வியாழன், 16 மார்ச், 2017

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!




காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்

தேடியலையும் குடும்பங்கள்,

வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!

   இலங்கை அரசின்  இனப்படுகொலை, போர்க்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை  உசாவுவதற்கு, ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு  விடையளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்து  புறக்கணித்துவரும்  இலங்கை அரசுக்கு, இம்முறையும்  செனிவாவில் இன்னும் இரண்டு வருட கால  நீட்டிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில்   மாசி 28, 2048 / 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த  மாசி 12, 2048 / 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம் மாசி 28, 2048 / 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை 17 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
  இந்தநிலையில்  மாசி 27, 2048 / 11.03.2017 சனிக்கிழமை, வவுனியாவில் ‘ வன்னி இன்’ விருந்தினர் விடுதியில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாணஅவை உறுப்பினர்கள்,  இலங்கை அரசுக்கு இம்முறையும்  செனிவாவில் இன்னும் இரண்டு வருட கால  நீட்டிப்பு வழங்கவேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
 இனப்படுகொலை, போர்க்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணமானவர்களை,  அனைத்துநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள் உடனான கலப்பு நீதிமன்றம் ஒன்றினை  நிறுவி  உசாவல்களை மேற்கொள்வதற்கு உடன்படாமல் முரண்டுபிடித்துவரும்  இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தாமல்,
  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி வழங்கும் சட்ட ஒழுங்குகளிலிருந்து தவறிழைத்துள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குக் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துக், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்களால் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
  ஏ9 சாலை ஓரமாக உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில், கறுப்புக்கொடிகளைப் பறக்க விட்டுள்ளதால், போராட்டக் களச்சூழல் முழுவதும் கறுப்புக்களமாக மாறியுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக