புதன், 30 டிசம்பர், 2015

தமிழறிஞர் தமிழண்ணல் காலமானார்



தமிழறிஞர் தமிழண்ணல் காலமானார்

 தமிழறிஞர் தமிழண்ணல் (88), மதுரை சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
 சிவகங்கை மாவட்டம், நெற்குப்பையைச் சேர்ந்தவர் தமிழண்ணல். இவரது இயற்பெயர் இராம. பெரியகருப்பன். காரைக்குடியில் பள்ளி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கிய இவர், மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.


 சங்க இலக்கியம், தொல்காப்பியம், தமிழ் இலக்கிய வரலாறு  முதலான  80-க்கும் மேற்பட்ட நூல்களை ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார். சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை நூல்களும் எழுதியுள்ளார். சங்க இலக்கியம் முதல் நவீன தமிழ் இலக்கியம் வரை விமர்சனத்துக்குரிய ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.


 இவர், தமிழறிஞருக்கான மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி, திரு.வி.க. விருது, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தேசியப் பேராசிரியர், எசுஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, கவிதை நூலுக்காக மதுரை மீனாட்சி விருது முதலான பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
 மத்திய செம்மொழிக்கான குழுத் தலைவரைத் தேர்வு செய்யும் பொறுப்பு, மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன், அண்ணாமலை, சென்னை, கோழிக்கோடு முதலான பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக் குழு உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார். சிங்கப்பூர் அரசுக்குத் தமிழ்க் கல்வி பாடநூல்களையும் எழுதியுள்ளார்.


 தமிழ் வழிக் கல்விக்காக தமிழறிஞர்களின் உண்ணாநோன்புப் போராட்டத்துக்குத் தலைமை வகித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் கா.காளிமுத்து, மு.தமிழ்குடிமகன் முதலானோருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். சங்க இலக்கிய ஆய்வில் தலைசிறந்த பேராசிரியரான இவர், தினமணி நாளிதழில் பல கட்டுரைகள் எழுதியதுடன், அதன் சார்பில் 2012-இல் புது தில்லியில் நடைபெற்ற அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார். 


 இவருக்கு மனைவி தெய்வானை, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு மதுரை வண்டியூர் முதன்மைச் சாலை சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (திச.31) மாலை 3 மணிக்கு நடைபெறும். தொடர்புக்கு 99764 11000.

 பேராசிரியர் தமிழண்ணல் மறைவிற்கு, அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்நாடு - புதுச்சேரி தமிழ்அமைப்புகள்  ஆகியன இரங்கல் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக