திங்கள், 30 ஜூலை, 2012

விடுதலை இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் அபுல்கலாமா? அப்துல் கலாமா?

பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது.

இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார்.

தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு, தமிழில் அனுப்பிய மடல், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.புதுச்சேரி அரசு பிரதமரின் மடலை நகலெடுத்து அனைத்து அரசு துறைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது. இந்த மடலில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர், "மவுலானா அபுல் கலாம் ஆசாத்' என்பதற்குப் பதிலாக, "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பதில் சொல்ல முடியவில்லை:இந்த பிழை கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், பிரதமரின் கையெழுத்திட்டு வந்திருப்பதால் மடலில் எந்த மாற்றமும், திருத்தமும் செய்யாமல், அப்படியே பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.வரலாறு பாடத்தில் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என குறிப்பிடப்பட்டுள்ள வேளை யில், பிரதமரின் மடலில் "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, எழுதப்பட்டுள்ளது ஏன்?இரண்டில் எது சரி என, ஆசிரியர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக