் காரணிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார். அதாவது, பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க வேண்டும். அதேநேரத்தில் சிறிய எண்ணை அதே எண்ணால் பெருக்க வேண்டும். அப்படி செய்தால், எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் இரண்டே நிமிடங்களில் விடை கிடைத்துவிடும். இந்த எளியமுறைக்கு யூனூஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதுபோல, 6-ம் வகுப்பில் இருந்தே ஜியோமெட்ரிக் பயன்படுத்தும் மாணவர்களுக்கு மூலை மட்டங்களின் முழு பயன்பாடு சொல்லித் தரப்படுவதில்லை. மூலை மட்டங்களைக் கொண்டு இணைகோடு, செங்குத்துக் கோடு வரையலாம் என்று மட்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், மூலை மட்டங்களைக் கொண்டு எந்த அளவில் வேண்டுமானாலும் கோணங்களை வரைய முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
இப்படி மூலைமட்டங்களின் பயன்பாட்டை பள்ளியிலே முழுமையாக படித்துவிட்டால் பி.இ. படிக்கும்போது எளிதாக இருக்கும் என்கிறார்.
கணிதப் பாடத்தை இனிமையாகக் கற்றுக்கொடுக்க இவர் கண்டுபிடித்துள்ள எளியமுறை, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்கள், அயல்நாடுகளையும் எட்டியிருக்கிறது.
சென்னை மாநகராட்சி மாணவர்களையும் இப்போது தொட்டிருக்கிறது. இனி வரும்காலத்தில் சென்னைப் பள்ளி மாணவர்களும் கணிதப்பாடத்தில் சக்கை போடு போடுவார்கள் என்று நம்பலாம்.

சனி, 12 அக்டோபர், 2013

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத்தமிழ் வரலாறு

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் ச் சரித்திரம்

Comment (3)   ·   print   ·   T+  
9
  • கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.
    கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.
  • அரவிந்த்
    அரவிந்த்
சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.
இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.
‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.
மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.
எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.
மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வழியில் தரமான இலவசக் கல்விக்கூடம்

தமிழ்வழியில் தரமான இலவசக் கல்விக்கூடம்

Comment (1)   ·   print   ·   T+  
சக்தி தமிழ்ப் பள்ளி குழந்தைகளுடன் காமராஜ் - காமாட்சி தம்பதி
சக்தி தமிழ்ப் பள்ளி குழந்தைகளுடன் காமராஜ் - காமாட்சி தம்பதி
ஒன்றிரண்டு வருடங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கு பக்கத்தில் குடியிருப்பவர்களே அதன் வருமானத்தை பார்த்துவிட்டு, தாங்களே மெட்ரிக் பள்ளிகளை திறந்து கல்லாக்கட்ட நினைக்கும் இந்தக் காலத்தில் காமராஜ் - காமாட்சி தம்பதியர், தமிழ்வழிக் கல்விக்காக இலவச பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கரூரில்தான் கேட்கக் கிடைக்காத இந்த அபூர்வம்!
கரூர் தொழிற்பேட்டையில் உள்ள சக்தி தமிழ்ப்பள்ளிக் கூடம் இப்போது மாவட்ட அளவில் பிரபலம். இங்கு படிக்கும் குழந்தைகள் எந்தப் போட்டிக்கு போனாலும் பரிசுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்களாம். இதனால் இப்போது, இவர்களை மற்ற பள்ளிகள் போட்டிக்கு அழைப்பதற்கே தயங்குகின்றனவாம். இப்படிப் பொறாமைப்படும் அளவுக்கு சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை உருவாக்கிய பெருமை காமராஜ்- காமாட்சி தம்பதிக்கே சேரும்.
இன்று நேற்றல்ல.. கடந்த 19 வருடங்களாக சக்தி தமிழ் பள்ளிக் கூடத்தில் தமிழால் படிக்க வைக்கிறார்கள்- அதுவும் எவ்வித கட்டணமும் இல்லாமல். இது எப்படி சாத்தியமானது?
“எங்கப்பா வெங்கடாசலம், சுதந்திர போராட்ட தியாகி. இந்த தேசத்தின் மீதும் குடிசைவாழ் மக்கள் மீதும் எனக்கும் அக்கறை வந்ததற்கு அதுதான் காரணமா இருக்கணும். நாங்களும் ஏழைக் குடும்பம்தான். அப்பாவுக்கு பெருசா வருமானம் இல்லை. சாயப்பட்டறையில் பங்குதாரர். பத்தாம் வகுப்பு வரை படிச்சுட்டு, அப்பாவோட சாயப்பட்டறையிலேயே பகுதிநேரமா வேலை செஞ்சுக்கிட்டே பிளஸ் 2 படிச்சேன். வேலையில கிடைச்ச வருமானத்தை வைச்சு என் செலவுகளை சமாளிச்சிக்கிட்டேன்.
ஆனாலும், பளஸ் 2-க்கு மேல படிக்க எங்க குடும்ப வறுமை அனுமதிக்கல. அதனால, படிப்புக்கு டாட்டா காட்டிட்டு கேமராவை தூக்கினேன். வாடகைக்கு கேமராவை எடுத்து விழாக்களுக்கு போய் படம் எடுத்துக் குடுத்தேன். அதுலயும் ரொம்பநாள் நீடிக்கமுடியல. நானும் நண்பர்களும் சேர்ந்து டியூஷன் சென்டர் ஆரம்பிச்சோம். குறைவான கட்டணத்துல பிள்ளைங்களுக்கு பாடம் போதிச்சுக்கிட்டே தபாலில் முதுகலைப் பட்டம் வரைக்கும் வந்துட்டேன்.
நண்பர்கள் சிலபேரு டியூஷன் சென்டரை விட்டு கழண்டுட்டதால தொடர்ந்து சென்டரை நடத்த முடியல. அதனால, இங்கே இருக்கிற தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்துல ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். நான் இந்த சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறதுக்கு அங்க கிடைச்ச அனுபவம்தான் மூலதனம்.
பிள்ளைங்கள பெத்தவங்க தங்களோட புள்ளைங்களும் இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, எந்தப் பள்ளியில சேர்த்தா நல்லபடியா அறிவை வளர்த்துக்குவாங்கன்னு நினைக்கிறதில்ல. ஆங்கிலம்கிறது ஒரு மொழிதான். நம்மாளுங்க அதுதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அதனால, சொத்துக்களை அடமானம் வைச்சாவது பிள்ளைங்கள ஆங்கில வழிப் பள்ளியில கொண்டாந்து தள்ளுறாங்க. பெத்தவங்களோட கட்டாயத்தால அந்தப் பள்ளிகள்ல சேர்ந்துட்டு குழந்தைகள் படுற கஷ்டத்தை கண்ணால பார்த்தேன். அதனாலதான் தமிழ்வழிப் பள்ளியை தொடங்குற எண்ணத்துக்கே வந்தேன்.
யாரா இருந்தாலும் தாய்மொழியில தான் சிறப்பா சிந்திக்க முடியும். அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இதைச் சொன்னா கிறுக்கன்னு கிண்டல் பேசுவாங்க. இருந்தாலும் பரவாயில்லைன்னு அசட்டுத் துணிச்சலோட இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்குனேன். 45 சென்ட் இடத்தை குத்தகைக்கு எடுத்து, சாதாரண கூரைக் கட்டிடத்துல தொடங்குனேன். ’காசு, பணம் கட்டவேண்டாம்; இலவசமாவே தமிழ்வழிக் கல்வி சொல்லித் தர்றோம்’னு நாங்க சொன்னதை நம்பி, முதல் வருசம் மூணு பிள் ளைங்கள கொண்டாந்து சேர்த்தாங்க. இப்ப எங்க பள்ளிக்கூடத்துல 120 பிள்ளைங்க தமிழில் படிக்கிறாங்க’’ தனது சாதனையை சொல்லிமுடித்தார் காமராஜ்
மற்ற பள்ளிகளைப் போல இங்கே சாதி, மதம் கேட்பதில்லை. பில் போட வசதியாக அப்பாவின் வருமானத்தைக் கேட்பதில்லை. படிப்போடு சேர்த்து, தமிழர் பண்பாடு, மொழி, கலாச்சாரம் இவற்றையும் குழந்தைகளுக்கு பக்குவமாய் புகட்டுகிறார்கள். இப்போது இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தாலும் தனித் தேர்வர்களாக பரீட்சை எழுதும் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இங்கே பாடம் நடத்துகிறார்கள்.
இதில்லாமல், ஆதரவற்ற மாணவ, மாணவியர் 25 பேரை இங்கே தங்கவைத்து அறிவை வளர்க்கும் அசத்தலான காரியத்தையும் செய்கிறார் இந்த நவீன கர்மவீரர். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்புகளையும் இங்கே பார்க்கமுடிகிறது புளிமூட்டை கணக்காய் அடைத்துத் திணித்து வைக்காமல், வகுப்புக்கு 15 பேர் மட்டுமே இங்கே அனுமதிக்கப்படுவது இயல்பில் இல்லாத சிறப்பு.
“பிள்ளைங்கட்ட ஃபீஸ் எதுவும் வாங்குறதில்லை. நண்பர்கள், நன்கொடையாளர்கள் குடுக்குற நிதியை வைச்சுத்தான் பள்ளிக்கூடம் நடக்குது. இங்கிருக்கிற ஆசிரியர்களுக்கு, கம்மி சம்பளம்தான். ஆனாலும், அர்ப்பணிப்பு உணர்வோட பணிக்கு வர்றாங்க. அவங்களோட குழந்தைகளையும் எங்க பள்ளிக்கூடத்துலேயே படிக்க வைச்சிருக்காங்க. இங்கிருக்கிற ஒரு ஆசிரியர் சம்பளம் வாங்காமலேயே பணி செய்கிறார். எங்க மகள் கணினி காந்தியும் இங்கேதான் படிக்கிறா’’ என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியரும் காமராஜின் மனைவியுமான எம்.ஃபில்., பி.எட்., படித்த காமாட்சி
தொடர்ந்து பேசிய காமராஜ், “கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம், கூரைக்கட்டிடத்துல பள்ளியை நடத்த முடியல. ஒருவருஷம் பக்கத்துல வாடகை கட்டிடத்துல நடத்திக்கிட்டே, பழைய ஓடுகளை நன்கொடையா கேட்டு வாங்கி கூரையை ஓட்டுக் கட்டிடமா மாத்திட்டோம். எங்க பள்ளிக்கூடம் சிறப்பா செயல்படுறத பாத்துட்டு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கிட்டு வர்றாங்க. இன்னும் ஒரே ஒரு காரியம் செய்யவேண்டி இருக்கு. இங்க வர்ற குழந்தைகளுக்கு சத்துணவு குடுக்கணும். அரசாங்கத்துலருந்து அதை மட்டும் செஞ்சு குடுத்தாங்கன்னா கோடி புண்ணியமா போகும்’’ என்று கைகூப்பினார்.

வியாழன், 10 அக்டோபர், 2013

கால்கள் முடங்கினால் என்ன

'கால்கள் முடங்கினால் என்ன.. மனம் முழுக்க  துணிவு இருக்கிறதே'

எசு. கல்யாணசுந்தரம்
தமிழ்இந்துComment   ·   print   ·   T+  
மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொணடவர் செனித்தா ஆண்டோ. 2014-இல் நார்வேயில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு துடிப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார். சிறு வயதிலேயே போலியோ தாக்கத்தால் கால்களை இழந்த இவரை விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே கூட்டணி போட்டு இந்த உயரத்துக்கு இட்டு வந்திருக்கிறது.
திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த காணிக்கை இருதயராஜ் - ஜெயராணி தம்பதியின் மூன்றாவது மகள் ஜெனித்தா ஆன்டோ. காணிக்கை இருதயராஜ் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். முப்பத்தாறு வயதை எட்டிப் பிடித்திருக்கும் ஜெனித்தாவுக்கு மூன்று வயதிலேயே கால்கள் இரண்டும் போலியோவால் முடங்கிப் போனது. ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த மகளுக்கு கால்கள் முடங்கிப் போனதால் இருதயராஜும் ஜெயராணியும் கலங்கிப் போனார்கள்.
’அழகுபெத்த பொம்பள புள்ளைய வீட்டுக்குள்ள முடமா வைச்சிக்கிட்டு இருந்து என்ன பண்ண..?’ என்று உறவுகள் ஒரு பக்கம் உச்சுக் கொட்டின. இருதயராஜும் செல்ல மகள் மறுபடியும் ஓடியாட மாட்டாளா என்ற தவிப்பில் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் ஓடினார். எத்தனையோ வைத்தியங்கள்... எண்ணற்ற மருந்துகள். எதுவுமே அந்தக் குழந்தை எழுந்து நடக்க உதவவில்லை. கடைசியில், ‘முதுகுத் தண்டுவடத்துல பாதிப்பு ஏற்பட்டிருக்கு. அதனால இந்தக் குழந்தைக்கு இடுப்புக்குக் கீழே செயல்பாடு இருக்காது’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். பிறகு நடந்ததை இருதயராஜ் விவரித்தார்.. “எங்க பிள்ளை இனி ஓடியாடி விளையாட முடியாதுன்னு டாக்டர்கள் சொன்னப்ப நாங்க ரெண்டு பேரும் இடிஞ்சு போயிட்டோம். பள்ளிக்கூடத்துல சின்னப் புள்ளைங்க ஓடியாடி விளையாடுவாங்க. சில நேரங்கள்ல, அந்தக் குழந்தைகள் கீழே தவறி விழும்போது ‘பாத்துடா.. கைகால் அடிபட்டுறப் போகுது’ன்னு பதறியிருக்கேன். என் பிள்ளை அந்த சந்தோஷத்தை எல்லாம் பறிகுடுத்துட்டாளேன்னு நினைச்சப்ப மனசு கனத்துப் போச்சு. ஆனாலும், நானும் ஜெயராணியும் நம்பிக்கை இழக்கல. புள்ளைய எப்படியாச்சும் எதிலாவது ஒரு துறையில திறமையான மனுஷியா ஆக்கிடணும்னு எங்களுக்குள்ளேயே தீர்மானிச்சிக்கிட்டோம்.
எங்க புள்ளையப் போலவே போலியோவால பாதிக்கப்பட்ட சந்திரசேகர், ஒரு கண்ணுல பார்வை இழந்த பட்டோடி இவங்க எல்லாம் கிரிக்கெட்டுல சாதனை பண்ணலையா? அதேமாதிரி நம்ம புள்ளயும் ஏன் சாதிக்க முடியாதுன்னு யோசிச்சேன். ஜெனித்தாவுக்காக நான் தேர்ந்தெடுத்த விளையாட்டு செஸ்! எனக்கும் செஸ் தெரியும்கிறதால தொடக்கத்துல நானே அவளுக்கு செஸ் சொல்லிக் குடுத்தேன். ஒரு கட்டத்துல என்னையவே அடிக்கிற அளவுக்கு அவ மூளை அற்புதமா வேலை செஞ்சுது’’
இருதயராஜ் நிறுத்த... “அதுக்கப்புறம் நான் சொல்றேன் டாடி..” என்று ஆர்வத்தோடு ஆரம்பித்தார் ஜெனித்தா.. “அப்பா - அம்மாவோட ஆசையை புரிஞ்சுக்கிட்டு, நிறைய ஹோம் ஒர்க் பண்ணுனேன். அதனால எட்டு வயசுலயே எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைச்சிட்டேன். எட்டு வயசுல மாவட்ட செஸ் போட்டியில நான் சாம்பியனா வந்தப்ப எல்லாரும் பாராட்டினாங்க. அப்பா – அம்மா அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அன்றைக்கு வந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்தான் என்னை அடுத்தடுத்த சாதனைகளுக்கு உந்தித் தள்ளுச்சு. அதுக்கப்புறம் எத்தனை போட்டிகள்ல கலந்துக்கிட்டேன்னுகூட எனக்கு நினைவில்ல. ஆனா, அத்தனையிலும் நான்தான் ஜெயிச்சேன்.
2008-ல் ஜெர்மனியில நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துக்க இந்தியா சார்பில் ஐந்து பேருக்கு வாய்ப்பு கிடைச்சிது. அதுல எனக்கும் ஒரு இடம்! சர்வதேச அளவுல மொத்தம் 570 பேர் கலந்துக்கிட்டோம். அதில் 8 புள்ளிகளுடன் எனக்கு 25 வது ரேங்க் கிடைச்சிது. அடுத்ததா 2010-ல் ரஷ்யாவுல நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துக்கிட்டு, மாஸ்டர் வீராங்கனை (Women Canditate Master) பட்டம் வாங்கினேன். இதுக்கு நடுவுல அப்பாவுக்கு ஒரு ஆக்ஸிடென்ட். அதனால, அடுத்த வருஷம் நடந்த சர்வதேச போட்டிகள்ல கலந்துக்க முடியாம போச்சு.
இந்த வருஷம் நானும் அப்பாவும் மறுபடியும் உற்சாகமா கிளம்பிட்டோம். ஜூன் மாசம் செக் குடியரசில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் கலந்துக்கிட்டேன். இதில் பெண்களுக்கான மாற்றுத் திறனாளிகள் பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிட்டு வந்துட்டேன். இந்த வெற்றி மூலம் மகளிர் இன்டர்நேஷனல் மாஸ்டர் (Women International Master) பட்டமும் எனக்கே கிடைச்சுது. இப்ப அடுத்த கட்டமா, நார்வே ஒலிம்பியாட்சுக்கு தயாராகிட்டு இருக்கேன். இதிலும் கண்டிப்பா நான்தான் சாம்பியன்” நம்பிக்கையுடன் துள்ளுகிறார் ஜெனித்தா ஆன்டோ.
தினமும் குறைந்தது ஐந்து மணிநேரம் செஸ் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஜெனித்தா, இந்தியாவின் முன்னாள் கிராண்ட் மாஸ்டர் ராஜா ரவிசேகரிடம் நேரடிப் பயிற்சியும் எடுத்துவருகிறார். ரவி சேகரிடம் 40 மூவ்கள் வரை சளைக்காமல் விளையாடுவாராம் ஜெனித்தா. சமீபத்தில் திருச்சியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் முதலிடத்தில் வந்த ஒருவருடன் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடி ஜெயித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார் ஜெனித்தா. திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஜெனித்தாவின் இந்தத் திறமையை பாராட்டி பரிசும் வழங்கி இருக்கிறார்.
“கால் முடங்கினா என்ன.. என் மனசு முழுக்கதான் தைரியம் இருக்கே. ‘எனக்கு இப்படி ஆகிருச்சே’ன்னு மனம் தளர்ந்துடாம அதிர்ஷ்டத்தை நம்பாம, எடுத்த துறையில விடாமுயற்சியோட உழைச்சா உலகம் நிச்சயம் ஒருநாள் நம்மை திரும்பிப் பார்க்கும்’’ விடை பெறுவதற்கு முன்பு ஜெனித்தா ஆன்டோ சொன்ன வெற்றியின் ரகசியம் இது!

புதன், 9 அக்டோபர், 2013

சென்னைப் புறா வாகை சூடியது

1500 அயிரைக்கல் தொலைவு பந்தயம்: சென்னை ப் புறா வாகை சூடியது

சென்னைவாழ் புறா ஆர்வலர்களுக்காகத் தொடங்கப்பட்ட ’நியூ மெட்ராஸ் ரேசிங் பீஜியன் (பந்தயப் புறா) அசோசியேஷன்’ மற்றும் ’தென்னிந்திய ரேசிங் பீஜியன் சொஸைட்டி’ ஆகியவை ஆண்டுதோறும் 1,000 கிலோ மீட்டர், 1,500 கிலோ மீட்டர் தூரத்துக்கான புறா பந்தயப் போட்டியை நடத்துகின்றன. குவாலியரில் இருந்து சென்னை வரை 1,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்ட பந்தயத்தில், சென்னை சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த ஆர்.டி.வெங்கடேஷின் ‘கோல்டன் கிங்’ புறா சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
பிரத்யேகக் கூண்டு
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பாரம்பரியமிக்க பந்தயப் புறாக்களை வாங்கி வந்து இனப்பெருக்கம் செய்துள்ளனர். இந்தியப் புறாக்களும் வெளிநாட்டுப் புறாக்களுடன் சேர்த்துக் கலப்பினமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. மழைநீர் புகாத, சூரியஒளி மற்றும் காற்றோட்ட வசதி கொண்ட பிரத்யேகக் கூண்டுகளில் புறாக்களை வளர்க்கின்றனர்.
ஒருமாத பயிற்சி
பந்தயப் புறாக்கள் பிறந்த 6-வது நாளில், ஒரு வளையத்தை அடையாளத்துக்காக மாட்டி விடுகின்றனர். ஒன்றரை மாதம் ஆனதும் நன்கு வளர்ந்த நிலையில் கூண்டைவிட்டு வெளியே எடுத்துப் பறக்க விடுகின்றனர். 6-வது மாதத்தில் பயிற்சி தொடங்குகிறது. ஒருமாத பயிற்சிக் காலத்தில் குறிப்பிட்ட தூரம் வரை வேனில் புறாவை எடுத்துச் சென்று, அங்கு திறந்தவெளியில் பறக்கவிட்டு, பந்தயத்துக்கு தயார்படுத்துகின்றனர்.
இலக்கை அறிய மோப்பசக்தி
சூரியக்கதிர்களைப் பார்த்து, காந்த சக்தி மூலம் வடதுருவம், தென்துருவத்தைப் பார்த்து, மோப்ப சக்தியால் இருந்த இடத்திற்கே புறாக்கள் வந்துவிடுகின்றன என்கின்றனர் புறா ஆர்வலர்கள். இந்தப் பந்தயத்தைப் பொருத்தவரை அவரவர் வீட்டுக்கே வந்து சேரும் வகையில் பந்தய தூரத்தை கணக்கிட்டுக் கொள்கின்றனர். குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் முதலாவதாக வரும் புறாவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. வெங்கடேஷின் புறா, சரியாக 13-வது நாளிலேயே அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது. இந்தப் புறா ஓமர் வகையைச் சேர்ந்தது.
ஆபத்தை எதிர்கொள்ளும் சாதுர்யம்
புறாக்கள் பொதுவாக காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரைதான் பறக்கும். மாலை 6.30 மணிக்கு ஏதாவது ஒரு வீட்டில் தங்கிவிடும். அப்போது அங்கு இருக்கும் பூனை, ஆந்தை, புறாவை விரட்டிப் பிடித்து அடித்துச் சாப்பிடும் பைரி எனப்படும் பருந்து ஆகியவற்றால் பந்தயப் புறாக்களுக்கு ஆபத்து நேரிடும். அந்த ஆபத்துகளை சாதுர்யமாக எதிர்கொண்டு புறாக்கள் சாதிப்பதாக சொல்லப்படுகிறது.
புறாக்களுக்கான சர்வதேச ஒலிம்பிக்
பந்தயத்தில் வெற்றி பெறும் புறாக்களை இனவிருத்திக்குப் பயன்படுத்தி புதிய பந்தயப் புறாக்கள் உருவாக்கப்படுகின்றன என்கிறார் ’நியூ மெட்ராஸ் ரேசிங் பீஜியன் அசோசியேஷன்’, ‘தென் இந்திய ரேசிங் பீஜியன் சொஸைட்டி’ தலைவர் கே.பழனியப்பன். மத்திய, மாநில அரசுகள் புறா பந்தயத்தை அங்கீகரித்து உதவினால், புறாக்களுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்று சாதிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் அவர். பந்தயத்தில் வெற்றி பெற்ற கோல்டன் கிங் புறா உரிமையாளர் வெங்கடேஷுக்கு, சென்னை அருகே அரை கிரவுண்டு மனை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.