சனி, 9 ஜூன், 2012

சொல்கிறார்கள் : கொதித்த பெற்றோர்!

சொல்கிறார்கள்


கொதித்த பெற்றோர்!

பல தமிழக கிராமங்களைத் தத்தெடுத்து, கல்வி அளித்து வரும், "யுரேகா' கல்வி இயக்கத்தின் செயலர் பாலாஜி சம்பத்: கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, இந்த இயக்கத்தை ஆரம்பித்தேன். கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலை, மற்றும் அவர்களின் கல்வித் தரம் உயர, என்ன மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, ஒரு சர்வே எடுத்தோம்.அதில், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு, கூட்டல், கழித்தல் கணக்குகள் தெரியவில்லை. அடிப்படை ஆங்கிலம் கூட, அறியாமல் உள்ளனர்; அதைப் பற்றி பெற்றோர், ஆசிரியர் யாரும் கண்டு கொள்வது இல்லை... இப்படி பல விஷயங்களை கண்டு அதிர்ந்தோம்.கட்டாயத் தேர்ச்சித் திட்டத்தால், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வருகின்றனர். பெற்றோரும், பிள்ளைகள் நன்றாகப் படிப்பதாக நினைக்கின்றனர். இந்தச் சூழலை, மாற்ற எண்ணினோம். பிள்ளைகளின் நிலையை, பெற்றோரிடம் எடுத்துக் கூறியதும், ஆசியர்களை கேள்வியால் துளைத்து விட்டனர்.தற்போது, நாங்கள் சர்வே எடுத்த கிராமத்திற்கு, மீண்டும் சென்று பார்த்ததில், பெற்றோர், தங்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, எப்படிப் படிக்கின்றனர், ஏன் சரியாகப் படிப்பதில்லை என்று கேள்வி கேட்கின்றனர். இதனால், ஆசிரியர்களும், தங்களுக்கான வேலைகளை, மிகச் சிறப்பாகச் செய்கின்றனர் என தெரிந்தது.இதைத் தவிர, ஆறு ஆண்டாக, பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, மேற்கொண்டு படிக்க முடியாத மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துகிறோம். அதே போல், எங்கள் பதிப்பகம் மூலம், குறைந்த விலைக்குப் புத்தகங்களை அச்சிட்டு, ஏழை மாணவர்களுக்கு வழங்குகிறோம். எங்களின் சேவை யை அறிந்த நிறைய நிறுவனங்கள், உதவி செய்கின்றன. குழந்தைகளுக்கு தரமான கல்வியை மட்டும் கொடுத்தால் போதும்; அவர்கள் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக் கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக