பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது!
அன்புருவான எம் இனிய தமிழ் உறவுகளுக்கு,
அன்பான வணக்கம். வாழ்த்துகள்.
‘தமிழ் இலெமுரியா’ தன் தளிர் நடைப்
பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாம் ஆண்டில் அடி
எடுத்து வைக்கின்றது. எண்ணிப் பார்க்கையில் இதயம் பூத்துக்
குலுங்குகின்றது. செய்தியும் செயலும் இனிக்கின்றது.
அன்புடை அறம், போருடைப் புறம், ஈரடி அறிவு,
நாலடி நலம், எட்டுத் தொகைக் காட்டும் கட்டுக்கடங்காக் கருத்துக்
களஞ்சியம், பத்துப்பாட்டின் பரந்த நோக்கு என உலகையே வியக்க வைக்கும் வண்ணம் அன்பு, அறம், அறிவு, அரசியல், அறிவியல் என அனைத்தையும் உலகிற்கு வழங்கிய பெருமைமிகு இனம் தமிழினம்
ஆகும். ஆயினும், இன்றைய உலக அரங்கில் உணர்விழந்த நிலையில் ஒரு
பகுதியாகவும் உரிமைப் போராட்டக் களத்தில் மறு பகுதியாகவும் பல்வேறு
நாடுகளில் ஏதிலிகளாகவும் ஏற்றமிழந்த நிலையிலும் வாழும் தமிழினத்தின் இயல்பு நிலை அறிந்து மாற்றம் காண வேண்டியது நம் கடமை என்ற உயிர்ப்பு உணர்வோடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பெற்றதே ‘தமிழ் இலெமுரியா’ என்ற இந்தத் தமிழ் இதழாகும்.
தமிழையும் தமிழர்களையும் தமிழ் மொழிக்கு
உள்ளும் தமிழ் நாட்டின் எல்லைக்கு உள்ளிருந்தும் காண்பதை விட வெளி
மாநிலத்திலிருந்து பிறமொழி, பண்பாடு, அயல் மாநிலம் என அப்பால் இருந்து
பார்ப்பதே மெய்மையான கணிப்பைத் தரும் என்ற நோக்குடன் “உங்கள் திசை எங்கள்
பாதை” எனும் வழித்தடம் அமைத்துத் தன்னலம், தனிமனித வழிபாடு, தகாத பண்பாட்டு
உறவு, தொலை நோக்கின்மை, மூட நம்பிக்கைகள், சாதிச் சமய சழக்குகள்
என்பனவற்றில் சிக்குண்டு கிடக்கும் தமிழர் சீர்மை பெற்று மேன்மையுறு இனமாக
மாற்றம் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் தமிழைத் தரமாக்கி மராட்டிய
மாநிலத்திலிருந்து தமிழர் பண்புசார் இதழாக வெளிவருவது நம் இதழாகும்.
எழுத்து, சொல், பொருள், வடிவமைப்பு ஆகிய அனைத்துக் கூறுகளிலும் எம்
சிந்தையின் உயிர்ச் சாரத்தை விதையாக எண்ணி தமிழ் நிலத்தில் விதைக்க
முற்பட்டோம். இந்திய நாட்டில், குறிப்பாக நம் தமிழ் மண்ணில், இதழியல்
துறையில் எண்ணற்ற இதழ்கள் தமிழியக்கக் கருத்துகளை முன்னிறுத்தி
தொடங்கப்பட்டு, தொய்வடைந்து, துவண்டு மறைந்து போன வரலாறுகளை நன்கு அறிந்த
பின்னும் இம்முயற்சியில் இறங்கினோம்.
எம் அறிவு, ஆற்றல், ஆய்வு, தொழில்,
தொண்டு, தொடக்கம் எதுவாயினும் அடுத்தவரை விட்டு ஆழம் பார்த்து அடியெடுத்து
வைக்கும் பழக்கம் வழக்கம் எமக்கிருந்ததில்லை. எனவே இதழின் மழலைப் பருவம்
தொடங்கி இதழின் மேம்பாட்டுக்காக பெரும் பொருட்சுமையை நாமே இன்முகத்துடன் ஏற்று காகிதக் கழனியில் எழுத்து உழவு செய்தோம்.
ஓர் புதிய தளத்தில் புதிய பயணத்தில் மிகவும் சிந்தித்துச் சீர்தூக்கிப்
பயன்தூக்கும் வகையில் பந்தியிலிட்ட எங்கள் படையலை வரவேற்று உள்ளத்தைப் பறி
கொடுத்த பலர் நெஞ்சில் சுமந்தவற்றை நினைவுகளாக்கி வாழ்த்தி மகிழ்ந்தனர்;
வரவேற்றுப் போற்றினர்; பழந்தமிழோடு உறவாடி ஊக்குவித்தனர். உள்ளம்
களிப்புற்றது; களிப்பேருவுவகையடைந்தது. எமக்கென்று ஒரு தனிக்கொள்கை உண்டு.
எனினும் கொள்கை முரண்பாடு, வேறுபாடு, வழித்திசை மாற்றம் கொண்டோர்களிடம் கூட
மனித நேயம், நட்பு, உறவு முதன்மை அடிப்படையில் நல்லெண்ணத்தையும்
நல்லிணக்கத்தையும் வளர்க்கும் விதமாக எண்ணியும் எழுதியும் வந்தோம். நட்பும்
பகையும் நிலையான ஒன்றல்ல என்பதை உணர்ந்து அறிந்து மனித மனங்கள் நோதா
வண்ணம் எம் எழுத்து விதைகள் தமிழ் நிலத்தில் தூவப்பட்டன.
வட இந்தியர்கள்
– குறிப்பாக – சமற்கிருதம், இந்தி, குசராத்தி போன்ற மொழிகளின்
பற்றாளர்கள் தத்தம் மொழிகள் மீது கொண்டிருக்கும் பற்று அதன் விரிவு,
பரப்புரை போன்றவற்றில் காட்டுகின்ற ஆர்வம் போன்று தமிழ் மக்கள் தமிழ் மொழி மேல் காட்டுவதில்லை.
வட மொழிப் பண்பாடுகள் அனைத்தும் கடவுள், மன்னன், மதம் போன்றவற்றை
முதன்மைபடுத்தும் வகையில் அமைந்தனவாகும். ஆனால் நம் தமிழ் இலக்கியங்கள்
மக்கள், குறிப்பாக விளிம்புநிலை மாந்தர், இயற்கை ஒழுக்கம் போன்றவற்றிற்கு
முதன்மை தந்து அவற்றையே தமிழர் வாழ்வியலாக நமக்கு வழி காட்டியவை. அவையே
மானுடத்தின் தன்மையும் வளர்ச்சியும் ஆகும். எனினும், பெரும்பாலான தமிழர்கள் இவற்றைக்கூட ஒப்பிட்டுப் பார்த்து உண்மை தெளிவதில்லை.
இதன் விளைவு, நம் உள்ளங்களில் தமிழின் பெருமை இன்று வரை பதிவு
செய்யப்படவில்லை. இச்சூழலில் தமிழினம் எதிர்கொண்டு வரும் போராட்டக் களங்கள்
என்பவை பல்முனை வடிவங்கள் கொண்டவையாகும்.
அறியாப் பருவம் தொடங்கி அறுபது
ஆண்டுகளைக் கடந்த எம் வழித்தடத்தில் சந்தித்த சான்றோர்கள் குறிப்பாகத்
தந்தை பெரியார், மாமுனிவர் குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ.விசுவநாதம், ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார், பேரறிஞர்
அண்ணா, தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம், எழுத்தாளர் சோமலே, மக்கள் கவிஞர்
இன்குலாபு, கவிஞர் கலைக்கூத்தன், பொ.தொல்காப்பியனார், சீர்வரிசை
சண்முகராசன், கு.வெ.கி.ஆசான், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற பெருமக்கள்
உடலால் மறைந்து போனாலும் எம் உள்ளத்துள் என்றும் உறைந்து தத்தம்
சொல்லாலும் செயலாலும் எழுத்துகளாலும் எம்மை வழிநடத்திய சிலரில்
முதன்மையானவர்களாவர்.
ஓர் இதழைத் தொடங்குவதிலும் தொடர்ந்து
நடத்துவதிலும் உள்ள பொருள் சிக்கல், செயல் நிலை, பொருள் நிலை
இடர்ப்பாடுகள், பணிநிலை அழுத்தங்கள், குடும்ப உறவுகளின் குமுறல்கள் என
அனைத்தையும் இதழ்களைத் தம் நேரிய உழைப்பில் ஈட்டியப் பொருளைச் செலவிட்டுச்
செயல்பட முனைந்தோர்கள் மட்டுமே உணர முடியும். வணிக நோக்குடன் தொடங்கப்
பெறும் இதழ்கள் குறித்து இங்கு நாம் பேச முற்படவில்லை.
இன்றைய காலச்சூழலில் தமிழனாக இருப்பதும்
அதுவும் தமிழ் உணர்வாளனாக இருப்பதும் அதையும் தாண்டி தமிழ்நாட்டுக்கு
அப்பால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்த் தொண்டாற்றுவதென்பதும் எவ்வளவு
துயரமான கடினமான ஒன்று என்பதை உணர்ந்தோர் உய்த்தோர் மட்டுமே உணர முடியும்.
இத்தனை ஆண்டுகளாக நெறி பிறழாது அல்லன நீக்கி நல்லன கூட்டி வெளிவரும்
இவ்விதழின் தன்மை ஏற்று இதழியல், இதழியலாளர் குறித்த அடையாள அட்டைகளைக் கூட
எம்மால் பெற்றிட இயலவில்லை. மராத்திய அரசுக்கு யாம் வெளி மாநிலத்தவர்;
தமிழ்நாடு அரசுக்கும் யாம் வெளி மாநிலத்தவர். இந்திய நாட்டில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நிலை இதுதான்.
இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் எம்
உணர்வும் உள்ளக் களிப்பும் உலகத் தமிழினம் படித்து மகிழ வேண்டும் எனும்
வேட்கையால் உந்தப்பட்டு பதினைந்தாயிரம் படிகளுக்கு மேலாக அச்சிடப்பட்டு
தமிழர்கள் பெருவாரியாக வாழும் உலக நாடுகள் பலவற்றிற்கு எம் சொந்தச்
செலவிலேயே வான்வெளி தூதஞ்சல் மூலம் அனுப்பி வந்தோம். தொடக்கக் காலத்தில்
இதழ் பரப்புரைக்காக பெரும் பொருட்செலவையும் ஏற்றோம். தமிழ்நாட்டில் அனைத்து
மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் ஆங்காங்கே சில முகவர்களும்
நியமிக்கப்பட்டனர். அஞ்சல் கட்டணச் சலுகை கிடைக்காத நிலையில் இதழ்களை
அஞ்சலில் அனுப்ப ஒவ்வொரு இதழுக்கும் உரூ.7 அஞ்சல் வில்லை ஒட்டி நம் இதழைத்
தமிழ் மக்களிடம் சேர்த்தோம். ஒவ்வொரு திங்களின் இதழாக்கம்,
பரவலாக்கத்திற்கும் சற்றொப்ப இரண்டு இலக்கம் வரை பயன்படுத்த வேண்டிய சூழல்
நிலவி வந்தது. நாம் நேரிய முறையில் ஈட்டிய வருவாயின் பெரும்பகுதி நம்
தமிழ்ச் சேவைக்காகவே பயன்படுத்தப் பட்டது. எனினும், முகவர்கள்
யாரிடமிருந்தும் எவ்விதப் பொருளும் எம் கைக்குக் கிட்டவில்லை. இதழைப்
பெற்றுப் பல திங்கள்களுக்குப் பின்னர் எம்மை புறந்தள்ளிய முகவர்களில்
ஒருவர் ஒரேயொரு முறை உரூ.5,000க்கான காசோலையை நம் அலுவலகத்திற்கு
அனுப்பித் தந்தார். ஆனால் அந்தக் காசோலையும் ‘கணக்கில் பொருளில்லை’ என்ற
வரிகளுடன் எமக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இச்சூழலில் நம் இதழ்களை 12 அயல்
நாடுகளுக்கு அனுப்பி வந்த நிலையில் பலரிடமிருந்து பாராட்டுரைகள் வந்தனவேயொழிய பணம் ஒரு தாலர் கூட வந்து சேரவில்லை.
மேலும், நம்முடைய வாசகர்கள் பலருக்கும் உறுப்பினர் கட்டணம் முடிவுற்றதாக
நினைவூட்டல் மடல் அனுப்பினும் விருப்புடன் விலை அனுப்பித் தொடர்ந்து நமக்கு
உதவிட முன் வருவோர் தொகை சற்றொப்ப 10 விழுக்காடு மட்டுமே. பெரும்பாலான
வாசகர்கள் இன்று வரை இதழை இலவயமாகவே படித்து வருகின்றனர்.
பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து நம் இதழில் விளம்பரங்களும் தரப்பட்டன. ஆனால் அவையனைத்தும் விலையில்லா விளம்பரங்கள்
என பின்னர்தான் அறிந்து தெளிந்தோம். செலவுகளைக் குறைக்க வேண்டுமென இதழ்
படிகளைச் சற்றுக் குறைவாக அச்சிட்டோம். திங்களுக்கு இரண்டு இலக்கம் என்ற
செலவுத் தொகை ஒன்றரை இலக்கமாயிற்று. தமிழ்நாடு அரசு நூலகங்களுக்கு
நம்முடைய இதழை வாங்க ஆணையிடப்பட்டு அதற்கொப்ப மாவட்ட நூலகர்களின்
வேண்டுகோளுக்கிணங்க பெரும்பாலான மாவட்டக் கிளை நூலகங்களுக்கு இன்று வரை அனுப்பப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அங்கிருந்தும் நமக்கு வந்து சேர வேண்டிய பட்டியல் தொகை வருவதில்லை. கடந்த 2014-15,16,17 ஆகிய ஆண்டுகளுக்கான நிலுவை மட்டும் தற்போது ரூ.8,50,000 ஆக உள்ளது. தமிழினத்தின்
நலனையும் விடிவு ஆக்கத்தையும் எண்ணி ஓரளவு மொழிக் கலப்பின்றி
வெளிக்கொணரும் இந்த முயற்சியில் நமக்குப் பெரும் பொருட் செலவு ஏற்படும்
என்று அறிந்தேதான் நாம் இந்த முயற்சியில் இறங்கினோம் என்றாலும் கூட கடந்த
10 ஆண்டுகளில் ஒவ்வொரு திங்களிலும் எம் வருவாயில் 50லிருந்து 80
விழுக்காட்டிற்கும் அதிகமான தொகை நம் இதழ் வெளியீட்டுக்காகவே பயன்படுத்தப்
பட்டிருக்கிறது.
இப்பணியில் பல இடர்ப்பாடுகளைச்
சந்தித்தாலும் ஒவ்வொரு திங்களும் இதழை புதுமையாக ஈன்றெடுக்கும் போது ஓர்
மழலையைப் போல் புன்னகைக்கும் இதழ்கள் ஒவ்வொன்றும் எம் வலிக்கு
மருந்தாகவும் எம் விழிகளுக்கு விருந்தாகவும் அமைந்து எம்மை
ஆற்றுப்படுத்தியிருக்கின்றன. ஆம், கடந்த 10 ஆண்டுகளில் சிறு சிறு வருவாய்
அவ்வப்போது வந்த நிலையிலும் இழப்பை ஈடுசெய்ய சற்றொப்ப நூற்றுப்பத்து
இலக்கம் (ஒரு கோடியே பத்து இலக்கம்) எம் உழைப்பின் ஊதிய வருவாயிலிருந்து
பயன்படுத்தியுள்ளோம். இக்குமுகாயம் இன்றி நாமில்லை என்ற உணர்வுடன் எம்
வருவாய் இங்கே பயன்படுத்தப் பட்டிருப்பது எமக்கு வேதனை தரும் செய்தியல்ல.
இது எம் தமிழ்ச் சமுகத்திற்காக நாம் செய்த முதலீடா? அல்லது தமிழ்ப் பணியில்
எமக்கு ஏற்பட்ட இழப்பா? என்ற கேள்விக்குரிய விடையை வரலாறுதான்
வெளிக்காட்டும். எம் பணியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு
மேலாகியும் தொடர்ந்து இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது
கொடுப்பதற்கும் இழப்பதற்கும் ஏதுமில்லை என்ற நிலையில் இதழைத் தொடர்ந்து
வெளிக்கொணர முயல்வது அறிவுடைமையாகாது; இயலாது என்பதே இயல்பாகும்.
தாய்மை இலக்கணத்துடன் தமிழைத் தரமாக்கி
தரமுயன்ற இதழின் தொடக்கக் காலத்தில் தமிழ் இதழுக்கு ஏன் ‘இலெமுரியா’ என்ற
ஆங்கிலப் பெயர் என அங்கலாய்த்துக் கொண்ட தமிழச்சிகளும் மொழி நடை தம்
விருப்புக்கொப்ப அமையவில்லையே இது தமிழ்தானா? என்று வினா தொடுத்த
வாசகர்களும் நம் தமிழ்நாட்டில் உண்டு. என்செய்வது? காலங்காலமாக
மொழிக்கலப்புகள் தமிழர்களை தன்னிலை அறியா நிலைக்கு கொண்டு சென்று விட்டது.
தற்காலத் தமிழினத்தின் நோய்களாக
விளங்கும் சாதி, மதம், கட்சி அரசியல், தனிநாயக வழிபாடு, பொருள் வழி மோகம்,
சின்னத்திரை, பெருந்திரை, ஆருடம் குறிப்புகள் என்பவற்றோடு, சற்றே நாம்
உளவொப்பம் (சமரசம்) செய்து கொண்டு நம் இதழின் உள்ளீடுகளாக அவற்றையும்
அமைத்திருந்தால் எம் இதழியல் பயணத்தை இன்னும் சில காலம் நீட்டித்திருக்க
முடியும். விளம்பரம் என்ற பெயரில் வேண்டாதவற்றை விருப்பமின்றி
அச்சேற்றியிருப்பதாக தன்னிலை விளக்கமளித்திருந்தாலும் மேலும் சில காலம்
எம்மால் நிலை பெற்றிருக்க முடியும். எனினும், சமகாலக் குமுகாயத்தின்
விருப்புக்கொப்ப உளவொப்பம் (சமரசம்) செய்ய இயலாத நிலையில் பொருளியல்
இடர்பாடுகளினால் தற்போது இளைப்பாற வேண்டியவர்களாகி விட்டோம்.
நாம் இன்றைய எழுத்துத் தளத்தில் இளைப்பாற
வேண்டியிருந்தாலும் எம் களப்பணி வெவ்வேறு தளங்களில் வெளிப்பட்டுக் கொண்டே
இருக்கும். நாம் துவண்டு விடவில்லை; துஞ்சி விடவில்லை; இந்நிலை கண்டு அஞ்சி
விடவும் இல்லை.
இச்சூழலில் ஓர் வேண்டுகோள். தமிழ் உணர்வும் பொருளியல் சூழலும் ஒருங்கே அமையப்பெற்ற நெறிய நேரிய நல்லுள்ளத்தினர் யாராகினும் “தமிழ் இலெமுரியா”வை எம் வழித்திசையில் நின்று தொடர்ந்து வெளிக்கொணர விரும்பினால், விருப்புடன் கையளிப்போம். தத்துக் கொடுத்த ஒரு தாய் சேய்மையிலிருந்து தன் சேய்யின் வளர்ச்சி கண்டு மகிழுறுவது போல் யாமும் களிப்புறுவோம்.
அறிவும் உணர்ச்சியும் அளவோடு கலந்து
அமைவதே வாழ்வு. காதலும் வீரமும் கனி நிகர் மேன்மையும் வளர்ச்சியும்
வாழ்வதும் வீழ்வதும் இதன் ஏற்ற இறக்கங்களால் முகிழ்ப்பவைகளாகும்.
சுழற்சியின்றி இவ்வுலகம் இயங்காது. கடிதும் இனிதும் கலந்ததே நிலையான
வாழ்வாகும். பிறப்பும் இறப்பும் பிரிக்க இயலா உயிர்மைத் தத்துவம். எனவே
நாம் சந்தித்துள்ள இந்நிலையை காய்ப்பும் உவப்பும் இன்றி இயல்பாகவே
அணுகுகின்றோம். எம்முடைய வலி, வலிமை, காண வேண்டிய ஒளி, செல்ல வேண்டிய வழி
என அனைத்தும் உணரப்படுவதேயன்றி உரைநடையால் விளங்க வைக்கக் கூடியவை அல்ல.
தற்கால தமிழியக்க இதழியல் பண்புகளையும்
குமுகாய நோக்கையும் நம் இடர்பாடுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதும்,
பதிவு செய்வதும் நமது கடமை என்ற உணர்வுடன் சிலவற்றை இங்கு
பெய்திருக்கின்றோம். இவை பரிவு நோக்குடன் பார்க்கப்பட வேண்டியவை அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். எனவே பரிவு மடல்களை வாசகர்கள் தவிர்த்திட வேண்டுகின்றோம்.
இந்தத் தமிழ் நடைப் பயணம் எம் பட்டறிவையும் படிப்பறிவையும் பெரிதும் வளர்த்திருக்கிறது.
வளமிக்க வாய்க்காலனையோர் பலரின் அன்பையும் அறிவுரைகளையும் எமக்குப்
பெற்றுத் தந்திருக்கிறது; மாசற்ற மக்கள் பலரை எம் சுற்றத்தாரர்களாகச்
சுட்டிக் காட்டியுள்ளது; முகம் தெரியாத பலரை எம் அகத்துள்
அடக்கியிருக்கிறது.
ஒப்பிலா நட்பு, உணர்விலா மாக்கள், வேற்றுச் சொல் வீணர்கள், வெற்றுச் சொல் வீரர்கள், அழுக்காறு நெஞ்சினர் என பலரையும் நமக்கு அடையாளப்படுத்தி அவர்களை நம்மிடமிருந்து அயன்மை(அந்நிய)ப் படுத்தியிருக்கிறது.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’
என்ற கணியன் பூங்குன்றனாரின் சொல்வெட்டுகள் வெறும் அறிவுரை அல்ல; மாறாக
அவை நம் குமுகாயப் பட்டறிவின் பயனாக நமக்குக் கிடைத்த விடையாகும் என்பது
எம் கணிப்பாகும். எம் வாழ்நாளில் சற்றொப்ப 44 ஆண்டுகள் மராத்திய மண்ணில்
கழித்திருந்தாலும் நாம் நம் இன, மொழி, சமுக நீதி உணர்வுகளிலிருந்து நம்மை
தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. எம்மால் இயன்ற தொண்டினை நம் மொழிக்கும்
இனத்திற்கும் தொடர்ந்து செய்து வருகின்றோம் என்ற மனநிறைவோடுதான் இன்றும்
உலா வருகின்றோம். தமிழின உணர்வு என்ற மாமலை தரைமட்டமாகி விடாது; தமிழ் மொழிப் பற்று என்னும் வள நதி வற்றிப் போய்விடாது.
எஞ்சியிருக்கும் காலம் எத்தனை விநாடி என்பது நாம் கணிக்க இயலாது. எனினும்,
நமது தமிழ்ப் பணி தொய்வற்ற நிலையில் தூய்மையான ஒன்றாகத் தொடரும். எம்
இருக்கையைச் சுற்றி எட்டாயிரம் தமிழ் நூல்கள் ஒரு மன்னவனைக் காக்கும்
மதிற்சுவர் போல் அமைந்துள்ளன. அவற்றில் புதைந்து கிடக்கும் நம் இனத்தின்
வரலாறு, வாழ்க்கை முறை, பண்பாட்டு விழுமியங்கள், பண்ணாராய்ச்சித்
தொகுப்புகள் என அனைத்தும் எமக்கு மூச்சுக் காற்றாய் விளங்கி எம் உயிரை
நீட்டித்து உள்ளத்தை விரிவுபடுத்தும். அதுவே நம் தமிழ் மொழி
எமக்களித்திருக்கும் உடையும் கொடையும் ஆகும். மழலைப் பருவம் தொட்டு
கொஞ்சிக் குலாவி படிப்படியாய் பருவம் எய்தும் வரை உயிர் நாராய்
வளர்த்தெடுத்த மகவையை திடீரென ஒரு நேர்ச்சியினால் தவறவிட்ட ஓர் தாயின் மன
நிலையில் யாமும் உறைகிறோம்.
எம் இடையறா இதழியல் பணியில், பயணத்தில் எமக்குச் சிலர் பாதையாகவும் படிக்கட்டுகளாகவும் வழிகாட்டிகளாகவும் ஒளி காட்டிகளாகவும் நம் அயர்வைப் போக்கிய சுமைதாங்கிகளாகவும்
பல்வேறு கால நிலைகளில் நமக்குத் துணை புரிந்து இடர் வந்த போதெல்லாம்
எம்முள் இனிமையை வார்த்திருக்கிறார்கள்; வளர்த்திருக்கிறார்கள். அந்த அன்பு
உள்ளங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம் இதுவாகும்.
எம்மை உச்சி மோந்து பாராட்டிப்
புகழ்ந்துரைத்தோர் எண்ணற்ற வாசகப் பெருமக்களெனினும் எமக்கு அவ்வப்போது
ஊக்கம் தந்து மனவுறுதியைச் செம்மைப்படுத்தி துணை நின்ற அல்லது பல்வேறு
காலநிலைகளில் எம் இடர் அறிந்து தன்னால் இயன்ற பொருளுதவியை நல்கிய சிலரை
நெஞ்சினிக்க நினைவு கூர்வது நம் கடமையாகும்.
தவத்திரு பொன்னம்பல அடிகளார், தமிழறிஞர்
தமிழண்ணல், எழுத்தாளர் பொன்னீலன், கோ.பாலச்சந்திரன் இ.ஆ.ப., பொன்.அன்பழகன்
இ.ஆ.ப., உ.சகாயம் இ.ஆ.ப., முனைவர் சேதுகுமணன், தென்கச்சி சுவாமிநாதன்,
தமிழருவி மணியன், சாரோ பூ.மாரிமுத்து, ஐதராபாத்து டி.எசு.செபமணி, ஈரோடு
பெரியசாமி, செல்வகுமார், அழகன் முதலான கருப்பண்ணன் குடும்பத்தினர், கோவை
மருத்துவமனை தலைவர் நல்ல.பழனிச்சாமி, கவிஞர் சிற்பி, கோவை ஞானி, புவனேசுவர்
தமிழ்ச் சங்கப் புரவலர் துரைசாமி, கோவை கார்த்திகேயன், பேராசிரியர்
சுப.வீரபாண்டியன், பொள்ளாச்சி நசன், மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர்
இரா.பெர்னார்டு, மறைமலை இலக்குவனார்,
வழக்கறிஞர் த.இராமலிங்கம், வானொலி நேருரையாளர் அப்துல் ஜப்பார், அறிஞர்
சுகி.சிவம், கவிஞர் மோகனரங்கன், பாவலர் கருமலைத் தமிழாழன், மேனாள் அமைச்சர்
கவிஞர் கா.வேழவேந்தன், த. தாலின் குணசேகரன், பூனே பாலாசி குழுமத் தலைவர்
பாலசுப்பிரமணியம், தமிழறிஞர் க.ப.அறவாணன், தாயம்மாள் அறவாணன், பொருளாதார
நிபுணர் சேதுராமன் சாத்தப்பன், மருத்துவர் திருமதி சுதா சேசயன், எழுத்தாளர்
பா.இரா.சுபாசு சந்திரன், கே.ஆர்.சீனிவாசன், பெங்களூர் இராமமூர்த்தி, ஈரோடு
வெங்கடேசன், கவிஞர் பூந்துறையான், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கோபி.சண்முக சுந்தரம், குன்றம் கு.இராமரத்நம், தெ.இலக்குவன், இரமேசு பிரபா,
‘சிந்தனையாளன்’ வே.ஆனைமுத்து, இளவரசு(யுவராச) அமிழ்தன், தங்கவயல்
க.சி.தென்னவன், ‘முகம்’ மாமணி, ‘கவிக்கொண்டல்’ மா.செங்குட்டுவன்,
சா.கணேசன், ‘வெல்லும் தூய தமிழ்’ தமிழ்மல்லன், ‘யாதும் ஊரே’ இங்கர்சால்,
‘ஓம்சக்தி’ சிதம்பரநாதன், புதுவை கல்லாடன், ஆனைவாரி ஆனந்தன், நவிமும்பை
சு.சுதாகரன், பேரா.சமீரா மீரான், ஆசுத்திரேலியா சந்திரிகா சுப்பிரமணியம்,
பிரான்சு இராசன் பொன்ராசா, அமெரிக்கா இரவிக்குமார், சிங்கப்பூர்
ஆண்டியப்பன், பெங்களூர் தமிழ்ச் சங்கம், பம்பாய் திருவள்ளுவர் மன்றம்,
விழித்தெழு இயக்கம், இளங்கோ நூல் விற்பனையகம் தாசு மற்றும் தமிழ்ச்
சங்கமம், மும்பை.
சிலம்பொலி செல்லப்பனார், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் அறிவுமதி, இலக்குவனார் திருவள்ளுவன்,
வா.மு.சே.திருவள்ளுவன், கவிஞர் புதிய மாதவி, தி.சிங்கார வேலு இ.கா.ப.,
காஞ்சி துரை சௌந்தரராசன், தஞ்சை மருத்துவர் எசு.நரேந்திரன், ஈரோடு
கல்வெட்டறிஞர் புலவர் வெ.இராசு, தொழிலதிபர் ஆ.தென்சிங்கு, பா.வேலையா, கோவை
விசயா பதிப்பகம், இயக்குநர்கள் வி.சேகர், தங்கர்பச்சான், பாலப்பன் முருகன்,
நெல்லை நாதன், கல்பாக்கம் சுகுமார், தஞ்சை சந்திரசேகர், அ.இரவிச்சந்திரன்,
அல்லா பிச்சை, குப்பு வீரமணி, வழக்கறிஞர் அமர்சிங்கு, எசு.ஏ.துரை, ஔவை
கோட்டம் கலை வேந்தன், பேராசிரியர் சரசுவதி இராமநாதன், புலவர்
இரா.பே.பெருமாள், மும்பை டி.கே.சந்திரன், மொழியறிஞர் பா.அருளி, தமிழறிஞர்
அரணமுறுவல், பேரா.ம.இலெ.தங்கப்பா, தமிழ் அலை இசாக்கு, தூயத்தேவதை(Holy
Angel)பள்ளி திருமதி தேவசெல்வி சாமுவேல், சென்னை பால்துரை, திருப்பூர்
நாகேசுவரன், நெல்லை குமார சுப்பிரமணியம், பரணி பாவலன், மருத்துவர்
காசிப்பிச்சை, கவிஞர் குணா, கிங்பெல், பேராசிரியர் எபினேசர்,
வய்.மு.கும்பலிங்கன், அ.மறைமலையான், கவிஞர் பூ.ஆ.இரவீந்திரன்,
கி.தனுசுகோடி, பி.கிருட்டிணன், இல.முருகன், எசு.கே.ஆதிமூலம், திருச்சி
அரசெழிலன், வி.சி.வில்வம், கொடுங்கையூர் தங்கமணி, வெ.சித்தார்த்தன்,
பெ.கணேசன், காரை.கரு.இரவீந்திரன், பாசறை மு.பாலன், கடவூர் மணிமாறன்,
பொழிலன், கல்பாக்கம் வேம்பையன், ஐதராபாத்து சாந்தாதத்து, செகந்தராபாத்து
சுப்பிரமணியன், ப..செகதீசன், மும்பை சபேசன், க.வ.அசோக்குமார், சிவ.நல்ல
சேகரன், ச.ஆம்சுட்ராங்கு, அம்பர்நாத்து எசு.எம்.இலக்குமணன், இராசேந்திர
தானியேல், ஈரோடு கார்த்திக்கு, புதுதில்லி பிரமநாயகம், காரைக்கால்
நாயகன்(கேப்டன்) ஆதிமூலம் இராமச்சந்திரன், கோவை உமேசு, ‘மங்கத்துஇராம்’
எசு.இராமச்சந்திரன், பீவண்டி பெருமாள், கரூர் சுப்பிரமணியம், இல.தேவராசன்,
கே.சேதுராமன், தொழிலதிபர் நாராயணன் நரசிம்மன், கல்வியாளர் சி.சிவராசு எனப்
பலரில் சிலரை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம். இவர்களின் துணை வலிவும்
அறிவுரைகளும் எம் வளர்ச்சியின் வேர்களாகவும் வேர்களை நனைத்த
நீர்த்துளிகளாகவும் பல்வேறு காலநிலைகளில் அமைந்தனவாகும். தமிழ்நாட்டில்
குறிப்பாக கொங்கு நாடும் குமரியும் தஞ்சையும் எம்மை தாங்கிப் பிடித்த
மாவட்டங்களில் முதன்மை வகித்தவை என்பதை கோடிட்டுக் காட்ட
விரும்புகின்றோம்..
‘தமிழ் இலெமுரியா’ என்ற இத் தமிழிதழ் பல்லாண்டு காலமாக பயனுள்ள செய்திகளையும் கட்டுரைகளையும் தாங்கி வெளி வரக் கரணியமாக அமைந்த பொறுப்பாசிரியர்கள் கவிஞர் மு.தருமராசன், மனோ.விசயக்குமார் மற்றும் எம் அலுவலக ஊழியர் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
அண்மைக் காலத்தில் உறுப்பினர் கட்டணத்தை
ஓராண்டுக்கு மேலாக செலுத்திய வாசகர்களில் எஞ்சியுள்ள பணத்தைத் திரும்பப்
பெற விரும்புவோர் எம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். எம்
மீது தாங்கள் இதுகாறும் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும் பெரிதும்
போற்றுதலுக்குரியது. எனினும் எம் பொருளியல் சூழல் இதழின் தடைக்கல்லாக
அமைந்தது குறித்துத் தாங்கள் பொருத்தருள வேண்டுகின்றோம்.
எத்தனையோ தமிழியக்க ஏடுகள்
தமிழ்நாட்டுக்கு உள்ளும் வெளியிலும் வரலாற்றில் பழைய ஏடுகளின் பட்டியலில்
இடம் பெற்று நூலகங்களில் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த
வகையில் இனி ‘தமிழ் இலெமுரியா’ ஓர் அச்சு ஊடகமாக வெளிவர இயலாச் சூழலில் ‘இதோ ஒரு பழைய ஏடு’ என்ற பட்டியலில் எம்மையும் இணைத்துக் கொள்க. சேய்தனை இழந்த ஓர் தாயின் மனநிலையில் யாம் விடை பெறுகின்றோம்.
என்றும் வேண்டும் இனிய அன்பு.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (திருக்குறள்: 291) – திருவள்ளுவர்
கனிவுடன்
முதன்மை ஆசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக