புதன், 1 ஆகஸ்ட், 2012

வளர்த்தவரைக் காக்க (பாம்பைக் கொன்று)பலியான நாய்

எசமானரை க் காக்க உயிரைவிட்ட நாய்: பாம்பைக் கொன்று பலியான சோகம்
கும்பகோணம்: எஜமானரை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்று, பாம்பு கடித்ததால் இறந்த நாயின் நன்றியுணர்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வடக்குவீதியைச் சேர்ந்தவர் அன்வர்பாய், 56. கூலித்தொழிலாளியான இவரது மனைவி பாத்திமாபீவி, 50. இவர்களது மகன் சாகுல்ஹமீது, 17. மூவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டின் பின்புறம் அடர்ந்த முள்செடிகளும், தோட்டமும் உள்ளது. இவர்கள் வீட்டில் பேபி என்ற நாயை கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்தனர்.

இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் படுத்திருக்கும் போது பேபி வாசலில் படுத்து காவல் காத்திருக்கும். இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்ட எழுந்த பார்த்த போது, பேபி குரைத்து கொண்டிருந்தது. அப்போது அன்வர்பாய் எழுந்து பார்த்துவிட்டு, மீண்டும் படுத்துவிட்டார். நீண்ட நேரம் குரைத்து கொண்டிருந்தது. அன்வர்பாய் காலை ஆறு மணிக்கு எழுந்து கொல்லைப்புறம் வந்த பார்த்தபோது, அங்கு நாயும், பாம்பு கிடந்தது. நாயையை உற்றுப்பார்த்தபோது அது இறந்து கிடந்தது.

மேலும் நாயின் வாயில் மூன்று அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு உயிருக்கு போராடியதால், அதை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். பின்னர் நாயையும், பாம்பையும் ஒன்றாக ஒரே இடத்தில் அப்பகுதியினர் புதைத்தனர்.

இதுகுறித்து அன்வர்பாய் கூறியதாவது:நேற்று குடும்பத்தில் உள்ளவர்கள் அசந்து தூங்கிவிட்டோம். காலையில் எழுந்து பார்த்தபோது நாங்கள் மூன்று ஆண்டு செல்லமாக வளர்த்த நாயை பாம்பு கடித்தது தெரியவந்தது. எங்களை கடிக்க வந்த பாம்பை நாய் கடித்து தடுத்துள்ளது. பாம்பு கடித்ததால் எங்கள் வீட்டு நாய் இறந்து விட்டது. எங்களை காக்க செல்லமாக வளர்த்த நாய் தனது உயிரை விட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தங்களின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை கொடுத்த நாயின் இறப்பால், அன்வர்பாயும், அவரது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக