காரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உயர்கல்விச் சீரழிவுக்கு நீதிமன்றமும் காரணம்: நீதிபதி சந்துரு

உயர்கல்வி ச் சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வருத்தம்
திருச்சி: ""கல்வியில் மாற்றம் கொண்டு வர, நீதிமன்றம் தான் காரணம் என்றாலும், உயர்கல்வி தரமற்று இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம் என்பது வருத்தமளிக்கிறது,'' என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறினார்.

திருச்சி தேசிய கல்லூரியின், 94வது ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் வரவேற்றார். சென்னை உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:இந்திய அரசியல் சாசனத்தில் தொழில், வியாபாரம் போன்றவை ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால், கல்வி அடிப்படை உரிமை சட்டமாக ஆக்கப்படவில்லை. 1991ம் ஆண்டில் ஒரு வழக்கின் தீர்ப்பில், "கல்வி தனி மனித உரிமை' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் மீது நடந்த விவாதங்களை தொடர்ந்து தான், ஆறு வயது முதல், 14 வயது வரை, கல்வி அடிப்படை உரிமையானது.

"பள்ளி கல்விக்கு மட்டுமே அரசு பொறுப்பு, உயர்கல்வியை பெறுவது தனிப்பட்ட மனிதனின் உரிமை இல்லை' என, நீதிமன்றம் கூறியது. "உயர்கல்வி நிறுவனங்களை தனியார் துவங்கி, அதற்கு அரசு ஆதரவும், அங்கிகாரமும் வழங்கலாம்' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.இதன் விளைவாக தான், தற்போது வீதிக்கு வீதி, தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழிற் கல்வி கூடங்கள் முளைத்து தரமற்ற கல்வியை அளிக்கும் சூழல் உள்ளது. அரசும் கைகழுவி விட்டதால், உயர்கல்வியை பணம் கொடுத்து தான் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில், 44 ஆண்டுக்கு பிறகு, "கல்வி உரிமை' சட்டமும், 50 ஆண்டு கழித்து, "கட்டாய இலவச கல்வி' சட்டமும், வர நீதிமன்றம் தான் காரணமாக இருந்தது. ஆனால், உயர்கல்வி தற்போது தரமற்ற நிலையில் இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு பொறுப்பு என்பது வருத்தமாக உள்ளது.இந்தியாவில் கல்வியில் உள்ள ஏழை, பணக்காரர் என்ற தடுப்பு சுவர் உடைக்க நீதிமன்றம் எடுத்த முயற்சியால் தான், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கல்வியில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், மத்திய அரசு அதன் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. குழந்தை தொழிலாளர் முறை இன்னமும் நீடிப்பதற்கு, எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் இப்பிரச்னையை எழுப்பாதது தான் காரணம்.படிக்காத ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தியிருப்பது போல், படித்தவர்களுக்கு வேலை வழங்குவதும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.இவ்வாறு சந்துரு பேசினார்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

தமிழகத்தை த் தாண்டாத ஈழ ச்சிக்கல்: காரணம் யார்?

தமிழகத்தை த் தாண்டாத ஈழ ச்சிக்கல்: 
காரணம் யார்?
ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய ஆளும் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தைத் தாண்டி, நாட்டின் பிற பகுதிகளுக்கு ஈழப் பிரச்னை செல்லவில்லை. டில்லியில், லோக்சபா சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இது வெளிச்சத்துக்கு வந்தது.
பார்லிமென்டில், ஈழம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீராகுமார், கூட்டினார். கூட்டத்தில், ஈழப் பிரச்னைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதே தவிர, ஆதரவு கிடைக்கவில்லை. பா.ஜ., - சமாஜ்வாதி, - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், "தனியொரு நாட்டிற்கு எதிராக, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. இலங்கையில், நடந்தது இனப் படுகொலை எனக் கூற முடியாது' என, தெரிவித்தன. சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், "காங்கிரசுக்கும், - தி.மு.க.,வுக்கும் இடையிலான பிரச்னையை, அவர்கள் இருவரும் பேசித் தீர்க்காமல், அனைத்துக் கட்சி கூட்டத்தை எதற்குக் கூட்டினீர்கள்' என, பெரும் கோபத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில், ஈழப் பிரச்னையை, தமிழகத்தைத் தாண்டி, தேசிய பிரச்னையாக கொண்டு செல்ல முடியாததற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழப் பிரச்னையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்; பல போராட்டங்களை நடத்தியுள்ளோம் என, தன் முதுகை தானே தட்டிக் கொள்ளும் தி.மு.க., தமிழகத்தைத் தாண்டி இப்பிரச்னை செல்வதற்கு என்ன செய்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். லோக்சபாவில், கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு ஈழத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், ராஜ்யசபாவில் போதிய ஆதரவில்லை. தீர்மானம் தோற்றுவிடும் என, கூறிவிட்டு விலகி நின்றதற்கான காரணத்தையும், காங்கிரஸ் கூற வேண்டும் என, தமிழக மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாட்டில் உள்ள பிற கட்சிகளிடம் ஈழப் பிரச்னையை எடுத்துச் சென்று ஆதரவைத் திரட்டாதது, தேசிய அளவில், கருத்தொற்றுமையை உருவாக்காதது ஆகியவற்றுக்கு, தமிழக கட்சிகளே பொறுப்பாளிகள் என்றும், மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே, ஈழப் பிரச்னை குறித்து பொதுக் கருத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ் எழுத்தாளர்களோ, ஆர்வலர்களோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, ஆங்கிலம், இந்தி போன்ற பொது மொழிகளில் பிரசாரம் செய்யவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
-  சிறப்பு ச் செ ய்தியாளர், தினமலர் -