எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சான்றினைத் தூண்டட்டும்!
– ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்
(ஒளிப்படங்களும் காணுரைகளும்)
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக்
கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும்
குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த மாசி 12, 2048 / 24.02.2017
வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும்,
‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம்
மாசி 26, 2048 / 10.03.2017 வெள்ளிக்கிழமை 15 ஆவது நாளாகவும்
தொடர்கின்றது.
இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள், உலக மகளிர் நாளில் (மார்ச்சு- 8, புதன்கிழமை) ஒப்பாரி வைத்துத் தமது கூட்டு மனவலிகளை ஒருமித்து வெளிப்படுத்தினர்.
‘பெண்கள் தாம் பெற்றுள்ள உரிமைகளுக்காகப்
பெருமைப்படவும், பெற வேண்டிய உரிமைகளுக்காகப் போராட வேண்டி உறுதி ஏற்கவும்
வேண்டிய உலக மகளிர் நாளில்கூட, தாங்கள் கைவிடப்பட்டு, வீதிகளில்
விடப்பட்டுள்ளதாகவும், பெண் சமத்துவம் – மனித உரிமைபற்றிப் பேசும்
அமைப்புகளும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் ஒப்புக்காகவேனும் வாய்திறந்து
இந்த மோசமான அடிப்படை உரிமை மீறல்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை
என்றும்,
இந்த ஒப்பாரிப் போராட்டத்தின்
மூலமாவது, தமது ஒருமித்த அழுகுரல்கள் தொடர்புடையவர்களினதும், ஆட்சி –
அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களினதும் மனச்சான்றினைத் தூண்டட்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள் தெரிவித்தனர்.
(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக