புலமைப்பரிசில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலமைப்பரிசில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 அக்டோபர், 2022

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு)

 அகரமுதல





வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23

(வெள்ளணி நாள் அறிவிப்பு)

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி:

தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார்.

தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்; அந்நிலை மாற வேண்டிக் கவிவாளாம் படைக்கலன் ஏந்தி வீறுகொண்டு பாடினார். அவ்வகையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்தனிக் கவியாக வீறுகவியரசர் விளங்குகிறார்.

முத்தமிழின் மீட்சிக்காகவும் ஆட்சிக்காகவுமே முடியரச முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்தது; காற்றில் கலந்திருந்து அவ்வோசை இன்னமும் நம் நெஞ்சில் ஊற்றெடுத்துப் பெருகுகிறது.

தமிழின் சீர்மையைப் பாடியது மட்டுமன்று நம் பாவரசர் செய்த அரும்பணி. கற்பித்தலின் வழியாகத் தாய்மொழி அறிவையும் உணர்வையும் பரப்புவதைத் தன் வாணாள் தொண்டாகக் கொண்டிருந்தார் அவர்.

முடியரசரின் அடியொற்றித் தமிழ் பரப்புவதை எஞ்ஞான்றும் தன் தலைத்தொண்டாக் கொண்டுள்ள வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், அந்நோக்கில் ‘வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில்’ என்னும் செயற்றிட்டத்தை இஞ்ஞான்று அறிவிக்கிறது. 

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் சொல்லும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

இமய முடியை அடைய முனையும் செலவுக்கு, இலக்கை நோக்கி ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் சிற்றடிகளே இன்றியமையாதவை.

அவ்வகையில் முதற்கட்டமாக – அவ்விலக்கை நோக்கிய சிற்றடியாக – கீழ்க்காணும் பணிகளை முன்னெடுப்பதென்று அண்மையில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள ஆட்சிக்குழுக் கூட்டத்தின்போது முடிவுசெய்யப்பட்டது:

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23

தனித்திறன் கொண்ட தமிழாளர்களை – குறிப்பாக இளையோரை – இனங்காண்பதும் ஊக்குவிப்பதும் இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். இச்செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன:

  1. வீறுகவியரசர் கவிதைகளை முன்னிறுத்தி உலகளாவிய பேச்சுப்போட்டியொன்றை வலையொளி வழியாக நடத்துதல்; பத்து வெற்றியாளர்களைத் தெரிவு செய்து பரிசில் வழங்குதல். அவர்கள் அடங்கலாக, இதன்போது இனங்காணப்படும் திறனாளர்கள் அவைக்களத்தின் தொடர் செயற்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பினை நல்குதல்.
  2. வீறுகவியரசர் கவிதைகளை முன்னிறுத்தி உலகளாவிய கட்டுரைப் போட்டியொன்றை நடத்துதல். வெற்றியாளர்களைத் தெரிவு செய்து பரிசில் வழங்குதல். இனங்காணப்படும் இளந்திறனாளர்கள் தமிழ் ஆய்வு, இதழியல், நூற்பதிப்பு முதலான துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
  3. வீறுகவியரசர் முடியரசனார் நினவாகக் கவிதைப்போட்டியொன்றை நடத்துதல். ஆற்றல் கொண்ட கவிகளை இனங்காணல்.
  4. முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகத் தமிழாய்வைத் தேரும் மாணவர்களில் தகையிற் சிறந்தோரைத் தெரிவு செய்து அவர்களுக்கான புலமைப் பரிசிலாக ஓராண்டு காலம் ஊக்கத்தொகை வழங்குதல்; வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் சார்ந்த ஆய்வுகளின்பால் அவர்களை ஆற்றுப்படுத்துதல்.
  5. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளையும் கடந்து வந்த பாதையையும் எடுத்துச் சொல்லும் ஆவணப்படங்களை உருவாக்குதல். அதற்கான போட்டியொன்றை நடத்துதல்.

வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் – பொருண்மை வகைத் தொகுப்பு

பெருநூல் வெளியீடு

வீறுகவியரசர் கவிதைகளைப் கருப்பொருள் சார்ந்து  பகுத்து, பதினொரு தலைப்புகளின் கீழ் தொகுத்துப் பெரு நூலாகக் கொண்டு வருவதற்கான பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.  

தமிழ் ஆய்வாளர்கட்கும், அறிஞர்கட்கும், ஆர்வலர்கட்கும் மிகுபயன் தரத்தக்க வகையில் இப்பொருண்மை வகைத்தொகுப்பு உருப்பெற்றுள்ளது.

பக்கங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி நீண்டுள்ளதன் காரணமாக அதன் அச்சாக்கம் பெரும் பொருட்செலவைக் கோரி நிற்கிறது. அச்சுமையைப் பொறுப்பேற்கத் தமிழ்ப்பற்று மிகுந்த புரவலர்கள் முன்வந்தால் நூல் அச்சேறி விடும்.

தமிழ்கூறு நல்லுலகுக்கான செய்தி

மேலுள்ளவை தனியொரு சிலரால் செய்து முடிக்க இயன்ற பணிகள் அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். எண்ணம் பெரியது. காலத் தாழ்வில்லாமல் இவற்றை ஈடேற்றுவதற்கு உங்களில் ஒவ்வொருவரும் இயன்ற வழிகளில் கரங்கொடுக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். இப்பணிகளுக்குத் தொண்டுளம் கொண்டு உதவ விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்க.

தொடர்பு:

+91 98425 89571 (முனைவர் தமிழ் முடியரசன், தமிழகம்)

+44 74286 31805 (கவி. மதுரன் தமிழவேள்)

வியாழன், 1 நவம்பர், 2018

புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது

அகரமுதல


புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான

புலமைப்பரிசில் விருது

தமிழ் இனத்தின் புதிய நம்பிக்கை இராகினி. அவரது ஆசிரியர்களுக்குப்
புலமைப்பரிசில் புதிய வெளிச்ச நிதி  நூறாயிரம் உரூபாய்!   
அண்மையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்விற்கான பெறுபேறுகள் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாணவி இராகினிதேசிய நிலையில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் தேர்வில் 169 புள்ளிகளைப் பெற்று  தேர்ச்சியடைந்துள்ளார்.
இவர் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தன் தாய்,  படையினரின் குண்டுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்த் தன் ஒரு கையையும் இனஅழிப்புப்போரில் பறிகொடுத்த குழந்தையாவார் .
விழ விழ எழுந்துவரும் தமிழ் இனத்தின் இன்னுமொரு சான்றாக மக்கள் மனங்களிலும் வரலாற்றின் பக்கங்களிலும் இடம் பிடித்திருக்கின்றார்.
தனியார் வகுப்புக்களுக்குச் செல்ல வசதி இல்லாதிருந்தபோதும் தனது இவ்வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பாடசாலை ஆசிரியர்களான சிவகரன், துவாரகா ஆகிய இருவருக்கும் பெருநன்றி கூறுவதைக் காணொளியில் காண்கின்றோம். மேலும் தான் அவர்கள் போன்று ஆசிரியராக வருவேன் என்றும் கூறுகின்றார்
கடந்த மூன்று வருடங்களாக நாம் எடுத்துக்கொண்ட புதிய வெளிச்சச் செயற்பாடுகளில் ‘ஆசிரியர்களை வளப்படுத்தல்‘ செயல்திட்டத்தின் தொடர் நிகழ்வாக இந்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிற்குமான ‘நல் ஆசிரியர் விருதினை’ அறிவிக்க இருக்கின்றோம்..
நல் ஆசிரியர் விருதிற்குத் தகுதியான ஆசிரியரை மாணவர்களின் தெரிவில் இருந்தே தெரிந்தெடுக்கக்கூடிய ஒழுங்குமுறையைச் செயற்பாட்டிற்குக்  கொண்டுவருகின்றோம்.
இந்த ஆசிரியர் விருது நிதிக்கு முதல்கட்டமாக 2 பேராயிரம்(மில்லியன்) இலங்கை உரூபா நிதியை நான் வழங்குகின்றேன்  இந்நிதி வருடத்திற்கு நான்கு இலட்சம் வீதம் ஐந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்குகின்றேன் . மேலும் நண்பர்கள் இத் திட்டத்துக்கு உதவும் பொருட்டுஆசிரியர்களுக்குப் புலமைப்பரிசில் திட்டம் மேலும் அதிகரிக்கப்படும் .
எனது தந்தையும் ஆசிரியர் அவரது விடா முயற்சியான ஆசிரியப் பணியையும் அவரது மாணவர்கள் அறிவார்கள். வட மாகாணக் கல்வி அமைச்சரின் செயலாளராக இருக்கும் அவர் தன்னுடைய 50 வருட ஆசிரியப்பணியில் இருந்து இந்தவருடம் தனது 70 வயதில் ஓவ்வுபெற உள்ளார்.
அவரின் ஆதரவுடனும் அறிவுரைக்கிணங்கவும் இந்த “நல் ஆசிரியர் விருதினை” அறிமுகப்படுத்தி இதன் முதற்கட்டமாக விழ விழ எழும் இனத்தின் வரலாற்றுச் சான்றாகத் தடம் பதித்திருக்கும் வன்னி மண்ணின் மாணவி இராகினியின் ஆசிரியர்கள் இருவருக்கும் ஓர் இலட்சம் உரூபாக்களை வழங்குகின்றோம்.
கடந்த காலப் புதிய வெளிச்சச் செயற்பாடுகள்
1) ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை
2) இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை
3) இயற்கை விவசாய பயிற்சிப் பட்டறை
உலக ஆசிரியர் நாள் வாழ்த்துகள்
#புதிய வெளிச்சம்
நவசீவன் அனந்தராசு
4162728543
வணிகத் தொடர்பிற்கு : www.Biztha.com
(படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.)