சாவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 மார்ச், 2013

ஈழம் வேண்டும் என்று முழக்கமிட்டப்படி சென்னை இளைஞர் தீக்குளித்து ச் சாவு

ஈழம் வேண்டும் என்று முழக்கமிட்டப்படி சென்னை  இளைஞர் தீக்குளித்து ச் சாவு
ஈழம் வேண்டும் என்று கோஷமிட்டப்படி இலங்கை தமிழர்களுக்காக சென்னை வாலிபர் தீக்குளித்து சாவு
சென்னை, மார்ச்சு. 22-

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்ற வாளியாக அறிவித்து அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.

மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை மறியல், உண்ணாவிரதம் என பல்வேறு வடிவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது. ஐ.நா. மாமன்றத்தில் நேற்று இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக போதுமான வாசகங்கள் இடம் பெறவில்லை என்றும், இதற்கு இந்தியா அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை என்றும், அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

நெற்குன்றம் கங்கையம்மன் கோவில் திடலில் நேற்று இரவு தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழர் விடுதலை இயக்க நிர்வாகிகள் கருப்பன் சித்தார்த்தன், சுபாஷ் சந்திரபோஸ், பரத்குமார் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர். வெள்ளையன் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பின்னர் இரவு 9.50 மணி அளவில் இறுதி பேச்சாளராக ம.தி.மு.க. இலக்கிய அணியின் மாநில துணை செயலாளர் ராஜா திருநாவுக்கரசு பேசினார். அப்போது முன் வரிசையில் அமர்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நெற்குன்றம் ராஜீவ் நகரைச் சேர்ந்த விக்ரம் (வயது30) என்ற வாலிபர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.

தீயில் எரிந்தபடியே ஈழம் வேண்டும். ஈழம் வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டே மேடையை நோக்கி அவர் ஓடினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் மேடையில் விரிக்கப்பட்டிருந்த போர்வையை எடுத்து விக்ரமின் உடல் மீது போர்த்தி தீயை அணைத்தனர். அதற்குள் அவரது உடல் முழுவதும் தீயில் கருகியது. கரிக்கட்டையாக விக்ரம் கீழே சாய்ந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 98 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய விக்ரம் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விக்ரமுக்கு இன்னும் திருமணமாகவில்லை. முகப்பேரில் மோட்டார் ரீவைண்டிங் கடை வைத்து நடத்திய அவர், தமிழ் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை காட்சிளை சமீபத்தில் இண்டர்நெட்டில் பார்த்த பின்னர் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது என அடிக்கடி கூறிக் கொண்டே இருந்துள்ளார். நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்துக்கு நன்கொடையாக 1000 ரூபாய் கொடுத்துள்ளார். இதனை கூட்டம் நடத்தியவர்கள் வாங்க மறுத்ததால் இந்த கூட்டத்துக்கான புகைப்பட செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்படி அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து விட்டு, கூட்டத்தில் பங்கேற்றபோதுதான் விக்ரம் தீக்குளித்து உயிரை விட்டுள்ளார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் வலுப்பெற்று வரும் வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூரில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் தீக்குளித்து பலியானார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈழத் தமிழர்களுக்காக சென்னை வாலிபர் விக்ரம் உயிர் தியாகம் செய்திருப்பது தமிழ் ஆர்வலர்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

சனி, 6 அக்டோபர், 2012

"சாவுக்கு ப் பறை அடிக்க மாட்டோம்!' "

சொல்கிறார்கள்


 "சாவுக்கு ப் பறை அடிக்க மாட்டோம்!' "

புத்தர் கலைக் குழு' என்ற பெயரில், பறை இசையை பரப்பி வரும் மணிமாறன்: சென்னை கோடம்பாக்கத்தில் பிறந்து, வளர்ந்தேன். சிறு வயதி லிருந்தே, கானா பாட்டு தான் எனக்கு உயிர். 10 வயதிலேயே கானாவிற்கு, டோலாக்கு இசைப்பது, பறை அடிப்பது என, அந்தக் கலைஞர்களுடன் ஒன்றிவிட்டேன். அந்த வயதில் அது உற்சாகமாக இருக்கும். பெரும்பாலும் சாவு வீடுகளில் தான் கானா பாட வேண்டும். சடலத்தை வைத்துக் கொண்டு, அவர் எத்தனை கெட்டவராக இருந்தாலும், அவரைப் போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும். இதில் கானாக் குழுக்களுக்கு இடையே போட்டி நடக்கும். அதிலேயே பழகி, பறை இசைப்பதுடன், எனக்கு பாடல் எழுதுவதும் கைவந்தது. சிவகங்கையில், அழகர்சாமி வாத்தியாரிடம் பறை இசைப் பயிற்சி எடுத்தேன். கிலுகிலுப்பை, தமுறு, கால் சலங்கை, தூம்பு, பறை ஆகிய ஐந்தும் சேர்ந்தது தான் ஒரு முழுமையான பறை இசை. ஒவ்வொரு வட்டாரத்திற்கும், ஒரு ஆட்டம் உண்டு. ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு அடி உண்டு. சென்னையில் சாவுக்கு அடிப்பதை, "ஒத்தையடி' என்பர். இதை திருமண வீட்டிற்கோ, கோவில்களுக்கோ அடிக்க முடியாது. பயிற்சி முடித்து, சென்னை வந்து சில காலம் கழித்து, ஒரு குழுவை அமைக்கும் முயற்சியில் இறங்கினேன். என் திருமணத்திற்குப் பின், குடும்பம் சகிதமாக பறை அடிக்கும் எங்களை, பலரும் வித்தியாசமாகப் பார்த்தனர். தற்போது எங்கள் குழுவில், 25 பேர் உள்ளனர். எங்களுக்கு என, சில விதிமுறைகள் உள்ளன. எத்தனை ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், நாங்கள் ஒரு போதும், சாவுக்கு பறை அடிக்க மாட்டோம். கோவில் திருவிழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளில், அரசியல் கூட்டங்களில் பறை இசைக்கிறோம். இப்படி, நிகழ்ச்சிகள் நடத்துவதில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை, சமூகத்திற்காக செலவிடுகிறோம். பறை, பெருமைக்குரிய கருவி; பாரம்பரியக் கருவி. அது இந்திய ஜாதியச் சாக்கடையில் சிக்கிவிட்டது; அதை மீட்டு எடுக்க வேண்டும்.