காலமானார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலமானார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 அக்டோபர், 2022

தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார்

 அகரமுதல




தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார்


தொல்காப்பியர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கண ஆசான்களுக்கு நிகராகப் பேசப்படுகின்ற சமகாலப் படைப்பாளர்;
தமிழக அரசின் கபிலர் விருது பெற்ற தகைசால் பெரியவர்;
இலக்கணப் படைப்பாளர்களுக்கும் நெய்தல் படைப்பாளர்களுக்கும் ஒப்பற்ற ஆசான்; கோடிமுனை மி.காசுமான் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது.
கடந்த வாரம் அலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு “பெருலின் உன்னிடம் சில விசயங்கள் பேசவேண்டும்; நேரில்தான் பேசவேண்டும். வரமுடியுமா? கட்டாயம் வரவேண்டும்” என்று கட்டளையிடுவதுபோல் பேசினார். நானும் “நிச்சயம் வருகிறேன் ஐயா” என்றேன். ஆனால் என்னால் அவரைச் சந்திக்கமுடியவில்லை. ஐயா என்ன பேசவேண்டுமென்று நினைத்தாரோ? அவருடைய கடைசிக் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வால் குறுகிப்போய் நிற்கிறேன்.
ஐயா என்னை மன்னிப்பீர்களா?

–குறும்பனை பெருலின்


புலவர் மி காசுமானார்
பிறப்பு:01.08.1936
இறப்பு:21.10.2022

பிறப்பிடம்:கோடிமுனை:நாகர்கோவில்

பெற்றோர்: தந்தை: மிகெயல் பிள்ளை; தாய்:ஞானப்பிறகாசி.
காலமான இடம்:தங்கையின் வீடு.மார்த்தாண்டம்,நாகர்கோவில்.

திருமணமாகவில்லை.தங்கையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். சமயச் சார்பற்றவர்; பொருளாசையற்றவர்; இலவசங்களை விரும்பாதவர்; தமிழ்த்தொண்டர்.

++++++

அன்புடையீர்,
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் தனக்கு இயற்கையன் (=அவர் கடவுளை இயற்கையன் என்றழைப்பதே வழக்கம்) பத்தாண்டுகள் தந்தால் நலமாகவிருக்கும் மனிதக் குலத்திற்கும் தமிழுக்கும் தாம் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறதென்று அக் 16 2022-இல் என்னிடம் [13:46 (53 நிமையம்),14:41(19 நிமையம்),15:25 (24 நிமையம்)]
பேசினார். குறும்பனை பெருலினைப் பார்த்துப் பேச வேண்டுமென்றும் பெருலினின் அம்மா கோடிமுனையைச் சார்ந்தவரென்றும் கோடிமுனையின் பழைய பெயர் கோடிமை என்றும் அது மருவி கோடிமுனை ஆனதென்றுங் கூறினார்( அக்.16 2022-இல்).

அவரெழுதிய நூற்கள் :
(1)குமரியர்- நாவலந்தீவின் உரிமை மாந்தர் வரலாறு.முதற் பதிப்பு. 2011.இரண்டாம் பதிப்பு.2013.மூன்றாம் பதிப்பு.2021.
2.திருக்குறள் அறத்துப்பால்-தெளிவுரை-பரிமேலழகர் உரையுடன்.முதற் பதிப்பு.2018.
3.தமிழ்க்காப்பு இயம்(எழுத்து-சொல்-சொற்புணர்ச்சி இலக்கணம்).முதற்பதிப்பு.2005,இரண்டாம் பதிப்பு.2006,மூன்றாம் பதிப்பு.2015.
4.முத்தாரம் (நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்திற்கிணையானத் தமிழ்ச் செய்யுள் காப்பியம்).முதற்பதிப்பு.1991.இரண்டாம் பதிப்பு.2008.மூன்றாம் பதிப்பு.2020.
5.கனவும் நினைவும்(அவ்வப்போது பாடப்பட்ட தனிப்பாக்கள். வடலூர் வள்ளலார், மூதறிஞர் இராசாசி, அறிஞர் அண்ணா, போன்றோரையும் கனவுச் சிங்காரச் சென்னை போன்ற பாடல்களையும் பதித்துள்ளார்).
6.பொருட்பாலுக்கு உரை எழுதி கொண்டிருந்தார்.அக் 16 2022-இல் திருக்குறள் 460 -ஆவது குறளில் வரும் ஊங்கு எனுஞ்சொல் மேலுலகம் என வருமாற்றை எடுத்துக்கூறினார். இதுவரை உரை எழுதியுள்ளதாக என்னிடங் கூறினார்.

அவருடைய தமிழ்க்காப்பு இயம் எனும் நூலுக்குச் சிறப்புப் பரிசளிக்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க தாலின், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆகியோருக்கு வேண்டுகையும் அதற்குப் பரிந்துரைக்குமாறு முனைவர் அருள் நடராசனார் அவர்களுக்கு வேண்டுகையும் சூன் 02 2022-இல் அனுப்பினேன்.

பண்பு
1.யாரையும் மனம்நோகப் பேசாதவர்.
2.யாரையும் குறை பேசாதவர்.
3.உதவி கேட்கும் போது அவ்வுதவியைக் கேட்டவருக்குச் செய்யதயங்காதவர்.

வழக்கம்
1.காலை 09.00 மணிக்குத் துயிலெழுந்து பின்னிரவு 01.00 மணிக்குத் தூங்குகிறவர்.
2.பகல் தூக்கம் இல்லை.
3.எப்போதும் எழுத்தும் படிப்பும் மருத்துவஞ் செய்தலும் கணியங்கூறுதலுமே அவருடைய தொழில்.

உடல்நலம்
1.மார்த்தாண்டத்தில் எங்கு போனாலும் நடந்தே செல்வார்.
2.கண்ணாடி இல்லாமலே படிப்பார் எழுதுவார்.

பணி
1.தலையாயப் பணி-தமிழ்த்தொண்டு.எந்தப் பள்ளிக்கூடத்திலும் ஆசிரியராகவோ கல்லூரியில் பேராசிரியராகவோ இருந்ததில்லை.
2.சிறந்த சித்த மருத்துவர்.தமிழ் இலக்கணம் இலக்கியங் கற்ற சித்த மருத்துவர்.
3.நுட்பமான சோதிட வல்லுநர். நேரு, அண்ணா, பெரியார், இராசாசி ஆகியோருடைய இறப்பு நாளைக் கணித்துக் கூறியவர்.
4.தமிழ் மொழிக்கு நூலெழுதல்.

அவருக்கும் எனக்குமான நட்பு அவருடைய நூலான தமிழ்க்காப்பு இயம் மூலம் 2008-இல் தொடங்கியது. அவரை நேரில் நான் சந்தித்ததில்லை. .தொலைபேசித் தொடர்பு மட்டுமே.அவ்வப்போது கடிதம் எழுதிக்கொள்வோம்.

அவருடைய நூற்களை அவருடைய பரிசாக மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரைக் கல்லூரி, மதுரைத் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை தோக்கு பெருமாட்டி கல்லூரி, மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் போன்றவற்றிற்கும் மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் தியாகராசனுக்கும் வழங்கியுள்ளார்.

யாரிடமும் எதற்காகவும் சென்று கைககட்டி நிற்கவில்லை. கையூட்டும் பெற்றதில்லை.
தானுண்டு, தன்னுழைப்புண்டு, தகுதியுண்டு என்று வாழ்ந்த தமிழ்ப் பெரியவர்.

இறுதிஆசை
1.திருக்குறளுக்கு முழுவதுமாக உரை எழுத வேண்டும்.
2.தமிழ்க்காப்பு இயம் என்னும் இலக்கண நூலைத் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் பாட நூலாக்க வேண்டும்.
3.குறும்பனை பெருலினைச் சட்டமன்ற உறுப்பினராக்க வேண்டும்.

மதுரை செ பன்னீர் செல்வம், அக் 22 2022 , 0010.

++++++

எனக்கும் ஒரு பெரு வருத்தம்

காசுமான் ஐயா, மூன்று திங்களுக்கு முன் என்னிடம் பேசி அவர் நூல்களை அனுப்ப என் முகவரி கேட்டார். தமிழ்க்காப்பியம் முதலான அவர் நூற் பெயர்களை அறிந்து, ஐயா, நூற்களை வைப்பதற்கு வீட்டில் இடமி்லை. எனக்குப் படிப்பதற்கும் நேரமில்லை. ஒரு நாள் 16 மணி நேரத்திற்கும் குறைவில்லாமல் கணிணியில் வேலை பார்க்கின்றேன். எனவே, நூலின் அணிந்துரை, மதிப்புரை முதலானவற்றை எனக்கு மின்னஞ்சல் வழி அனுப்பினால் அகரமுதல மின்னிதழில் வெளியிடுகிறேன். அட்டைப் படத்தையும் மின்னஞ்சல் வழி அனுப்பி வையுங்கள் என்றேன். ஆனால், அவர் புத்தகங்களை அனுப்பிவைத்தார். அறிஞர்கள் பாராட்டுரைகள் நூற்களில் இடம் பெற்றிருந்தன. அவற்றை யெல்லாம் படித்து மகிழ்ந்தேன். நூற்களில் சிற்சில பக்கங்களைப் படித்தேன். அவரிடம் தொலைபேசி வழியில் பாராட்டிப் பேசினேன். கணியச்சர்கள் மாறி விட்டன்ர் என்றும் இருந்தாலும் இரண்டாம் முறை கணியச்சிட்டுப் பணத்தை வீணாக்குவதற்கு மாற்றாகப் புத்தகம் கணியச்சிட்டவரிடம் சொல்லி மின்னஞ்சல் வழி அவற்றை அனுப்பி வைக்க வேண்டினேன். முழுப்புத்தகத்தையும் அனுப்பினால் அவற்றைத் தொடராக வெளியிடுகிறேன் என்றும் அப்பொழுது படித்து முடித்து விடுவேன் என்றும் கூறினேன். அவர் கையெழுத்துப்படியை அனுப்பி, நூலின் அட்டைகளைக் கிழித்து அனுப்பி யிருந்தார்.

மீண்டும் நான் கூறியது அவருக்குப் புரியவில்லை. செவிப்புலன் மங்கியிருந்தது ஒரு காரணம். படிக்க எண்ணி, எண்ணி நேரம் ஒதுக்க முடியாமையால் கடந்தவாரம்தான் எழுத்தாளர் இ.பு.ஞானப்பிராகசத்திற்கு அனுப்பி மதிப்புரை வழங்க வேண்டியிருந்தேன்.

உரிய நூலாய்வுகள் வெளியிடும் முன்னரே அவர் மறைந்தது பெரிதும் வருத்தமாக உள்ளது. இதை அவர் எதிர்பார்க்கவில்லை. புத்தகங்களை நான் படித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்றுதான் அவர் எதிர்பார்த்தார். நான், நான் மட்டும் படிப்பதை விடப் பிறரும் படிக்க வேண்டும் என்பதற்காக வழக்கம்போல் கணியச்சுப்படிகளைக் கேட்டேன். இருப்பினும் அவ்வாறு வராமையால் அவர் இருக்கும் பொழுதே அவரது நூல் மதிப்புரைகளை வெளியிட முடியாமல் போனது பெரு வருத்தமாக உள்ளது.

அன்னாருக்கு ‘அகரமுதல’ மின்னிதழ் அஞ்சலியைச் செலுத்துகிறது.

அவர் புகழ் ஓங்குக. வணக்கத்துடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

சிற்சபேசன் என்னும் சிரிப்பலை ஓய்ந்தது!

 அகரமுதல




நகைச்சுவை நாவரசர் கண.சிற்சபேசன்

பட்டிமன்ற முன்னோடி,

நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர்,

மேலாண்மை வல்லுநர்,

பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள்

இன்று – சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 – காலை 10.15 மணி அளவில் காலமானர்கள்.

குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில்

அகரமுதல மின்னிதழ்,

தமிழ்க்காப்புக் கழகம்,

இலக்குவனார் இலக்கிய இணையம்

பங்கேற்கின்றன.

சனி, 29 மே, 2021

ஓய்வுநாடிச்சென்றுள்ள அறிஞர் மு.அனந்தகிருட்டிணன்

 


முன்னாள் துணைவேந்தர் தாமரைத்திரு அறிஞர் மு.ஆனந்தகிருட்டிணன் இன்று வைகறை 2.00 மணியளவில் மகுடைத்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் காலமானார். அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அறிஞர் மு.ஆனந்தகிருட்டிணன் குறித்து 13.07.2014 இல் எழுதி அகரமுதல இதழில் வெளியிட்ட கட்டுரையை மீள்பதிவாக வெளியிடுகிறோம்.

ஆசிரியர், அகரமுதல பன்னாட்டு மின்னிதழ். 



அறிஞர் ஆனந்தகிருட்டிணன் ஆண்டுநூறு கடந்து வாழிய வாழியவே!


முனைவர் மு.ஆனந்தகிருட்டிணன், பொறியாளர்கள், கணித்தமிழாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வகையினராலும் உலக அளவில் நன்கு அறியப்பெற்ற ஆன்றோர் ஆவார்.

கட்டடப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், தொலை உணரியல், தகவல் தொழில் நுட்பம், அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை பகுப்பாய்வு, மேம்பாட்டு குறிகாட்டிகள், தொழில்நுட்பப் பன்னாட்டு மாற்றங்கள், சிறு, குறு தொழிலகங்கள், கல்வியகங்களின் மேலாண்மை, சிறார் அறிவியல் கல்வி எனப் பல்வேறு துறைகளில் விரிந்து பரந்த அறிவு கொண்ட அறிஞர் முனைவர் மு. ஆனந்தகிருட்டிணன்


1952 ஆம் ஆண்டு, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகம்) நெடுஞ்சாலைப் பொறியியலில் பட்டம் பெற்றவர்; கட்டடப் பொறியியலில்1957 இல் முதுகலைப் பட்டமும் (M.S. Degree in Civil Engineering) 1960 இல் முனைவர் பட்டமும்   அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில்(University of Minnesota, USA) பெற்றவர்; முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருந்த பொழுதும், பட்டம் பெற்ற ஓராண்டிற்குப் பின்னரும் தனியார் நிறுனம் ஒன்றில் ஆராய்ச்சிப் பொறியாளராகப் பணியாற்றி உதவி ஆசிரியராகத் திகழ்ந்தார்.

1962 இல் இந்தியாவிற்குத் திரும்பி,   தில்லியில் உள்ள மத்திய வானொலி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் அலுவலர் நிலை 1 (Senior Scientific Officer (Grade I) at the Central Road Research Institute in Delhi) ஆகப் பணியாற்றினார்.


1963 இல் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பப் பயிலகத்தில்(IIT) கட்டடப் பொறியில் துறையில் பணிக்குச் சேர்ந்தார். இங்கு 1974 வரை, உதவிப் பேராசிரியர், பேராசிரியர், முதுநிலைப் பேராசிரியர், துறைத் தலைவர், புலத்தலைவர், பொறுப்பு இ்யக்குநர், வளாகமேம்பாட்டு நெறியாளர், பணியாளர் தெரிவு மத்தியக் குழுத் தலைவர், எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட ஆற்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார். இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறைக்காக, வாசிங்டன் இந்தியத் தூதரகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அறிவியல் மதியுரைஞர் (Science Counselor) பணியிடத்திற்கு 5 ஆண்டுகள் அயற்பணியில் 


அனுப்பப் பெற்றார். இவரது மதி நுட்பமும் செயல் திறனும் அயலகங்களிலும் இவரது நற்பெயரைப் பரப்பின. எனவே, 1978இல் பன்னாட்டு அவையில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் புத்தொளிர் தொழில்நுட்பங்களின் முதன்மையாளராக (Chief of New Technologies, in the Office of Science and Technology (OST), United Nations, New York.) அமர்த்தப்பட்டார். அங்கும் சிறப்பாகப் பணியாற்றியமையால், பன்னாட்டு அவையின் அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டு மையத்தில் துணை இயக்குநராகப் (Deputy Director in the Centre for Science and Technology for Development (CSTD), United Nations, New York.) பதவி உயர்வில் அமர்த்தப்பட்டார். இப் பொறுப்பில் இருக்கும் பொழுதே பன்னாட்டு அவையில் அறிவயில் தொழில்நுட்ப அறிவுரைக் குழுவின் செயலராகவும் [Secretary, UN Advisory Committee on Science and Technology for Development (UNACAST)]


1074 இலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பன்னாட்டுஅமைப்புகளில் ஈடுபாடுகாட்டி வந்தார்.


பிரேசிலில் 1990-1997இல் அறிவயல் தொழில் நுட்பத்தை வலிமைப்படுத்தும் வல்லுநர் குழுவில் இணைந்து பணியாற்றியமைக்காக, பிரேசில் அரசின் தலைவரிடமிருந்து அறிவியலுக்கான விருதைப் பெற்றுள்ளார்.

பன்னாட்டுக் குழுவின் பணி முடிந்து தாயகம் திரும்பியபின், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருமுறை, – 1990,1996 – திறம்படச் செயலாற்றினார்.மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிச் சேர்க்கைக்காக விரும்பும் கல்லூரிகளுக்கெல்லாம் தனித்தனியே விண்ணப்பித்து அலைந்து இடர்ப்படுவதைத் தடுத்தார். இதற்கென இவர் அறிமுகப்படுத்திய முறையே ஒற்றைச் சாளர முறை (Single Window admission System) என்னும் எளிய முறையாகும்.

 


 பொறியியல் கல்லூரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முறையை ஒழித்ததில் இவருக்கு முதன்மைப் பங்கு உண்டு.

 இதன் தொடர்ச்சியாக இவர், துணைவேந்தர் பதவிக்கு இணையான தமிழ்நாடு மாநில உயர்கல்விக்குழுவின் தலைவராகப் பணியமர்த்தப்பட்டு 2001 இல் பணிநிறைவு பெற்றார்.

அரசுசார் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றாரே தவிர, நூற்றுக்கணக்கிலான அமைப்புகள் மூலம் அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டிற்கென உழைத்து வருகிறார்.

தாம் சார்ந்த துறைகளில்


வளரும் நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பத்தைத் திட்டமிடலும் பரப்பலும் [Planning and Popularizing Science and Technology in Developing Countries, (ed) Tycooly International Publishing Ltd., UK (1985)],

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கானதிட்டமிடுதல் மேலாண்மை குறித்த போக்கும் வாய்ப்பு வளமும்[Trends and Prospects in Planning and Management of Science and Technology for Development , (ed) United Nations, NY (1985)],

பொறியியல் வரைகலை[Engineering Graphics, Prentice Hall, India (1970).]

முதலான பல நூல்களும் நூற்றுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அளித்து ஆய்வு உலகிலும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

 இந்திய அரசின் தாமரைத்திரு விருது(2002) முதலான எண்ணற்ற விருதுகள் இவருக்கு வழங்கப் பெற்றுப் பெருமையடைந்தன.

திருவள்ளுவர் ஆண்டு 1959, ஆனித்திங்கள் 29 ஆம் நாள், சூலை 12, 1928 அன்று வாணியம்பாடியில் பிறந்து வளர்ந்து சிறந்த இப்பல்துறையறிஞரின் 86 ஆம் பிறந்தநாள் பெருமங்கல நிறைவில் கல்வியாளர்களும் அறிஞர்களும் ஆன்றோர்களும் பொறியாளர்களும்கணித்தமிழ் அமைப்பினரும் நண்பர்களும் நேரிலும் தொலைபேசி, அலைபேசி வாயிலாகவும் மின்மடல் மூலமாகவும் வாழ்த்தியுள்ளனர்.

 


ஆயிரத்திற்கு மேற்பட்ட முழுநிலைவைக்கண்ட அறிஞர் மு.அனந்தகிருட்டிணன் தம் குடும்பத்தினருடன் சேர்ந்து மேலும் பல பன்னூறு முழுநிலவுகளைக் காண ‘அகரமுதல’ இதழ் வாழ்த்துகிறது.

 இலக்குவனார் திருவள்ளுவன்

 இதழுரை

ஆனி 29, 2045 / சூலை 13, 2014




ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்!




பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்!

உலகத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர், பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் நேற்று(11.04.2020)பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டு இரவில் உயிாிழந்தார்.
திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மாணவர்களின் அன்பிற்குரியவராகத்திகழ்ந்தவர் எழுத்தாளராக எண்ணற்ற வாசகர்களின் அன்பிற்கும் உரியவரானார்.
ஏறத்தாழ 1,000 சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 71 நூல்களாக வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்துள்ளனர்.
ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா முதலிய மொழிகளில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
தமிழக அரசு ஆங்கிலம் முதலான 22மொழிகளில் பெயர்த்து வெளியிட்டசிறுகதைத் தொகுப்பில் இவரது சிறுகதையும் இடம் பெற்றுள்ளது.சாகித்திய அகாதமியின் தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
அகில இந்திய வானொலி நிலையத்தின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
தமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை வென்றுள்ளன.
தினமணி கதிர், கல்கி, கலைமகள், அமுதசுரபி முதலான இதழ்கள்நடத்திய வரலாற்றுப்புதினம், சிறுகதை, குறும்புதினம் முதலான போட்டிகளில் பங்கேற்றும் முதல் பரிசுகள் பெற்றுள்ளார்.
மலேசியாவில் 2005இல் நடைபெற்ற உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டின் உலகச் சிறுகதைப்போட்டியிலும் 2007இல் பாரிசு தமிழ்ச் சங்கம் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு  நடத்திய அனைத்துலகச் சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசு வென்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகிய நான்கு மாநில எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவரே முதல்பரிசு பெற்று வாகை சூடினார்.
ஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியத்தில் இவரைப்பற்றிய மதிப்பீட்டுக்கட்டுரையைச் சேர்த்துள்ளது.
தமிழக அரசின் அண்ணா விருது, நற்கதை நம்பி, பொற்கிழி விருது, புதிய இலக்கியச் செல்வர், எழுத்துவேந்தர் முதலான பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பெற்றுள்ளன.
தமிழக அரசின் +2 ஆம் வகுப்புத் துணைப்பாட நூலில் இவருடைய கதைகள் பாடமாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.
இறுதிச்சடங்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபம் அருகே கைலாசநாதா் 3-ஆம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. இருப்பினும் மகுடைத் தொற்றினால் உள்ள கட்டுப்பாடுகளால் பங்கேற்பதைத் தவிர்க்கவும். தொடா்புக்கு 8903433292.
பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் மறைவிற்கு அகரமுதல மின்னிதழும், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ்அமைப்புகளும், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், ஆகியனவும் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவிக்கின்றன.
நன்றி – தினமணி, தமிழ் விக்கிபீடியா
00
முகநூல் பதிவு:
என் அன்பிற்குரிய என்மீது அன்பு கொண்ட ஐக்கண்/அய்க்கண் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய சந்திப்புகளில் மறக்க முடியாத ஒன்று. மாநிலக்கல்விக்கருவூலத்தின் வெளியீடுகளில் படைப்பாளர்கள் பிழைகளுடன் எழுதுவதைச் சுட்டிக் காட்டினேன்(1992). அப்போதைய இயக்குநர் முனைவர் இரஞ்சன்தாசு அதற்கு என்ன செய்யலாம் என்றார்.  அவர்களுக்கு ஒரு பட்டறை நடத்தி அவர்களைக் கொண்டே திருத்தச் செய்யலாம் என்றேன். அதன்படி குமரியில் பட்டறை நடந்தது. அப்பொழுது என் தமிழ்ச்செயலாக்கப் பணிகளை அறிந்தவரும் அங்கே என் தமிழ்க்குரலைப் பாராட்டியவருமான எழுத்தாளர் ஐய்க்கண், “தமிழ், தமிழ்நாட்டில் முழுமையாகச் செயல்பட, திருவள்ளுவனை ஒரே ஒருநாள் முதல்வராக ஆக்கினால் போதும். நம் நாடு உண்மையில் தமிழ்நாடாக விளங்கும்” என்றார். அவர் மகன் அரசியலுக்கு வர அப்போதைய அமைச்சர் பொன்னையனைப் பார்க்க வந்திருந்தார். அப்பொழுது அவருடன் பேசியுள்ளேன். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என அனைத்துத்துறைகளிலும் நூல்கள் எழுதி விருதுகள் பெற்ற படைப்பாளியின் மறைவிற்கு அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புதன், 26 ஜூன், 2019

கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!



கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!

இ.ஆ.ப. அலுவலராகச் சிறப்பாகப் பணியாற்றிய இயற்பெயர் பி.பாண்டியன் எனக் கொண்ட கவிஞர் முனைவர் பேகன் இன்று   ( ஆனி 11, 2050 / 26.06.2019)  காலை செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது வியர்த்துக் கொட்டுவதாகக் கூறிப் பின்னர்  உயிரிழந்தார். இவரது மக்கள் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் வருகைக்காக இரு நாள் பின்னரே இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் உறவினர், மேனாள் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர், முனைவர் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
 சிறந்த கவிஞராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்து பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். இவரது பரிபாடல்,மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலித்தொகை, சூளாமணி, குண்டலகேசி, வளையாபதி   ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்ற சிறப்பான நூல்களுள் சிலவாகும்.
இவரது பாடல்கள் பி.சுசிலா போன்ற இசைவாணர்கள் குரலில்இசைப்பேழைகளாகவும் வந்துள்ளன.
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்புத் திறனாய்வு நூலைத் தாம் வட்டார வளர்ச்சி அலுவராக இருந்த பொழுதும் அன்றாடம் தட்டச்சிட்டுக் கொடுத்த செயலை மறக்க முடியாது.
 பின்வருவனவற்றைக் காண்க:
கவியோகி பேகன்  அவர்களின் கவிதைப் பணி – கவிதை விக்கி
கவிஞர்கள் கவிதை ஆய்வரங்கத்தில் மறைமலை இலக்குவனார் புகழாரம் –தினமலர்
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆற்றுப்படை
கவியோகி தளம்
இவரது மறைவில் வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் ஏற்பட்ட ஆழ்ந்த துயரத்தல் அகரமுதல மின்னிதழ், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம் ஆகியன பங்கேற்கின்றன.
 முகவரி
பழைய எண் 8,  பாசுகரா தெரு, இரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை-24.
 தொடர்பு எண்  : திருவாட்டி இராணி – 93840 44999

புதன், 12 ஜூன், 2019

முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்!


முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்!

எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019)  காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில்லை.
 ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று நகைச்சுவை வாணர்களின் ஊக்குநராகவும் புன்னகையுடனும் பண்புடனும் அனைவருடனும் பழகும் தோழராகவும் சிறந்து விளங்கிய முனைவர் இரா.மோகன் தமிலுகில் இருந்து பிரியா விடை பெற்றார்.
செளராட்டிரக் குமுகத்தில் தலைசிறந்த தமிழறிஞராகவும் தகைமையாளராகவும் புகழுடன் விளங்கிய முனைவர் இரா.மோகன் புகழடல் எய்தினார்.
தமிழுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு அவர் அகன்று விட்டார்,
ஒருசாலை மாணாக்கராகத் கல்லூரிக் காலத்திலிருந்து தோழமை பூண்டிருந்த இனிய நண்பர் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். உற்றார் உறவினர் துன்பத்தில் அ்கரமுதல மின்னிதழும் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் பங்கேற்கின்றன.
நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நிகழ உள்ளது.  
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்