கொலைகாரர்கள் நாமே! துயர் துடைக்க என்ன செயப் போகிறோம்?
- இலக்குவனார் திருவள்ளுவன்
தீயவை யாவற்றிலும் தீயவை இணைந்து இழைத்த கொடுஞ்செயல்! கொடுமையிலும் கொடுமையான கொடுந்துயர் நிகழ்வுகள்! இவை
யாவற்றையும் தாங்கிக் கொண்டுள்ள ஈழத்தாய், விடியலை எதிர்நோக்கிக் காத்துக்
கொண்டிருக்கிறாள். இன்னும் கொடுமைகள் ஓந்த பாடில்லை.
எனினும் மறு பக்கம் நம்பிக்கைக் கீற்று வீசுவதால், ஈழத்தாய் நம்பிக்கைப் பாதையில் காலூன்றி நிற்கின்றாள். விடுதலைப் பாதையில்
இதுவரை இருந்த பாதுகாப்பும் தன்வலியும் துணை வலியும் கேள்விக்குறியானாலும் விழ விழ
எழும் பிள்ளைகளின் தன்னம்பிக்கையால் தன் தளைகள் உடைக்கப்படும் என எதிர்கோக்கிக் கொண்டிருக்கின்றாள்.
பக்கத்து உறவுகள் தம் தலைமையை நம்பிப் பாழ்படச் செய்த குற்றத்தை உணருவதால்,
இனியேனும் நல்லது செய்தல் ஆற்றாராயினும் அல்லது செய்தல் ஓம்புவார் என
நம்பிக் கொண்டுள்ளாள். பராண்ட இனம் பாருக்குள் கூட்டம் கூட்டமாகப்
புதையுண்ட அவலம் பதித்த வடு மாறாவிட்டாலும் புதைந்தவை விதையாகி விடுதலைப் பயிர் செழிக்கும்
என எண்ணுகிறாள்.
பஞ்சாப்பின்
அமிர்தசரசு நகரில் உள்ளது சாலியன் வாலாபாக். இங்கு
1919 ஆம் ஆண்டு ஏப்பிரல் 13 ஆம் நாள் - பஞ்சாப்பியரின்
புத்தாண்டு - அன்று நடைபெற்ற படுகொலையே சாலியன்வாலாபாக் படுகொலை எனப்படுகிறது.
ரெசினால்டு எட்வர்டு ஆரி டையர் என்ற ஆங்கிலேயப் படையதிகாரியின் தலைமையில்
100 வெள்ளைய வீரர்களையும்
50 இந்திய வீரர்களையும் கொண்டு, ஒரே ஒரு
வாசலை மட்டும் உடைய சுற்றடைப்பில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை நோக்கித் துப்பாக்கிச்சூடு
நடத்தப்பட்டது. ஏறத்தாழ 10 நிமையங்கள்(நிமிடங்கள்) 1850 தடவைகள் சுடப்பட்டுள்ளன. சுவர் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றனர் சிலர். அவ்வாறு
தப்பிப்பதற்காக ஓடிச் செல்கையில் திடலின் நடுவில் உள்ள கிணற்றில் வீழ்ந்து
120 பேர் இறந்துள்ளனர். இந்நிகழ்வில் 379 பேர் இறந்ததாகப் பிரித்தானிய அரசு அறிவித்து இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியிருக்கும் என்றும் 2000 பேர் காயமடைந்தனர்
என்றும் தெரிய வருகின்றது.
துயரத்தில் பங்கேற்கும் வகையிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி
செலுத்தும் வகையிலும் மரணக்கிணறு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கே நினைவுத்தூண் அமைக்கப்பட்டு
பேணப்படுகின்றது. குண்டுகள் துளைத்த தடங்களுடன்
சுவரும் துயரநினைவுகளின் சான்றாகக் காட்சி அளிக்கின்றது. இதனைப்
பேணவும் பாதுகாக்கவும்
நமக்கு உரிமை உள்ளதா? இத்துயரத்தைக் குறைத்துக் கூறவில்லை.
ஆனால், 10 நிமையத் துப்பாக்கிச் சூட்டைவிட எத்தனை எத்தனை ஆயிரம் மடங்கு மேலான குண்டு
மழை ஈழத்தில் பொழியப்பட்டது? சாலியன் வாலாபாக்கில் தப்பி
ஓட வழியாவது இருந்தது. ஆனால், வன்னியில்
வீடு, பள்ளி, கோயில், மருத்துமனை, தோட்டம், பதுங்கு குழி
என்று பாராது நீக்கமற அனைத்து இடங்களிலும் கொத்துக் குண்டுகளும் எரிகுண்டுகளும் தொடர்ந்து
வீசப்பட்ட பொழுது தப்பிக்க
ஏது வழி? நீரோட வேண்டிய முள்ளிவாய்க்கால் பகுதியில் மட்டுமல்லாமல்
நிலப்பகுதி முழுமையுமே குருதி ஆறு ஓடியதே!
கொலைகார டயரின் செயல் சரியானதே எனச்
சான்றளித்த பஞ்சாப் துணை ஆளுநர் மைக்கேல் ஓ ட்வையர் 1940 ஆம்
ஆண்டு மார்ச்சு 13 இல் - 21 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
நெருங்கும் வேளையில் உத்தம்சிங் என்பவரால்
இங்கிலாந்தில் சுடப்பட்டுஉயிரிழந்தான். (துப்பாக்கிச் சூடு நடத்திய டயர் 1927 ஆம் ஆண்டே இறந்துவிட்டான்.)
வாலாபாக் படுகொலைகளுக்குப் பழிவாங்கியதாகப் பஞ்சாப் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நம் நாட்டிற்கு வந்து அதிகார வெறியில் படுகொலை புரியத் துணை நின்றவனை அவன்
மண்ணிலேயே கொன்ற மாவீரனைச் சொந்த நாட்டு மக்கள் போற்றினர். சென்ற நாட்டு அரசாங்கமோ அவனைத்தான்
தண்டித்ததே தவிர, அவன் இனத்தைத் தண்டிக்கவில்லை. அவன் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் உயர் பொறுப்புகளில் இருந்த போதும்
இருக்கின்ற இப்போதும் பதவி வழி மதிப்பினை அளிக்கத்தான் செய்கிறது. உத்தம் சிங் இந்தியர் என்பதற்காக அங்கே இந்தியர்கள் தண்டிக்கப்படவில்லை. பெருவாரியான இந்தியர்கள் அங்கே வாழ்கிறார்கள்.
பணிவாய்ப்பிற்காக அங்கே நாள்தோறும் சென்று கொண்டுதான் உள்ளனர்.
அல்லது உத்தம்சிங் பஞ்சாபியர் என்பதற்காக அவர்களும் வேரறுக்கப்படவில்லை.
அங்கே உள்ள இந்திய நாட்டவர்களில் பஞ்சாபியர்கள்தாம் முதலிடம் வகிக்கின்றனர்.
இது தொடர்பிலான மற்றொரு செய்தி, நாம் உணர்வற்ற பிண்டங்கள் என்பதை மெய்ப்பிக்கின்றன. 1940 இலேயே தூக்கிடப்பட்டு விருப்ப அடிப்படையில் இங்கிலாந்திலேயே
புதைக்கப்பட்டார் உத்தம்சிங். புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி
அங்கிருந்த எச்சம் 1974 இல் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது;
முழுமையான படைஅணிவகுப்பு மதிப்பு அளிக்கப்பட்டது; சிறந்த நாட்டுப் பற்றாளராகப் போற்றப்பட்டார்; அவரது மாநிலமான
பஞ்சாப்பில் எரியூட்டப்பட்டுச் சாம்பல் கங்கையில் கரைக்கப்பட்டது. உத்தம்சிங் வாலாபாக்கில் நேரடியாகத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்களைப் பழிவாங்கவில்லை. அவனுக்கு வாலாபாக்கில் கூடியிருந்த
மக்களை ஒடுக்க ஆணையிட்ட ஆளுநரையே பழி வாங்கினான். கற்பழிப்பு, படுகொலைகள், கொள்ளை முதலானவற்றில் ஈடுபட்ட இந்திய அமைதிக் காப்புப் படை என்ற
பெயரில் சென்ற அழிவுப்படையினரை அனுப்பிய வட இந்தியத் தலைவரைப் பழி வாங்கியதும் இதே
போன்ற அணுகுமுறைதானே. ஆனால், கொலை
செய்தவரும் இறந்து விட்டாலும் இனத்தையே அழிக்கும் கொடுமை அல்லவா நடைபெறுகிறது.
அடக்குமுறையை ஆங்கிலேயரிடமிருந்து கற்றுக்கொண்டவர்கள் தண்டனை குற்றம் செய்தவருக்கு மட்டுமே
என்பதை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? தமிழர்கள் திராவிடத்தில்
மறைந்து இந்தியத்தில் கரைந்துபோனதால் வந்த பெருங்கேடு இது.
சீனாவின்பக்கம் சாய்ந்துள்ள சிங்களம்
முற்றிலும் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டால் இந்தியாவிற்கு இன்னல் என்பதால் சிங்களத்தை இந்தியா
ஆதரிப்பதாகத் தவறான வாதம் ஒன்று பரப்பப்படுகிறது. சீனாவை எதிர்த்துத்
தலாய்லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து அவர் பொருட்டுக் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கவில்லையா?
சீனாவிற்கு எதிர்ப்பாகத் திபேத்தியர்களுக்கு இந்தியாவில் வாழ்வுரிமையும் பிற உரிமைகளும்
வழங்கப்படவில்லையா? அதே போல் சீனாவை எதிர்த்து இந்தியாவால் தமிழ்
ஈழத்திற்கு ஆதரவுக் குரல் கொடுக்க முடியாதா?
போராளிகளிடையே ஏற்பட்ட உடன்பிறப்புச்
சண்டையே இனப் படுகொலைகளுக்குக் காரணமாய் அமைந்தன என்றும் பேசப்படுகிறது. குடும்பத்திற்குக் குடும்பம் உடன்பிறப்புச் சண்டையை உலகறிய வெளிப்படுத்திக்
கொண்டு இப்படிப்பேச எப்படி மனம் வருகிறது என்று தெரியவல்லை. களத்தில் எதிரே நிற்கும் பகைவனிடம் இருந்து மக்களைக்காப்பாற்றுவதா?
முதுகின் பின்னே மறைந்திருக்கும் உட்பகையிலிருந்து இயக்கத்தைக் காப்பாற்றுவதா
என்னும் சூழலில் நிகழ்ந்த நேர்வுகள் எல்லா நாட்டு விடுதலைப்படைகளிடமும் மிகுதியான அளவிலேயே
இருந்திருக்கின்றன. ஈழப்போராளிக் குழுக்களிடையே பிளவை உண்டாக்கியதே இந்திய உளவுப்படையே
என்பதை நன்கறிந்தவரே அதையே திரும்பத் திரும்பச் சொல்லிப் பயனில்லை. குணம்நாடிக்
குற்றமும் நாடி மிகை நாடி மிக்கக்கொண்டால், உலகிலேயே ஒழுக்கமும்
கட்டுப்பாடும் மிக்க ஒரே நாட்டுப்படையாக விளங்கியது தமிழ் ஈழப்படையான விடுதலைப்புலிகளின் முப்படையாகும்
என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
போர் என்றால் சாவு இருக்கத்தான் செய்யும்
என்பது விடுதலைப்போர் என்பதைப் புரிந்து கொள்ளாத நிலை. ஆனால்,
தமிழின வரலாறும் இலங்கை-ஈழ வரலாறும் விடுதலைப் போராட்டங்களையும் நன்கறிந்த
முது பெரும் தலைவரே வன்னி நிலம் எரிகாடாக மாறியபின்பு இங்கே தேர்தல் வெற்றி விழா நடத்துவதற்காக
ஒரே சமயம் பிண முரசும் மண முரசும் ஒலிப்பது இயற்கை என்று வாழ்க்கை நிலையாமை பற்றிச்
சொன்னதை என்னவென்று சொல்வது?
காலிப்பெருங்காயக் குப்பியால்
பயனில்லை. அதுபோல், முன்பு என்ன செய்தோம்
அல்லது சொன்னோம் எனப் பழங்கதைகள் பேசுவதிலும் பயனில்லை. இனப்படுகொலை
தொடர்பான தங்கள் பொறுப்பை ஒப்புக் கொள்வதே புதிய அரசியல் வழிமுறையாகும் என்கிறார் முள்ளி
வாய்க்கால் படுகொலை அவலங்களை வெளிக்கொணர்ந்த சிங்கள ஊடுகவியலாளர் திரு பாசண அபேவர்த்தன.
இதே போன்று உண்ணா நோன்பை நாடமாக முடித்துவிட்ட முதுபெரும் தலைவரும்,
இப்போது தமிழ்ஈழத்திற்காகக் குரல் கொடுப்பது உண்மையாயின் - படுகொலைகளுக்குத் தாமும் அமைதியாக
இருந்து உடந்தையாக
இருந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் - உண்மைகளை
வெளிப்படுத்த வேண்டும். தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரனைக் கைது செய்யும் பொழுது எப்படி நடத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளமையால்
எனில், இந்திய- சிங்களச் சதி தெரியாமல் இருக்காது.
அண்மையில் மனித உரிமை ஆணையத்தில்
சிங்களத்திற்கு எதிராக இந்தியா நடந்து கொண்டமைக்குத்தாம்தான் காரணம் என முதுபெரும்தலைவர்
பேசுகிறாரே! அதில் பெருமிதம் கொள்ளவோ பெருமைப்படவோ ஒன்றும் இல்லையே. செயற்பாட்டை
அறிந்து கொண்டு நடத்திய நாடகம்தானே. இந்தியா அந்தத் தீர்மானத்தை
நீர்த்துப் போகச் செய்ததே ! அதில் தம் பங்களிப்பு உள்ளது என்கிறாரா?
எவ்வாறிருப்பினும் இதற்கு இவர்தாம் காரணம் என்பதை ஒப்புக் கொண்டால்,
எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுதே மத்திய அரசைக் கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது கிடைத்த நல்வாய்ப்பை
நழுவ விட்டதேன்?
அதிகாரத்தில் உள்ளவர்கள்,
இறையாண்மை என்னும் பூச்சாண்டியைக் காட்டிக் கையறுநிலை இருப்பதாகப் புலம்புகிறார்கள். வங்காளதேச விடுதலைக்காக முக்தி
வாகினி என்ற பெயரில் இந்தியப்படையை அனுப்பியபொழுது இறையாண்மை எங்கே போய் ஒளிந்து
கொண்டது. இதே இலங்கையில் 1971இல் நடைபெற்ற
- சிங்கள இளைஞர்கள் பதினாயிரக்கணக்கானோர் படையினராலும் காவல்துறையினராலும்
கொல்லப்பட்ட ஏப்பிரல் ஆயுதக்கிளர்ச்சியின் பொழுது சிங்களத்தலைமையைக் காப்பாற்றுவதற்காக இந்தியப்படை இலங்கை சென்ற பொழுது இலங்கையின் இறையாண்மை எங்கே போயிற்று?
இலங்கைத் தமிழரைக் காப்பாற்றுவதாகக் கூறி விண்ணில் இருந்து உணவுப் பொட்டலங்களை
வீசிய பொழுது எங்கே போயிருந்தது இறையாண்மை? அமைதி கொல்லும் படையை
அனுப்பிய பொழுது எங்கே போயிருந்தது
இறையாண்மை? இப்பொழுது நாடாளுமன்ற நடிப்புக்
குழுக்களை அனுப்பும் பொழுது எங்கோ போகிறது இறையாண்மை?
இலங்கை ஒரே நாடு என்றால் தன்நாட்டு
மக்களையே ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை புரிந்தது ஏன்?
போர் முடிவிற்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார்களே அப்படியானால்,
மற்றொரு தரப்பு தனி ஆளுமையுடைய நிலப்பகுதி என்றுதானே ஆகிறது.
அத்தகைய தனி ஆளுகையான தமிழ் ஈழத்தின் மீது போர் என்ற போர்வையில் பேரினப்படுகொலை
செய்த பொழுது தமிழ் ஈழத்தின் இறையாண்மைக்கு எதிரானது சிங்கள அரசின் செயல் என
ஏன் யாரும் சொல்லவில்லை? சிங்கள அரசைக் கண்டிக்க வில்லை?
சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கவில்லை?
உலகில் பதவிச்சுவை கொண்ட அதிகார வகுப்பினர்
அனைவரும் ஒரே குலத்தினர்தாம். நாம் அதனைப் புரிந்து கொள்ளாமல்
அந்நாட்டுத் தலைவர் துணை வருவார், இந்நாட்டுத்தலைவர் மீட்சி தருவார்
எனத் தவறாக எண்ணிக் கொண்டு உள்ளோம். ஈழத்தமிழர்கள் கிறித்துவராகவோ
இசுலாமியராகவோ இருந்திருப்பின் அச்சமயம் சார்ந்த உலக நாடுகள் என்றைக்கோ துணை நின்று
தமிழ் ஈழ மலர்ச்சியை ஏற்றிருப்பார்கள். ஆனால், அவர்கள்
சிறுபான்மைச் சமயத்தைச் சேர்ந்தவர்கள். தமிழர்களை இந்துக்கள் என்று சொல்வது ஆரியமாயையில்
ஆழ்த்தி வைக்கத்தான். சைவமும் வைணவமும் ஆரியப் போர்வை போர்த்தப்பட்டு
இந்துவாகக் காட்டப்பட்டாலும் இவர்களுக்கு இன்னல் வரும் பொழுது இவர்கள் இந்துக்கள் அல்லர்
என்பதுதானே மேலோங்கி நிற்கும். இல்லாவிட்டால் கோடிக்கணக்கிலான
இந்துச் சமயம் என்று சொல்லப்படும் இந்துக்கள் நிறைந்த நாட்டின் ஆதரவு தமிழ் ஈழத்திற்குக்கிடைத்திருக்குமே.
நம் உடைமைகளைப் பறிப்பதற்குத்தான் இந்தியராகவோ இந்துக்களாகவோ அடையாளப்
படுத்தப்படுவோம். நம் உரிமைகள் பறிபோகும் பொழுது தமிழர்களாகப்
புறக்கணிக்கப்படுவோம்.
கட்சி மாநாடு என்றால் ஓரிடத்தைக்
கடக்க பல மணிநேரம் ஆகும் வண்ணம் நம்மால் கூட முடிகிறது. ஆனால்
நம்மவர் உயிர் காக்க நம்மால் ஓரடிகூட எடுத்து வைக்க இயலவில்லையே! நாம் கட்சித்தலைமைகளிடம் கொத்தடிமைகளாக உள்ளோம். எனவே,
அவர்களின் உணர்வுகளுக்கேற்ப நம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்.
கட்சித்தலைமைகளை நம் உணர்விற்கேற்ப தமிழ்ஈழஆதரவு நிலையை எடுக்கச்
செய்யாத நாமும் குற்றம்புரிந்தவர்கள்தாமே!
இனப்பற்றாளர்களும் தமிழ் ஈழ விடுதலை
விரும்பிகளுமான பெருவாரியான அறிஞர்களும் அமைப்பினரும் ஊடகத்தினரும் தொண்டர்களும் தி.மு.க.வில்தான் பெரும்பான்மை உள்ளனர்.
ஆனால், தலைமை தவறான முடிவு எடுக்கும் பொழுது அதனைத் தட்டிக் கேட்கும் துணிவு யாருக்கும்
இல்லையே, ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’
என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் தந்த வாக்கு அல்லவா? மக்கள் பற்றில் திளைத்த தலைமையை நல்லாற்றுப்படுத்தாத நாமும் கொலைக் குற்றவாளிகள்தாமே!
பிற கட்சிகளில் தமிழ் இன உணர்வாளர்கள்
மிகுதியாக உள்ளது அ.தி.மு.க.வில்தான். எனினும் அவர்களால்
தம் தலைவியின் காலடி உள்ள திசை நோக்கி வணங்க முடிகிறதே தவிர தம்இனம் காக்கும் முடிவை
எடுக்கச் செய்ய இயலவில்லையே! இந்தியப் படை செல்லாவிட்டால்
எங்கள் தொண்டர்படை செல்லும் என்று அறிக்கச் செய்திருந்தாலே மத்திய அரசின் நிலையில்
மாற்றம் ஏற்பட்டிருக்குமே. பதவி நலன்களுக்காகத் தலைமையிடம்
மண்டியிட்டு, நம் உறவுகளுக்காக மத்திய அரசை நெறிப்படுத்தத் தவறிய
நாமும் கொலைகாரர்கள்தாமே!
உலகின் எந்த ஒரு மூலையிலேனும் விடுதலைக்
குரல் ஒலித்தது என்றால் அதற்கு ஆதரவு தரும் அடுத்த குரல் இந்தியாவினுடையதாகத்தான் இருக்கும்.
ஆனால் ஈழ விடுதலைக் குரலை எதிர்த்து அதன் குரல்வளையை நெறித்தது இந்தியாதானே!
சிங்களத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு
எதிரான போரை நடத்தியது இந்தியாதான் என அந்நாட்டுத் தலைவரே உலகறிய தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான
வேதியல் குண்டுகள், கொத்துக்குண்டுகள்,
எரி குண்டுகள், படைக்கருவிகள், ஏவுகணைகள்,படைப்பயிற்சி, படைத்துணை,
படைகலன்கள், படைஊர்திகள் எனப் பல வகையிலும் இந்தியப்பணம்
வீணாக்கப்பட்டுள்ளதே! அப்படியாயின் இச்செலவிற்கான பணத்தில் நம்
தமிழ் மக்கள் பணமும் அடங்கும் என்பதால்,
இக்கொடுமைக்கு எதிராகச் செயல்பட்டுத் தடுத்து நிறுத்தாக நமக்கும்
கொலைகளில் பங்கு உண்டல்லவா? அப்படியாயின் நாமும் கொலைகாரர்கள்தாமே!
இன்றைய செஞ்சிலுவைப் பணிகளை ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும் மணிமேகலையும் ஆற்றி உள்ளனரே!
ஆனால் இன்று? தமிழ் ஈழத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக
இருப்பவர்களை அழைத்து வந்து காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கும் பொழுது, சொந்தப்
பொறுப்பில் தப்பி வருபவர்களையும் இந்திய அரசு தடுத்ததே! மனித
நேயத்திற்கு எதிரான கொடுஞ்செயலைக் கண்டித்து நம்மவர்களைக்காப்பாற்றாத நாமும் கொலைகாரர்கள்தாமே!
தமிழினப்படுகொலையில் தானே முதல்
குற்றவாளி என்பதால் இந்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்த பின்னரும் ஆட்சிக்கட்டிலைக்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர்கள்பக்கம் நாம் இருந்தோமே! அப்படியாயின்,
நாம்தானே குற்றவாளிகள். நம் நலம் காக்கும் உணர்வாளர்களை
ஆட்சிப் பீடத்தில் ஏற்றாமல் போனதால் நிகழ்ந்த படுகொலைகளுக்குக் காரணமான கொலைகாரர்கள்
நாம்தானே !
தேர்தலையும் ஒரு கருவியாகக் கொண்டு
அதனைப் புறக்கணித்து, அதன்மூலம் தமிழ் ஈழத்திற்குப்பாதுகாப்பு
ஏற்படுத்தாத நாமும் கொலைகாரர்கள்தாமே!
தமிழகக்கட்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்பதவிகளில்
இருந்து கூண்டோடு விலச்செய்யாத, மத்திய ஆட்சியில் பொறுப்பேற்றவர்களை விலகச் செய்யாத நாமும் கொலைகாரர்கள்தாமே!
ஈகைச்சுடர் மாவீரர் முத்துக்குமாரன்
மரணக்கட்டளைக்கிணங்க அவரின் உடலாயுதத்தைப் பயன்படுத்தி எழுச்சி ஏற்படுத்தித் தமிழ் ஈழ மக்களுக்குப்
பாதுகாப்பு தராத நாமும் கொலைகாரர்கள்தாமே!
தமிழ்இனப்பகைவர்கள் அரசியலில் இருப்பதன்
மூலம் தவறான முடிவுகளுக்குக் காரணமாகிறார்கள் எனத் தெரிந்து இருந்தும் அவர்களை அரசியலில்
ஓரங்கட்டாத நாமும் கொலைகாரர்கள்தாமே!
தக்கவாறு செயல்படா நம் தன்மையாலும்
ஈழமண் தமிழர்களின் தாய்மண் என்பதைப் பிறருக்கு உணர்த்தத் தவறியதாலும் தவறான முடிவுகள்
பல எடுக்கக் காரணமாக இருந்து இலங்கையில் தமிழர்களை அடக்கி ஒடுக்க உதவியுள்ளோம்.
இதன் தொடர்ச்சிதான் இந்திய-சிங்களக்
கொலைக்கூட்டணி. இதனைத் தடுக்காத நாமும் கொலைகாரர்கள்தாமே!
கொலைகாரர்களாகிய நாம் இதற்குக் கழுவாய்
தேட வேண்டும். 1.1.1900 அன்று இலங்கையில் எங்கெல்லாம் தமிழ்
மக்கள் வசித்தனரோ அவற்றை எல்லாம் இணைத்துத் தமிழ் ஈழத்தை ஏற்படுத்தி உலகம் ஏற்றுக்
கொள்ளுமாறு செயல்பட வேண்டும். சட்ட மன்றத்திலும் உள்ளாட்சி
அமைப்புகளிலும் இதனையே தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். போர்க்குற்றம்
எனச் சுருக்காமலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையைக் குறைக்காமலும் பேரினப்படுகொலையாளிகள்,
அவர்கள் கூட்டாளிகள் அனைவரையும் தண்டிப்பதற்குப் புலம்பெயர் தமிழர்களுடன்
இணைந்து செயல்பட்டு வெற்றி காண வேண்டும்.
தமிழ்த்தாயும் ஈழத்தாயும் பொறுத்தருள,
நாம் செயல்படாமல் போனதால் ஏற்பட்ட பேரினப்படுகொலைகளுக்குப் பொறுப்பேற்றுத் தமிழ் ஈழக் கொடி உலகெங்கும் பட்டொளி
வீசிப் பறக்கச்செய்ய வேண்டும்.
விடுதலைப்போரிலும் இனப்படுகொலைகளிலும் இன்னுயிர் நீத்தவர்களுக்கு
நம் வணக்கம் உரித்தாகுக.
அவர்கள் புகழ் ஓங்குக !
வாழ்க தமிழகம் ! வெல்க தமிழீழம் !
- தமிழர் எழுச்சி முதல் இதழ் மே 2012 (ஆசிரியர் திரு ப.வேலுமணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக