சு.குமணராசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சு.குமணராசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஜூலை, 2021

இந்திய அரசு ஒன்றியமா மத்தியமா? – சு.குமணராசன் : 4/4

 அகரமுதல



இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?

4/4

 இந்தியா என்ற நாட்டில் சமன்மை, உடன்(பிறப்பு)மை என்ற இரண்டு அடிப்படைக் கூறுகளில் முழுமையானதொரு வெற்றிடம் உள்ளது என்பதைத் தயங்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். மேலிருந்து கீழ் என்ற படிநிலைச் சமுக அமைப்பும், பெரும் பணக்காரன், வறுமையில் உழலும் ஏழை என்கிற பொருளாதார ஏற்றத் தாழ்வும் நீங்காத வரை நாம் பெற்றிருக்கின்ற இந்த அரசியல் விடுதலை என்பதற்குப் பொருளில்லை என்பதே என் கருத்தாகும்.

சாதியக் கோட்பாடு என்பது உடன்(பிறப்பு)மைக்கும் சமன்மைக்கும் எதிரானது. சாதி என்பது தேசப் பகை (விரோதம்). இதைக் கடைபிடிக்க எண்ணுகின்றவர்கள் தான் உண்மையிலே நம் தேசப் பகைவர்கள் (விரோதிகள்) என்று கருத வேண்டும்.

ஒரு நாட்டின் விடுதலை என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான் என்பதை நான் இந்த அவையில் மறுக்க எண்ணவில்லை.

ஆனால் இந்திய மக்கள் (the People of India) என்று சொல்வதற்குப் பதிலாக  இந்தியத்தேசியம் ( the Indian Nation) என்று சொல்வதைச் சிலர் பெருமையாகக் கருதுகிறார்கள். நாம் இதை ஒரு தேசம் என்று நம்புகின்றோம். அப்படிச் சொல்வது ஒரு மாயை (elusion) என்பதை முதலில் நாம் உணர வேண்டும். மக்கள் பல்லாயிரக் கணக்கான சாதிகளாய் ஏற்றத்தாழ்வுடன் பிரிந்து கிடக்கையில் எங்கிருந்து வரும் இந்தத் தேசியம்?

இனியும் நம் வறுமைக்கும், வாழ்வுக்கும் ஆங்கிலேயர்கள் காரணம் என்று சொல்ல இயலாது. இனி நமது கடமைகள் காத்திருக்கின்றன. எனவே இனி வரும் காலங்களிலும் இது சரிசெய்யப் படவில்லையென்றால் இப்போது நாம் கொண்டாடும் இந்த விடுதலை மகிழ்ச்சிக் கொண்டாட்டம் பொருளில்லாத ஒன்றாகி விடும்.

1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அறிஞர் அம்பேத்துகர்

“ அரசமைப்பை நான் தான் உருவாக்கினேன் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த அரசமைப்பைக் கொளுத்தும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன் என்பதைக் கூறுவதற்கும் நான் அணியமாக உள்ளேன். என்னை ஒரு வாடகைக் குதிரையாகப் பயன்படுத்தி என் விருப்பத்திற்கெதிராகப் பலவற்றைச் செய்ய வைத்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் பாயிரம் சொல்கின்ற செய்தியை மனப் பூர்வமாக ஏற்றுச் செயல்படத் தவறினால் நாம் சொல்கின்ற இந்த இந்தியத் தேசம் என்பது ஒரு மாயை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்”  

(1955, 19th March, Dr. Ambedkar in Parliament:-

My friend says that the last time when I spoke, I said that I wanted to burn the Constitution. Well, in a hurry I did not explain the reason. Now that my friend has given me the opportunity, I think I shall give the reason. The reason is this: We built a temple for god to come in and reside, but before the god could be installed, if the devil had taken possession of it, what else could we do except destroy the temple? We did not intend that it should be occupied by the Asuras. We intended it to be occupied by the Devas. That’s the reason why I said I would rather like to burn it.

Dr BR Ambedkar in the Rajya Sabha on 19 March 1955)

எனது நண்பர் கூறுகையில், கடைசியாக நான் பேசியபோது, நான் அரசியலமைப்பை எரிக்க விரும்பினேன் என்று சொன்னேன். சரி, அவசரமாக நான் காரணத்தை விளக்கவில்லை. இப்போது என் நண்பர் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளதால், அதற்கான காரணத்தை நான் தருவேன் என்று நினைக்கிறேன். காரணம் இதுதான்: கடவுள் உள்ளே வந்து வசிப்பதற்காக ஒரு கோவிலைக் கட்டினோம், ஆனால் கடவுளை நிறுவுவதற்கு முன்பு, பிசாசு அதைக் கைப்பற்றியிருந்தால், கோயிலை அழிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அதை அசுரர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை. நாங்கள் அதைத் தேவர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அதை எரிக்க விரும்புகிறேன் என்று நான் சொன்னதற்கு இதுவே காரணம்.

எனவே தன்னாட்சி இல்லா ஒரு மாநிலமாக இந்திய வல்லாண்மைக்கு அடிமைப் பட்டு இருப்பதை விடத் தனியாட்சி நோக்கிப் பயணிப்பதே தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் நன்மை சேர்க்கும். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் 1938 ஆம் ஆண்டு முன்னெடுத்தார். எனவே தற்போது தமிழ்நாடு அரசின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும்  மாண்புமிகு மு.க.தாலின் அவர்கள் இந்திய அரசியலில் அனைத்து மாநில முதலமைச்சரைகளையும் ஒன்று சேர்த்து ஒன்றிய அரசின் வல்லாண்மைப் போக்கை விளக்க வேண்டும் என்பது என் கருத்து. இந்தியாவுக்கு தமிழ்நாடுதான் வழி காட்ட வேண்டும் என்று பதிவு செய்து வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.

நன்றி!

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’ என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]

செவ்வாய், 20 ஜூலை, 2021

இந்திய அரசு ஒன்றியமா ? மத்தியமா? – சு.குமணராசன்

 அகரமுதல




இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?

3/4

 தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்பது என்ன? அதுவே சாதியத்தின் இருப்பிடம் அல்லவா? தீண்டாமைக்குரிய தண்டனைகள் சாதிக்கு எதிராக அல்லவா அமைந்திருக்க வேண்டும்?

மாநில மக்களின் அனைத்து உரிமைகளிலும் தலையிடுதல்.

356 ஆவது சட்டப் பிரிவு,

ஆளுநர் உரிமைகள்,

எனப் பல பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் பாயிர முன்னுரைக்கு எதிரானவை.

200 ஆண்டுக் காலம் வெள்ளையர் ஆட்சியில் கிட்டிய மாநில உரிமைகள் கூட விடுதலை பெற்ற இந்தியாவில் மாநிலங்களுக்கு இல்லை.

60 ஆண்டு காலம் மகாத்மா என்றழைக்கப்படும் காந்தியாரை வெள்ளைக்காரன் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஆனால் விடுதலைக்குப் பின் அவரை 6 மாதம் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை யென்றால் வருணாசிரம சனாதனக் கோட்பாடு எவ்வாறு இந்தியாவை ஆளுகின்றது என்பதை நம்மால் அறிய முடியும்.

தந்தை பெரியார் மட்டுமே இந்திய விடுதலை என்பது வெள்ளைக் காரனிடமிருந்து சில கொள்ளைக்காரர்களிடம் அதிகாரம் சென்று சேர்வதைத் தவிர வேறொன்றும் இல்லை. சமுக விடுதலையின்றி அரசியல் விடுதலை என்பது விடுதலை அல்ல, இது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று அறிவித்தார்.

நமது நாட்டின் இறைமை என்பது மக்களிடம் உள்ளதேயொழிய தேர்வு பெற்ற பதவிகளிடம் இல்லை என்பதைக் குடியரசுத் தலைவரும், தலைமை அமைச்சரும் உணர்வதில்லை.

மாநிலங்கள்தான் மக்களை உடைய அரசு, மக்களோடு தொடர்புடைய அரசு. அவர்கள் கல்வி, வேளாண்மை, சமுக நிலை ஆகியவற்றில் நேரடிப் பங்கு கொள்கின்றவர்கள். ஆனால் இவை மத்தியில் ஓர் அதிகாரக் குவியலிடம் இன்று இருக்கிறது.

மண்ணைக் காப்பது மட்டுமே மத்திய அரசின் பணி, மக்களைக் காப்பது மாநில அரசின் பணி. அதுதான் கூட்டாட்சியின் அடிப்படை.

இன்று உலக அளவில் கூட்டாட்சி முறையில் இயங்கும் நாடுகள் அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா, சுவிட்சர்மாந்து போன்ற நாடுகளாகும். இவை அனைத்தும் நம்மை விடப் பெருமளவில் முன்னேறிய நாடுகளாகும். இதன் கரணியம் அங்கு மக்களின் இறைமையும் தன்னாட்சிக் கோட்பாடும் பாதுகாக்கப் பட்டிருப்பதால் ஆகும்.

உலக அளவில் பயன்படுத்தப்படும் நேசனல், இண்டர் நேசனல் என்ற சொற்களும் தவறானவை என்பதே என் கருத்து.

பன்னாட்டு அமைப்பு (United Nations Organizations) என்பது (United states organizations) என்றுதான் அமைந்திருக்க வேண்டும். States என்பது நாடு, மாநிலம் என்று இரு பொருள் படும். ஆனால் ஏற்கெனவே  USA என்ற நாடு உருவாக்கப் பட்டதால் அவர்கள் UNO என்று அழைக்கின்றனர்

அம்பேத்துகர் உரை:-

26-1-1950 ஆண்டு இந்தியா ஒரு மக்கள்நாயக நாடாக மலரவிருக்கிறது. அதாவது மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்வு செய்யும் ஓர் அரசாங்கம் அன்றிலிருந்து நடைமுறைக்கு வரும். ஆனால் இந்த மக்கள்நாயக அரசமைப்பு என்னவாகும் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. இதை இந்திய நாடு தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் ஒருமுறை இழந்துவிடுமா? என்ற இரண்டாவது கேள்வியும் என்னுள் எழுகிறது. காரணம் இந்திய நாட்டுக்கு இந்த மக்கள்நாயகக் கோட்பாடு என்பது புதிதல்ல. ஒரு காலத்தில் மன்னராட்சி முறைமைகளில் கூட மக்களாட்சிக் கோட்பாடுகள் தெரிந்தன. நாடாளுமன்றம் அல்லது நாடாளுமன்ற விதிமுறைகள் என்பதை இந்தியா அறியாமலில்லை. ஆனால் இன்று ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குகின்றோம்.

நாம் மக்கள்நாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், ஓர் எழுத்து வடிவமாக இதை வைத்திருக்காமல், மனத்தில் தாங்கிச் செயல் படவேண்டும்.

அம்பேத்துகரின் மூன்று எச்சரிக்கைகள். (25-11-1949)

  1. நயனின்மை (அராசகம்) இலக்கணம் நீக்கப் படுதல்
  2. தனிமனித வழிபாடு தவிர்த்தல்
  3. அரசியல் மக்கள்நாயகம் தாண்டி சமுக மக்கள்நாயகத்தை நோக்கிப் பயணித்தல்.
  • முதலாவதாக, நம்முடைய சமுக, பொருளாதார இலக்குகளை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு எய்துவோம் என்ற உணர்வைப் பெறவேண்டும். மாறாக, புரட்சி, வன்முறை, நயனின்மை வழிகளைக் கைவிட வேண்டும்
  • இரண்டாவதாக, நாம் பெற்றிருக்கும் இந்த மக்கள் நாயக உரிமையை/ விடுதலையை இன்னொருவன் காலடியில் வைப்பது. அஃதாவது தலைமை வழிபாட்டை முற்றாகத் தவிர்க்க வேண்டும்
  • மூன்றாவது, நாம் பெற்றிருக்கின்ற இந்த அரசியல் மக்கள் நாயக முறைமையில் மகிழ்ந்துவிடாமல், இந்த மக்கள் நாயகக் கோட்பாட்டைச் சமுக மக்கள் நாயகமாக மாற்ற வேண்டும். சமுக மக்கள்நாயகம் என்ற அடித்தளமின்றி ஓர் அரசியல் மக்கள் நாயகம் நிலைபெற இயலாது என்பது என் கருத்தாகும்.

(தொடரும்)

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’  என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]

ஞாயிறு, 18 ஜூலை, 2021

இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? – சு.குமணராசன் 2/4

 அகரமுதல




(இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? 1/4 இன் தொடர்ச்சி)

இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?

2/4

 மாநில அரசியல் கட்சிகள் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியும், பஞ்சாப்பு மாகாணத்தில் யூனியனிசுட்டு கட்சியும் 1919 ஆம் ஆண்டு சட்டத்தால் கொடுக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தின் வரம்புக்குள் நின்று ஆட்சி செய்ய முடிந்தது. அப்போது சென்னை மாகாண நிருவாகி, தலைமை அமைச்சர் (PRIME MINISTER) என்றே அழைக்கப் பட்டார்.

அந்தக் காலம் தொட்டு பேசப் பட்ட செய்தியே வலிமையுள்ள மைய அரசா? அல்லது வலிமை கொண்ட மாநிலங்களா? என்பதாகும். இந்த முழக்கங்களின் பின்னணியில் வலிமையான மத்திய அரசு என்ற அணியில் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியும், முழு உரிமை கொண்ட மாநிலங்களை இணைக்கும் மத்திய அரசு வேண்டும் என்ற அணியில் முசுலீம் லீக்கு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளும் இருந்தன.

காங்கிரசில் வலது இடது என இரண்டு அணிகள் இருந்தன. இரானடே, , மௌலானா அபுல்கலாம் ஆசாத் போன்றவர்கள் இடது சாரிச் சிந்தனையாளர்கள்.

காந்தி, வல்லபபாய் பட்டேல், கோகலே போன்றவர்கள் வலதுசாரிச் சிந்தனையாளர்கள். இவர்கள் வருணாசிரமக் கோட்பாட்டின் காவலர்கள். 

இந்த இரண்டு அணிகளுக்கும் நடுவில் இருந்தவர் பண்டித சவகர்லால் நேரு ஆவார்.

மூன்று வட்ட மேசை மாநாடுகள் நடைபெற்றன. அதன் பின்பு நாடாளுமன்றக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அன்றிருந்த ஒற்றையாட்சியை மாற்றித் தன்னாட்சி கொண்ட மாநில ஆட்சிகளாகப் பகுத்து, சுதேச மன்னர்களின் அரசுகளையும் இணைத்து அவற்றையெல்லாம் ஒரு கூட்டாட்சியின் கீழ் நிறுவி தன்னாட்சி முறையை நிலை நிறுத்துவது தான் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமாகும்.

ஆனால் நமக்குக் கிட்டியிருக்கும் அரசமைப்பு விதிகள் கூட்டாட்சி என்ற போர்வையில் அமைந்த ஒற்றையாட்சி முறையாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொல்லாட்சியில் ஒற்றுமையில் வேற்றுமை காணும் ஓர் அமைப்பாகும்.

மாநிலங்களின் தன்னாட்சிக் கோட்பாடு அல்லது கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாகத் தகர்த்து சனாதனக் கோட்பாட்டை நிலை நிறுத்தச் செய்யப்பட்ட அரசியலில் பெரும்பங்காற்றியவர்கள் தேசப் பிதா என்றழைக்கப் படும் காந்தி முதலான காங்கிரசுத் தலைவர்கள் ஆவர்.

பேராயக் கட்சி (காங்கிரசு) என்ற அமைப்பிலிருந்து 1933 ஆண்டு பிரிந்தது தான் இந்து மகாசபைக் கட்சியாகும். எனவே சனாதனக் கோட்பாட்டை இன்று பா ச க என்ற கட்சி வலிமையாக முன்னெடுத்தாலும் அதற்கு வழி காட்டியவர்கள் காங்கிரசு என்ற கட்சி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  

இந்திய அரசமைப்புச் சட்டம் 1950க்குப் பின் இந்த இரண்டு கட்சி ஆட்சிக் காலங்களிலும் இதுகாறும் 104 முறை திருத்தப் பட்டுள்ளது. இவற்றில் பெரும் பாலான திருத்தங்கள் மாநில அரசாங்கங்களுக்கு இருந்த ஒரு சில உரிமைகளையும் பறித்துக் கொள்வதற்காகவே அமைந்த ஒன்றாகும். குறிப்பாக நெருக்கடி நிலை கால கட்டத்தில் செய்யப் பட்ட 42 ஆவது சட்ட திருத்தங்கள் பல மாநில  உரிமைகளைப் பறித்தன. நெருக்கடி நிலை காலக் கட்டத்தில் 42 ஆவது திருத்ததின் மூலமாகச் செய்யப் பட்ட அநீதி ஒரு வன்முறையாகும்.

ஒன்றியம், மாநிலம், பொதுப் பட்டியல் எனத் தங்கள் வரம்பு அதிகாரப் பட்டியல் அரசமைப்பின் 7 ஆவது அட்டவணையில் தொகுக்கப்பட்டது. அந்த அட்டவணை அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு இது காறும் 12 முறை நேரடியாகத் திருத்தப்பட்டு மாநில அரசின் பட்டியலில் வகைப் படுத்தப் பட்ட பல அதிகாரங்கள் ஒன்றிய அரசுப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

நேற்று முந்தைய நாள் உச்ச நீதி மன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைக் கூட மாநில அரசு அணியமாக்கக் கூடாது. அது மைய அரசின் வரம்புக்குள் 102 ஆவது திருத்தத்திற்குப் பின் வந்து விட்டதாக நயன்மை அரசர்கள் கூறியுள்ளனர். இது எவ்வளவு கேலிக்குரிய ஒன்று. தமிழ் நாட்டில் யார் யார் பிற்படுத்தப் பட்டவர்கள் என்ற அடையாளத்தைத் தமிழ் நாடு அரசு மேற்கொள்ளக் கூடாதாம். இந்தியாவில் நடை பெறும் ஒற்றையாட்சி முறைக்கு இதுவே எடுத்துக் காட்டாகும்.   

இதைப் போலக் கல்வி, வேளாண்மை, நிதி, காடு, இயற்கைப் பாதுகாப்பு, துறைமுகங்கள் எனப் பல துறைகளிலும் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுவருகின்றன.  

இந்திய அரசமைப்பின் பாயிரம், அரசமைப்புச் சட்ட விதிகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன.

முன்னுரையில் சொல்லப்படும்  அனைத்து மக்களுக்குமான பொதுநலக் கோட்பாடு, மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசாக இயங்கும் இறைமை மிக்க இந்தியா,  ( SOVERIGN SOCIALIST, SECULAR, DEMOCRATIC REPUBLIC)

சமுக, பொருளாதார, அரசியல் நீதி,  ( JUSTICE)

நம்பிக்கை, வழிபாடு, கருத்து உரிமை (LIBERTY)

அனைத்து வாய்ப்புகளிலும் சமன்மை ( EQUALITY)

தனிமனித உரிமைகளைப் பேணும் உடன்(பிறப்பு)மை (FRATERNITY)

உள்ளே இருப்பது என்ன?

பாரத்து என்ற சொல் எந்த அடிப்படையில் இங்கே திணிக்கப் பட்டது?

வழிகாட்டு நெறிமுறைகள் என்ற போர்வையில் ஒன்றிய அரசின் வல்லாண்மை,

சமசுகிருதம், இந்தி மொழிகளுக்கு முன்னுரிமை

பாரம்பரியம் என்ற பெயரில்  இந்து மதம், சாதிப் பாகுபாட்டைப் பேணுதல்.

(தொடரும்)

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’ என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]

வெள்ளி, 16 ஜூலை, 2021

இந்திய அரசு ஒன்றியமா ?மத்தியமா?- சு.குமணராசன் 1/4

 அகரமுதல




இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?

1/4

அன்பின் உறவுகளே, வணக்கம்.

இந்த இரண்டு சொற்களில் எது பொருத்தமானது அல்லது எது முதன்மையானது என்பதை விடச் இச்சொற்களினால் மக்களின் இறைமை எவ்வாறு சீரழிக்கப் பட்டது என்பதே நாம் ஆய்ந்து சொல்ல வேண்டிய கருப் பொருளாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு மத்தியமா? அல்லது ஒன்றியமா? எனக் கேட்டால் என் பார்வையில் இரண்டுமே கூட்டாட்சி அல்லது மாநிலத் தன்னாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுடையப் பொருளையே இந்திய நாட்டு அரசியலில் நமக்குத் தந்துள்ளன.

மத்தியம், நடுவண் அல்லது மையம் என்ற சொற்கள் நிலவியல், பொருளியல், சமுகவியல், அரசியல் போன்ற எதிலும் பொருத்திப் பார்க்க இயலாத அளவு வேற்றுமைக் காரணிகளைக்  கொண்ட ஒரு சொல்லாட்சியாகவேத் தென் படுகிறது. இந்திய அரசமைப்பிலும் இந்த சொல்லாட்சி எங்கும் காணப் படவில்லை.  இந்தியா என்றழைக்கப்படும் நாடு  வடக்கு, தெற்கு என்பவை நிலவியல்,  மொழி, இனம், நாகரிகம், பண்பாடு, அரசியல் என அனைத்திலும் பொருந்தா ஒன்றாகவே உள்ளது. மத்திய அரசு இந்தியாவின் மத்தியிலும் அமையவில்லை அல்லது மாநிலங்களுக்கிடையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் மையத் தீர்வாயமாகவும் அமையவில்லை. எனவே அச்சொல் இங்கு பொருத்தமற்ற ஒன்று.

அடுத்து அண்மைக் காலமாகப் பயன் பாட்டுக்கு வந்திருக்கும் ஒன்றியம் என்ற சொல் 1950 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்பின் முதல் பிரிவில் இந்தியா அல்லது பாரத்து என்பது இது மாநிலங்களின் ஒன்றியம் (shall be a union of states)  எனக் குறிக்கப் பட்டுள்ளது. மொழி மாற்ற அளவில் இது தமிழில் “ஒன்றியம்” என்ற பொருளைத் தருகிறது. எனவே அவ்வாறு அழைப்பதில் தவறில்லை என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று.

ஆனால், இந்த ஒன்றியம் என்ற சொல்தான்  கூட்டாட்சி (Federation) என்ற சொல்லைத் தகர்த்துள்ளது. கூட்டாட்சி என்ற சொல் வெறும் இணைதலைக் குறிக்கிறது; ஆனால் ஒன்றியம் என்ற சொல் “இரண்டறக் கலந்து விடுதல்” என்ற பொருளைக் கொடுக்கிறது. எனவே இது திட்டமிட்டுப் புகுத்தப் பட்ட ஒரு சொல்லாகும். இதன் மூலம் இந்தியா என்பது பல மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக இந்தியா என்பது பல மாநிலங்களை இணைத்துக் கொண்ட ஒரு நாடு என்ற பொருளில்,  அதுவும் அழிக்க முடியாத (Indestructible Union)  அதாவது எந்த நிலையிலும் மாநிலங்கள் பிரிந்து போவதற்கு உரிமையில்லாத நிலை என்ற பொருள் பட அமைந்துள்ளது. இதனால் தான் ஒன்றிய அரசு அல்லது நடுவண் அரசு என்பது இன்று வரை மாநில மக்களின் விருப்பங்களுக்கும், இறைமை உரிமைகளுக்கும் எதிராக ஒரு வல்லாண்மைப் போக்கைக் கடை பிடித்து மாநில மக்களை அடிமைப் படுத்தி வருகிறது.

எனவே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பின்னணியைச் சற்று உற்று நோக்குவது தேவையாகும்.

ஆங்கிலேயர்களால் இந்தியா என்றழைக்கப் பட்ட நிலப்பகுதியில் ஒரு காலத்தில் ஆப்கானிசுத்தான், ஏமன், பருமா, பாகிசுத்தான், வங்காள தேசம் ஆகிய பல பகுதிகள் உள்ளடக்கம் என்பதை முதலில் தெரிந்து கொள்வது தேவையாகும். இதில் 1916, 1935, 1947 எனக் கால ஓட்டத்தில் சிறு சிறு பகுதிகளாகத் தனிமைப் பட்டு இன்று நாம் வசிக்கின்ற இந்தப் பரப்பு 1947 ஆகசுடு 15 க்குப் பின் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட,  விடுதலையடைந்த ஒரு நிலப் பரப்பு அல்லது நாடு. அந்த நாட்டில் அரசமைப்பு- நிருவாகச் செயல்முறைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட  ஆவணமே இந்திய அரசமைப்புச் சட்டமாகும். இந்த ஆவணம் பொது மக்கள் கருத்தறிந்தோ  அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தியோ  ஒப்புதல் பெறப்பட்ட ஒன்று அல்ல.

இஃது ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறையிலிருந்த 1919 ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மற்றும் அதன் பின்பு மாற்றியமைக்கப் பட்ட இந்திய அரசுச் சட்டம் 1935 ஆகியவற்றின் மறு வடிவம் என்று சொல்லாம்.

இந்த அரசமைப்புச் சட்டவரைவின் முதல் படிநிலை என்பது ஆங்கிலேயர் காலத்தில் சூலை 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தற்காலிக அரசமைப்புச் சட்ட குழு ஆகும். இதில் அன்றைய நாளில் பெரும் அரசியல் கட்சியாக இருந்த பேராயக் கட்சி (காங்கிரசு) சார்பில் 211 பேரும் முசுலிம் லீக்கு சார்பில் 73 பேரும் பங்கேற்றனர். இந்தக் குழு 1947 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட இந்திய விடுதலை வரைவு(மசோதா) 1947 க்குப் பின் அதிகாரமிக்க ஓர் அமைப்பானது. இதன் நிரந்தரத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப் பட்டார். இந்தக் குழுதான் முதல் வரைவுப் படியை அணியப் படுத்திய ஒன்றாகும். அதன் பின்பு அமைக்கப் பட்ட அரசமைப்பு வரைவுக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டனர்.

அல்லாடி கிருட்டிணசாமி( ஐயர்), என். கோபாலசாமி (ஐயங்கார்), கே.எம் . முன்சி, பி. ஆர். அம்பேத்துகர், மொகம்மது சாதுல்லா, பி. எல். மிட்டர், டி.பி. கைத்தான் என்பவராவர். இவர்களில் பி.எல். மித்தர் என்பவர் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாததையடுத்து என். மாதவராவு என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல டி.பி. கைத்தான் அவர்கள் மறைவுற்றதால் பின்னர் தி.த. கிருட்டிணமாச்சாரியும் இடம் பெற்றார். இந்தக் குழுவினரில் அதிகம் படித்தவரான பி. ஆர். அம்பேத்துகர் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டார்.

1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் என்பது 1914 முதல் 1918 வரை நடந்த உலகப் போருக்குப் பின்னர் ஓரினம், ஒரு நாடு என்ற தனியாட்சிக் கொள்கை உலகளாவிய அளவில் பரவும் போது ஏற்படுத்தப் பட்ட ஒன்று. 1921 முதல் 1937 வரை இந்தியாவில் ஓரளவு தன்னாட்சி முறையில் நிருவாகம் நடைபெற்றது. இதில் காங்கிரசுக் கட்சி நேரடியாகப் பங்கு பெறவில்லையெனினும் அதன் ஒரு உறுப்பான சுயராசியா கட்சி பங்கு பெற்றது.

(தொடரும்)

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’  என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]

வெள்ளி, 17 ஜூலை, 2020

பாரதிதாசன் இலக்கியத் தொடர்-3 : பாண்டியன் பரிசு

அகரமுதல

ஆடி 04, 2051 / 19.07.2020 

ஞாயிறு காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை. 

இணையவழி நூலரங்கம்: அணுக்கி/ Zoom வழி 
பாவேந்தர்  பாரதிதாசன் இலக்கியம்-தொடர்-3
இலக்கியப் படைப்பு: பாண்டியன் பரிசு
இலக்கிய ஆய்வுரை: 
தன்மதிப்புச் சுடர்
திரு சு.குமணராசன்
(தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை) 
இணைவீர் அணுக்கிக் கூட்டத்தில்:
கூ.அ.எண் : 720 2231 7522
கடவுச்சொல் : 111222
நிகழ்ச்சி ஏற்பாடு:
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்,
கருநாடகத் தமிழ்ப் பள்ளி – கல்லூரி ஆசிரியர் சங்கம்

புதன், 24 மே, 2017

பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! – சு.குமணராசன்




பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’  வேதனையுடன் விடை பெறுகிறது!

அன்புருவான எம் இனிய தமிழ் உறவுகளுக்கு,
அன்பான வணக்கம். வாழ்த்துகள்.
‘தமிழ் இலெமுரியா’ தன் தளிர் நடைப் பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. எண்ணிப் பார்க்கையில் இதயம் பூத்துக் குலுங்குகின்றது. செய்தியும் செயலும் இனிக்கின்றது.
அன்புடை அறம், போருடைப் புறம், ஈரடி அறிவு, நாலடி நலம், எட்டுத் தொகைக் காட்டும் கட்டுக்கடங்காக் கருத்துக் களஞ்சியம், பத்துப்பாட்டின் பரந்த நோக்கு என உலகையே வியக்க வைக்கும் வண்ணம் அன்பு, அறம், அறிவு, அரசியல், அறிவியல் என அனைத்தையும் உலகிற்கு வழங்கிய பெருமைமிகு இனம் தமிழினம் ஆகும். ஆயினும், இன்றைய உலக அரங்கில் உணர்விழந்த நிலையில் ஒரு பகுதியாகவும் உரிமைப் போராட்டக் களத்தில் மறு பகுதியாகவும் பல்வேறு நாடுகளில் ஏதிலிகளாகவும் ஏற்றமிழந்த நிலையிலும் வாழும் தமிழினத்தின் இயல்பு நிலை அறிந்து மாற்றம் காண வேண்டியது நம் கடமை என்ற உயிர்ப்பு உணர்வோடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பெற்றதே ‘தமிழ் இலெமுரியா’ என்ற இந்தத் தமிழ் இதழாகும்.
  தமிழையும் தமிழர்களையும் தமிழ் மொழிக்கு உள்ளும் தமிழ் நாட்டின் எல்லைக்கு உள்ளிருந்தும் காண்பதை விட வெளி மாநிலத்திலிருந்து பிறமொழி, பண்பாடு, அயல் மாநிலம் என அப்பால் இருந்து பார்ப்பதே மெய்மையான கணிப்பைத் தரும் என்ற நோக்குடன் “உங்கள் திசை எங்கள் பாதை” எனும் வழித்தடம் அமைத்துத் தன்னலம், தனிமனித வழிபாடு, தகாத பண்பாட்டு உறவு, தொலை நோக்கின்மை, மூட நம்பிக்கைகள், சாதிச் சமய சழக்குகள் என்பனவற்றில் சிக்குண்டு கிடக்கும் தமிழர் சீர்மை பெற்று மேன்மையுறு இனமாக மாற்றம் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் தமிழைத் தரமாக்கி மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழர் பண்புசார் இதழாக வெளிவருவது நம் இதழாகும்.  எழுத்து, சொல், பொருள், வடிவமைப்பு ஆகிய அனைத்துக் கூறுகளிலும் எம் சிந்தையின் உயிர்ச் சாரத்தை விதையாக எண்ணி தமிழ் நிலத்தில் விதைக்க முற்பட்டோம். இந்திய நாட்டில், குறிப்பாக நம் தமிழ் மண்ணில், இதழியல் துறையில் எண்ணற்ற இதழ்கள் தமிழியக்கக் கருத்துகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்டு, தொய்வடைந்து, துவண்டு மறைந்து போன வரலாறுகளை நன்கு அறிந்த பின்னும் இம்முயற்சியில் இறங்கினோம்.
  எம் அறிவு, ஆற்றல், ஆய்வு, தொழில், தொண்டு, தொடக்கம் எதுவாயினும் அடுத்தவரை விட்டு ஆழம் பார்த்து அடியெடுத்து வைக்கும் பழக்கம் வழக்கம் எமக்கிருந்ததில்லை. எனவே இதழின் மழலைப் பருவம் தொடங்கி இதழின் மேம்பாட்டுக்காக பெரும் பொருட்சுமையை நாமே இன்முகத்துடன் ஏற்று காகிதக் கழனியில் எழுத்து உழவு செய்தோம். ஓர் புதிய தளத்தில் புதிய பயணத்தில் மிகவும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பயன்தூக்கும் வகையில் பந்தியிலிட்ட எங்கள் படையலை வரவேற்று உள்ளத்தைப் பறி கொடுத்த பலர் நெஞ்சில் சுமந்தவற்றை நினைவுகளாக்கி வாழ்த்தி மகிழ்ந்தனர்; வரவேற்றுப் போற்றினர்; பழந்தமிழோடு உறவாடி ஊக்குவித்தனர். உள்ளம் களிப்புற்றது; களிப்பேருவுவகையடைந்தது. எமக்கென்று ஒரு தனிக்கொள்கை உண்டு. எனினும் கொள்கை முரண்பாடு, வேறுபாடு, வழித்திசை மாற்றம் கொண்டோர்களிடம் கூட மனித நேயம், நட்பு, உறவு முதன்மை அடிப்படையில் நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் விதமாக எண்ணியும் எழுதியும் வந்தோம். நட்பும் பகையும் நிலையான ஒன்றல்ல என்பதை உணர்ந்து அறிந்து மனித மனங்கள் நோதா வண்ணம் எம் எழுத்து விதைகள் தமிழ் நிலத்தில் தூவப்பட்டன.
  வட இந்தியர்கள் – குறிப்பாக  – சமற்கிருதம், இந்தி, குசராத்தி போன்ற மொழிகளின் பற்றாளர்கள் தத்தம் மொழிகள் மீது கொண்டிருக்கும் பற்று அதன் விரிவு, பரப்புரை போன்றவற்றில் காட்டுகின்ற ஆர்வம் போன்று தமிழ் மக்கள் தமிழ் மொழி மேல் காட்டுவதில்லை. வட மொழிப் பண்பாடுகள் அனைத்தும்  கடவுள், மன்னன், மதம் போன்றவற்றை முதன்மைபடுத்தும் வகையில் அமைந்தனவாகும். ஆனால் நம் தமிழ் இலக்கியங்கள் மக்கள், குறிப்பாக விளிம்புநிலை மாந்தர், இயற்கை ஒழுக்கம் போன்றவற்றிற்கு முதன்மை தந்து அவற்றையே தமிழர் வாழ்வியலாக  நமக்கு  வழி காட்டியவை. அவையே மானுடத்தின் தன்மையும் வளர்ச்சியும் ஆகும். எனினும், பெரும்பாலான தமிழர்கள் இவற்றைக்கூட ஒப்பிட்டுப் பார்த்து உண்மை தெளிவதில்லை. இதன் விளைவு, நம் உள்ளங்களில் தமிழின் பெருமை இன்று வரை பதிவு செய்யப்படவில்லை. இச்சூழலில் தமிழினம் எதிர்கொண்டு வரும் போராட்டக் களங்கள்  என்பவை பல்முனை வடிவங்கள் கொண்டவையாகும்.
  அறியாப் பருவம் தொடங்கி அறுபது ஆண்டுகளைக் கடந்த எம் வழித்தடத்தில் சந்தித்த சான்றோர்கள் குறிப்பாகத் தந்தை பெரியார், மாமுனிவர் குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார், பேரறிஞர் அண்ணா, தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம், எழுத்தாளர் சோமலே, மக்கள் கவிஞர் இன்குலாபு, கவிஞர் கலைக்கூத்தன், பொ.தொல்காப்பியனார், சீர்வரிசை சண்முகராசன், கு.வெ.கி.ஆசான், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற பெருமக்கள் உடலால் மறைந்து போனாலும் எம் உள்ளத்துள் என்றும் உறைந்து தத்தம் சொல்லாலும் செயலாலும் எழுத்துகளாலும் எம்மை வழிநடத்திய சிலரில் முதன்மையானவர்களாவர்.
  ஓர் இதழைத் தொடங்குவதிலும் தொடர்ந்து நடத்துவதிலும் உள்ள பொருள் சிக்கல், செயல் நிலை, பொருள் நிலை இடர்ப்பாடுகள், பணிநிலை அழுத்தங்கள், குடும்ப உறவுகளின் குமுறல்கள் என அனைத்தையும் இதழ்களைத் தம் நேரிய உழைப்பில் ஈட்டியப் பொருளைச் செலவிட்டுச் செயல்பட முனைந்தோர்கள் மட்டுமே உணர முடியும். வணிக நோக்குடன் தொடங்கப் பெறும் இதழ்கள் குறித்து இங்கு நாம் பேச முற்படவில்லை.
  இன்றைய காலச்சூழலில் தமிழனாக இருப்பதும் அதுவும் தமிழ் உணர்வாளனாக இருப்பதும் அதையும் தாண்டி தமிழ்நாட்டுக்கு அப்பால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்த் தொண்டாற்றுவதென்பதும்  எவ்வளவு துயரமான கடினமான ஒன்று என்பதை உணர்ந்தோர் உய்த்தோர் மட்டுமே உணர முடியும். இத்தனை ஆண்டுகளாக நெறி பிறழாது அல்லன நீக்கி நல்லன கூட்டி வெளிவரும் இவ்விதழின் தன்மை ஏற்று இதழியல், இதழியலாளர் குறித்த அடையாள அட்டைகளைக் கூட எம்மால் பெற்றிட இயலவில்லை. மராத்திய அரசுக்கு யாம் வெளி மாநிலத்தவர்; தமிழ்நாடு அரசுக்கும் யாம் வெளி மாநிலத்தவர். இந்திய நாட்டில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நிலை இதுதான்.
  இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் எம் உணர்வும் உள்ளக் களிப்பும் உலகத் தமிழினம் படித்து மகிழ வேண்டும் எனும் வேட்கையால் உந்தப்பட்டு பதினைந்தாயிரம் படிகளுக்கு மேலாக அச்சிடப்பட்டு தமிழர்கள் பெருவாரியாக வாழும் உலக நாடுகள் பலவற்றிற்கு எம் சொந்தச் செலவிலேயே வான்வெளி தூதஞ்சல் மூலம் அனுப்பி வந்தோம். தொடக்கக் காலத்தில் இதழ் பரப்புரைக்காக பெரும் பொருட்செலவையும் ஏற்றோம். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் ஆங்காங்கே சில முகவர்களும் நியமிக்கப்பட்டனர். அஞ்சல் கட்டணச் சலுகை கிடைக்காத நிலையில் இதழ்களை அஞ்சலில் அனுப்ப ஒவ்வொரு இதழுக்கும் உரூ.7 அஞ்சல் வில்லை ஒட்டி நம் இதழைத் தமிழ் மக்களிடம் சேர்த்தோம். ஒவ்வொரு திங்களின் இதழாக்கம், பரவலாக்கத்திற்கும் சற்றொப்ப இரண்டு இலக்கம் வரை பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவி வந்தது. நாம் நேரிய முறையில் ஈட்டிய வருவாயின் பெரும்பகுதி நம் தமிழ்ச் சேவைக்காகவே பயன்படுத்தப் பட்டது. எனினும், முகவர்கள் யாரிடமிருந்தும் எவ்விதப் பொருளும் எம் கைக்குக் கிட்டவில்லை. இதழைப் பெற்றுப் பல திங்கள்களுக்குப் பின்னர் எம்மை புறந்தள்ளிய முகவர்களில்  ஒருவர் ஒரேயொரு முறை உரூ.5,000க்கான காசோலையை நம் அலுவலகத்திற்கு அனுப்பித் தந்தார். ஆனால் அந்தக் காசோலையும் ‘கணக்கில் பொருளில்லை’ என்ற வரிகளுடன் எமக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இச்சூழலில் நம் இதழ்களை 12 அயல் நாடுகளுக்கு அனுப்பி வந்த நிலையில் பலரிடமிருந்து பாராட்டுரைகள் வந்தனவேயொழிய பணம் ஒரு தாலர் கூட வந்து சேரவில்லை. மேலும், நம்முடைய வாசகர்கள் பலருக்கும் உறுப்பினர் கட்டணம் முடிவுற்றதாக நினைவூட்டல் மடல் அனுப்பினும் விருப்புடன் விலை அனுப்பித் தொடர்ந்து நமக்கு உதவிட முன் வருவோர் தொகை சற்றொப்ப 10 விழுக்காடு மட்டுமே. பெரும்பாலான வாசகர்கள் இன்று வரை இதழை இலவயமாகவே படித்து வருகின்றனர்.
  பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து நம் இதழில் விளம்பரங்களும் தரப்பட்டன. ஆனால் அவையனைத்தும் விலையில்லா விளம்பரங்கள் என பின்னர்தான் அறிந்து தெளிந்தோம். செலவுகளைக் குறைக்க வேண்டுமென இதழ் படிகளைச் சற்றுக் குறைவாக அச்சிட்டோம். திங்களுக்கு இரண்டு இலக்கம் என்ற செலவுத் தொகை  ஒன்றரை இலக்கமாயிற்று. தமிழ்நாடு அரசு நூலகங்களுக்கு நம்முடைய இதழை வாங்க ஆணையிடப்பட்டு  அதற்கொப்ப மாவட்ட நூலகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெரும்பாலான மாவட்டக் கிளை நூலகங்களுக்கு இன்று வரை அனுப்பப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அங்கிருந்தும் நமக்கு வந்து சேர வேண்டிய பட்டியல் தொகை வருவதில்லை. கடந்த 2014-15,16,17 ஆகிய ஆண்டுகளுக்கான நிலுவை மட்டும் தற்போது ரூ.8,50,000 ஆக உள்ளது. தமிழினத்தின் நலனையும் விடிவு ஆக்கத்தையும் எண்ணி ஓரளவு மொழிக் கலப்பின்றி வெளிக்கொணரும் இந்த முயற்சியில் நமக்குப் பெரும் பொருட் செலவு ஏற்படும் என்று அறிந்தேதான் நாம் இந்த முயற்சியில் இறங்கினோம் என்றாலும் கூட கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு திங்களிலும் எம் வருவாயில் 50லிருந்து 80 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகை நம் இதழ் வெளியீட்டுக்காகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
  இப்பணியில் பல இடர்ப்பாடுகளைச் சந்தித்தாலும் ஒவ்வொரு திங்களும் இதழை புதுமையாக ஈன்றெடுக்கும் போது ஓர் மழலையைப் போல் புன்னகைக்கும்  இதழ்கள் ஒவ்வொன்றும் எம் வலிக்கு மருந்தாகவும் எம் விழிகளுக்கு விருந்தாகவும் அமைந்து எம்மை ஆற்றுப்படுத்தியிருக்கின்றன. ஆம், கடந்த 10 ஆண்டுகளில் சிறு சிறு வருவாய் அவ்வப்போது வந்த நிலையிலும் இழப்பை ஈடுசெய்ய சற்றொப்ப நூற்றுப்பத்து இலக்கம் (ஒரு கோடியே பத்து இலக்கம்) எம் உழைப்பின் ஊதிய வருவாயிலிருந்து பயன்படுத்தியுள்ளோம். இக்குமுகாயம் இன்றி நாமில்லை என்ற உணர்வுடன் எம் வருவாய் இங்கே பயன்படுத்தப் பட்டிருப்பது எமக்கு வேதனை தரும் செய்தியல்ல. இது எம் தமிழ்ச் சமுகத்திற்காக நாம் செய்த முதலீடா? அல்லது தமிழ்ப் பணியில் எமக்கு ஏற்பட்ட இழப்பா? என்ற கேள்விக்குரிய விடையை வரலாறுதான் வெளிக்காட்டும். எம் பணியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடர்ந்து இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது கொடுப்பதற்கும் இழப்பதற்கும் ஏதுமில்லை என்ற நிலையில் இதழைத் தொடர்ந்து வெளிக்கொணர முயல்வது அறிவுடைமையாகாது; இயலாது என்பதே இயல்பாகும்.
  தாய்மை இலக்கணத்துடன் தமிழைத் தரமாக்கி தரமுயன்ற இதழின் தொடக்கக் காலத்தில் தமிழ் இதழுக்கு ஏன் ‘இலெமுரியா’ என்ற ஆங்கிலப் பெயர் என அங்கலாய்த்துக் கொண்ட தமிழச்சிகளும் மொழி நடை தம் விருப்புக்கொப்ப அமையவில்லையே இது தமிழ்தானா? என்று வினா தொடுத்த வாசகர்களும் நம் தமிழ்நாட்டில் உண்டு. என்செய்வது? காலங்காலமாக மொழிக்கலப்புகள் தமிழர்களை தன்னிலை அறியா நிலைக்கு கொண்டு சென்று விட்டது.
  தற்காலத் தமிழினத்தின் நோய்களாக விளங்கும் சாதி, மதம், கட்சி அரசியல், தனிநாயக வழிபாடு, பொருள் வழி மோகம், சின்னத்திரை, பெருந்திரை, ஆருடம் குறிப்புகள் என்பவற்றோடு, சற்றே நாம் உளவொப்பம் (சமரசம்) செய்து கொண்டு நம் இதழின் உள்ளீடுகளாக அவற்றையும் அமைத்திருந்தால் எம் இதழியல் பயணத்தை இன்னும் சில காலம் நீட்டித்திருக்க முடியும். விளம்பரம் என்ற பெயரில் வேண்டாதவற்றை விருப்பமின்றி அச்சேற்றியிருப்பதாக தன்னிலை விளக்கமளித்திருந்தாலும் மேலும் சில காலம் எம்மால் நிலை பெற்றிருக்க முடியும். எனினும், சமகாலக் குமுகாயத்தின் விருப்புக்கொப்ப உளவொப்பம் (சமரசம்) செய்ய இயலாத நிலையில் பொருளியல் இடர்பாடுகளினால் தற்போது இளைப்பாற வேண்டியவர்களாகி விட்டோம்.
  நாம் இன்றைய எழுத்துத் தளத்தில் இளைப்பாற வேண்டியிருந்தாலும் எம் களப்பணி வெவ்வேறு தளங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். நாம் துவண்டு விடவில்லை; துஞ்சி விடவில்லை; இந்நிலை கண்டு அஞ்சி விடவும் இல்லை.
  இச்சூழலில் ஓர் வேண்டுகோள். தமிழ் உணர்வும் பொருளியல் சூழலும் ஒருங்கே அமையப்பெற்ற நெறிய நேரிய நல்லுள்ளத்தினர் யாராகினும் “தமிழ் இலெமுரியா”வை எம் வழித்திசையில் நின்று தொடர்ந்து வெளிக்கொணர விரும்பினால், விருப்புடன் கையளிப்போம். தத்துக் கொடுத்த ஒரு தாய் சேய்மையிலிருந்து தன் சேய்யின் வளர்ச்சி கண்டு மகிழுறுவது போல் யாமும் களிப்புறுவோம்.
   அறிவும் உணர்ச்சியும் அளவோடு கலந்து அமைவதே வாழ்வு. காதலும் வீரமும் கனி நிகர் மேன்மையும் வளர்ச்சியும் வாழ்வதும் வீழ்வதும் இதன் ஏற்ற இறக்கங்களால் முகிழ்ப்பவைகளாகும். சுழற்சியின்றி இவ்வுலகம் இயங்காது. கடிதும் இனிதும் கலந்ததே நிலையான வாழ்வாகும். பிறப்பும் இறப்பும் பிரிக்க இயலா உயிர்மைத் தத்துவம். எனவே நாம் சந்தித்துள்ள இந்நிலையை காய்ப்பும் உவப்பும் இன்றி இயல்பாகவே அணுகுகின்றோம். எம்முடைய வலி, வலிமை, காண வேண்டிய ஒளி, செல்ல வேண்டிய வழி என அனைத்தும் உணரப்படுவதேயன்றி உரைநடையால் விளங்க வைக்கக் கூடியவை அல்ல.
  தற்கால தமிழியக்க இதழியல் பண்புகளையும் குமுகாய நோக்கையும் நம் இடர்பாடுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதும், பதிவு செய்வதும் நமது கடமை என்ற உணர்வுடன் சிலவற்றை இங்கு பெய்திருக்கின்றோம். இவை பரிவு நோக்குடன் பார்க்கப்பட வேண்டியவை அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். எனவே பரிவு மடல்களை வாசகர்கள் தவிர்த்திட வேண்டுகின்றோம்.
  இந்தத் தமிழ் நடைப் பயணம் எம் பட்டறிவையும் படிப்பறிவையும் பெரிதும் வளர்த்திருக்கிறது. வளமிக்க வாய்க்காலனையோர் பலரின் அன்பையும் அறிவுரைகளையும் எமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது; மாசற்ற மக்கள் பலரை எம் சுற்றத்தாரர்களாகச் சுட்டிக் காட்டியுள்ளது; முகம் தெரியாத பலரை எம் அகத்துள் அடக்கியிருக்கிறது.
  ஒப்பிலா நட்பு, உணர்விலா மாக்கள், வேற்றுச் சொல் வீணர்கள், வெற்றுச் சொல் வீரர்கள், அழுக்காறு நெஞ்சினர் என பலரையும் நமக்கு அடையாளப்படுத்தி அவர்களை நம்மிடமிருந்து அயன்மை(அந்நிய)ப் படுத்தியிருக்கிறது.
  ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற கணியன் பூங்குன்றனாரின் சொல்வெட்டுகள் வெறும் அறிவுரை அல்ல; மாறாக அவை நம் குமுகாயப் பட்டறிவின் பயனாக நமக்குக் கிடைத்த விடையாகும் என்பது எம் கணிப்பாகும். எம் வாழ்நாளில் சற்றொப்ப 44 ஆண்டுகள் மராத்திய மண்ணில் கழித்திருந்தாலும் நாம் நம் இன, மொழி, சமுக நீதி உணர்வுகளிலிருந்து நம்மை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. எம்மால் இயன்ற தொண்டினை நம் மொழிக்கும் இனத்திற்கும் தொடர்ந்து செய்து வருகின்றோம் என்ற மனநிறைவோடுதான் இன்றும் உலா வருகின்றோம். தமிழின உணர்வு என்ற மாமலை தரைமட்டமாகி விடாது; தமிழ் மொழிப் பற்று என்னும் வள நதி வற்றிப் போய்விடாது. எஞ்சியிருக்கும் காலம் எத்தனை விநாடி என்பது நாம் கணிக்க இயலாது. எனினும், நமது தமிழ்ப் பணி தொய்வற்ற நிலையில் தூய்மையான ஒன்றாகத் தொடரும்.  எம் இருக்கையைச் சுற்றி எட்டாயிரம் தமிழ் நூல்கள் ஒரு மன்னவனைக் காக்கும் மதிற்சுவர் போல் அமைந்துள்ளன. அவற்றில் புதைந்து கிடக்கும் நம் இனத்தின் வரலாறு, வாழ்க்கை முறை, பண்பாட்டு விழுமியங்கள், பண்ணாராய்ச்சித் தொகுப்புகள் என அனைத்தும் எமக்கு மூச்சுக் காற்றாய் விளங்கி எம் உயிரை நீட்டித்து உள்ளத்தை விரிவுபடுத்தும். அதுவே நம் தமிழ் மொழி எமக்களித்திருக்கும் உடையும் கொடையும் ஆகும். மழலைப் பருவம் தொட்டு கொஞ்சிக் குலாவி படிப்படியாய் பருவம் எய்தும் வரை உயிர் நாராய் வளர்த்தெடுத்த மகவையை திடீரென ஒரு நேர்ச்சியினால் தவறவிட்ட ஓர் தாயின் மன நிலையில் யாமும் உறைகிறோம்.
  எம் இடையறா இதழியல் பணியில், பயணத்தில் எமக்குச் சிலர் பாதையாகவும் படிக்கட்டுகளாகவும் வழிகாட்டிகளாகவும் ஒளி காட்டிகளாகவும் நம் அயர்வைப் போக்கிய சுமைதாங்கிகளாகவும்  பல்வேறு கால நிலைகளில் நமக்குத் துணை புரிந்து இடர் வந்த போதெல்லாம் எம்முள் இனிமையை வார்த்திருக்கிறார்கள்; வளர்த்திருக்கிறார்கள். அந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம் இதுவாகும்.
  எம்மை உச்சி மோந்து பாராட்டிப் புகழ்ந்துரைத்தோர் எண்ணற்ற வாசகப் பெருமக்களெனினும் எமக்கு அவ்வப்போது ஊக்கம் தந்து மனவுறுதியைச் செம்மைப்படுத்தி துணை நின்ற அல்லது பல்வேறு காலநிலைகளில் எம் இடர் அறிந்து தன்னால் இயன்ற பொருளுதவியை நல்கிய சிலரை நெஞ்சினிக்க நினைவு கூர்வது நம் கடமையாகும்.
  தவத்திரு பொன்னம்பல அடிகளார், தமிழறிஞர் தமிழண்ணல், எழுத்தாளர் பொன்னீலன், கோ.பாலச்சந்திரன் இ.ஆ.ப., பொன்.அன்பழகன் இ.ஆ.ப., உ.சகாயம் இ.ஆ.ப., முனைவர் சேதுகுமணன், தென்கச்சி சுவாமிநாதன், தமிழருவி மணியன், சாரோ பூ.மாரிமுத்து, ஐதராபாத்து டி.எசு.செபமணி, ஈரோடு பெரியசாமி, செல்வகுமார், அழகன் முதலான கருப்பண்ணன் குடும்பத்தினர், கோவை மருத்துவமனை தலைவர் நல்ல.பழனிச்சாமி, கவிஞர் சிற்பி, கோவை ஞானி, புவனேசுவர் தமிழ்ச் சங்கப் புரவலர் துரைசாமி, கோவை கார்த்திகேயன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொள்ளாச்சி நசன், மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் இரா.பெர்னார்டு, மறைமலை இலக்குவனார், வழக்கறிஞர் த.இராமலிங்கம், வானொலி நேருரையாளர் அப்துல் ஜப்பார், அறிஞர் சுகி.சிவம், கவிஞர் மோகனரங்கன், பாவலர் கருமலைத் தமிழாழன், மேனாள் அமைச்சர் கவிஞர் கா.வேழவேந்தன், த. தாலின் குணசேகரன், பூனே பாலாசி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியம், தமிழறிஞர் க.ப.அறவாணன், தாயம்மாள் அறவாணன், பொருளாதார நிபுணர் சேதுராமன் சாத்தப்பன், மருத்துவர் திருமதி சுதா சேசயன், எழுத்தாளர் பா.இரா.சுபாசு சந்திரன், கே.ஆர்.சீனிவாசன், பெங்களூர் இராமமூர்த்தி, ஈரோடு வெங்கடேசன், கவிஞர் பூந்துறையான், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபி.சண்முக சுந்தரம், குன்றம் கு.இராமரத்நம், தெ.இலக்குவன், இரமேசு பிரபா, ‘சிந்தனையாளன்’ வே.ஆனைமுத்து, இளவரசு(யுவராச) அமிழ்தன், தங்கவயல் க.சி.தென்னவன், ‘முகம்’ மாமணி, ‘கவிக்கொண்டல்’ மா.செங்குட்டுவன், சா.கணேசன், ‘வெல்லும் தூய தமிழ்’ தமிழ்மல்லன், ‘யாதும் ஊரே’ இங்கர்சால், ‘ஓம்சக்தி’ சிதம்பரநாதன், புதுவை கல்லாடன், ஆனைவாரி ஆனந்தன், நவிமும்பை சு.சுதாகரன், பேரா.சமீரா மீரான், ஆசுத்திரேலியா சந்திரிகா சுப்பிரமணியம், பிரான்சு இராசன் பொன்ராசா, அமெரிக்கா இரவிக்குமார், சிங்கப்பூர் ஆண்டியப்பன், பெங்களூர் தமிழ்ச் சங்கம், பம்பாய் திருவள்ளுவர் மன்றம், விழித்தெழு இயக்கம், இளங்கோ நூல் விற்பனையகம் தாசு மற்றும் தமிழ்ச் சங்கமம், மும்பை.
  சிலம்பொலி செல்லப்பனார், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் அறிவுமதி, இலக்குவனார் திருவள்ளுவன், வா.மு.சே.திருவள்ளுவன், கவிஞர் புதிய மாதவி, தி.சிங்கார வேலு இ.கா.ப., காஞ்சி துரை சௌந்தரராசன், தஞ்சை மருத்துவர் எசு.நரேந்திரன், ஈரோடு கல்வெட்டறிஞர் புலவர் வெ.இராசு, தொழிலதிபர் ஆ.தென்சிங்கு, பா.வேலையா, கோவை விசயா பதிப்பகம், இயக்குநர்கள் வி.சேகர், தங்கர்பச்சான், பாலப்பன் முருகன், நெல்லை நாதன், கல்பாக்கம் சுகுமார், தஞ்சை சந்திரசேகர், அ.இரவிச்சந்திரன், அல்லா பிச்சை, குப்பு வீரமணி, வழக்கறிஞர் அமர்சிங்கு, எசு.ஏ.துரை, ஔவை கோட்டம் கலை வேந்தன், பேராசிரியர் சரசுவதி இராமநாதன், புலவர் இரா.பே.பெருமாள், மும்பை டி.கே.சந்திரன், மொழியறிஞர் பா.அருளி, தமிழறிஞர் அரணமுறுவல், பேரா.ம.இலெ.தங்கப்பா, தமிழ் அலை இசாக்கு,  தூயத்தேவதை(Holy Angel)பள்ளி திருமதி தேவசெல்வி சாமுவேல், சென்னை பால்துரை, திருப்பூர் நாகேசுவரன், நெல்லை குமார சுப்பிரமணியம், பரணி பாவலன், மருத்துவர் காசிப்பிச்சை,  கவிஞர் குணா, கிங்பெல், பேராசிரியர் எபினேசர், வய்.மு.கும்பலிங்கன், அ.மறைமலையான், கவிஞர் பூ.ஆ.இரவீந்திரன், கி.தனுசுகோடி, பி.கிருட்டிணன், இல.முருகன், எசு.கே.ஆதிமூலம், திருச்சி அரசெழிலன், வி.சி.வில்வம், கொடுங்கையூர் தங்கமணி, வெ.சித்தார்த்தன், பெ.கணேசன், காரை.கரு.இரவீந்திரன், பாசறை மு.பாலன், கடவூர் மணிமாறன், பொழிலன், கல்பாக்கம் வேம்பையன், ஐதராபாத்து சாந்தாதத்து, செகந்தராபாத்து சுப்பிரமணியன், ப..செகதீசன், மும்பை சபேசன், க.வ.அசோக்குமார், சிவ.நல்ல சேகரன், ச.ஆம்சுட்ராங்கு, அம்பர்நாத்து எசு.எம்.இலக்குமணன், இராசேந்திர தானியேல், ஈரோடு கார்த்திக்கு, புதுதில்லி  பிரமநாயகம், காரைக்கால்  நாயகன்(கேப்டன்) ஆதிமூலம் இராமச்சந்திரன், கோவை உமேசு, ‘மங்கத்துஇராம்’ எசு.இராமச்சந்திரன், பீவண்டி பெருமாள், கரூர் சுப்பிரமணியம், இல.தேவராசன், கே.சேதுராமன், தொழிலதிபர் நாராயணன் நரசிம்மன், கல்வியாளர் சி.சிவராசு எனப் பலரில் சிலரை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம். இவர்களின் துணை வலிவும் அறிவுரைகளும் எம் வளர்ச்சியின் வேர்களாகவும் வேர்களை நனைத்த நீர்த்துளிகளாகவும் பல்வேறு காலநிலைகளில் அமைந்தனவாகும். தமிழ்நாட்டில் குறிப்பாக கொங்கு நாடும் குமரியும் தஞ்சையும் எம்மை தாங்கிப் பிடித்த மாவட்டங்களில் முதன்மை வகித்தவை என்பதை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றோம்..
 ‘தமிழ் இலெமுரியா’ என்ற இத் தமிழிதழ் பல்லாண்டு காலமாக பயனுள்ள செய்திகளையும் கட்டுரைகளையும் தாங்கி வெளி வரக் கரணியமாக அமைந்த பொறுப்பாசிரியர்கள் கவிஞர் மு.தருமராசன், மனோ.விசயக்குமார் மற்றும் எம் அலுவலக ஊழியர் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
  அண்மைக் காலத்தில் உறுப்பினர் கட்டணத்தை ஓராண்டுக்கு மேலாக செலுத்திய வாசகர்களில் எஞ்சியுள்ள பணத்தைத் திரும்பப் பெற விரும்புவோர் எம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். எம் மீது தாங்கள் இதுகாறும் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும் பெரிதும் போற்றுதலுக்குரியது. எனினும் எம் பொருளியல் சூழல் இதழின் தடைக்கல்லாக அமைந்தது குறித்துத் தாங்கள் பொருத்தருள வேண்டுகின்றோம்.
  எத்தனையோ தமிழியக்க ஏடுகள் தமிழ்நாட்டுக்கு உள்ளும் வெளியிலும் வரலாற்றில் பழைய ஏடுகளின் பட்டியலில் இடம் பெற்று நூலகங்களில் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இனி ‘தமிழ் இலெமுரியா’ ஓர் அச்சு ஊடகமாக வெளிவர இயலாச் சூழலில் ‘இதோ ஒரு பழைய ஏடு’ என்ற பட்டியலில் எம்மையும் இணைத்துக் கொள்க. சேய்தனை இழந்த ஓர் தாயின் மனநிலையில் யாம் விடை பெறுகின்றோம்.
என்றும் வேண்டும் இனிய அன்பு.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்   (திருக்குறள்: 291) – திருவள்ளுவர்
கனிவுடன்
                முதன்மை ஆசிரியர்
சு.குமணராசன்