புதுமையான முறையில்

கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்

      கவிஞர்  சென்சி எழுதிய ‘மகரந்தத் துணுக்குகள்’ குறும்பா (ஐக்கூ கவிதை) நூல் வெளியீட்டு விழா, நூலாசிரியர் தங்கியிருக்கும் சென்னை இராயப்பேட்டை கவுடியா மடம் சாலையிலுள்ள  தலைமை மாளிகை (சுப்ரீம் மேன்சன்) தரைதளத்தில்  புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமில்லாமல், கவிதை நூலை அச்சிட்ட கேபிடல் அச்சக ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
         இவ்விழாவிற்குத் தலைமையேற்று, கவிதை நூலினைப் பண்ணைத் தமிழ்ச் சங்க அமைப்பாளர் கவிஞர் துரை.வசந்தராசன் வெளியிட்டார்.
 கவிஞர் மு.முருகேசு பெற்றுக்கொண்டார். கவிதை நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “தமிழ்க் கவிதையில் இன்றைக்குச் சொல் புதிது, பொருள் புதிது என எழுதும் இளைய கவிஞர்கள் பட்டாளம் கிளம்பியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதை எழுதிய கவிஞர்கள் பலரும் இன்றைக்கு க் குறும்பா(ஐக்கூ கவிதைகள்) எழுதுவதிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். கவிதையின் கருப்பொருளும் சமூக அக்கறையுமே ஒரு கவிதையின் வெற்றியை தீர்மானிக்கும். கவிதையின் புறக்காரணியான வடிவம் ஒரு பொருட்டல்ல.
          தமிழில்  குறும்பா(ஐக்கூ ) மாக்கவி பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு 530-க்கும் மேற்பட்ட பலவகை  குறும்பா(ஐக்கூ) நூல்கள் வெளிவந்துள்ளன. முன்னரே தனது சிறுகதை நூலின் வழியே அறிமுகமாகியுள்ள கவிஞர் சென்சியின் கவிதையாற்றலுக்கு இந்தக் குறும்பா(ஐக்கூ) நூல் சான்றாகும்.
தன் மனத்தைத் தொட்ட எந்தவொரு சமூக நிகழ்வையும் குறைந்த சொற்களில் செறிவான காட்சிக் கவிதைகளாகப் படைத்துள்ளார் சென்சி. இந்தக் கவிதைகளிலுள்ள செறிவும் காட்சியழகும் வாசிப்பாளனை நிச்சயம் ஈர்க்கும். பக்கம் பக்கமாக வெறும்  சொல் அலங்காரத்தோடு எழுதப்பட்டு வந்த தமிழ்க் கவிதைகளுக்குச் செறிவையும் அழுத்தத்தையும் தந்த பெருமை குறும்பா(ஐக்கூ) கவிதைகளைச் சாரும். கவிஞர் சென்சி, தனது சமூக அக்கறையைச் செறிவான மொழியில் சுருக்கென ஐக்கூவாகப் படைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
  கவிஞர்கள் பிரியம், உமா சுப்பிரமணியன், கோவை நாவரசன், முருகு பாண்டியன், மேன்மை இதழின் ஆசிரியர் மு.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் சென்சி ஏற்புரையாற்றினார்.
கவிஞரின் உடன்பிறந்தார் கோவிந்தராசு நன்றி கூறினார்.