பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்!
உலகத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர், பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் நேற்று(11.04.2020)பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டு இரவில் உயிாிழந்தார்.
திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மாணவர்களின் அன்பிற்குரியவராகத்திகழ்ந்தவர் எழுத்தாளராக எண்ணற்ற வாசகர்களின் அன்பிற்கும் உரியவரானார்.
ஏறத்தாழ 1,000 சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 71 நூல்களாக வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்துள்ளனர்.
ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா முதலிய மொழிகளில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
தமிழக அரசு ஆங்கிலம் முதலான 22மொழிகளில் பெயர்த்து வெளியிட்டசிறுகதைத் தொகுப்பில் இவரது சிறுகதையும் இடம் பெற்றுள்ளது.சாகித்திய அகாதமியின் தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
அகில இந்திய வானொலி நிலையத்தின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
தமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை வென்றுள்ளன.
தினமணி கதிர், கல்கி, கலைமகள், அமுதசுரபி முதலான இதழ்கள்நடத்திய வரலாற்றுப்புதினம், சிறுகதை, குறும்புதினம் முதலான போட்டிகளில் பங்கேற்றும் முதல் பரிசுகள் பெற்றுள்ளார்.
மலேசியாவில் 2005இல் நடைபெற்ற உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டின் உலகச் சிறுகதைப்போட்டியிலும் 2007இல் பாரிசு தமிழ்ச் சங்கம் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்திய அனைத்துலகச் சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசு வென்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகிய நான்கு மாநில எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவரே முதல்பரிசு பெற்று வாகை சூடினார்.
ஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியத்தில் இவரைப்பற்றிய மதிப்பீட்டுக்கட்டுரையைச் சேர்த்துள்ளது.
தமிழக அரசின் அண்ணா விருது, நற்கதை நம்பி, பொற்கிழி விருது, புதிய இலக்கியச் செல்வர், எழுத்துவேந்தர் முதலான பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பெற்றுள்ளன.
தமிழக அரசின் +2 ஆம் வகுப்புத் துணைப்பாட நூலில் இவருடைய கதைகள் பாடமாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.
இறுதிச்சடங்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபம் அருகே கைலாசநாதா் 3-ஆம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. இருப்பினும் மகுடைத் தொற்றினால் உள்ள கட்டுப்பாடுகளால் பங்கேற்பதைத் தவிர்க்கவும். தொடா்புக்கு 8903433292.
பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் மறைவிற்கு அகரமுதல மின்னிதழும், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ்அமைப்புகளும், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், ஆகியனவும் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவிக்கின்றன.
நன்றி – தினமணி, தமிழ் விக்கிபீடியா
00
முகநூல் பதிவு:
என் அன்பிற்குரிய என்மீது அன்பு கொண்ட ஐக்கண்/அய்க்கண் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய சந்திப்புகளில் மறக்க முடியாத ஒன்று. மாநிலக்கல்விக்கருவூலத்தின் வெளியீடுகளில் படைப்பாளர்கள் பிழைகளுடன் எழுதுவதைச் சுட்டிக் காட்டினேன்(1992). அப்போதைய இயக்குநர் முனைவர் இரஞ்சன்தாசு அதற்கு என்ன செய்யலாம் என்றார். அவர்களுக்கு ஒரு பட்டறை நடத்தி அவர்களைக் கொண்டே திருத்தச் செய்யலாம் என்றேன். அதன்படி குமரியில் பட்டறை நடந்தது. அப்பொழுது என் தமிழ்ச்செயலாக்கப் பணிகளை அறிந்தவரும் அங்கே என் தமிழ்க்குரலைப் பாராட்டியவருமான எழுத்தாளர் ஐய்க்கண், “தமிழ், தமிழ்நாட்டில் முழுமையாகச் செயல்பட, திருவள்ளுவனை ஒரே ஒருநாள் முதல்வராக ஆக்கினால் போதும். நம் நாடு உண்மையில் தமிழ்நாடாக விளங்கும்” என்றார். அவர் மகன் அரசியலுக்கு வர அப்போதைய அமைச்சர் பொன்னையனைப் பார்க்க வந்திருந்தார். அப்பொழுது அவருடன் பேசியுள்ளேன். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என அனைத்துத்துறைகளிலும் நூல்கள் எழுதி விருதுகள் பெற்ற படைப்பாளியின் மறைவிற்கு அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக