செவ்வாய், 29 டிசம்பர், 2015

போடுமலையில் அரிய உருளை வடிவக் கல்வட்டம்.


போடுமலை-கல்வட்டம் : podumalai_kalvattam

போடுமலையில்

அரிய உருளை வடிவ கல்வட்டங்கள் கண்டெடுப்பு!

எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை

ஒத்திருப்பதாக ஆய்வாளர் தகவல்

  கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போடுமலையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரிய வகை உருளை வடிவக் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வடிவத்தில் எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை ஒத்திருக்கும் இந்த உருளை வடிவக் கல்வட்டங்களை, பண்டைய தகடூர் நாட்டின் பெருமைக்குரிய சின்னங்களின் வரிசையில் இணைத்துக் கொள்ளலாம் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் த. பார்த்திபன்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி மலையின் தொடர்ச்சியாக உள்ள போடுமலை காப்புக்காட்டுப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் எசு. இராமசுப்பிரமணியன் தலைமையில், மருத்துவர் பழனி, ஆசிரியர் இ. தங்கமணி முதலிய குழுவினர் அண்மையில் மலையேற்றப் பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தின்போது, மலையுச்சியில் பெருங்கற்கால மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நினைவுச் சின்னங்களைக் கண்ட இக் குழுவினர் அவற்றைப் ஒளிப்படங்கள் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில், நினைவுச் சின்னங்களில் ஒன்றான “உருளை வடிவக் கல்வட்டங்கள்’ மிகவும் அரிதான ஒன்று என்றும், எகிப்து நாட்டைச் சேர்ந்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவற்றுக்கும் இவற்றுக்கும் ஒற்றுமை இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக தொல்லியல் ஆய்வாளரும், “சங்ககாலத் தமிழரும் அதியர் மரபினரும்’ என்ற நூலாசிரியருமான த. பார்த்திபன் கூறியது:
போடுமலையில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்களது முன்னோர்களுக்காக எழுப்பிய நினைவுச் சின்னங்களான ‘கல்திட்டை’, ‘கல்திட்டை போன்ற கல்லறை’, ‘உருளை வடிவக் கல் வட்டங்கள்’ ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் ‘உருளை வடிவக் கல்வட்டங்கள்’ இதுவரை இந்தியாவில் அறியப்படாத, முற்றிலும் புதிய வகையாகும். சிறு சிறு செவ்வக வடிவிலான கற்களைப் பாறைகளில் இருந்து வெட்டி எடுத்து ஏறத்தாழ 5 முதல் 6 அடி உயரத்துக்கு, எவ்வித இணைப்புச் சாந்துக் கலவையின்றி வட்டச் சுவராக அமைக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் ‘நைல்’ நதிக் கரையில் ‘நூபியா’ என்ற பகுதியில் ‘தூமாசு(Tuomas) ஊரில் மட்டும் இதேபோன்ற ஈமச் சின்னங்கள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு பயன்படுத்தப்பட்ட இடுபொருள்களின் குணங்கள், தென்னிந்தியப் பெருங்கற்கால இடுபொருள்களின் குணத்தை ஒத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் உள்ள ஈமச் சின்னங்களில் பண்டைய தகடூர் நாட்டுப் பகுதிக்குள் கற்கோள(Stonehenge) வகை மட்டுமே இதுவரை அறிய முடிந்துள்ளது. தென்னிந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத ‘மல்லச்சந்திரம் வகை கல்திட்டை’, ‘ஆதனூர் வரை கல்வட்டம்’, ‘கீழ்ச்செப்புலி வகை கல்திட்டை’ ஆகியவை தகடூர் நாட்டுப் பகுதிக்குள் காணக் கிடைத்துள்ளன.
இந்தப் பட்டியலில் தற்போது அறியப்பட்டுள்ள உருளை வடிவச் சின்னத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் பார்த்திபன்.
பயணம் குறித்து மாவட்ட வன அலுவலர் எசு. இ ராமசுப்பிரமணியன் கூறியது:
மலையடிவாரத்தில் இருந்து ஏறத்தாழ 2 கல் தொலைவில் பாறைப்பரப்பில் போடுவராமர் கோயில் உள்ளது. அங்கிருந்து 2 மணி நேர அடர்வன நடையில் போடுமலையின் உச்சியை அடையலாம். இங்கு பூச்சி உண்ணும் தாவரமான “துரோசீரா’ என்ற பனிப்பூண்டு இப் பகுதியில் இருப்பதைக் கண்டோம் என்றார்.
– தினமணி
Dinamani-logo-main 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக