முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதன்மைக் காரணர்களில் ஒருவரான படைத்துறைப்பணித் தலைவர் சகத்து தயாசுக்கு(Major General Jagath Dias) எதிராக ௨௦௧௧ (2011) ஆம் ஆண்டு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது நேரடியாக தயாசு மீது தொடுக்கப்படவில்லை. மாறாக, இனப்படுகொலையாளி சகத்து தயாசை இலங்கைத் தூதராகப் பணியமர்த்திய யேர்மனிய அரசு மீதே மனித உரிமை மீறல்கள் குறித்துக் குற்றம் சுமத்தப்பட்டு இவ்வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் விளைவாக சகத்து தயாசைத் தூதரக உயரலுவலராகப் பணியமர்த்திய ஐரோப்பிய
நாடுகளான சுவிட்சர்லாந்து, இத்தாலி, யேர்மன், வத்திக்கான் ஆகியன அவரது
தூதரகப் பணியாணையைத் திரும்பப் பெற்றன. இதன் காரணமாகச் சகத் தயாசு சட்டச்
சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் ஐரோப்பாவை விட்டுத் தப்பி வெளியேற வேண்டிய
தேவை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சுவிசைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை நிறுவனம்
ஒன்றுடன் இணைந்து சுவிசிலும் தனிப்படச் சட்ட நடவடிக்கை ஒன்று
மேற்கொள்ளப்பட்டது. இதற்கான முற்று முழுதான பின்தள உதவிகளை சுவிசு
ஈழத்தமிழரவை வழங்கியிருந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து இனப்படுகொலையாளி
சகத்து தயாசு ஓய்வு பெற்றிருக்கும் சூழலில் சுவிசு நாட்டு நீதித்துறையின்
பணிப்பாளர் அலுவலகம் பிடியாணை (Warrant) பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய
நாடுகளுக்குள் எங்கு வந்தாலும் இனப்படுகொலையாளி சகத்து தயாசு கைதாகலாம்
என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
௨௦௦௯ (2009) ஆம் ஆண்டு போர்ப் பகுதிகளிலிருந்து வெளிவந்த காணொளிகள்
(videos), ஒளிப்படங்கள் ஆகியவற்றைத் தரம் பிரித்து அதன் அடிப்படையில்
இனப்படுகொலையாளி சகத்து தயாசு இன அழிப்பு மேற்கொண்ட இடங்களை வரையறை செய்து
இந்தச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்ட காணொளிகள்,
ஒளிப்படங்கள் ஆகியவற்றில் மட்டும் கொல்லப்பட்டவர்களில் ௧௨,௦௦௦ (12,000)
ஆயிரம் பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!
—நன்றி : சுவிசு ஈழத்தமிழரவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக