செவ்வாய், 31 ஜூலை, 2012

நாளும் ஒரு பலி ! யாருடைய வேண்டுதல்? துயரம் நிற்காதா?

சென்னையில் பள்ளி மூடுந்தில்  சிக்கி ஒன்றரை அகவை குழந்தை பலி



சென்னை, ஜூலை 30: சென்னையில் பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலியானது. இது மீண்டும் பள்ளி வாகனங்கள் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் அன்னனூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆனந்தன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் குழந்தைகள் சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2). அதில் சந்தோஷும், சுதாகரும் அரும்பாக்கம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றனர்.இத்தனை நாட்களாக அவர்கள் இருவரும் தங்கள் தந்தையுடன் பைக்கில் பள்ளிக்குச் சென்று வந்தனர். இந்நிலையில் அவர்களை பள்ளி வேனில் அனுப்ப பெற்றோர் முடிவு செய்தனர். இன்று முதல் முதலாக பள்ளி வேனில் அவர்களை அனுப்பி வைக்க இருந்தனர். காலை 8 மணிக்கு வேன் வந்தது. அப்போது மீனா சஞ்சயை கீழே இறக்கிவிட்டுவிட்டு மற்ற 2 மகன்களையும் வேனில் ஏற்றினார்.வேன் கிளம்பியது. இதற்கிடையே குழந்தை சஞ்சய் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. டிரைவர் வேனை எடுத்ததும் குழந்தை பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதைப் பார்த்த குழந்தையின் தாய் கதறினார். உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு வேனை அடித்து நொறுக்கினர்.இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக