வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

தமிழால் ஆட்சியை ப் பிடித்தவர்கள் தமிழை க் கண்டுகொள்ளவில்லை

தமிழால் ஆட்சியை ப் பிடித்தவர்கள் தமிழை க் கண்டுகொள்ளவில்லை

சென்னை: ""தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழை கண்டுகொள்ளவில்லை,'' என, தமிழறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் நேற்று, தமிழறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில், முன்னாள் துணைவேந்தர்கள், பொன்னவைக்கோ, முத்துக்குமரன், முன்னாள் காங்., தலைவர் குமரிஅனந்தன், தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழறிஞர்கள் கூறியதாவது: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தாய்மொழி, பயிற்று மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே இது தலைகீழாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் பயிற்று மொழி, தமிழ்மொழியாக இருந்து வந்தது. விதிவிலக்காக ஆங்காங்கு ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே இயங்கி வந்தன. இப்போது, ஆங்கில வழியில் பயிற்று விக்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகி விட்டன.

கண்டுகொள்ளவில்லை: தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க வேண்டிய ஆட்சியாளர்கள், ஆங்கில கல்விக் கொள்கையை செயல்படுத்தி வருவதால், தனியார் பள்ளிகள் பெருகி விட்டன. இதனால், தமிழகத்தில் எங்கும் ஆங்கிலமே கோலோச்சி நிற்கிறது. இதை தடுத்து நிறுத்த பல களப் போராட்டங்கள் நடத்தியும், இறங்கி வரவே இல்லை. இன்று வரை ஆங்கில வழிக் கல்வி பயிற்றுமொழியே அதிகரித்து வருகிறது.

அரசுக்கு கண்டனம்: இன்று வரை தனியார் பள்ளிகளில் மட்டுமே முதன்மை பெற்று வந்த ஆங்கில வழி பயிற்று மொழியை, தற்போது தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் கொண்டு வர முயன்று வருகிறது. அண்மையில், தமிழக அரசு, அரசு துவக்கப்பள்ளிகளில் பலவற்றை தேர்ந்தெடுத்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க முடிவு எடுத்து, செயல்பட்டு வருகிறது. இச்செயல்பாடு, அனைத்து அரசுப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வி ஆதிக்கம் அதிகமாகி, தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லாத நிலைமையை ஏற்படுத்தும்.

உளவியல் காரணம்: நெதர்லாந்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ழாக் வெர்பைலே, கற்றலின் அடிப்படையை மொழியே தீர்மானிக்கிறது. பார்ப்பவை, கேட்பவை மூலமாகவே குழந்தைகள் தொடர்புபடுத்திக் கொள்ள பழகிக் கொள்கின்றனர். முதலில் வரன்முறைப்படுத்தாத தாய்மொழிக் கல்வி அறிமுகம், பின் முறைப்படுத்தப்பட்ட தாய்மொழிக் கல்வி. அதன் பின், மொழி அறிமுகம், தொடர்ந்து மூன்றாவது மொழி அறிமுகம் என, படிப்படியாக தொடரப்படும் கல்வி முறையே, குழந்தைகளுக்கு எளிமையானதாக இருக்க முடியும். தாய்மொழிப் புலமை இன்றி, ஆழமான அறிவாற்றலும் பெற முடியாது,'' என்றார்.

பிற நாடுகளை பாருங்கள்: ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு, இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து மேற்படிப்புக்கு செல்லும் அனைவரும், முதலில் ஒரு பருவத்தில் அந்நாட்டு மொழியினைப் பயின்று, பிறகு அம்மொழி வழியாகவே உயர்கல்வி பெற்று, ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றனர். ஆனால், தமிழக அரசு துவக்கப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர முயற்சிப்பது தவறானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக