தமிழ்ப்பகைப் படங்கள் புறக்கணிப்பு தொடரும்!
“தமிழ்ப் பெயர் இல்லாத ஒசுத்தி முதலான படங்களைப் புறக்கணிப்போம்” எனத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். தொடக்கத்தில் இருந்தே இந்து மக்கள் கட்சி, தமிழ்த்தேசியப் பொதுவுடைமை இயக்கம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, முதலான அமைப்பினரும் குறுந்தகவல் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய அமைப்புகள், குறுந்தகவல் படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள் எனப்பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயல்படுத்தி வருவதில் மகிழ்ச்சியே. ஆனால், பெருமபாலோர் மறியல், ஆர்ப்பாட்டம், முதலியன மூலம் எதிர்பபை வெளிக்காட்ட வேண்டும் என வேண்டுகின்றனர்.
நம் எதிர்ப்பு ஒசுத்தி படத்திற்கு மட்டும் அல்ல. இராசபாட்டை முதலான பிற படங்களுக்கும்தான். ஒசுத்தி படத்தைப் பொறுத்த வரை திரு இராசேந்தர் வருத்தம் தெரிவித்து, இனி வரும் படங்களில் தமிழில் பெயர் சூட்டுவதாகவும் தாமும் அயற்பெயர் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். அவ்வாறிருக்க ஒரு படத்தை மட்டும் எதிர்ப்பதால் பயனில்லை. இப்பொழுது வெளிவந்துளள இராசபாட்டை முதலான அயற் பெயர்ப் படங்களுக்கும் இனி வர உள்ள விசுவரூபம், மைக் செட் பாண்டி முதலான எல்லா படங்களுக்கும் நம் எதிர்ப்பு தேவை. திரைப்படம் தொடர்பான அமைப்புகளுக்கு இது குறித்து மடல் எழுதி வருகிறோம். குறுந்தகவல்கள் மூலமாக புறக்கணிப்பு வேண்டுகோளைப் பரப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.
நாம் மேலும முனைப்பாக முதலில்
அயற் பெயர்,
தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான காட்சிகள்
முதலான அனைத்திற்கும் எதிரான நம் கருத்துகளைத் தொடர்ந்து பரப்புவோம்.
கோடை விடுமுறையில் தமிழ் நலன் காக்கும் பரப்புரைகளை விரிவு படுத்துவோம்.
மாணாக்கர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் உரையாடல்கள், கூட்டங்கள், சந்திப்புகள் முதலானவை மூலம் கலைத்துறை மட்டிலும் அல்லாமல் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழே தலைமையிடம் பெற வேண்டிய உணர்வை வெளிப்படுத்துவோம்.
தமிழ்நாட்டில்
தமிழுக்கே தலைமை!
தமிழர்க்கே முதன்மை!
என்னும் நிலையை உருவாக்குவோம்.
அவரவர் நாட்டில் அவரவர் வாழும் பொழுது
நற்றமிழ் நாட்டில் நந்தமிழர் வெல்லும் சூழ்நிலையை உருவாக்குவோம்!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக