இலாத்துவிய மொழியில் திருக்குறள்
காதில் கம்மல், கழுத்தில் ‘ஓம்’
பதக்கத்துடன்மறையாடை(sudithar) உடன், ‘‘ நான் தமிழ் நாட்டை நேசிக்கிறேன்’’
என்றபடியே வரவேற்கிறார் ஆசுட்டிரா! (https://www.facebook.com/astra.santhirasegaram).
இலாத்துவிய நாட்டிலிருந்து சென்னைக்குக்
குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர்
பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை இலாட்விய மொழியில்
மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும்
மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், இலாட்விய மொழிக்குப் போவது இதுதான்
முதல்முறை!
‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே
இலாத்துவியாவில்! இரசியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற குட்டி நாடு
எங்களுடையது. மொத்தமே 20 நூறாயிரும் மக்கள்தான். இதில், தலைநகர்
(இ)ரீகாவில் மட்டும் பத்து நூறாயிரம்பேர் இருக்கிறார்கள். அங்கே,
அரசியலறிவயில் படித்துவிட்டு, வெளியுறவுத் துறையில் வேலை பார்த்துக்கொண்டு
இருந்தேன். அப்போதுதான் இவரைச் சந்தித்தேன். காதலித்துக் கைப்பிடித்தேன்!’’
எனத் தன் காதல் கணவர் கரிகாலனைக் கைகாட்டித் தொடர்கிறார் ஆசுட்டிரா.
‘‘எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில்
இவருடைய வீடு இருந்தது. எனக்கு இந்தியர்கள் மீது மிகவும் மரியாதை. ஏன்
என்றால், இந்தியாவைப்பற்றி நிறைய நல்ல செய்திகளைப் படித்திருக்கிறேன். .
இங்கே மக்கள் பேசும் வெவ்வேறு மொழிகள், ஓகம், கோயில்கள் எல்லாம்பற்றியும்
இணையத்தில் படித்திருக்கிறேன். குறிப்பாகத் தமிழ்நாடு… இங்கே தனித் தமிழ்
இயக்கம், மொழிப் போராட்டம் முதலியன எனக்கு அறிமுகமாயின.
பழமையான மொழியைப் பேசும் ஒவ்வோர் இனமும் தங்கள் மொழியைக் காப்பாற்ற இப்படிப் போராட்டங்கள் நடத்திய வரலாறு இருக்கிறது.
இது மாதிரியே இலாத்துவியாவிலும் ‘தூய்மை இலாத்துவியம்’ என ஓர் இயக்கம்
1900களில் நடந்திருக்கிறது. இப்பொழுதும் நாங்கள் எங்கள் மொழியில் மற்ற
மொழிச் சொற்களைக் கலப்பதில்லை. எங்கள் நாட்டுக்கும் பொதுவான நாணயம்
(இ)யூரோ. அதைக் கூட எங்கள் மொழியில் எப்படிச் சொல்லலாம் என்று இப்போது
விவாதம் நடத்திக் கொண்டு இருக்கிநார்கள். எங்களைப் போலவே மொழியை நேசிக்கிற
தமிழர்களுடன் நான் என்னை மிக நெருக்கமாக உணர்கிறேன்.
நான் உரோமன் கத்தோலிக்காக இருந்தாலும்,
தமிழ்ப் பண்பாட்டு ஈர்ப்பால் எல்லாக் கோயில்களுக்கும் போவேன். காஞ்சிபுரம்
கோயில்களைப் பார்க்கும்போது பிரமிப்பில் கண் கலங்கி விட்டது. அவ்வளவு அழகு!
அப்புறம், இவருடன் இலண்டனில் ஐந்து வருடம், கொழும்பில் மூன்று வருடம்
என்று வாழ்க்கை போனது.. அப்பொழுது, ஒருநாள் இவர்தான், ‘வாழ்க்கைக்குத் தேவையான எல்லா செய்திகளைகளையும் போதிக்கிற ஒரே நூல் திருக்குறள்’ என்று சொன்னார்.
உடனே, அறிஞர் போப்பின் ஆங்கில உரையை
எடுத்துப் படித்துப் பார்த்தேன். திருவள்ளுவர் இரண்டே வரிகளில்
எல்லாவற்றையும் கச்சிதமாகப் பேசிவிட்டு போவது ஆச்சரியமாக இருந்தது.
படிக்கப் படிக்க எனக்குள்ளே பிரமிப்பு எழுந்தது! எனக்கு இலாத்துவிய மொழி
தவிர சுவீடிசு, செருமன்,இரசியன், ஆங்கிலம் என்று நான்கு மொழிகள் தெரியும்.
இதில் இலாட்விய மொழியில்தான் திருக்குறள் இன்னும் வரவில்லை.
அதனால், கண்டிப்பாக எங்கள் மொழிக்கு திருக்குறளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.. இப்போது, அறத்துப்பால் முடித்துவிட்டேன். இன்னும், நான்கு மாதத்தில் இலாத்துவிய மொழியில திருக்குறள் இருக்கும்!’’
என நம்பிக்கை கொடுக்கும் ஆசுட்டிராவுக்கும் கரிகாலனுக்கும் இரண்டு பெண்
குழந்தைகள்… நருமதா தயானா, கீர்த்தி. இருவரும் சென்னை பள்ளி ஒன்றில்
படிக்கிறார்கள்.
மனைவியின் இந்த முயற்சிபற்றிப்
பாராட்டித் தொடர்கிறார் கரிகாலன். இவர் இலங்கைத் தமிழர். ‘‘நான் பள்ளி
படித்ததெல்லாம் சென்னையிலதான். பொறியியல்(பி.இ ) படிக்க இலாத்துவியா
போனேன். அங்கேதான் ஆசுட்டிரா பழக்கமானார்கள்.. எங்கள் திருயாணம் எந்த
எதிர்ப்பும் இல்லாமல் முடியக் காரணமே, அவர்களுக்குத் தமிழ்நாடு மேல இருந்த
மரியாதைதான்!’’ என்கிறார் அவர்.
ஆசுட்டிரா சென்னையில் தனியார் நிறுவனம்
ஒன்றில்(Spears School of Strategy and Management)பணிபுரிகிறார். இதன்
நிறுவனரான பிரபாகரன், ஆசுட்டிராவின் திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு உதவி
செய்கிறார். ‘‘தமிழுக்கும் இலாத்துவிய மொழிக்கும் உள்ள தொடர்பைப்பற்றி
நிறைய செய்திகள் ஆசுட்டிரா பேசியபொழுது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
திருக்குறளில் அவர்களுக்கு ‘ஒழுக்கம்’, ‘ஊழ்’, ‘அடக்கம்’ ஆகிய அதிகாரங்கள்
மேல் ஒருவித ஈர்ப்பு!
இப்போது என்னாலான உதவிகளைச் செய்து வருகிறனே். சீக்கிரமே வௌியீட்டு விழா இருக்கும்!’’ என்கிறார் பிரபாகரன் சிரித்தபடி!
“கண்டிப்பாக எங்கள் மொழிக்குத் திருக்குறளைக் கொண்டு சேர்பேன்” என்றார் ஆசுட்டிரா.
– பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்..
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக